Saturday, July 16, 2022

06.02.146 – பொது - உந்திப் பந்த வினையேவ - (வண்ணம்)

06.02.146 – பொது - உந்திப் பந்த வினையேவ - (வண்ணம்)

2011-05-19

06.02.146 - உந்திப் பந்த வினையேவ - (பொது)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தந்தத் தந்த .. தனதான )


உந்திப் பந்த .. வினையேவ

.. .. உந்திக் கென்று .. நிதமோடி

.. நிந்திக் கின்ற .. வழியேகும்

.. .. நெஞ்சக் குன்றம் .. உடையேனும்

சிந்திப் பண்டை .. வினைபோகச்

.. .. செஞ்சொற் கந்த .. மலர்தூவித்

.. திங்கட் டுண்டன் .. உனையோதச்

.. .. சிந்திப் பொன்றை .. அருளாயே

வந்தித் துன்றன் .. அடிபேணும்

.. .. அன்பர்க் கென்றும் .. அணியானாய்

.. வம்பர்க் கண்ட .. அரிதானாய்

.. .. நஞ்சைக் கண்டம் .. அணிவோனே

முந்திப் பந்தன் .. இசைபாட

.. .. என்புக் கந்த .. உருவீவாய்

.. முன்கைச் சங்க .. மடமானோர்

.. .. பங்கிற் கொண்ட .. பெருமானே.


சொற்பொருள்:

உந்துதல் - தள்ளுதல்;

உந்தி - வயிறு;

நெஞ்சக் குன்றம் - கல் நெஞ்சு; (குன்றம் - மலை);

சிந்துதல் - அழிதல்;

கந்தம் - வாசனை;

திங்கட்டுண்டன் - திங்கள் துண்டன் - நிலாத் துண்டம் அணிந்தவன்;

சிந்திப்பு - எண்ணம்;

அணி - சமீபத்தில்; அருகு;

வம்பர் - வீணர்கள்; துஷ்டர்கள்;

பந்தன் - ஞானசம்பந்தன்; (ஒருபுடைப்பெயர் - நாம ஏகதேசம்);

அந்தம் - அழகு;

சங்கம் - வளையல்;

மடமான் - இளமையான மான் போன்ற பார்வதி;


உந்திப் பந்த வினை ஏவ, உந்திக்கு என்று நிதம் ஓடி, நிந்திக்கின்ற வழி ஏகும் நெஞ்சக்குன்றம் உடையேனும் - பந்தித்திருக்கும் பழவினைகள் என்னை உந்திச் செலுத்த, வயிற்றிற்காகத் தினமும் அலைந்து, மேன்மையில்லாத வழியில் போகும், மலை போன்ற கல் நெஞ்சத்தை உடைய நானும்;


சிந்திப் பண்டை வினை போகச், செஞ்சொல் கந்த மலர் தூவித், திங்கள் துண்டன் உனை ஓதச் சிந்திப்பு ஒன்றை அருளாயே - என் பழைய வினைகள் அழிந்துபோகச், சிறந்த சொற்களால் ஆன வாச மலர்களைத் தூவிப் (பாமாலைகளைப் பாடிப்), பிறைச்சந்திரனை அணிந்த உன்னை ஓத ஓர் எண்ணத்தை அருள்வாயாக;


வந்தித்து உன்றன் அடி பேணும் அன்பர்க்கு என்றும் அணியானாய் - வந்தனை செய்து உன் திருவடிகளைப் போற்றும் பக்தர்களுக்கு என்றும் அருகே இருப்பவனே;

வம்பர்க்கு அண்ட அரிதானாய்; நஞ்சைக் கண்டம் அணிவோனே - பயனற்ற துஷ்டர்களுக்கு அணுக இயலாதவனே; விஷத்தைக் கழுத்தில் அணிபவனே;


முந்திப் பந்தன் இசை பாட, என்புக்கு அந்த உரு ஈவாய் - முன்பு திருஞான சம்பந்தர் திருப்பதிகம் பாடவும், மயிலாப்பூரில் எலும்பை அழகிய பெண் ஆக்கியவனே;

முன்கைச் சங்க மடமான் ஓர் பங்கில் கொண்ட பெருமானே - முன்கையில் வளையல் அணிந்த, இளமையான மான் போன்ற பார்வதியை ஒரு கூறாகக் கொண்ட சிவபெருமானே.


பிற்குறிப்பு:

நெஞ்சக்குன்றம் - நெஞ்சம் என்ற மலை - கல் போன்ற நெஞ்சம்.


கந்தர் அநுபூதி: காப்பு:

"நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்"


அப்பர் தேவாரம் - 5.100.2

செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று

பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ

அத்த னென்றரி யோடு பிரமனும்

துத்தி யஞ்செய நின்றநற் சோதியே.


மனப்பாறைகளுக்கு - பாறைபோன்ற கல் மனம் உடையவர்க்கு.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment