06.04.018 – சுந்தரர் துதி - வாடும் மனமே
2011-08-05
06.04.018) சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2011-Aug-05/06
-------------------------
(நேரிசை வெண்பா)
(எல்லாப் பாடல்களும் ஒரே ஈற்றடி)
1)
வாடும் மனமே வழியறிவாய் மன்றினுள்
ஆடும் பரமன் அடிமையெனத் - தேடியிடம்
வந்து வழக்காடி ஆட்கொண்ட மாபத்தர்
சுந்தரர் சொல்லே துணை.
தேடியிடம் - இடம் தேடி;
மா பத்தர் - பெரும் பக்தர்;
2)
மனமே மகிழ வழியிது கேளாய்
வினைதீர்ந்து செல்வம் விளையும்; - புனற்சடையன்
தந்தபொன்னை ஆற்றிலிட்டா ரூர்க்குளத்தில் தானெடுத்த
சுந்தரர் சொல்லே துணை.
3)
காலனுக் கஞ்சிக் கலங்கும் மனமேஓர்
பாலனுக்கா அன்றவன்மேல் பாய்ந்தவெஞ் - சூலனுக்குச்
சந்ததம் சந்தத் தமிழ்மாலை சாத்திய
சுந்தரர் சொல்லே துணை.
பாய்ந்தவெஞ்சூலன் - பாய்ந்த எம் சூலன்; பாய்ந்த வெம் சூலன்; (வெம்மை - கொடுமை; கோபம்; பராக்கிரமம்);
சந்ததம் - எப்பொழுதும்;
சாத்துதல் - அணிதல்;
4)
முன்பு முதலையுண்ட பாலகனைப் பெற்றவர்கள்
இன்புற இங்கெமனை ஈயச்சொல் - அன்புருவாம்
தந்தையே என்றுதமிழ் பாடித் தருவித்த
சுந்தரர் சொல்லே துணை.
தருவித்தல் - வருவித்தல்;
* சுந்தரர் தேவாரம் - 7.92.4
உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.
5)
சங்கிலிக்குச் செய்த சபதத்தை மீறியதால்
தங்கண் இழந்து தடுமாறி - அங்கணன்முன்
நொந்தழு தாரூரில் நோக்கமடைந் தின்புற்ற
சுந்தரர் சொல்லே துணை.
நோக்கம் - பார்வை;
* சுந்தரர் தேவாரம் - 7.95.2
விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை கொத்தை யாக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே.
6)
மனைவியின் கோபத்தை மாற்ற எனக்கிங்
குனையன்றி உற்றார்ஆர் உள்ளார் - எனவிரவில்
நந்தியவன் தூது நடந்துதவும் நல்லடியார்
சுந்தரர் சொல்லே துணை.
பதம் பிரித்து:
"மனைவியின் கோபத்தை மாற்ற, எனக்கு இங்கு
உனை அன்றி உற்றார் ஆர் உள்ளார்?" - என, இரவில்
நந்தி-அவன் தூது நடந்து உதவும் நல்-அடியார்
சுந்தரர் சொல்லே துணை.
என - என்று சொல்ல;
நந்தி - சிவபெருமான்; (7.92.7 - "நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே" - 'நந்தி' என்னும் வடசொல் , 'இன்பம் உடையவன்' எனப் பொருள்படும்);
7)
போவாரைக் கொள்ளைகொள் இம்முருகன் பூண்டியில்
மேவாமல் வேறூர் விரும்பாயோ - நாவார
வந்தித் தரனருளால் மாண்பொருளைப் பெற்றுமகிழ்
சுந்தரர் சொல்லே துணை.
"என்று" நாவார வந்தித்து - என்று ஒரு சொல்லை வருவித்துக்கொள்க.
மேவுதல் - உறைதல்;
மாண் பொருள் - மிகுந்த பொருள்;
* சுந்தரர் தேவாரம் - 7.49.1
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமைசொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாற லைக்குமிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முரு கன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக் கிங்கிருந் தீர்எம்பி ரானீரே.
8)
காவிரி வெள்ளத்தை நீந்திக் கடக்ககில்லேன்
பூவிரிகா ஐயாறா ஓவெனக் - கூவியழை
செந்தமிழால் நீர்விலகிச் செல்வழி நல்கமகிழ்
சுந்தரர் சொல்லே துணை.
கடக்ககில்லேன் - கடக்கும் ஆற்றல் இல்லேன்;
"பூ-விரி-கா ஐயாறா ஓ" எனக் கூவி அழை - பூக்கள் மலரும் சோலை திகழும் திருவையாற்றுப் பெருமானே! ஓலம்" என்று கூவி அழைத்த;
* சுந்தரர் தேவாரம் - 7.77.9
கதிர்க்கொள் பசியே ஒத்தேநான் கண்டே னும்மைக் காணாதேன்
எதிர்த்து நீந்த மாட்டேன்நான் எம்மான் தம்மான் தம்மானே
விதிர்த்து மேகம் மழைபொழிய வெள்ளம் பரந்து நுரைசிதறி
அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ !
9)
அந்தமில் ஐயன் அருந்துணைவன் என்றுதனைத்
தந்தருள் செய்த தகைமையினால் - நிந்தையைப்போல்
கந்தமலி பாவால் கழலிணையைப் பாடியருள்
சுந்தரர் சொல்லே துணை.
அந்தம் இல் ஐயன் - முடிவு இல்லாத தலைவன்;
அரும் துணைவன் - அரிய தோழன்;
கந்தமலிபா - கந்தம் மலி பா - மணம் மிகுந்த பாமாலை;
10)
முனிவரெலாம் மால்நான் முகன்வர வேற்கும்
இனியவன்ஆர் என்றுவியப் பெய்தத் - தனிவிடையார்
நந்தமர் ஊரனெனும் நம்பி நலந்திகழும்
சுந்தரர் சொல்லே துணை.
தனி விடையார் - ஒப்பற்ற இடபத்தை ஊர்தியாகக் கொண்டவர்;
நந்தமர் ஊரன் - நம் தமர் ஊரன் - நம் தோழன், "ஆரூரன்" என்னும் பெயரினன்;
நம்பி - ஆணிற் சிறந்தோன்;
* சுந்தரர் தேவாரம் - 7.100.9
இந்திரன் மால்பிரமன் னெழி லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த யானை யருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான் நொடித் தான்மலை உத்தமனே.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment