Friday, June 26, 2020

03.05.063 – பொது - தந்தையெனத் தாயுமெனத் - (வண்ணம்)

03.05.063 – பொது - தந்தையெனத் தாயுமெனத் - (வண்ணம்)

2009-01-09

3.5.63) தந்தையெனத் தாயுமெனத் - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்ததனத் தானதனத் .. தனதான )

(உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி - திருப்புகழ் - விநாயகர் துதி)


தந்தையெனத் தாயுமெனத் .. திகழ்வோனைச்

.. சந்திரனைச் சூடியபொற் .. சடையானைச்

செந்தமிழைப் பாடுமவர்க் .. கினியானைச்

.. செங்கமலத் தானொடரிக் .. கரியானை

அந்திநிறத் தானைநினைத் .. தடிபேணும்

.. அன்பருயிர்க் காவலனைப் .. பகடேறும்

அந்தகனைச் சாடியநற் .. கழலானை

.. அங்கணனைப் பூதியனைப் .. புகழ்நாவே.


பதம் பிரித்து:

தந்தை எனத் தாயும் எனத் திகழ்வோனைச்,

.. சந்திரனைச் சூடிய பொற்சடையானைச்,

செந்தமிழைப் பாடும் அவர்க்கு இனியானைச்,

.. செங்கமலத்தானொடு அரிக்கு அரியானை,

அந்தி நிறத்தானை, நினைத்து அடி பேணும்

.. அன்பர் உயிர்க் காவலனைப், பகடு ஏறும்

அந்தகனைச் சாடிய நற்கழலானை,

.. அங்கணனைப், பூதியனைப் புகழ் நாவே.


தந்தை எனத் தாயும் எனத் திகழ்வோனைச் - அம்மையப்பன் ஆனவனை;

சந்திரனைச் சூடிய பொற்சடையானைச் - பொன் போன்ற சடையில் பிறைச்சந்திரனை அணிந்தவனை;

செந்தமிழைப் பாடும் அவர்க்கு இனியானைச் - தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப் பாமாலைகளைப் பாடும் பக்தர்களுக்கு இனிமை பயப்பவனை;

செங்கமலத்தானொடு அரிக்கு அரியானை - செந்தாமரையில் இருக்கும் பிரமன் திருமால் இவர்களால் அறிய ஒண்ணாதவனை; (அரியான் - அரியவன் - அறிய இயலாதவன்);

அந்தி நிறத்தானை - அந்திநேரத்து வானம் போல் செம்மேனியனை;

நினைத்து அடி பேணும் அன்பர் உயிர்க் காவலனைப் - எண்ணித் திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயரின் உயிருக்குக் காவலனை; (பேணுதல் - போற்றுதல்; வழிபடுதல்; விரும்புதல்); (அன்பர் - பக்தர் - இங்கே மார்க்கண்டேயர்);

பகடு ஏறும் அந்தகனைச் சாடிய நல் கழலானை - எருமைக்கடாவின்மேல் ஏறி வரும் இயமனை உதைத்து அழித்த நல்ல திருவடியினானை; (பகடு - எருமைக்கடா); (அந்தகன் - எமன்); (சாடுதல் - அடித்தல்; துகைத்தல்);

அங்கணனைப் - அருட்கண்ணனை; (அங்கண் - அருட்கண்);

பூதியனைப் - செல்வனை; திருநீற்றைப் பூசியவனை; (பூதி - செல்வம்; திருநீறு);

புகழ் நாவே - என் நாவே, நீ புகழ்வாயாக;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment