06.01 – சிவன் சிலேடைகள்
இராமநவமி ஸ்பெஷல்!
2011-04-12
06.01.130 - சிவன் - இராமன் - சிலேடை
-------------------------------------------------------
மூத்தவனாய் வந்திப்பார் முன்னாண்ட வன்தானாய்க்
காத்தவன் கையால் கயிலையசை - தூர்த்த
அரக்கன் அலறவே விட்டவன் ஆறு
கரக்குமரன் தாசரதி காண்.
சொற்பொருள்:
மூத்தவன் - 1) மூத்த மகன்; / 2) காலத்தால் முற்பட்டவன்; உயர்ந்தவன்;
வருதல் - பிறத்தல்;
பார் - உலகம்;
வந்தித்தல் - துதித்தல்;
முன் - 1) முன்பு ஒரு காலத்தில்; 2) எதிரே;
ஆண்டவன் - 1) ஆட்சி புரிந்தவன்; / 2) கடவுள்;
தூர்த்தன் - காமுகன்; கொடியோன்;
அலறவே விட்டவன் - 1) அலற ஏ விட்டவன்; / 2) அலறவே இட்டவன்/விட்டவன்;
ஏ - அம்பு;
இடுதல் - வைத்தல்; (மலைமேல் விரல் இட்டு இராவணனை நெரித்ததைச் சுட்டியது);
விடுதல் - 1) பிரயோகித்தல்; / 2) போகவிடுதல்;
கரத்தல் - மறைத்தல்; கொடாதிருத்தல்;
காண் - முன்னிலை அசைச்சொல்;
இராமன்:
மூத்தவனாய் வந்து - முதல் மகனாகப் பிறந்து;
இப்-பார் முன் ஆண்டவன் தானாய்க் காத்தவன் - இந்தப் பூமியை முன்பு அரசாண்ட மன்னாய்க் காத்தவன்;
கையால் கயிலை அசை தூர்த்த அரக்கன் அலற ஏ விட்டவன் - தன் கைகளால் கயிலைமலையைப் பெயர்த்த காமுக அரக்கனான இராவணன் அலறி அழியும்படி அம்பு தொடுத்தவன்;
தாசரதி - தசரதன் மகனான இராமன்;
சிவன்:
மூத்தவனாய் - எல்லாரினும் தொன்மையானவன் ஆகி, எல்லாரினும் உயர்ந்தவன் ஆகி;
வந்திப்பார் முன் ஆண்டவன் தானாய்க் காத்தவன் - வணங்கும் பக்தர்கள் எதிரே காட்சிதரும் கடவுள் ஆகிக் காத்தருள்பவன்;
கையால் கயிலை அசை தூர்த்த அரக்கன் அலறவே இட்டவன் - தன் கைகளால் கயிலைமலையைப் பெயர்த்த கொடிய அரக்கனான இராவணன் அலறும்படி (திருப்பாத விரலை) ஊன்றியவன்;
ஆறு கரக்கும் அரன் - கங்கையைச் சடையுள் ஒளித்த ஹரன்;
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு:
இலக்கணக் குறிப்பு: இலக்கணச் சுருக்கம் - ஆறுமுக நாவலர் - உயீரிற்றின் முன் உயிர் புணர்தல் -
# 90. ஏகாரவுயிரீற்றின் முன் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் யகரமாயினும், வகரமாயினும், உடம்படு மெய்யாக வரும். உதாரணம்.
அவனே
+ அழகன்
= அவனேயழகன்
சே
+ உழுதது
= சேவுழுதது
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment