06.02.132 – கோயில் (தில்லை - சிதம்பரம்) - சிரிக்கச் சஞ்சரித்து - (வண்ணம்)
2010-11-27
06.02.132 - சிரிக்கச் சஞ்சரித்து - (கோயில் (சிதம்பரம்))
-------------------------
(வண்ணவிருத்தம்;
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந் .. தனதான )
(பெருக்கச்சஞ் சலித்துக்கந் தலுற்றுப்புந் தியற்றுப்பின் - திருப்புகழ் - திருச்செந்தூர்)
சிரிக்கச்சஞ் சரித்துச்சிந் தனைப்பட்டுஞ் சினப்பட்டுஞ்
.. செகத்திற்றுன் பினைத்துய்க்கும் .. பவமாயச்
சரிப்பட்டென் பிணிப்பற்றுன் கழற்கிட்டஞ் சிறக்கப்பண்
.. தழைக்கச்செந் தமிழ்ப்புட்பம் .. புனைவேனோ
புரத்திற்செந் தழற்பற்றும் படிப்பொற்குன் றெடுத்துத்தென்
.. புலத்தற்கன் றுவப்பைத்தந் .. தருள்வோனே
திருச்சிற்றம் பலத்துட்கங் கையைத்தற்றுஞ் சடைத்தட்பந்
.. தெளிக்கத்திங் களிச்சிக்கும் .. பெருமானே.
பதம் பிரித்து:
சிரிக்கச் சஞ்சரித்துச், சிந்தனைப்பட்டும் சினப்பட்டும்,
.. செகத்தில் துன்பினைத் துய்க்கும் பவம் மாயச்,
சரிப்பட்டு, என் பிணிப்பு அற்று, உன் கழற்கு இட்டம் சிறக்கப், பண்
.. தழைக்கச், செந்தமிழ்ப்-புட்பம் புனைவேனோ;
புரத்தில் செந்தழல் பற்றும்படிப் பொற்குன்று எடுத்துத், தென்
.. புலத்தற்கு அன்று உவப்பைத் தந்து அருள்வோனே;
திருச்சிற்றம்பலத்துள் கங்கையைத் தற்றும் சடைத் தட்பம்
.. தெளிக்கத் திங்கள் இச்சிக்கும் பெருமானே.
சிரிக்கச் சஞ்சரித்துச், சிந்தனைப்பட்டும் சினப்பட்டும், செகத்தில் துன்பினைத் துய்க்கும் பவம் மாயச் - பிறர் எள்ளி நகையாடும்படி வாழ்ந்து, கவலையும் கோபமும் பட்டு, இவ்வுலகில் துன்பத்தை அனுபவிக்கும் பிறவிகள் அழிய; (சிரித்தல் - பரிகசித்தல்); (சிந்தனை - கவலை); (துய்த்தல் - அனுபவித்தல்); (பவம் - பிறப்பு); (மாய்தல் - அழிதல்);
சரிப்பட்டு, என் பிணிப்பு அற்று, உன் கழற்கு இட்டம் சிறக்கப், பண் தழைக்கச், செந்தமிழ்ப்-புட்பம் புனைவேனோ - நல்வழியை அடைந்து, என் பந்தங்கள் அற்று, உன் திருவடிக்கு அன்பு சிறக்கச் சந்தமும் இசையும் மிகுந்த தமிழ்ச்சொற்கள் என்ற மலர்களால் மாலை தொடுத்துச் சூட்ட அருள்வாயாக; (சரிப்படுதல் - நேராதல்); (பிணிப்பு - பந்தம்; பற்று); (இட்டம் - இஷ்டம் - அன்பு); (செந்தமிழ்ப்புட்பம் - செந்தமிழ்ப்பாமாலை); (புனைதல் - சூட்டுதல்; தொடுத்தல்);
புரத்தில் செந்தழல் பற்றும்படிப் பொற்குன்று எடுத்துத், தென்புலத்தற்கு அன்று உவப்பைத் தந்து அருள்வோனே - முப்புரங்களில் தீப் பற்றும்படி மேருமலையை ஏந்திப் போர்செய்து, தென்புலத்தனான இயமனுக்கு அன்று மகிழ்ச்சியைத் தந்தவனே; (முப்புரத்து அசுரர்களை யமனுக்கு இரையாக்கியவனே); (தென்புலத்தன் - தென்திசைக்கோனான யமன்); (தென்புலத்தற்கு = தென்புலத்தன்+கு = யமனுக்கு); (செந்தழல் பற்றும்படி பொற்குன்று - சந்தம்நோக்கிச் - "செந்தழற்பற்றும் படிப்பொற்குன்று" என்று வந்தது);
திருச்சிற்றம்பலத்துள் கங்கையைத் தற்றும் சடைத் தட்பம் தெளிக்கத் திங்கள் இச்சிக்கும் பெருமானே - கங்கையைக் கட்டிய (அணிந்த) சடையில் (மேலும்) குளிர்ச்சியைத் தெளிக்குமாறு சந்திரனை விரும்பி அணிந்தவனே; திருச்சிற்றம்பலத்தில் உறையும் சிவபெருமானே! (தறுதல் - இறுக உடுத்துதல்; கட்டுதல்); (தட்பம் - குளிர்ச்சி); (இச்சித்தல் - விரும்புதல்); ("கங்கையைத் தற்றும் சடைத் தட்பம் தெளிக்கத் திங்கள் இச்சிக்கும்" - கங்கை இருக்கும் சடையில் குளிர்ச்சியைத் தெளிக்கச் சந்திரன் விரும்புகின்ற - என்றும் பொருள்கொள்ளுமாறு அமைந்தது);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment