Saturday, July 16, 2022

06.04.017 – திருஞான சம்பந்தர் துதி - மண்ணுலகு வாழ

06.04.017 – திருஞான சம்பந்தர் துதி - மண்ணுலகு வாழ

2011-05-02

6.4.17) திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2011-May-19/20

----------------------------------

(வெண்பா)

(எல்லாப் பாடல்களும் ஒரே ஈற்றடி)


1)

மண்ணுலகு வாழ மலர்வாய் திறந்தழுது

வெண்ணிலவு சூடியும் வெற்பரையன் - பெண்ணும்

புகட்டியமெய்ஞ் ஞானமாம் போனகம் உண்ட

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


* அம்மையப்பரால் ஞானப்பால் உண்பிக்கப்பெற்றதைச் சுட்டியது.


வெற்பு அரையன் பெண் - இமவான் மகள் - பார்வதி; (வெற்பு - மலை); (அரையன் - அரசன்);

புகட்டுதல் - ஊட்டுதல்;

ஞானமாம் போனகம் - ஞானப்பால்; (போனகம் - உணவு); (பெரிய புராணம்; "பொங்கு கொங்கையிற் கறந்த மெய்ஞ்ஞானமாம் போனகம் பொற்குன்ற மங்கை செங்கையால் ஊட்ட உண்டருளிய மதலையார்")

புகலியர்கோன் பொற்றாள் புகல் - ஞானசம்பந்தரது பொன்னடி எம் துணை; ஞானசம்பந்தரது பொன்னடியைப் போற்றிச் சொல்; (புகலியர்கோன் - திருஞான சம்பந்தர்; புகலி - சீகாழி); (பொற்றாள் - பொன்னடி); (புகல் - சரண்; துணை); (புகல்தல் - சொல்லுதல்);


2)

பாங்குறக் கையிரண்டால் ஒத்தறுத்துப் பாடும்போ

தாங்கையன் இன்னருளால் அஞ்செழுத்துத் - தாங்கித்

தகதகக்கும் தாளமொன்று தம்கையில் பெற்ற

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


பதம் பிரித்து:

பாங்கு-உறக் கை-இரண்டால் ஒத்தறுத்துப் பாடும்போது

அங்கு ஐயன் இன்-அருளால் அஞ்செழுத்துத் - தாங்கித்

தகதகக்கும் தாளம்-ஒன்று தம் கையில் பெற்ற

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


* திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றதைச் சுட்டியது.


பாங்கு - அழகு; தகுதி;

ஒத்தறுத்தல் - தாளவரையறை செய்தல்;

தாளம் - கைத்தாளக்கருவி;


3)

இறையும் எமபயம் இல்லை வினையும்

பறையும் இரவும் பகலும் - இறைவன்

புகழ்நாமம் போற்றும் அகத்தினர்க் கென்ற

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


* பஞ்சாக்கரப் பதிகத்தைச் சுட்டியது.


இறையும் - சிறிதும்;

பறைதல் - அழிதல்;

அகத்தினர் - மனத்தினர்;


(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "வந்த கூற்று அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே");

(சம்பந்தர் தேவாரம் - 3.22.4 - "நல்லவர் தீயர் எனாது நச்சினர் செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ ... ... அஞ்செழுத்துமே");


4)

மழைமிடறா மங்கையை வாடமயல் செய்வ

தழகா அருளென்று கொல்லி - மழவன்

மகளின்நோய் தீர்தமிழ் மாலை உரைத்த

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


பதம் பிரித்து:

"மழை-மிடறா! மங்கையை வாட மயல் செய்வது

அழகா? அருள்!" என்று கொல்லி மழவன்

மகளின் நோய் தீர் தமிழ்மாலை உரைத்த

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


* திருப்பாச்சிலாச்சிராமத்தில் கொல்லி மழவனின் மகளின் முயலகன் நோயைத் தீர்த்ததைச் சுட்டியது.


மழைமிடறா - நீலகண்டனே; (மழை - கருமை; மேகம்); (மிடறு - கழுத்து);

மயல் - மயக்கம்;

(சம்பந்தர் தேவாரம் - 1.44.1 - "மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே");


5)

வாள்விழிமா தோர்பால் மகிழ்எந்தை மாதேவன்

தாள்பணியும் அன்பர்க்குக் கோள்களொடு - நாள்கள்

மிகநல்ல என்றுதமிழ் வேதம் மொழிந்த

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


* திருமறைக்காட்டில் கோளறுபதிகம் பாடியருளியதைச் சுட்டியது.


வாள்விழி மாது ஓர்பால் மகிழ் எந்தை - ஒளி திகழும் கண்களையுடைய உமையை ஒரு பாகமாக விரும்பிய எம் தந்தை; (வாள் - ஒளி);


(சம்பந்தர் தேவாரம் - 2.85.1 -

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.)


6)

தீயை அடியார் திருமடத்தில் இட்டஅத்

தீயரொடு தென்னாட்டைப் பீடித்த - மாயை

அகலப் பதிகம் அருளிப் புரந்த

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


* மதுரையில் சமணர்களை வாதில் வென்றதைச் சுட்டியது.


மாயை - வஞ்சகம்; பொய்த்தோற்றம்;

பீடித்தல் - துன்புறுத்துதல்;

அகல்தல் - நீங்குதல்;

புரந்த - காத்த; (புரத்தல் - காத்தல்);


(சம்பந்தர் தேவாரம் - 3.51.1 - "பொய்யராம் அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே");

(சம்பந்தர் தேவாரம் - 3.54.1 - "வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்");


7)

பூவையுயிர் பெற்றுப் பொடியினின்று மீண்டெழப்

பாவையொரு பங்கனைப் பண்டெயில்கள் - வேவ

நகைசெய்த நம்பனை நற்றமிழால் போற்று

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


* மயிலாப்பூரில் குடச்சாம்பலிலிருந்து பூம்பாவையை எழச்செய்ததைச் சுட்டியது.


பூவை - பெண்; இங்கே பூம்பாவை;

பொடியினின்று - சாம்பலிலிருந்து; (பொடி - சாம்பல்);

பண்டு - முற்காலம்;

எயில் - கோட்டை;

நகைசெய்த - சிரித்த;

நம்பன் - சிவன்;


(சம்பந்தர் தேவாரம் - 2.47.1 - "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்");


8)

தகவின்றி மாமலையைத் தானசைத்த பத்து

முகத்தன்தன் தோள்வலியை முன்பு - நகத்தால்

துகள்செய்த தூமதி சூடி மகனார்

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


* கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணனைச் சிவபெருமான் தன் கால்விரல் நுனியால் நசுக்கியதைச் சுட்டியது.


தகவு - தகுதி; பொருத்தம்; அறிவு;

பத்துமுகத்தன் - பத்துத் தலைகள் உடைய இராவணன்;

தோள்வலி - புஜபலம்;

நகத்தால் துகள்செய்த - விரல்நகத்தால் பொடிசெய்த (அழித்த);

(சம்பந்தர் தேவாரம் - 3.92.8 - "முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகடோள் நெரிதரவே உந்திமா மலரடி ஒருவிரல் உகிர்நுதி யாலடர்த்தார்" - ஒரு விரலின் நகத்தின் நுனியால் அடர்த்தார்);

தூமதி சூடி மகனார் - தூய வெண்திங்களைச் சூடும் சிவபெருமானுக்குத் திருமகனார் சம்பந்தர்;


9)

அரியும் அயனும் அடிமுடி காணா

எரியின் உருவன் கரியின் - உரியன்

பகவன் கழலைப் பரவு மகனார்

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


எரி - சோதி;

கரி - யானை;

உரி - தோல்;

பகவன் - பகவான்; சிவன்;

பரவுதல் - புகழ்தல்; துதித்தல்; பாடுதல்;


10)

பரசமயப் புல்நீக்கிப் பைந்தமிழ்நீர் பாய்ச்சித்

தரையினில் சைவம் தழைக்க - அரவம்

திகழ்முடியன் சீர்பாடித் தேசமெங்கும் சென்ற

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


பரசமயம் - புறமதம்;

புல் - திரணம் (grass); இழிவு; அற்பம்;

தரை - உலகம்;

அரவம் - பாம்பு; ஒலி; (இரைக்கும் பாம்பு, கங்கை அலை ஓசை);

சீர் - புகழ்;


11)

தேசன் திருக்கயிலை வாசன் மலைமங்கை

நேசன் வினைநாசன் நெற்றிக்கண் - ஈசன்

புகழைத் தமிழ்பாடிப் போற்றிப் பணிந்த

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


தேசன் - ஒளியுருவினன்; (தேசு - ஒளி);

திருக்கயிலை வாசன் - கயிலைமலையில் வீற்றிருப்பவன்;

மலைமங்கை நேசன் - உமை மணாளன்;

வினைநாசன் - நம் வினைகளை அழிப்பவன்;

நெற்றிக்கண் ஈசன் புகழைத் தமிழ்பாடிப் போற்றிப் பணிந்த - முக்கண்ணுடைய ஈசனது புகழைத் தமிழ்ப்பாமாலை (தேவாரம்) பாடிப் போற்றி வணங்கிய;

புகலியர்கோன் பொற்றாள் புகல் - ஞானசம்பந்தரது பொன்னடி எம் துணை; ஞானசம்பந்தரது பொன்னடியைப் போற்றிச் சொல்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment