Monday, May 20, 2024

T.192 - கைச்சினம் (கச்சனம்) - வெற்றுரைச் சழக்கர்

2016-06-04

T.192 - கைச்சினம் (கச்சனம்) - வெற்றுரைச் சழக்கர்

(திருவாரூர் திருத்துறைப்பூண்டி இடையே உள்ள தலம்)

--------------

(வண்ணவிருத்தம்;

தத்த தத்த தத்த .. தத்த தத்த தத்த

தத்த தத்த தத்த .. தனதான)


வெற்று ரைச்ச ழக்கர் .. மித்தை நித்தல் விற்கும்

.. .. வெட்கம் அற்ற துட்டர் .. அடையாதாய்

.. மிக்க மட்ட துற்ற .. சொற்ச ரத்தை இட்டு

.. .. வெற்பு விற்க ரத்த பணிவேனே

மற்றொர் பற்றும் அற்ற .. பத்த ரைக்க ளிக்க

.. .. வைக்கும் அத்த கத்தி .. மலைவீசு

.. மட்டி யைத்தி ருத்த .. நற்ப தத்தை வைத்து

.. .. மற்பு யத்து ரத்தை .. நெரியீசா

பெற்ற(ம்) நச்சு நக்க .. சத்தி யத்தில் உற்ற

.. .. பெற்றி பெற்ற சத்தி .. மணவாளா

.. பிட்டி னைப்பு சிக்க .. அற்றை மொத்து முற்ற

.. .. பித்த மத்த அத்தி .. உரிமூடீ

கற்று ணைப்பி ணித்த .. அப்ப ருக்க ளித்த

.. .. கத்த கைத்த லத்தில் .. அனலானே

.. கற்ற வர்க்கி னித்த .. கட்டி யொத்த சுத்த

.. .. கைச்சி னத்தி லுற்ற .. பெருமானே.


பதம் பிரித்து:

வெற்றுரைச் சழக்கர், .. மித்தை நித்தல் விற்கும்

.. .. வெட்கம் அற்ற துட்டர் .. அடையாதாய்;

.. மிக்க மட்டது உற்ற .. சொற்சரத்தை இட்டு,

.. .. வெற்புவிற்-கரத்த, பணிவேனே;

மற்றொர் பற்றும் அற்ற .. பத்தரைக் களிக்க-

.. .. வைக்கும் அத்த; கத்தி மலை வீசு

.. மட்டியைத் திருத்த .. நற்பதத்தை வைத்து

.. .. மற்புயத்து உரத்தை நெரி ஈசா;

பெற்ற(ம்) நச்சு நக்க; .. சத்தியத்தில் உற்ற

.. .. பெற்றி பெற்ற, சத்தி மணவாளா;

.. பிட்டினைப் புசிக்க .. அற்றை மொத்தும் உற்ற

.. .. பித்த; மத்த; அத்தி உரி மூடீ;

கற்றுணைப் பிணித்த .. அப்பருக்கு அளித்த

.. .. கத்த; கைத்தலத்தில் அனலானே;

.. கற்றவர்க்கு இனித்த .. கட்டி ஒத்த சுத்த;

.. .. கைச்சினத்தில் உற்ற பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

வெற்றுரைச் சழக்கர், மித்தை நித்தல் விற்கும் வெட்கம் அற்ற துட்டர் அடையாதாய் - பொருளற்ற பேச்சுடைய தீயோர்களாலும், பொய்யைத் எந்நாளும் விற்கின்ற நாணம் இல்லாத துஷ்டர்களாலும் அடையப்படாதவனே; (சழக்கர் - தீயவர்); (மித்தை - பொய்); (நித்தல் - எந்நாளும்); (துட்டர் - துஷ்டர்);

மிக்க மட்டது உற்ற சொற்சரத்தை இட்டு, வெற்புவிற்-கரத்த, பணிவேனே - மிகுந்த மணம் கமழும் பாமாலைகளை உன் திருவடியில் இட்டு, மேருமலையை வில்லாகக் கையில் ஏந்தியவனே, உன்னை வணங்குவேன்; (மட்டு - வாசனை; தேன்; அது - பகுதிப்பொருள்விகுதி); (சரம் - மாலை); (வெற்பு - மலை);

மற்றொர் பற்றும் அற்ற பத்தரைக் களிக்க வைக்கும் அத்த - வேறு பற்றுகள் அற்ற பக்தர்களை இன்புறவைக்கும் தந்தையே; (அத்தன் - தந்தை);

கத்தி மலை வீசு மட்டியைத் திருத்த நற்பதத்தை வைத்து மற்புயத்து ரத்தை நெரிசா - மிகவும் இகழ்ந்து கத்தியபடி கயிலைமலையை எறிய முயன்ற மூடனான இராவணனைத் திருத்த உன் நல்ல திருவடியை அம்மலைமேல் ஊன்றி அவனது வலிய புஜங்களின் வலிமையை நசுக்கி அழித்த ஈசனே; (மட்டி - மூடன்); (மல் - வலிமை); (உரம் - வலிமை); (நெரித்தல் - நசுக்குதல்);

பெற்ற(ம்) நச்சு நக்க - இடபத்தை வாகனமாக விரும்பிய நக்கனே; (பெற்றம் - எருது); (நச்சுதல் - விரும்புதல்); (நக்கன் - ஆடையில்லாதவன் - திகம்பரன்);

சத்தியத்தில் உற்ற பெற்றி பெற்ற, சத்தி மணவாளா - உண்மையில் இருக்கும் பெருமை உடைய, உமைக்குக் கணவனே; (பெற்றி - இயல்பு; பெருமை);

பிட்டினைப் புசிக்க அற்றை மொத்தும் உற்ற பித்த - பிட்டை உண்ண விரும்பி முன்பு (மதுரையில்) பிரம்படி வாங்கிய பித்தனே; (அற்றை - அன்று); (மொத்து - அடி); (உறுதல் - அனுபவித்தல்); (பித்தன் - பேரருளாளன்);

மத்த - மத்தனே - ஊமத்தமலரை அணிந்தவனே; (அப்பர் தேவாரம் - 5.4.3 - "மத்தனைம் மதயானை உரித்தவெஞ் சித்தனை");

அத்தி-உரி மூடீ - யானைத்தோலைப் போர்த்தவனே; (அத்தி - ஹஸ்தி - யானை); (குறிப்பு: "மத்தம் = யானைமதம்" என்றும் பொருள்கொள்ளலாம்; அப்படிக் கொண்டால், "மத்த அத்தி உரி மூடீ" - மதயானையின் தோலைப் போர்த்தவனே); (சம்பந்தர் தேவாரம் - 3.47.2 - "மத்த யானையின் ஈருரி மூடிய அத்தனே");

கற்றுணைப் பிணித்த அப்பருக்கு அளித்த கத்த - கல்லோடு கட்டப்பட்ட திருநாவுக்கரசருக்கு அருளிய கடவுளே; (கற்றுணை = கல் + துணை); (அளித்தல் - அருள்செய்தல்); (கத்தன் - கர்த்தா - கடவுள்);

கைத்தலத்தில் அனலானே - கையில் தீயை ஏந்தியவனே; (அனல் - தீ);

கற்றவர்க்கு இனித்த கட்டித்த சுத்த - கற்றவர்களுக்குக் கரும்பின் கட்டி போல் இனிமை பயக்கும் தூயனே; (கட்டி - வெல்லக்கட்டி); (சுத்தன் - பரிசுத்தன்); (அப்பர் தேவாரம் - 5.14.10 - "கட்டி பட்ட கரும்பினும் இனியன்");

கைச்சினத்தில் உற்ற பெருமானே - கைச்சினம் என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே; (உறுதல் - இருத்தல்);


வி. சுப்பிரமணியன்

--------------

No comments:

Post a Comment