Saturday, July 30, 2022

06.02.150 – பொது - மாதைக் காசை - (வண்ணம்)

06.02.150 – பொது - மாதைக் காசை - (வண்ணம்)

2011-06-15

06.02.150 - மாதைக் காசை - (பொது)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானத் .. தனதான )

(நாடித் தேடித் தொழுவார்பால் - திருப்புகழ் - திருவானைக்கா)


மாதைக் காசைத் .. தினம்நாடி

.. மாயத் தேபுக் .. கழிவேனோ

வேதத் தாயைப் .. பணியாத

.. வீணர்க் கேகத் .. தொலைவாகிப்

பாதச் சீரைத் .. தமிழாலே

.. பாடிப் பேணத் .. தவறாத

காதற் சீலர்க் .. கணியானே

.. கானத் தாடற் .. பெருமானே.


பதம் பிரித்து:

மாதைக் காசைத் தினம் நாடி,

.. மாயத்தே புக்கு அழிவேனோ;

வேதத்தாயைப் பணியாத

.. வீணர்க்கு ஏகத் தொலைவு ஆகிக்,

பாதச் சீரைத் தமிழாலே

.. பாடிப் பேணத் தவறாத

காதற் சீலர்க்கு அணியானே;

.. கானத்து ஆடற் பெருமானே.


மாதைக் காசைத் தினம் நாடி, மாயத்தே புக்கு அழிவேனோ - பெண், பொருள் என்ற ஓயா ஆசையால் மாயையுள் அழுந்தி அழியாதவாறு அருள்வாயாக; (மாயம் - மாயை);

வேதத்தாயைப் பணியாத வீணர்க்கு ஏகத் தொலைவு ஆகிக் - வேதத்தில் விளங்கும் உன்னைப் பணியாத வீணர்களுக்கு மிகவும் தூரமாய்க்; (வேதத்தாயை - வேதங்களிடையே விளங்கும் உன்னை); (ஏகத் தொலைவு - மிகவும் தூரம்); (அப்பர் தேவாரம் - 6.12.5 - "வேதத்தாய் கீதத்தாய் விரவி யெங்கும்");

பாதச் சீரைத் தமிழாலே பாடிப் பேணத் தவறாத காதற் சீலர்க்கு அணியானே - உன் திருவடிப் புகழைத் தமிழால் பாடிப் போற்றத் தவறாத அன்புடைய சீலர்களுக்கு அண்மையில் இருப்பவனே; (சீர் - புகழ்); (பேணுதல் - போற்றுதல்);

கானத்து ஆடற் பெருமானே - சுடுகாட்டில் கூத்தாடலை உடைய பெருமானே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment