Saturday, June 27, 2020

03.05.064 – திருப்பரங்குன்றம் - என்பணிந்து அஞ்சத் - (வண்ணம்)

03.05.064 – திருப்பரங்குன்றம் - என்பணிந்து அஞ்சத் - (வண்ணம்)

2009-01-09

3.5.64) என்பணிந்து அஞ்சத் - பரங்குன்றம் (திருப்பரங்குன்றம்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்தனந் தந்தத் .. தனதான )

(சந்ததம் பந்தத் தொடராலே - திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)


என்பணிந் தஞ்சத் .. தகுநாகம்

.. எங்கணும் பந்தித் .. தெருதேறி

அன்புடன் துண்டப் .. பிறைசூடி

.. அஞ்சலென் றன்பர்க் .. கருள்வோனே

என்கரங் கும்பிட் .. டிருபோதும்

.. இன்புபொங் குஞ்சொற் .. கவிபாடி

உன்பதஞ் சிந்தித் .. திடுவேனோ

.. தென்பரங் குன்றப் .. பெருமானே.


பதம் பிரித்து:

என்பு அணிந்து, அஞ்சத் தகு நாகம்

.. எங்கணும் பந்தித்து, எருது ஏறி

அன்புடன் துண்டப்பிறை சூடி,

.. அஞ்சல் என்று அன்பர்க்கு அருள்வோனே;

என் கரம் கும்பிட்டு இருபோதும்

.. இன்பு பொங்கும் சொற்கவி பாடி,

உன் பதம் சிந்தித்திடுவேனோ,

.. தென் பரங்குன்றப் பெருமானே.


என்பு அணிந்து, அஞ்சத் தகு நாகம் எங்கணும் பந்தித்து, எருது ஏறி - எலும்பை அணிந்து, அச்சம் தரும் பாம்புகளைத் திருமேனியில் எங்கும் கட்டி, இடபவாகனத்தின்மேல் ஏறி; (என்பு - எலும்பு); (எங்கணும் - எவ்விடமும்); (பந்தித்தல் - கட்டுதல்);

அன்புடன் துண்டப்பிறை சூடி - பிறைச்சந்திரனுக்கு இரங்கியருளி அதனைச் சூடி; (துண்டப்பிறை - பிறைத்துண்டம் - பிறைச்சந்திரன்); (திருவாசகம் - திருவம்மானை - 8.8.9: "துண்டப் பிறையான் மறையான்");

அஞ்சல் என்று அன்பர்க்கு அருள்வோனே - பக்தர்களுக்கு அபயம் அளிப்பவனே;

என் கரம் கும்பிட்டு இருபோதும் - இருபொழுதும் என் கைகளால் கும்பிட்டு,

இன்பு பொங்கும் சொற்கவி பாடி - இன்பம் பொங்கும் இனிய சொற்களால் ஆன பாமாலைகளைப் பாடி; (சம்பந்தர் தேவாரம் - 1.8.6: "மாதர்விழாச் சொற்கவி பாட");

உன் பதம் சிந்தித்திடுவேனோ - உன் திருவடியைச் சிந்திக்க அருள்வாயாக;

தென் பரங்குன்றப் பெருமானே - அழகிய திருப்பரங்குன்றத்தில் உறையும் பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment