Sunday, June 28, 2020

03.05.069 – பொது - சேரற்கறியாது - (வண்ணம்)

03.05.069 – பொது - சேரற்கறியாது - (வண்ணம்)

2009-01-12

3.5.69) சேரற்கறியாது - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் .. தனதான )

(நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)


சேரற் .. கறியாது

.. தீதிற் .. சுழலாதுன்

சீரைச் .. சொலிவானம்

.. சேரப் .. பெறுவேனோ

நீரைப் .. புனைவானே

.. நேயர்க் .. கினியானே

வாரக் .. கொடிமாது

.. வாமப் .. பெருமானே.


பதம் பிரித்து:

சேரற்கு அறியாது

.. தீதிற் சுழலாது, உன்

சீரைச் சொலி வானம்

.. சேரப் பெறுவேனோ;

நீரைப் புனைவானே;

.. நேயர்க்கு இனியானே;

வாரக் கொடி-மாது

.. வாமப் பெருமானே.


சேரற்கு அறியாது தீதிற் சுழலாது - (சேரத் தக்கவர்களை அடையாமல்) கண்டவர்களோடு சேர்ந்து கேட்டில் சுழலாமல்; (சேரல் - சேர்தல் - சென்றடைதல்); (சுழல்தல் - சுற்றுதல்; சஞ்சலப்படுதல்);

உன் சீரைச் சொலி வானம் சேரப் பெறுவேனோ - உன் திருப்புகழைச் சொல்லிச் சிவலோகம் அடையை அருள்வாயாக; (சொலி - சொல்லி - இடைக்குறை); (வான் - பேரின்பம்; வீடு); (சம்பந்தர் தேவாரம் - 2.7.11 - "ஞானசம்பந்தன செந்தமிழ் ஒன்றும் உள்ளமுடையார் அடைவார் உயர் வானமே");

நீரைப் புனைவானே - கங்கையை அணிந்தவனே;

நேயர்க்கு இனியானே - அன்பருக்கு இனிமை பயப்பவனே;

வாரக் கொடி-மாது வாமப் பெருமானே - அன்புடைய கொடி போன்ற உமையை இடப்பக்கத்தில் பாகமாக உடைய பெருமானே; (வாரம் - அன்பு); (வாமம் - இடப்பக்கம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Saturday, June 27, 2020

03.05.068 – ஏடகம் (திருவேடகம்) - கைப்பதே நாடியிப் - (வண்ணம்)

03.05.068 – ஏடகம் (திருவேடகம்) - கைப்பதே நாடியிப் - (வண்ணம்)

2009-01-12

3.5.68) கைப்பதே நாடியிப் - ஏடகம் (திருவேடகம்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தனா தானனத் .. தனதான )

(பத்தியால் யானுனைப் பலகாலும் - திருப்புகழ் - இரத்தினகிரி)


கைப்பதே நாடியிப் .. புவிமீது

.. கட்டமே நாளுமுற் .. றழியாமல்

எய்ப்பிலா வாழ்வினைப் .. பெறுமாறே

.. இட்டமாய் யானுனைப் .. பணிவேனே

துப்பனே ஓர்பவர்க் .. கணியானே

.. சொக்கனே மாலயற் .. கரியானே

அப்பனே ஆரணப் .. பொருளானே

.. அக்கரா ஏடகப் .. பெருமானே.


பதம் பிரித்து:

கைப்பதே நாடி, இப் புவிமீது

.. கட்டமே நாளும் உற்று அழியாமல்,

எய்ப்பு இலா வாழ்வினைப் பெறுமாறே,

.. இட்டமாய் யான் உனைப் பணிவேனே;

துப்பனே; ஓர்பவர்க்கு அணியானே;

.. சொக்கனே; மால் அயற்கு அரியானே;

அப்பனே; ஆரணப் பொருளானே;

.. அக்கரா; ஏடகப் பெருமானே.


கைப்பதே நாடி இப் புவிமீது கட்டமே நாளும் உற்று அழியாமல் - இவ்வுலக வாழ்வில் கசக்கும் விஷயங்களையே (இனியவை என்று எண்ணி) விரும்பி அதனால் எந்நாளும் துன்பமே அடைந்து வருந்தாமல்; (கைத்தல் - கசத்தல்); (கட்டம் - கஷ்டம்); (அழிதல் - நாசமாதல்; வருந்துதல்);

எய்ப்பு இலா வாழ்வினைப் பெறுமாறே - இளைத்தல் இல்லாத இன்ப வாழ்வைப் பெறும்படி; (எய்ப்பு - சோர்தல்; இளைத்தல்);

இட்டமாய் யான் உனைப் பணிவேனே - விருப்பத்தோடு நான் உன்னைத் தொழுவேன்; (இட்டம் - இஷ்டம்);

துப்பனே - பற்றுக்கோடாக இருப்பவனே; பவளம் போன்ற செம்மேனியனே; (துப்பு - பவளம்; சிவப்பு; தூய்மை; பற்றுக்கோடு; துணை); (திருவாசகம் - அருட்பத்து - 8.29.6 - "துப்பனே தூயாய்");

ஓர்பவர்க்கு அணியானே - (உன்னைச்) சிந்திப்பவர்களுக்கு அண்மையில் (பக்கத்தில்) இருப்பவனே; (ஓர்தல் - எண்ணுதல்; தியானித்தல்); (அணியன் - அண்மையில் (அருகில்) உள்ளவன்);

சொக்கனே - அழகனே;

மால் அயற்கு அரியானே - (அடிமுடி தேடியபொழுது) திருமாலுக்கும் பிரமனுக்கும் அடைய இயலாதவனாக இருப்பவனே;

அப்பனே - தந்தையே;

ஆரணப் பொருளானே - வேதப்பொருளாக இருப்பவனே; (ஆரணம் - வேதம்);

அக்கரா - அழிவின்றி இருப்பவனே; (அக்கரன் - அக்ஷரன் - அழிவற்றவன்);

ஏடகப் பெருமானே - திருவேடகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.067 – பொது - மணம் ஏறுகின்ற தமிழ் - (வண்ணம்)

03.05.067 – பொது - மணம் ஏறுகின்ற தமிழ் - (வண்ணம்)

2009-01-12

3.5.67) மணம் ஏறுகின்ற தமிழ் - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதான தந்த .. தனதான )

(தனனா தனந்த .. தனதான - என்றும் கருதலாமோ)

(வரியார் கருங்கண் மடமாதர் - திருப்புகழ் - திருச்செந்தூர்)


மணமேறு கின்ற .. தமிழ்பாடி

.. மணிநீல கண்டம் .. நினைவேனோ

குணசீலர் உண்ப .. தரிதாகிக்

.. குடமாடும் உன்றன் .. முடிவீழ

உணர்வேதும் இன்றி .. நிலம்வீழ

.. உலவாத அன்பர் .. பசிதீரும்

வணநாளும் அன்று .. படியீவாய்

.. மதிசூடு கின்ற .. பெருமானே.


பதம் பிரித்து:

மணம் ஏறுகின்ற தமிழ் பாடி

.. மணிநீல கண்டம் நினைவேனோ;

குணசீலர் உண்பது அரிது ஆகிக்,

.. குடம் ஆடும் உன்றன் முடி வீழ,

உணர்வு ஏதும் இன்றி நிலம் வீழ,

.. உலவாத அன்பர் பசி தீரும்

வணம் நாளும் அன்று படி ஈவாய்;

.. மதி சூடுகின்ற பெருமானே.


* புகழ்த்துணை நாயனார் வரலாற்றைச் சுட்டியது;


மணம் ஏறுகின்ற தமிழ் பாடி - மணம் மிக்க தமிழ்ப் பாமாலைகளைப் பாடி;

மணிநீல கண்டம் நினைவேனோ - நீலமணி திகழும் கண்டத்தை நினைக்க அருள்வாயாக;

குணசீலர் உண்பது அரிது ஆகிக் - நற்குணம் மிக்க புகழ்த்துணை நாயனார் (பஞ்சகாலத்தினால்) உணவு இன்மையால் உண்ணாதவராகி;

குடம் ஆடும் உன்றன் முடி வீழ - (உன்னை வழிபடும்போது உடல் தளர்ந்து) நீர்க்குடம் அபிஷேகம் செய்யப்பெறும் கூத்தனான உன் திருமுடிமேல் விழ; (ஆடுதல் - நீராடுதல்; கூத்தாடுதல்);

உணர்வு ஏதும் இன்றி நிலம் வீழ - அவர் உணர்வழிந்து மயங்கிக் கீழே விழ;

உலவாத அன்பர் பசி தீரும் வணம் நாளும் அன்று படி ஈவாய் - அவருக்கு இரங்கி, அழியாத அன்பை உடைய அவரது பசி தீரும்படி அந்தப் பஞ்சகாலத்தில் தினந்தோறும் அவருக்குப் படிக்காசு தந்தவனே; (உலத்தல் - குறைதல்; அழிதல்); (படி - படிக்காசு);

மதி சூடுகின்ற பெருமானே - பிறைச்சந்திரனைச் சூடிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.066 – ஏடகம் (திருவேடகம்) - மேலான நூலுரைத்த - (வண்ணம்)


03.05.066 – ஏடகம் (திருவேடகம்) - மேலான நூலுரைத்த - (வண்ணம்)

2009-01-11

3.5.66) மேலான நூலுரைத்த - ஏடகம் (திருவேடகம்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானான தான தத்த .. தானான தான தத்த

தானான தான தத்த .. தனதான )

(நாவேறு பாம ணத்த - திருப்புகழ் - திருவேரகம்)


மேலான நூலு ரைத்த .. சீரான பாதை விட்டு

.... மேனாளி லேயி ழைத்த .. வினையாலே

.. வீணாக நானி லத்தில் .. ஆறாத ஆசை யுற்று

.... வீடாத நோவு பெற்று .. மிகவாடிக்

கோலான தேபி டிக்கு(ம்) .. மூதாகி ஆவி அற்ற

.... கூடாகி ஏகு தற்கு .. முனமேயெம்

.. கோவேகு ராவெ ருக்கு .. வானாறு சூடு சத்தி

.... கூறாவெ னாவ ழுத்து .. மனமீயாய்

மாலாகி வாது புக்க .. தீயோர்கள் நாண அற்றை

.... வாடாத மாலை உற்ற .. திருவேடு

.. மாவேக ஆறெ திர்த்து .. மேலோடி நீரில் நிற்கு(ம்)

.... மாணேறும் ஏட கத்தில் .. உறைவோனே

பாலான வாரி கக்கும் ஆலாலம் ஓரி னித்த

.... பாகாக வேம டுத்த .. மிடறானே

.. பாய்கால னாரி ரத்தம் ஆறாக ஓட வைத்த

.... பாதாஅ ராவ சைத்த .. பெருமானே.


பதம் பிரித்து:

மேல் ஆன நூல் உரைத்த சீரான பாதை விட்டு,

.... மேனாளிலே இழைத்த வினையாலே,

.. வீணாக நானிலத்தில் ஆறாத ஆசை உற்று,

.... வீடாத நோவு பெற்று மிக வாடிக்,

கோல் ஆனதே பிடிக்கும் மூது ஆகி, ஆவி அற்ற

.... கூடு ஆகி, ஏகுதற்கு முனமே, "எம்

.. கோவே; குரா எருக்கு .. வானாறு சூடு சத்தி

.... கூறா" எனா வழுத்து .. மனம் ஈயாய்;

மாலாகி வாது புக்க .. தீயோர்கள் நாண அற்றை

.... வாடாத மாலை உற்ற .. திரு-ஏடு

.. மா-வேக ஆறு எதிர்த்து .. மேல்-ஓடி நீரில் நிற்கு(ம்)

.... மாண் ஏறும் ஏடகத்தில் .. உறைவோனே;

பாலான வாரி கக்கும் ஆலாலம் ஓர் இனித்த

.... பாகாகவே மடுத்த .. மிடறானே;

.. பாய்-காலனார் இரத்தம் ஆறாக ஓட வைத்த

.... பாதா; அரா அசைத்த .. பெருமானே.


மேல் ஆன நூல் உரைத்த சீரான பாதை விட்டு, - சிறந்த நூல்களில் சொல்லப்படும் நல்ல வழியில் செல்லாமல்; (மேல் - மேன்மை); (சீர் - நன்மை; சிறப்பு);

மேனாளிலே இழைத்த வினையாலே - முன்பு செய்த தீவினையின் பயனால்; (மேனாள் - மேல் நாள் - முன்னாள்; முற்காலம்);

வீணாக நானிலத்தில் ஆறாத ஆசை உற்று - இப்பூமியில் பயனின்றித் தணியாத ஆசை மனத்தில் கொண்டு; (நானிலம் - பூமி); (ஆறுதல் - தணிதல்; அடங்குதல்);

வீடாத நோவு பெற்று மிக வாடி - என்றும் ஒழியாத துன்பம் பெற்று, மிகவும் சோர்ந்து; (வீடுதல் - விடுதல்; ஒழிதல்);

கோல் ஆனதே பிடிக்கும் மூது ஆகி - கைக்கோல் ஊன்றும் கிழட்டுப்பருவம் அடைந்து; (மூது - முதுமை);

ஆவி அற்ற கூடு ஆகி ஏகுதற்கு முனமே - உயிரற்ற உடல் ஆகிச், செல்வதற்கு முன்பே; (கூடு - உடம்பு); (ஏகுதல் - போதல்);

"எம் கோவே - "எம் அரசே;

குரா எருக்கு வானாறு சூடு சத்தி கூறா" - குராமலர், எருக்கமலர், கங்கை இவற்றையெல்லாம் சூடிய, உமைபங்கனே; (வானாறு - கங்கை); (சத்தி - சக்தி; உமை); (திருஈங்கோய்மலை எழுபது - 11.10.65 - "ஈங்கோயே செஞ்சடைமேல் வானாறு வைத்தான் மலை");

எனா வழுத்து மனம் ஈயாய் - என்று துதிக்கும் மனத்தை எனக்கு அருள்வாயாக; (எனா - என்னா - என்று; - செய்து என்ற பொருளில் வரும் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்);

மாலாகி வாது புக்க தீயோர்கள் நாண – அறியாமையாலும் ஆணவத்தாலும் (சம்பந்தரோடு) வாது செய்த தீய சமணர்கள் நாணும்படி; (மால் - மயக்கம்); (புக்க - புகுந்த; புகுதல் - செய்யப்புகுதல்; தொடங்குதல்);

அற்றை வாடாத மாலை உற்ற திரு-ஏடு மா-வேக ஆறு எதிர்த்து மேல்-ஓடி நீரில் நிற்கும் - அன்று வாடாத தமிழ்ப்பாமாலை எழுதப்பெற்ற தேவார ஏடு மிகுந்த வேகமுடைய வைகையாற்றை எதிர்த்து மேலேறிச் சென்று நீரில் நின்ற; (அற்றை - அன்று; அத்தினத்தில்)

மாண் ஏறும் ஏடகத்தில் உறைவோனே - மாட்சிமை மிகுந்த திருவேடகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே; (மாண் - மாட்சிமை); (ஏறுதல் - உயர்தல்; மிகுதல்);

பாலான வாரி கக்கும் ஆலாலம் ஓர் இனித்த பாகாகவே மடுத்த மிடறானே - பாற்கடல் கக்கிய ஆலகால விஷத்தை இனிக்கும் வெல்லப்பாகு போல உண்டருளிய நீலகண்டனே; (வாரி - கடல்); (பாகு - வெல்லப்பாகு); (மடுத்தல் - உண்ணுதல்); (மிடறு - கழுத்து);

பாய்-காலனார் இரத்தம் ஆறாக ஓட வைத்த பாதா - (மார்க்கண்டேயர்மேல்) பாய்ந்த காலனது இரத்தம் ஆறாக ஒடுமாறு செய்த ( = காலனை மார்பில் உதைத்த) திருப்பாதனே;

அரா அசைத்த பெருமானே - பாம்பை அரைநாணாகக் கட்டிய பெருமானே; (அரா - பாம்பு); (அசைத்தல் - கட்டுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.065 – திருப்பரங்குன்றம் - பொங்கிடுஞ் சிந்தைத் - (வண்ணம்)

03.05.065 – திருப்பரங்குன்றம் - பொங்கிடுஞ் சிந்தைத் - (வண்ணம்)

2009-01-09

3.5.65) பொங்கிடுஞ் சிந்தைத் - பரங்குன்றம் (திருப்பரங்குன்றம்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்தனந் தந்தத் .. தனதான )

(சந்ததம் பந்தத் தொடராலே - திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)


பொங்கிடுஞ் சிந்தைத் .. திரையாலே

.. பொன்றிடும் புந்திச் .. சிறியேனும்

கொங்கிலங் கும்புத் .. தலர்தூவிக்

.. கும்பிடும் பண்புற் றிடுவேனோ

சங்கடங் குன்றத் .. துதிதேவர்

.. தங்களின் துன்பைத் .. தவிர்நீலம்

தங்கிடுங் கண்டத் .. திறையானே

.. தண்பரங் குன்றப் .. பெருமானே.


பதம் பிரித்து:

பொங்கிடும் சிந்தைத் திரையாலே

.. பொன்றிடும் புந்திச் சிறியேனும்,

கொங்கு இலங்கும் புத்தலர் தூவிக்

.. கும்பிடும் பண்பு உற்றிடுவேனோ;

சங்கடம் குன்றத் துதி தேவர்

.. தங்களின் துன்பைத் தவிர் நீலம்

தங்கிடும் கண்டத்து இறையானே;

.. தண் பரங்குன்றப் பெருமானே.


பொங்கிடும் சிந்தைத் திரையாலே - பொங்கி எழும் கவலைக்கடலால்; (பொங்குதல் - மிகுதல்); (சிந்தை - கவலை; எண்ணம்); (திரை - அலை; கடல்);

பொன்றிடும் புந்திச் சிறியேனும் - அறிவு அழிகின்ற சிறுமையுடைய நானும்; (பொன்றுதல் - அழிதல்); (புந்தி - மனம்); (சிறியேன் - சிறுமையுடைய நான்);

கொங்கு இலங்கும் புத்தலர் தூவிக் கும்பிடும் பண்பு உற்றிடுவேனோ - வாசனை திகழும் புதிய மலர்களைத் தூவி உன்னை வணங்கும் குணத்தைப் பெறுமாறு அருள்வாயாக; (கொங்கு - வாசனை; தேன்); (இலங்குதல் - பிரகாசித்தல்; இருத்தல்); (அலர் - மலர்);

சங்கடம் குன்றத் துதி தேவர் தங்களின் துன்பைத் தவிர், நீலம் தங்கிடும் கண்டத்து இறையானே - (ஆலகால விஷத்தால் உண்டான) கஷ்டம் தீர்வதற்காகத் துதித்த தேவர்களது துன்பத்தைத் தீர்த்த, நீலகண்டம் உடைய இறைவனே; (குன்றுதல் - அழிவடைதல்); (துன்பு - துன்பம்); (தவிர்த்தல் - நீக்குதல்);

தண் பரங்குன்றப் பெருமானே - குளிர்ந்த திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளிய பெருமானே. (தண் - குளிர்ந்த);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.064 – திருப்பரங்குன்றம் - என்பணிந்து அஞ்சத் - (வண்ணம்)

03.05.064 – திருப்பரங்குன்றம் - என்பணிந்து அஞ்சத் - (வண்ணம்)

2009-01-09

3.5.64) என்பணிந்து அஞ்சத் - பரங்குன்றம் (திருப்பரங்குன்றம்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்தனந் தந்தத் .. தனதான )

(சந்ததம் பந்தத் தொடராலே - திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)


என்பணிந் தஞ்சத் .. தகுநாகம்

.. எங்கணும் பந்தித் .. தெருதேறி

அன்புடன் துண்டப் .. பிறைசூடி

.. அஞ்சலென் றன்பர்க் .. கருள்வோனே

என்கரங் கும்பிட் .. டிருபோதும்

.. இன்புபொங் குஞ்சொற் .. கவிபாடி

உன்பதஞ் சிந்தித் .. திடுவேனோ

.. தென்பரங் குன்றப் .. பெருமானே.


பதம் பிரித்து:

என்பு அணிந்து, அஞ்சத் தகு நாகம்

.. எங்கணும் பந்தித்து, எருது ஏறி

அன்புடன் துண்டப்பிறை சூடி,

.. அஞ்சல் என்று அன்பர்க்கு அருள்வோனே;

என் கரம் கும்பிட்டு இருபோதும்

.. இன்பு பொங்கும் சொற்கவி பாடி,

உன் பதம் சிந்தித்திடுவேனோ,

.. தென் பரங்குன்றப் பெருமானே.


என்பு அணிந்து, அஞ்சத் தகு நாகம் எங்கணும் பந்தித்து, எருது ஏறி - எலும்பை அணிந்து, அச்சம் தரும் பாம்புகளைத் திருமேனியில் எங்கும் கட்டி, இடபவாகனத்தின்மேல் ஏறி; (என்பு - எலும்பு); (எங்கணும் - எவ்விடமும்); (பந்தித்தல் - கட்டுதல்);

அன்புடன் துண்டப்பிறை சூடி - பிறைச்சந்திரனுக்கு இரங்கியருளி அதனைச் சூடி; (துண்டப்பிறை - பிறைத்துண்டம் - பிறைச்சந்திரன்); (திருவாசகம் - திருவம்மானை - 8.8.9: "துண்டப் பிறையான் மறையான்");

அஞ்சல் என்று அன்பர்க்கு அருள்வோனே - பக்தர்களுக்கு அபயம் அளிப்பவனே;

என் கரம் கும்பிட்டு இருபோதும் - இருபொழுதும் என் கைகளால் கும்பிட்டு,

இன்பு பொங்கும் சொற்கவி பாடி - இன்பம் பொங்கும் இனிய சொற்களால் ஆன பாமாலைகளைப் பாடி; (சம்பந்தர் தேவாரம் - 1.8.6: "மாதர்விழாச் சொற்கவி பாட");

உன் பதம் சிந்தித்திடுவேனோ - உன் திருவடியைச் சிந்திக்க அருள்வாயாக;

தென் பரங்குன்றப் பெருமானே - அழகிய திருப்பரங்குன்றத்தில் உறையும் பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Friday, June 26, 2020

03.05.063 – பொது - தந்தையெனத் தாயுமெனத் - (வண்ணம்)

03.05.063 – பொது - தந்தையெனத் தாயுமெனத் - (வண்ணம்)

2009-01-09

3.5.63) தந்தையெனத் தாயுமெனத் - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்ததனத் தானதனத் .. தனதான )

(உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி - திருப்புகழ் - விநாயகர் துதி)


தந்தையெனத் தாயுமெனத் .. திகழ்வோனைச்

.. சந்திரனைச் சூடியபொற் .. சடையானைச்

செந்தமிழைப் பாடுமவர்க் .. கினியானைச்

.. செங்கமலத் தானொடரிக் .. கரியானை

அந்திநிறத் தானைநினைத் .. தடிபேணும்

.. அன்பருயிர்க் காவலனைப் .. பகடேறும்

அந்தகனைச் சாடியநற் .. கழலானை

.. அங்கணனைப் பூதியனைப் .. புகழ்நாவே.


பதம் பிரித்து:

தந்தை எனத் தாயும் எனத் திகழ்வோனைச்,

.. சந்திரனைச் சூடிய பொற்சடையானைச்,

செந்தமிழைப் பாடும் அவர்க்கு இனியானைச்,

.. செங்கமலத்தானொடு அரிக்கு அரியானை,

அந்தி நிறத்தானை, நினைத்து அடி பேணும்

.. அன்பர் உயிர்க் காவலனைப், பகடு ஏறும்

அந்தகனைச் சாடிய நற்கழலானை,

.. அங்கணனைப், பூதியனைப் புகழ் நாவே.


தந்தை எனத் தாயும் எனத் திகழ்வோனைச் - அம்மையப்பன் ஆனவனை;

சந்திரனைச் சூடிய பொற்சடையானைச் - பொன் போன்ற சடையில் பிறைச்சந்திரனை அணிந்தவனை;

செந்தமிழைப் பாடும் அவர்க்கு இனியானைச் - தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப் பாமாலைகளைப் பாடும் பக்தர்களுக்கு இனிமை பயப்பவனை;

செங்கமலத்தானொடு அரிக்கு அரியானை - செந்தாமரையில் இருக்கும் பிரமன் திருமால் இவர்களால் அறிய ஒண்ணாதவனை; (அரியான் - அரியவன் - அறிய இயலாதவன்);

அந்தி நிறத்தானை - அந்திநேரத்து வானம் போல் செம்மேனியனை;

நினைத்து அடி பேணும் அன்பர் உயிர்க் காவலனைப் - எண்ணித் திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயரின் உயிருக்குக் காவலனை; (பேணுதல் - போற்றுதல்; வழிபடுதல்; விரும்புதல்); (அன்பர் - பக்தர் - இங்கே மார்க்கண்டேயர்);

பகடு ஏறும் அந்தகனைச் சாடிய நல் கழலானை - எருமைக்கடாவின்மேல் ஏறி வரும் இயமனை உதைத்து அழித்த நல்ல திருவடியினானை; (பகடு - எருமைக்கடா); (அந்தகன் - எமன்); (சாடுதல் - அடித்தல்; துகைத்தல்);

அங்கணனைப் - அருட்கண்ணனை; (அங்கண் - அருட்கண்);

பூதியனைப் - செல்வனை; திருநீற்றைப் பூசியவனை; (பூதி - செல்வம்; திருநீறு);

புகழ் நாவே - என் நாவே, நீ புகழ்வாயாக;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------