Sunday, June 28, 2020

03.05.072 – பொது - பாடுவதோ அறியேன் - (வண்ணம்)

03.05.072 – பொது - பாடுவதோ அறியேன் - (வண்ணம்)

2009-01-13

3.5.72) பாடுவதோ அறியேன் - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானன தானன தானன தானன

.. தானன தானன .. தனதான )

(ஏவினை நேர்விழி மாதரை - திருப்புகழ் - திருச்செந்தூர்)


பாடுவ தோவறி யேனுன சீரிரு

..... பாதமி ராவொடு .. பகலாகப்

.. பாடிடு வாரொடு சேரகி லேனிழி

..... பாதையி லேகுழி .. விழுமாறே

ஓடுகி றேனத னாலிட ரானவை

..... ஓய்வில தாய்வர .. உழல்வேனும்

.. ஊனமெ லாமற நாவொடு நாமம

..... தோதிடு மாறருள் .. புரியாயே

நீடுயர் தீயென ஆகிய நாளினில்

..... நேடிய மாலயன் .. அறியாத

.. நீர்மைய னேநதி யோடுநி லாமதி

..... நீள்சடை மேலுற .. வருவோனே

ஆடும ராவரை நாணென வாகிட

..... ஆலமர் மாமிட .. றுடையோனே

.. ஆயிழை கூறுடை யாய்விடை யேறிய

..... ஆரழ காசிவ .. பெருமானே.


பதம் பிரித்து:

பாடுவதோ அறியேன் உன சீர் இரு

..... பாதம்; இராவொடு .. பகலாகப்

.. பாடிடுவாரொடு சேரகிலேன்; இழி

..... பாதையிலே குழி விழுமாறே

ஓடுகிறேன்; அதனால் இடர் ஆனவை

..... ஓய்வு இலதாய் வர .. உழல்வேனும்,

.. ஊனம் எலாம் அற, நாவொடு நாமமது

..... ஓதிடுமாறு அருள் புரியாயே;

நீடு உயர் தீ என ஆகிய நாளினில்

..... நேடிய மால் அயன் அறியாத

.. நீர்மையனே; நதியோடு நிலாமதி

..... நீள்சடைமேல் உற .. வருவோனே;

ஆடும் அரா அரைநாண் என ஆகிட,

..... ஆல் அமர் மா மிடறு .. உடையோனே;

.. ஆயிழை கூறுடையாய்; விடை ஏறிய

..... ஆரழகா; சிவ பெருமானே.


பாடுவதோ அறியேன் உன சீர் இரு பாதம் - உனது புகழையும் சிறந்த இரு திருவடிகளையும் பாட அறியேன்; (- ஆறாம் வேற்றுமை உருபு; உன் + - உன – உன்னுடைய); (சீர் இரு பாதம் - சீர் மிக்க இரு திருவடிகள்; "சீரும் இரு திருவடிகளும்" என்று உம்மைத்தொகையாகவும் கொள்ளல் ஆம்):

இராவொடு பகலாகப் பாடிடுவாரொடு சேரகிலேன் - உன் இரு திருவடிகளைப் புகழ்ந்து இராப்பகலாகப் பாடும் அடியாரோடு சேரவும் மாட்டேன்;

இழி பாதையிலே குழி விழுமாறே ஓடுகிறேன் - இழிந்த வழியிலே அழிவைத் தேடி விரைகின்றேன்; (குழிவிழுதல் - தீநெறிப்படுதல்);

அதனால் இடர் ஆனவை ஓய்வு இலதாய் வர உழல்வேனும் - அதனால் துன்பங்களே இடைவிடாது வர உழல்கின்றேன்; அப்படிப்பட்ட அடியேனும்; (ஓய்வு - ஒழிவு; முடிவு); (உழலுதல் - நிலைகெடுதல்; அலைதல்);

ஊனம் எலாம் அற, நாவொடு நாமமது ஓதிடுமாறு அருள் புரியாயே - என் குற்றங்கள் எல்லாம் நீங்கும்படி, என் நாவினால் உன் திருப்பெயரை ஓதும்படி அருள்புரிவாயாக; (ஊனம் - குற்றம்; குறைவு; பழி);

நீடு உயர் தீ என ஆகிய நாளினில் நேடிய மால் அயன் அறியாத நீர்மையனே - அளவின்றி நீண்டு உயர்கின்ற சோதியாக எழுந்த அன்று, தேடிய திருமாலாலும் பிரமனாலும் அறியப்படாத தன்மையை உடையவனே; (நீடுதல் - நீளுதல்); (நேடுதல் - தேடுதல்); (நீர்மை - தன்மை);

நதியோடு நிலாமதி நீள்சடை மேலுற வருவோனே - கங்கையையும் நிலா வீசும் பிறைச்சந்திரனையும் நீண்ட சடை மேல் பொருந்தும்படி வருபவனே; (நிலாமதி - நிலாவையுடைய மதி; நிலா - சந்திரிகை - Moonlight); (உறுதல் - இருத்தல்; பொருந்துதல்; அடைதல்); (அப்பர் தேவாரம் - 5.12.9 - "நீண்ட சூழ்சடை மேலொர் நிலாமதி")

ஆடும் அரா அரைநாண் என ஆகிட, ஆல் அமர் மா மிடறு உடையோனே - அசைந்தாடும் பாம்பை அரைஞாணாகக் கட்டியவனே, விடம் தங்கிய அழகிய கண்டத்தை உடையவனே; (ஆல் - நஞ்சு); (அமர்தல் - இருத்தல்; படிதல்; விரும்புதல்); (மா - அழகிய); (மிடறு - கழுத்து); (திருவாசகம் - திருப்பொன்னூசல் - 8.16.4 - "நஞ்சமர் கண்டத்தன்");

ஆயிழை கூறு உடையாய் - உமையை ஒரு பாகமாக உடையவனே; (ஆயிழை - பெண் - உமை); (கூறு - பாகம்);

விடை ஏறிய ஆரழகா; சிவ பெருமானே - இடபத்தின் மேல் ஏறிவரும் பேரழகனே; சிவபெருமானே; (ஆரழகன் - ஆர் அழகன் - பேரழகன்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment