06.02.138 – நின்றவூர் (திருநின்றவூர்) - நரனென்று பேராகி - (வண்ணம்)
2011-02-19
06.02.138 - நரனென்று பேராகி - (நின்றவூர் (திருநின்றவூர்))
-------------------------
(வண்ணவிருத்தம்;
தனதந்த தானான தனதந்த தானான
தனதந்த தானான .. தனதான )
(* திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்)
நரனென்று பேராகி நசைமண்டு வாழ்வாகி
.. .. நலமின்றி நானாடி .. மிகவாடி
.. நரைவந்து தீராத பிணிவந்து நாளோடி
.. .. நமன்வந்து நீறாகி .. விடுவேனோ
விரைகொண்ட பூவோடு கமழ்கின்ற பாவோடு
.. .. விழியங்கு நீர்வாரும் .. நெகிழ்வோடு
.. வினைகுன்ற ஆறான உனையென்று மேயோதி
.. .. மிகுமின்ப மேகாண .. அருளாயே
அரனென்று மூவாத முதலென்று மேலான
.. .. அறிவென்று நால்வேதம் .. உரைநாதா
.. அளிசிந்தை யார்பூசல் அவர்நெஞ்சி லார்கோயில்
.. .. அதில்நின்ற மாதேவ .. அமுதாகத்
திரைபொங்கு பாலோத விடமுண்ட சீராள
.. .. சிலைகொண்டு மூவூரை .. எரியீசா
.. சிறைவண்டு தேனாடி மலர்கின்ற பூவூது
.. .. திருநின்ற வூர்மேவு .. பெருமானே.
பதம் பிரித்து:
நரன் என்று பேர் ஆகி, நசை மண்டு வாழ்வாகி,
நலம் இன்றி நான் ஆடி, மிக வாடி,
நரை வந்து, தீராத பிணி வந்து, நாள் ஓடி,
நமன் வந்து நீறு ஆகி விடுவேனோ;
விரை கொண்ட பூவோடு, கமழ்கின்ற பாவோடு,
விழி அங்கு நீர் வாரும் நெகிழ்வோடு,
வினை குன்ற ஆறு ஆன உனை என்றுமே ஓதி,
மிகும் இன்பமே காண அருளாயே;
அரன் என்றும், மூவாத முதல் என்றும், மேலான
அறிவு என்றும், நால்வேதம் உரை நாதா;
அளி சிந்தையார் பூசல் அவர் நெஞ்சில் ஆர் கோயில்
அதில் நின்ற மாதேவ; அமுது ஆகத்,
திரை பொங்கு பால் ஓத விடம் உண்ட சீராள;
சிலைகொண்டு மூவூரை எரி ஈசா;
சிறைவண்டு தேன் நாடி மலர்கின்ற பூ ஊது,
திருநின்றவூர் மேவு பெருமானே.
நரன் என்று பேர் ஆகி, நசை மண்டு வாழ்வாகி, நலம் இன்றி நான் ஆடி, மிக வாடி - மனிதன் என்ற பெயர் ஆகி (மனிதப் பிறவி எடுத்து), ஆசைகள் மிகுகின்ற வாழ்வால், நன்மை இன்றி நான் மிக அலைந்து திரிந்து செயல்பட்டு, மிகவும் வருந்தி; (நரன் - மனிதன்); (நசை மண்டுதல் - ஆசை மிகுதல்);
நரை வந்து, தீராத பிணி வந்து, நாள் ஓடி, நமன் வந்து நீறு ஆகி விடுவேனோ - மயிர் நரைத்து, பெரிய வியாதிகள் வந்து, பல நாள்கள் சென்று, இயமன் வந்தடையச், சுடுகாட்டில் சாம்பல் ஆகி அழிவேனோ;
விரை கொண்ட பூவோடு, கமழ்கின்ற பாவோடு, விழி அங்கு நீர் வாரும் நெகிழ்வோடு - வாசம் மிக்க பூக்களாலும், பாமாலைகளாலும், கண்ணில் நீர் கசியும் மனநெகிழ்ச்சியோடு; (விரை - வாசனை); (அங்கு - அசைச்சொல்); (வார்தல் - ஒழுகுதல்; வெளிவிடுதல்);
வினை குன்ற ஆறு ஆன உனை என்றுமே ஓதி, மிகும் இன்பமே காண அருளாயே - வினைகள் குன்றுவதற்கு வழி ஆன உன்னை எந்நாளும் ஓதி வணங்கி, மிகுகின்ற இன்பமே பெற அருள்வாயாக; (ஆறு - வழி);
அரன் என்றும், மூவாத முதல் என்றும், மேலான அறிவு என்றும், நால்வேதம் உரை நாதா - ஹரன் என்றும், எப்பொழுதும் இளமையோடு இருக்கும் ஆதி என்றும், மேலான அறிவுவடிவானவன் என்றும் நால்வேதங்கள் கூறும் நாதனே; (மூத்தல் - முதுமை அடைதல்); (அறிவு - அறிவு வடிவானவன்);
அளி சிந்தையார் பூசல் அவர் நெஞ்சில் ஆர் கோயில் அதில் நின்ற மாதேவ - குழைந்த மனத்தை உடையவரான பூசலார் நாயனாரது மனக்கோயிலில் எழுந்தருளிய மஹாதேவனே; (அளிதல் - மனம் கனிதல்); (பூசல் - பூசலார் நாயனார்); (பெரியபுராணம் - பூசலார் நாயனார் புராணம் - 12.65.10 - "நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீ டால யத்து நாளைநாம் புகுவோம்");
அமுது ஆகத், திரை பொங்கு பால் ஓத விடம் உண்ட சீராள - அமுதம் உண்டாகும்படி, அமுதம் போல, அலை பொங்கும் பாற்கடலில் தோன்றிய விடத்தை உண்ட பெருமையுடையவனே; (ஆதல் - உண்டாதல்; ஒப்பாதல்); (திரை - அலை); (ஓதம் - கடல்); (காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி - 44 - "மனக்கினிய சீராளன் கங்கை மணவாளன்");
சிலைகொண்டு மூவூரை எரி ஈசா - மேருமலை என்ற வில்லைக் கையில் ஏந்தி முப்புரங்களை எரித்த ஈசனே; (சிலை - மலை; வில்); (திருவிசைப்பா - 9.3.1 - "சிறவாதவர் புரஞ் செற்ற கொற்றச் சிலைகொண்டு பன்றிப்பின் சென்று");
சிறைவண்டு தேன் நாடி மலர்கின்ற பூ ஊது, திருநின்றவூர் மேவு பெருமானே - சிறகுகளை உடைய வண்டு மதுவை விரும்பி மலர்கின்ற பூவில் ரீங்காரம் செய்யும் (சோலைகளை உடைய) திருநின்றவூரில் விரும்பி உறைகின்ற பெருமானே;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment