Tuesday, July 5, 2022

06.02.136 – புகலி (காழி) - என்றனகம் மடமாதர் - (வண்ணம்)

06.02.136 – புகலி (காழி) - என்றனகம் மடமாதர் - (வண்ணம்)


2011-02-12

06.02.136 - என்றனகம் மடமாதர் - (புகலி (காழி))

-------------------------

(வண்ணவிருத்தம்;

தந்ததன தனதான தந்ததன தனதான

தந்ததன தனதான .. தனதான )


(அண்டர்பதி குடியேற - திருப்புகழ் - சிறுவை)


என்றனகம் மடமாதர் என்றுபல விதவாசை

.. .. என்றுமெழு மனமாகி .. மிகுகாசை

.. இம்பர்மிசை அலையோடு வங்கமலி கடலோடி

.. .. எண்டிசையும் மிகநேடு .. மயலாலே

உன்றனடி பரவாமல் இங்குழலும் நிலைமாற

.. .. உன்பெயரை உரைநாவை .. அருளாயே

.. ஒண்கடலில் எழுமாலம் உம்பருய அமுதாக

.. .. உண்டுகரு மணியாரு .. மிடறானே

அன்றுமலர் அடிதேடு சங்குதரி அரிவாட

.. .. அங்கியதன் உருவாகி .. உயர்வோனே

.. அங்கையினில் மழுவாள கொன்றையணி திருமார்ப

.. .. அம்புதொடு மதவேளை .. முனிவோனே

தென்றலினில் மணம்வீசு தண்பொழிலில் உலவாத

.. .. தெந்தனென இசையார .. அடியார்கள்

.. செந்தமிழ்கள் அவைபாடி வந்துதொழு பதியான

.. .. தென்புகலி தனில்மேவு .. பெருமானே.


பதம் பிரித்து:

என்றன் அகம் மடமாதர் என்று பலவித ஆசை

என்றும் எழு மனம் ஆகி, மிகு காசை

இம்பர்மிசை அலையோடு வங்கமலி கடல் ஓடி

எண்-திசையும் மிக நேடு மயலாலே


உன்றன் அடி பரவாமல் இங்கு உழலும் நிலை மாற,

உன் பெயரை உரை நாவை அருளாயே;

ஒண்-கடலில் எழும் ஆலம் உம்பர் உய அமுதாக

உண்டு கரு மணி ஆரும் மிடறானே;


அன்று மலர்அடி தேடு சங்கு தரி அரி வாட

அங்கி-அதன் உரு-ஆகி உயர்வோனே;

அங்கையினில் மழுவாள; கொன்றை அணி திருமார்ப;

அம்பு தொடு மதவேளை முனிவோனே;


தென்றலினில் மணம் வீசு தண்-பொழிலில் உலவாத

தெந்தனென இசை ஆர, அடியார்கள்

செந்தமிழ்கள் அவை பாடி வந்து தொழு பதி ஆன

தென்-புகலிதனில் மேவு பெருமானே.


என்றன் அகம் மடமாதர் என்று பலவிதசை என்றும் எழு மனம் ஆகி - என் வீடு, மனைவி, என்று பலவகை ஆசைகள் எப்பொழுதும் எழுகின்ற மனத்தை உடையவன் ஆகி; (அகம் - வீடு);

மிகு காசை இம்பர்மிசை அலையோடு வங்கமலி கடல் ஓடி எண்-திசையும் மிக நேடு மயலாலே - மிகுந்த பொருளை இவ்வுலகில் அலைகளும் கப்பல்களும் நிறைந்த கடல் கடந்து சென்று எட்டுத் திக்குகளிலும் மிகவும் தேடும் மயக்கத்தினால்; (இம்பர் - இவ்வுலகம்); (வங்கம் - படகு); (ஓடுதல் - செல்லுதல்); (கொன்றைவேந்தன் - "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு");

உன்றன் அடி பரவாமல் இங்குழலும் நிலை மாற - உன் திருவடியைப் போற்றாமல் இங்கு வருந்தும் நிலை மாறும்படி; (பரவுதல் - துதித்தல்);

ன் பெயரை உரை நாவை அருளாயே - உன் திருநாமத்தைச் சொல்லும் நாக்கை எனக்கு அருள்வாயாக;

ஒண்-கடலில் எழும் ஆலம் உம்பர் உய அமுதாக உண்டு கரு மணிரும் மிடறானே - ஒளியுடைய பாற்கடலில் எழுந்த விடத்தைத், தேவர்கள் உய்யும்பொருட்டு, அமுதம்போல் உண்டு கரியமணி பொருந்தும் கண்டத்தை உடையவனே; (ஆலம் - விஷம்); (உம்பர் - தேவர்);

அன்று மலர்அடி தேடு சங்கு தரி அரி வாட அங்கி-தன் உரு-கி உயர்வோனே - முன்பு மலரடியைத் தேடியவனான சங்கை ஏந்தும் திருமால் வாடுமாறு சோதி உருக்கொண்டு ஓங்கியவனே; (அங்கி - நெருப்பு);

அங்கையினில் மழுவாள - கையில் மழுவாள் ஏந்தியவனே;

கொன்றைணி திருமார்ப - திருமார்பில் கொன்றைமாலை அணிந்தவனே;

அம்பு தொடு மதவேளை முனிவோனே - கணை ஏவிய மன்மதனைச் சினந்து எரித்தவனே; (மதவேள் - காமன்); (முனிதல் - கோபித்தல்);

தென்றலினில் மணம் வீசு தண்-பொழிலில் உலவாத தெந்னென இசை - தென்றலில் மணம் கமழும் குளிர்ந்த சோலையில் எப்பொழுதும் தெந்தெனென (வண்டுகள் செய்யும்) இசை திகழ; (உலத்தல் - குறைதல்; நீங்குதல்);

அடியார்கள் செந்தமிழ்கள் அவை பாடி வந்து தொழு பதி - அடியவர்கள் தேவாரம் பாடிவந்து வணங்குகின்ற தலமான; (பதி - தலம்; தலைவன்);

தென்-புகலிதனில் மேவு பெருமானே - அழகிய புகலியில் (சீகாழியில்) விரும்பி உறைகின்ற பெருமானே; (புகலி - சீகாழியின் 12 பெயர்களில் ஒன்று);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment