Monday, May 20, 2024

T.190 - பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - நெடிதுயர் வினைகள்

2016-05-28

T.190 - பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - நெடிதுயர் வினைகள்

--------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனன தனதன தனன

தனதன தனன .. தனதான)

(எழுகடல் மணலை - திருப்புகழ் - சிதம்பரம்)


நெடிதுயர் வினைகள் இடர்பல தரவு(ம்)

.. .. நினைநினை தலையும் .. அறியேனாய்

.. நெறிகுழல் மனைவி வல(ம்)மிகு பதவி

.. .. நிதியென மிகவும் .. அலைவேனாய்

மடிவதும் உலகில் வருவதும் ஒழிய

.. .. மலவிருள் அழிய .. அளியோடு

.. மண(ம்)மலி தமிழ்கள் அவைகொடு தினமு(ம்)

.. .. மலரடி பரவ .. அருளாயே

கடிமலி மலர்கள் அடியிடும் அடியர்

.. .. கருதிய எவையும் .. அளிநேயா

.. கருதலர் எயில்கள் எரியெழ அரிய

.. .. கணைதொடு பெரிய .. சிலைவீரா

கொடியவன் மலையை எடுதினம் அழுது

.. .. குரைகழல் நினைய .. நெரிபாதா

.. கொடுமுடி அதனில் இனிதுறை இறைவ

.. .. கொடியிடை மருவு .. பெருமானே.


பதம் பிரித்து:

நெடிது-உயர் வினைகள் இடர் பல தரவு(ம்),

.. .. நினை நினைதலையும் .. அறியேனாய்,

.. நெறிகுழல் மனைவி வல(ம்)மிகு பதவி

.. .. நிதி என மிகவும் .. அலைவேனாய்,

மடிவதும் உலகில் வருவதும் ஒழிய,

.. .. மலவிருள் அழிய, .. அளியோடு

.. மண(ம்) மலி தமிழ்கள் அவைகொடு தினமு(ம்)

.. .. மலரடி பரவ .. அருளாயே;

கடி மலி மலர்கள் அடி இடும் அடியர்

.. .. கருதிய எவையும் .. அளி-நேயா;

.. கருதலர் எயில்கள் எரி எழ அரிய

.. .. கணை தொடு பெரிய .. சிலைவீரா;

கொடியவன் மலையை எடு-தினம் அழுது

.. .. குரைகழல் நினைய .. நெரி-பாதா;

.. கொடுமுடி அதனில் இனிது-உறை இறைவ;

.. .. கொடி-இடை மருவு .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

நெடிதுயர் வினைகள் இடர் பல தரவு(ம்), நினை நினைதலையும் அறியேனாய் - (மலை போல) மிகவும் ஓங்கி உள்ள வினைகள் பல துன்பங்களைத் தர, அதனால் உன்னை நினைப்பதையும் நான் அறியாதவன் ஆகி; (நினை - நின்னை - உன்னை);

நெறிகுழல் மனைவி, வலம் மிகு பதவி, நிதின மிகவும் அலைவேன் ஆய் - சுருண்ட கூந்தலுடைய மனைவி, பெரிய பதவி, பணம் என்று இவற்றை நாடி மிகவும் அலைந்து வருந்துகின்றவன் ஆகி; (நெறிதல் - மயிர் சுருள்தல்); (வலம் - வலிமை; வெற்றி; ஆணை); (அலைதல் - திரிதல்; வருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - "நெறிகுழல் எழில்மொழி இளமுலைப் பெண்ணுறும் உடலினர்");

மடிவதும் உலகில் வருவதும் ஒழிய, மலருள் அழிய, - இறப்பதும் மீண்டும் உலகில் பிறப்பதுமான இந்த நிலை நீங்கவும், மும்மலக்-கட்டு என்ற இருள் அழியவும்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.95.6 - "திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் ..... பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே");

அளியோடு மண(ம்) மலி தமிழ்கள் அவைகொடு தினமு(ம்) மலரடி பரவ அருளாயே - அன்போடு வாசம் மிக்க தமிழ்ப்-பாமாலைகளால் தினந்தோறும் உன் மலர் போன்ற திருவடிகளைத் துதிக்க அருள்க; (அளி - அன்பு; பக்தி); (தமிழ்கள் - தேவாரம், திருவாசகம் முதலிய தமிழ்ப்-பாமாலைகள்); (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்);

கடி மலி மலர்கள் அடி இடும் அடியர் கருதிய எவையும் அளி-நேயா - மணம் மிகுந்த பூக்களைத் திருவடியில் இடும் அடியார்கள் விரும்பிய எல்லா வரங்களையும் அளிக்கின்ற அன்பனே; (கடி - வாசனை); (மலிதல் - மிகுதல்); (கருதுதல் - விரும்புதல்; எண்ணுதல்); (நேயன் - அன்பன்; நேயம் - அன்பு);

கருதலர் எயில்கள் எரி ழ அரிய கணை தொடு பெரிய சிலை வீரா - பகைவர்களது முப்புரங்களும் தீயில் சாம்பலாகும்படி, (திருமால், வாயு, அக்கினி என்ற மூவரும் ஒன்றாகச் சேர்ந்த) அரிய அம்பு ஒன்றை ஏவிய, பெரிய (மேருமலையால் ஆன) வில்லை ஏந்திய வீரனே; (கருதலர் - பகைவர்); (சிலை - வில்; மலை); (சம்பந்தர் தேவாரம் - 3.21.2 - "ஒன்னலர் மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்");

கொடியவன் மலையை எடு-தினம் அழுது குரைகழல் நினைய நெரி-பாதா - கொடியவனான இராவணன் கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த அன்று, அவன் அழுது, ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை எண்ணி இறைஞ்சும்படி, அவனை நசுக்கிய திருப்பாதனே; (குரைத்தல் - ஒலித்தல்); (நெரித்தல் - நசுக்குதல்);

கொடுமுடி-அதனில் இனிதுறை இறைவ - கொடுமுடி என்ற தலத்தில் இனிதே எழுந்தருளிய இறைவனே;

கொடி-டை மருவு பெருமானே - கொடி போன்ற மெல்லிடை உடைய உமாதேவி ஒரு பாகமான பெருமானே; (கொடியிடை - ஆகுபெயராகக், கொடி போன்ற இடையை உடைய உமையைக் குறித்தது); (மருவுதல் - கலந்திருத்தல்; தழுவுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.65.3 - "கூறணிந்தார் கொடியிடையை");


வி. சுப்பிரமணியன்

--------------


No comments:

Post a Comment