Saturday, April 8, 2017

03.04.034 - சிவன் - வேம்பு - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-19

3.4.34 - சிவன் - வேம்பு - சிலேடை

-------------------------------------------------------------

அம்மைக்கு நல்ல துணையாம் அருநோய்கள் (**1, **2)

தம்மைத் தடுக்கும் மருந்தாகும் வெம்மையே

மண்டவடி வந்தடைந்தார்க் கின்பம் வழங்கிடும்

வெண்டிரையார் வேணியன் வேம்பு.


சொற்பொருள்:

அம்மை - 1. அம்மை என்ற நோய்; (Smallpox, chicken-pox, measles); / 2. பார்வதி; மறுபிறவி;

அம்மைக்கு நல்ல – 1. அம்மைக்கு நல்ல; / 2. அம்மைக்கும் நல்ல; (இங்கே புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும்);

துணை - உதவி; காப்பு; கணவன்;

அருநோய் - கொடிய நோய்;

மருந்து - ஔஷதம்; / அமிர்தம்;

வெம்மை - வெப்பம்; / விருப்பம்; கொடுந்துன்பம்;

மண்டுதல் - அதிகமாதல்;

அடி - 1. கீழ்; / 2. பாதம்;

அடைதல் - 1. சேர்தல்; / 2. சரண்புகுதல்;

திரை - அலை; நதி;

ஆர்தல் - பொருந்துதல்;

வேணி - சடை;

வேம்பு - வேப்பமரம்;


வேம்பு:

அம்மைக்கு நல்ல துணை ஆம் - அம்மைநோய் தாக்கியவர்களுக்கு (வேம்பின் இலை) உதவும்.

அருநோய்கள் தம்மைத் தடுக்கும் மருந்து ஆகும் - கொடிய நோய்களைத் தடுக்கும் மருந்து ஆகும்.

வெம்மையே மண்ட, அடி வந்தடைந்தார்க்கு இன்பம் வழங்கிடும் - (வெயிலின்) வெப்பமே மிக, (வாடி) மரத்தடியில் வந்து சேர்ந்தவர்களுக்கு (அதன் நிழல்) இன்பம் தரும்.

வேம்பு - வேப்பமரம்;


சிவன்:

அம்மைக்கும் நல்ல துணை ஆம் - இப்பிறவியிலும் அதனைத் தொடர்ந்து வரும் நிலைக்கும் நல்ல துணை ஆவான்; (அம்மைக்கும் என்றதில் "உம்" - எச்சவும்மை; இம்மைக்கும் என்பதைக் குறிப்பால் உணர்த்தியது); ("அம்மைக்கு நல்ல துணை ஆம்" - என்று "உம்" இன்றிப் பொருள்கொள்ளவும் கூடும். அப்படிக் கொண்டால், "பார்வதி மணாளன் ஆவான்"); (அப்பர் தேவாரம் - 5.43.4 - "உமைக்கு நல்லவன் தான் உறையும் பதி" - உமாதேவிக்கு நல்லவனாகிய இறைவன் உறைகின்ற தலம்);

அருநோய்கள் தம்மைத் தடுக்கும் மருந்து ஆகும் - பிறவிப்பிணியையும் பிற நோய்களையும் தடுக்கும் மருந்து ஆவான்.

வெம்மையே மண்ட, அடி வந்தடைந்தார்க்கு இன்பம் வழங்கிடும் - கொடுந்துன்பம் மிகுந்ததால் (வாடித்) திருவடியைச் சரண்புகுந்தவர்களுக்கு இன்பம் அருள்வான்;

வெண்-திரை ஆர் வேணியன் - வெண்ணிற அலைகள் நிறைந்த கங்கையைச் சடையில் அணிந்த சிவபெருமான்;


(**1 சம்பந்தர் தேவாரம் - பஞ்சாக்கரப் பதிகம் - திருமுறை 3.22.6 -

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்

வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்

இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்

அம்மையினும் துணை அஞ்செழுத்துமே


**2 அப்பர் தேவாரம் - திருமுறை 6.95.6 -

திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகில்

.. தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்

ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்

.. உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்

அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்

.. அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்

பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்

.. பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின் றாரே.

)


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Saturday, December 24, 2016

03.04.033 - சிவன் - மேகம் - சிலேடை - 3

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-20

3.4.33 - சிவன் - மேகம் - சிலேடை - 3

-------------------------------------------------------------

வானத்தில் வாழ்ந்தாலும் மண்ணில் வரும்பொழுதோர்

ஏனத்தில் ஏந்துவதும் உண்டுவே றான

உருவத்தில் மின்னற் கொடியிடை யோடு

மருவுரு காட்டுசிவன் மஞ்சு.


சொற்பொருள்:

ஏனம் - பாத்திரம்;

வேறு - 1. பிறிது; / 2. சிறப்புடையது;

கொடியிடை யோடு மருவுரு - 1. கொடி இடை ஓடும் அருவுரு; / 2. கொடியிடையோடு மருவு உரு;

அருவுரு - சிவலிங்கம்;

மருவுதல் - கலந்து இருத்தல்; தோன்றுதல்;

மஞ்சு - மேகம்;


மேகம்:

வானத்தில் வாழ்ந்தாலும் - மேகமாக வானத்தில் இருக்கும்.

மண்ணில் வரும்பொழுது ஓர் ஏனத்தில் ஏந்துவதும் உண்டு வேறு ஆன உருவத்தில் - பூமிக்கு வரும்பொழுது (மேகத்தினின்றும்) மாறுபட்ட (நீர்) வடிவத்தில் பாத்திரத்தில் (மக்கள்) ஏந்துவதும் உண்டு.

மின்னல் கொடி இடை ஓடும் - (மேகத்தின்) நடுவே மின்னல் வீசும்;

(அருவுரு காட்டு சிவன்) -

மஞ்சு - மேகம்;


சிவன்:

வானத்தில் வாழ்ந்தாலும் - சிவலோகத்தில் (உருவமின்றி) இருந்தாலும்,

மண்ணில் வரும்பொழுது ஓர் ஏனத்தில் ஏந்துவதும் உண்டு வேறு ஆன உருவத்தில் - இவ்வுலகில் வரும்போது, வேறு ஒரு வடிவத்தில் (அழகிய பிச்சாடனர் கோலத்தில்) வந்து, ஒரு (மண்டையோடு என்ற) பிச்சைப் பாத்திரத்தில் பிச்சையேற்பதும் உண்டு.

வேறு ஆன உருவத்தில் மின்னற்கொடி-டையோடு மருவு உரு காட்டு சிவன் - மின்னல்கொடி போன்ற சிற்றிடை உடைய பார்வதியோடு இணைந்து அர்த்தநாரீஸ்வரனாகக் காட்சி தருகின்ற சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.032 - சிவன் - மேகம் - சிலேடை - 2

 03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-18

3.4.32 - சிவன் - மேகம் - சிலேடை - 2

-------------------------------------------------------------

எழும்போது காண இயலாது கீழே

விழும்போது தான்தெரியும் வேளை விழுமாறு

செய்வான் திருவினை வாரி வழங்குமழுக்

கையான் சிவன்மேகம் காண்.


சொற்பொருள்:

எழும்போது - மேலே உயரும் சமயத்தில்

போது - 1. பொழுது; / 2. மலர்;

வேள் - மன்மதன்;

வேளை - காலம்; பருவம்;

விழுமாறு - 1. விழும் ஆறு; / 2. விழும்படி;

வான் - மேகம்; பெருமை; நன்மை; வானுலகு;

வாரி - 1. கடல்; / 2. அள்ளி;

காண் - முன்னிலை அசை;


மேகம்:

எழும்போது காண இயலாது - (கடலிலிருந்து உற்பத்தியாகி நீராவியாக) மேலே எழும் சமயத்தில் நம்மால் காண இயலாது.

கீழே விழும்போதுதான் தெரியும் - மழையாகக் கீழே விழும் சமயத்தில்தான் பார்க்க முடியும்.

வேளை விழும் ஆறு செய் வான் - ஆறுகளை உருவாக்கும் மேகம் பருவத்தில் பெய்யும்.

வான் திருவினை வாரி வழங்கும் - (அந்த) மேலான செல்வத்தைக் கடல் வழங்கும். ("வான்" என்ற சொல்லை இப்படி இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);

மேகம் காண் - மேகம்;


சிவன்:

எழும்போது காண இயலாது - (விண்ணுற) உயர்ந்த சமயத்தில் (பிரமன் விஷ்ணுவால் அடிமுடி) காண இயலாது. பிரமன் அன்னமாகி வானில் உயர்ந்தாலும் காண இயலாது;

கீழே விழும் போது தான் தெரியும் - (ஈசன் திருமுடியிலிருந்து) கீழே விழுகின்ற (தாழம்பூ) மலர்தான் (பிரமனுக்குத்) தெரியும்;

வேளை விழுமாறு செய்வான் - (நெற்றிக்கண்ணால்) மன்மதனை (எரிந்து சாம்பலாகி) விழும்படி செய்தான்.

வான் திருவினை வாரி வழங்கும் - (அன்பர்களுக்கு) முக்திச் செல்வத்தை அள்ளிக் கொடுப்பான். (இலக்கணக் குறிப்பு - செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று - படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றில் மட்டுமே இது இடம்பெறும்);

மழுக்-கையான் சிவன் காண் - மழுவைக் கையில் ஏந்தியவனான சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.031 - சிவன் - மேகம் - சிலேடை - 1

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-18

3.4.31 - சிவன் - மேகம் - சிலேடை - 1

-------------------------------------------------------------

கருநிறமும் வெண்ணிறமும் காண நினைத்த

உருவம் எடுத்தே உயரத் திருப்பதால்

ஆலத்தை ஆர்ந்துதிகழ் கோலத்தால் மூவிலைச்

சூலத்தன் தண்முகில் சொல்.


சொற்பொருள்:

ஆலம் - 1. நீர்; / 2. விடம்;

ஆர்தல் - உண்தல்;

கோலம் - அழகு; வடிவம்;


மேகம்:

கருநிறமும் வெண்ணிறமும் காண - சில சமயம் கருமையாகவும், சில சமயம் வெண்மையாகவும் தோன்றி;

நினைத்த உருவம் எடுத்தே - (பார்ப்பவர்கள்) நினைத்த உருவமாகத் தோன்றி;

உயரத்து இருப்பதால் - உயரத்தில் இருப்பதால்;

ஆலத்தை ஆர்ந்து திகழ் கோலத்தால் - நீரை உண்டு விளங்குகின்ற வடிவத்தால்;

தண்முகில் சொல் - குளிர்ச்சி பொருந்திய மேகம் என்று கூறு.


சிவன்:

கருநிறமும் வெண்ணிறமும் காண - (கழுத்தில்) கரிய நிறமும், (திருநீற்றுப் பூச்சால்) வெண்ணிறமும் மேனியில் தோன்றும். (அர்த்தநாரீஸ்வரனாக வலப்புறம் திருநீற்றால் வெண்ணிறமும் இடப்புறம் உமையம்மையின் கருநிறமும் காட்டுவான்);

நினைத்த உருவம் எடுத்தே - தான் நினைத்த வடிவம் எடுப்பவன். (பக்தர் எவ்வுருவை வழிபடுகின்றார்களோ அவ்வுருவில் தோன்றுவான்);

உயரத்து இருப்பதால் - வானில் (விண்ணுலகில்) இருப்பவன். மிகவும் உயர்ந்தநிலையில் இருப்பவன்;

ஆலத்தை ஆர்ந்து திகழ் கோலத்தால் - விடத்தை உண்டு (அழியாமல்) விளங்குகின்றவன்; விடத்தை உண்டு விளங்கும் அழகிய நீலகண்டம் உடையவன்;

மூவிலைச் சூலத்தன் சொல் - மூன்று இலை போன்ற நுனிகளையுடைய திரிசூலத்தை ஏந்தியவன் என்று கூறு.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.030 - சிவன் - புல் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-17

3.4.30 - சிவன் - புல் - சிலேடை

-------------------------------------------------

உண்டியிட ஓடும் எருதும் விரும்பியங்கே

கண்டவிடம் தோன்றும் களையென்று விண்டுமக்கள்

உச்சிமேல் கொள்வரே கட்டுகளை நாதனொரு

பொச்சம் இலாவரன் புல்.


சொற்பொருள்:

உண்டி - 1. Food of birds and beasts in general; பறவை முதலியவற்றின் இரை; / 2. உணவு; சோறு;

விரும்பி - 1. ஆசைப்பட்டு; / 2. விரும்புபவன்; (சூடி - சூடியவன், என்பது போல்);

அங்கே - 1. அந்த இடத்திற்கு; / 2. அசைச்சொல்;

கண்டவிடம் - 1. கண்ட இடம்; / 2. கண்ட விடம்;

களை - 1. களைச்செடி; / 2. அழகு; குற்றம்;

விள்ளுதல் - சொல்லுதல்;

உச்சி - தலை;

கொள்தல் - 1. வைத்துக்கொள்ளுதல்; / 2. நன்கு மதித்தல்; கொண்டாடுதல்;

கட்டு - 1. Bundle, packet, pack, bale; மூட்டை / 2. பந்தம்;

களைதல் - நீக்குதல்;

பொச்சம் - குற்றம்; பொய்;


புல்:

உண்டி இட ஓடும் எருதும் விரும்பி அங்கே - (மாட்டுக்கு) உணவாகும் அதனை இட, (அது கண்டு, உண்ண) விரும்பி எருதும் அந்த இடத்திற்கு ஓடும்.

கண்ட இடம் தோன்றும் களை என்று விண்டு மக்கள் - எல்லா இடத்திலும் முளைக்கும் களை என்று மக்கள் சொல்லி;

உச்சிமேல் கொள்வரே கட்டுகளை - (அப்புல்லை வெட்டி, அந்தப் புல்லின்) கட்டுகளைத் தலைமேல் சுமப்பர்.

புல் - புல்.


சிவன்:

உண்டி இட ஓடும் எருதும் விரும்பி - (பிறர் பிச்சை) உணவை இடுவதற்காகக் கையில் ஓடு ஏந்துவதையும், (தன் வாகனமாக ஒரு) எருதையும் விரும்புபவன்.

அங்கே கண்ட விடம் தோன்றும் - (அவனது) கண்டத்தில் உள்ள விஷம் (நீலமணியாகத்) தென்படும்.

களை என்று விண்டு மக்கள் உச்சிமேல் கொள்வரே - (அதனை) அழகு என்று பக்தர்கள் சொல்லித் (தங்கள் கரங்களைத்) தலைமேல் வைத்துக் கும்பிடுவார்கள். (-அல்லது- மிகவும் போற்றி மனத்தில் இருத்திக்கொள்வார்கள்).

கட்டு களை நாதன், ஒரு பொச்சம் இலா அரன் - (அடியார்களது) பந்தத்தை நீக்கும் நாதன், எவ்விதக் குற்றமும் இல்லாத ஹரன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.029 - சிவன் - செயற்கைக்கோள் (Satellite) - சிலேடை - 2

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-16

3.4.29 - சிவன் - செயற்கைக்கோள் (Satellite) - சிலேடை - 2

--------------------------------------------------------------------------------

கலமேந்தும் கல்லால் அடியுறலும் ஆகும்

உலகுவலம் செய்யும் உயர நலந்திகழக்

காட்சிதரும் தீயுமுருக் காட்டும் செயற்கைக்கோள்

மாட்சி மிகுகயிலை மன்.


சொற்பொருள்:

கலம் - 1. விண்கலம் (Rocket); / 2. உண்கலம் (பிச்சைப் பாத்திரம்);

உறுதல் - 1. அனுபவித்தல்; / 2. இருத்தல்;

கல்லால் அடி உறல் - 1. கல்லினால் அடி வாங்குதல்; / 2. கல்லால் மரத்தின்கீழ் இருத்தல்;

தீதல் - எரிந்துபோதல்;

தீ - நெருப்பு;

உரு - வடிவம்;

மாட்சி - மகிமை; அழகு;

மன் - அரசன்; தலைவன்;


செயற்கைக்கோள்:

கலம் ஏந்தும் - விண்கலம் அதனைத் தாங்கி மேலே கொண்டு செல்லும்.

கல்லால் அடியுறலும் ஆகும் - அங்கு ஆகாசத்தில் பறக்கும் விண்கற்களால் சில சமயம் தாக்கப்படும்.

உலகு வலம் செய்யும் - உலகைச் சுற்றிவரும்.

உயர நலம் திகழக் காட்சி தரும் - (தொலைநோக்கியால் பார்த்தால்) உயரத்தில் அழகாகத் தோன்றும்.

தீயும் உருக் காட்டும் - (அதன் ஆயுள் முடிந்து மீண்டும் காற்றுமண்டலத்துள் நுழையும்பொழுது) எரிகின்ற வடிவத்தைக் காட்டும். (எரிந்துபோகும்);

செயற்கைக்கோள் - மனிதர்கள் செய்து ஏவிய உபக்கிரகம் (Satellite);


சிவன்:

கலம் ஏந்தும் - கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்துவான்.

கல்லால்-அடி உறலும் ஆகும் - 1. சமயத்தில் கல்லால் அடியும் உண்டு. (சாக்கிய நாயனார் வரலாற்றில் காண்க). 2. தட்சிணாமூர்த்தியாகக் கல்லால மரத்தின்கீழ் இருப்பவன்.

உலகு வலம் செய்யும் உயர - உலகத்தவர் மேன்மைபெற வேண்டி வலம்வந்து வணங்குவார்கள்.

நலந் திகழக் காட்சி தரும் - (அப்படி வணங்கும் சிறந்த பக்தர்களுக்கு) அழகிய தரிசனம் தருவான்.

தீயும் உருக் காட்டும் - 1. தீப் போன்ற செம்மேனியன்; 2. (அடிமுடி தேடிய சமயத்தில்) தீப்பிழம்பாய் நின்றவன். (உம் - அசை);

மாட்சி மிகு கயிலை மன் - மகிமையும் அழகும் மிகுந்த கயிலைநாதன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.028 - சிவன் - செயற்கைக்கோள் (Satellite) - சிலேடை - 1

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-16

3.4.28 - சிவன் - செயற்கைக்கோள் (Satellite) - சிலேடை - 1

--------------------------------------------------------------------------------

விண்ணில் உலாவி வெளியில் இருந்தாலும்

மண்ணில் எதுவும் மறைத்திட ஒண்ணுமோ

ஒன்றும் சுழியுமே உன்னில் இயக்குமெல்லாம்

குன்றவில் லான்செயற்கைக் கோள்.


சொற்பொருள்:

விண் - ஆகாயம்;

உலாவுதல் - 1. சஞ்சரித்தல்; இயங்குதல்; / 2. வியாபித்தல்;

உலாவி - உலாவியவன் - வியாபித்தவன்; (சூடி - சூடியவன்; ஆடி - ஆடியவன்; அவ்வாறே, உலாவி - உலாவியவன்);

வெளி - ஆகாசம்; புறம்; பகிரங்கம்;வெளிப்படை;

ஒண்ணுதல் - இயலுதல்;

ஒன்றுதல் - ஒன்றாதல்;

சுழி - 1. பூச்சியம் (zero); / 2. நீர்ச்சுழி;

உன்னுதல் - நினைத்தல்;


செயற்கைக்கோள்:

விண்ணில் உலாவி வெளியில் இருந்தாலும் - ஆகாசத்தில் சஞ்சரித்துப் பகிரங்கமாக (வெளிப்படையாக) இருந்தாலும்,

மண்ணில் எதுவும் மறைத்திட ஒண்ணுமோ - நம்மால் உலகில் எதனையும் அதனிடமிருந்து மறைக்க முடியாது. (உலகில் உள்ள அனைத்தையும் அது காணும்).

ஒன்றும் சுழியுமே உன்னில் இயக்கும் எல்லாம் - உன்னில் ஒன்றும் சுழியுமே இயக்கும் எல்லாம் - சிந்தித்துப் பார்த்தால், அதன் எல்லாச் செயல்களையும் ஒன்றும் பூச்சியமுமே இயக்கும். ("digital").

செயற்கைக்கோள் - மனிதர்கள் செய்து ஏவிய உபக்கிரகம் (Satellite);


சிவன்:

விண்ணில் உலாவி - ஆகாயத்தில் வியாபித்தவன்;

வெளியில் இருந்தாலும் மண்ணில் ஒன்றை மறைத்திட ஒண்ணுமோ - (அப்படி அவன்) ஆகாசத்தில் இருந்தாலும், பூமியில் நடக்கும் அனைத்தையும் அவன் அறிவான்.

ஒன்றும் சுழியுமே - (அவனது முடியில் கங்கையின்) நீர்ச்சுழியும் பொருந்தியிருக்கும்.

உன்னில் இயக்கும் எல்லாம் - திருவுள்ளம் கொண்ட மாத்திரத்திலேயே (இப்பிரபஞ்சத்தில்) எல்லாவற்றையும் இயக்குபவன்.

குன்றவில்லான் - மேருமலையை வில்லாக ஏந்திய சிவபெருமான். (பெரியபுராணம் - மூர்த்தி நாயனார் புராணம் - 12.15.13 - "நீண்ட மேரு வில்லான்");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------