Saturday, July 16, 2022

06.02.147 – பொது - கழலிணையை ஏத்தற்கு - (வண்ணம்)

06.02.147 – பொது - கழலிணையை ஏத்தற்கு - (வண்ணம்)

2011-05-23

06.02.147 - கழலிணையை ஏத்தற்கு - (பொது)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனன தாத்தத் .. தனதான )

(A thiruppugazh with a slightly different syllabic pattern -

வசனமிக வேற்றி மறவாதே - திருப்புகழ் - பழநி)


கழலிணையை ஏத்தற் .. கறியாத

.. கடுவினையர் கூட்டிற் .. சுழலாமல்

அழகுதரு நீற்றைப் .. புனைவார்கள்

.. அணியையடை பேற்றைத் .. தருவாயே

அழைபுகலி யார்க்குப் .. பெருஞான

.. அமுதையுமை ஊட்டற் .. கருள்வோனே

மழவிடைய நாற்றக் .. கணையேவு

.. மதனையெரி நாட்டப் .. பெருமானே.


பதம் பிரித்து:

கழலிணையை ஏத்தற்கு அறியாத

.. கடுவினையர் கூட்டிற் சுழலாமல்,

அழகுதரு நீற்றைப் புனைவார்கள்

.. அணியை அடை பேற்றைத் தருவாயே;

அழை புகலியார்க்குப் பெரு-ஞான

.. அமுதை உமை ஊட்டற்கு அருள்வோனே;

மழ-விடைய; நாற்றக் கணை ஏவு

.. மதனை எரி நாட்டப் பெருமானே.


கழல் இணையை ஏத்தற்கு அறியாத கடுவினையர் கூட்டிற் சுழலாமல் - திருவடிகளைத் துதிக்க அறியாத தீவினையாளர்களோடு கூடித் திரிந்து மனம் வருந்தாமல்; (கடுவினையர் - தீவினையாளர்கள்); (சுழல்தல் - சுற்றுதல்; சஞ்சலப்படுதல்);

அழகு தரு நீற்றைப் புனைவார்கள் அணியை அடை பேற்றைத் தருவாயே - அழகு தரும் திருநீற்றைப் பூசும் பக்தர்குழாத்தைச் சேர்கின்ற பேற்றை எனக்குத் தந்தருள்வாயாக; (அணி - குழாம்; கூட்டம்); (அழகுதரு நீறு - சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - "சுந்தரமாவது நீறு");

அழை புகலியார்க்குப் பெருஞான அமுதை உமை ஊட்டற்கு அருள்வோனே - "அம்மே, அப்பா" என்று அழுது அழைத்த சம்பந்தருக்கு அரிய ஞானப்பாலை உமையம்மை ஊட்டுமாறு அருள்செய்தவனே; (புகலியார் - புகலி என்ற சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தர்); (பெரிய புராணம் - 12.28.63 - "திருத்தோணிச் சிகரம்பார்த்து அம்மேஅப் பாஎன்றென்று அழைத்தருளி அழுதருள");

மழவிடைய - இளைய ஏற்றை ஊர்தியாக உடையவனே; (மழ - இளமை);

நாற்றக் கணை ஏவு மதனைரி நாட்டப் பெருமானே - வாசம் கமழும் அம்பினை (மலர்க்கணையை) ஏவிய மன்மதனை எரித்த நெற்றிக்கண் உடைய பெருமானே; (நாற்றம் - வாசனை); (மதன் - காமன்); (நாட்டம் - கண்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment