Saturday, June 27, 2020

03.05.065 – திருப்பரங்குன்றம் - பொங்கிடுஞ் சிந்தைத் - (வண்ணம்)

03.05.065 – திருப்பரங்குன்றம் - பொங்கிடுஞ் சிந்தைத் - (வண்ணம்)

2009-01-09

3.5.65) பொங்கிடுஞ் சிந்தைத் - பரங்குன்றம் (திருப்பரங்குன்றம்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்தனந் தந்தத் .. தனதான )

(சந்ததம் பந்தத் தொடராலே - திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)


பொங்கிடுஞ் சிந்தைத் .. திரையாலே

.. பொன்றிடும் புந்திச் .. சிறியேனும்

கொங்கிலங் கும்புத் .. தலர்தூவிக்

.. கும்பிடும் பண்புற் றிடுவேனோ

சங்கடங் குன்றத் .. துதிதேவர்

.. தங்களின் துன்பைத் .. தவிர்நீலம்

தங்கிடுங் கண்டத் .. திறையானே

.. தண்பரங் குன்றப் .. பெருமானே.


பதம் பிரித்து:

பொங்கிடும் சிந்தைத் திரையாலே

.. பொன்றிடும் புந்திச் சிறியேனும்,

கொங்கு இலங்கும் புத்தலர் தூவிக்

.. கும்பிடும் பண்பு உற்றிடுவேனோ;

சங்கடம் குன்றத் துதி தேவர்

.. தங்களின் துன்பைத் தவிர் நீலம்

தங்கிடும் கண்டத்து இறையானே;

.. தண் பரங்குன்றப் பெருமானே.


பொங்கிடும் சிந்தைத் திரையாலே - பொங்கி எழும் கவலைக்கடலால்; (பொங்குதல் - மிகுதல்); (சிந்தை - கவலை; எண்ணம்); (திரை - அலை; கடல்);

பொன்றிடும் புந்திச் சிறியேனும் - அறிவு அழிகின்ற சிறுமையுடைய நானும்; (பொன்றுதல் - அழிதல்); (புந்தி - மனம்); (சிறியேன் - சிறுமையுடைய நான்);

கொங்கு இலங்கும் புத்தலர் தூவிக் கும்பிடும் பண்பு உற்றிடுவேனோ - வாசனை திகழும் புதிய மலர்களைத் தூவி உன்னை வணங்கும் குணத்தைப் பெறுமாறு அருள்வாயாக; (கொங்கு - வாசனை; தேன்); (இலங்குதல் - பிரகாசித்தல்; இருத்தல்); (அலர் - மலர்);

சங்கடம் குன்றத் துதி தேவர் தங்களின் துன்பைத் தவிர், நீலம் தங்கிடும் கண்டத்து இறையானே - (ஆலகால விஷத்தால் உண்டான) கஷ்டம் தீர்வதற்காகத் துதித்த தேவர்களது துன்பத்தைத் தீர்த்த, நீலகண்டம் உடைய இறைவனே; (குன்றுதல் - அழிவடைதல்); (துன்பு - துன்பம்); (தவிர்த்தல் - நீக்குதல்);

தண் பரங்குன்றப் பெருமானே - குளிர்ந்த திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளிய பெருமானே. (தண் - குளிர்ந்த);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment