Friday, May 3, 2024

07.34 - பொது - ஒன்பது வாசலும்

07.34 - பொது - ஒன்பது வாசலும்

2016-03-24

07.34 - பொது

--------------------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - "தானன தானன தான தானன" என்ற சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்")

(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்")


1)

ஒன்பது வாசலும் ஒள்ளெ ரிப்புகா

முன்பது மக்கழல் முன்னு நெஞ்சமே

அன்பது கொண்டடி அடைந்த வர்க்கரண்

என்பது பூண்டெரு தேறும் ஈசனே.


ஒன்பது வாசலும் ஒள் எரிப் புகாமுன் - நவத்துவாரங்களுடைய இந்த உடம்பு தீயினுள் புகுவதன் முன்னமே; (ஒள் எரி - பிரகாசமான நெருப்பு; ஒண்மை - பிரகாசம் - விளக்கம்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.82.9 - "ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும் காட்டில் வேவதன் முன்னம்");

பதுமக்-கழல் முன்னு நெஞ்சமே - கமலபாதத்தை நினை மனமே; (பதுமம் - தாமரை); (முன்னுதல் - கருதுதல்);

அன்பது கொண்டு அடி அடைந்தவர்க்கு அரண் - பக்தியோடு திருவடியைச் சரண் அடைந்தவர்களுக்குப் பாதுகாவல் ஆனவன்; (அன்பது - அன்பு; அது - பகுதிப்பொருள்விகுதி);

என்பது பூண்டு எருது ஏறும் ஈசனே - எலும்பை அணிந்து, இடபத்தின்மேல் ஏறுகின்ற ஈசன்; (என்பு - எலும்பு); (- ஈற்றசை ஏகாரம். தேற்ற ஏகாரமாகவும் கொள்ளல் ஆம்);


2)

உடலிது சுடலையை உற்றி டாமுனம்

கடல்விடக் கண்டனைக் கருது நெஞ்சமே

நடலையி லாதடி நாடி னார்க்கரண்

அடல்விடை ஊர்தியை அமர்ந்த அண்ணலே.


உடல்இது சுடலையை உற்றிடா முனம் - இந்த உடம்பு சுடுகாட்டை அடைவதன் முன்பே;

கடல்-விடக் கண்டனைக் கருது நெஞ்சமே - கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்டு கண்டத்தில் அணிந்தவனை எண்ணு நெஞ்சே;

நடலை இலாது அடி நாடினார்க்கு அரண் - வஞ்சமின்றித் திருவடியை அடைந்தவர்களுக்குக் காவல்;

அடல்-விடை ஊர்தியை அமர்ந்த அண்ணலே - வலிய எருதை வாகனமாக விரும்பிய பெருமான்;


3)

இந்தவு டம்பினை எரியி டாமுனம்

கந்தம லர்க்கழல் கருது நெஞ்சமே

சந்ததம் தொழுபவர் தங்கட் கோரரண்

அந்தகன் தனையுதை அங்கண் அண்ணலே.


இந்த உடம்பினை எரி இடா முனம் - இந்த உடலைத் தீயில் இடுவதன் முன்னமே; (எரி - நெருப்பு);

கந்த-மலர்க்-கழல் கருது நெஞ்சமே - வாசத்தாமரை போன்ற திருவடியை எண்ணு நெஞ்சமே;

சந்ததம் தொழுபவர்-தங்கட்கு ஓர் அரண் - என்றும் வழிபடுபவர்களுக்கு ஒப்பற்ற காவல்;

அந்தகன்தனை உதை அங்கண் அண்ணலே - காலனை உதைத்த அருட்கண் உடைய பெருமான்;


4)

அன்புடை மனையழ அழற்பு காமுனம்

புன்சடை அரனடி போற்று நெஞ்சமே

நின்மலன் நித்தியன் நேயர்க் கோரரண்

பொன்மலை விற்கொடு புரமெய் வீரனே.


அன்பு-உடை மனை அழ அழல் புகா-முனம் - அன்புடைய மனைவியும் குடும்பத்தினரும் அழத் தீயில் புகுவதன் முன்னமே; (மனை - மனைவி; குடும்பம்);

புன்சடை அரன் அடி போற்று நெஞ்சமே - செஞ்சடையினனான ஹரனது திருவடியை வணங்கு மனமே;

நின்மலன், நித்தியன், நேயர்க்கு ஓர் அரண் - தூயன், அழிவற்றவன், அன்பர்களுக்கு ஒப்பற்ற காவல்;

பொன்-மலை வில்-கொடு புரம் எய் வீரனே - மேருமலை என்ற வில்லால் முப்புரங்களை எய்த வீரன்; (விற்கொடு = வில்+கொடு = வில்லால்); (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமை உருபு); (சம்பந்தர் தேவாரம் - 1.13.6 - "வசைவிற்கொடு வருவேடுவனவனாய்"); (திருப்புகழ் - "படிறொ ழுக்கமு ... ... நெடிய விற்கொடு புரமெ ரித்தவர்");


5)

மார்பினில் கொள்ளியை வைத்தி டாமுனம்

பார்படை பரமனைப் பரவு நெஞ்சமே

பேர்பல உடையவன் பேணி னார்க்கரண்

நீர்பர வுஞ்சடை நெற்றிக் கண்ணனே.


மார்பினில் கொள்ளியை வைத்திடா முனம் - மார்பில் கொள்ளியை வைப்பதன் முன்பே;

பார் படை பரமனைப் பரவு நெஞ்சமே - உலகினைப் படைத்த பரமனைத் துதி நெஞ்சே;

பேர் பல உடையவன், பேணினார்க்கு அரண் - எண்ணற்ற திருநாம உடையவன், அன்பர்களுக்குக் காவல்;

நீர் பரவும் சடை, நெற்றிக் கண்ணனே - கங்கை நீர் பரவுகின்ற சடையை உடைய, முக்கண்ணன்; (பரவுதல் - பரந்திருத்தல்; துதித்தல்);


6)

நீறென ஆகிடும் நிலைஎய் தாமுனம்

ஏறமர் ஏந்தலை ஏத்து நெஞ்சமே

ஆறமர் சடையினன் அன்பர்க் கோரரண்

சீறர வோடிளம் திங்கள் சூடியே.


நீறு என ஆகிடும் நிலை எய்தா முனம் - சாம்பல் என்று ஆகும் நிலை வருவதன் முன்னமே;

ஏறு அமர் ஏந்தலை ஏத்து நெஞ்சமே - விடையை வாகனமாக விரும்பிய தலைவனைத் துதி நெஞ்சே;

ஆறு அமர் சடையினன், அன்பர்க்கு ஓர் அரண் - கங்கைச்சடை உடையவன், பக்தர்களுக்கு ஒப்பற்ற காவல்;

சீறு அரவோடு இளம் திங்கள் சூடியே - பொங்கும் பாம்போடு இளம்பிறை அணிந்தவன்;


7)

சூரையங் காட்டினிற் சுட்டி டாமுனம்

சீரையும் பேரையும் சிந்தி நெஞ்சமே

நீரையஞ் சடையிடை நிறுத்த வல்லவன்

பாரையும் விண்ணையும் படைத்த ஈசனே.


* "அன்பர்க்கு ஓர் அரண்" - (பக்தர்களுக்கு ஒப்பற்ற காவல் ஈசன்) - என்ற சொற்றொடரை இப்பதிகத்தின் மற்ற பாடல்களில் உள்ளது போல் இப்பாடலிலும் வருவித்துப் பொருள்கொள்க.


சூரையங் காட்டினிற் சுட்டிடா முனம் - சுடுகாட்டில் உடலை எரிப்பதன் முன்பே; (சூரையங்காடு - சூரை என்னும் ஒருவகை முட்செடிகள் நிரம்பியுள்ள சுடுகாடு; அம் - சாரியை;)

சீரையும் பேரையும் சிந்தி நெஞ்சமே - ஈசனது புகழையும் நாமத்தையும் எண்ணு நெஞ்சே;

நீரை அம் சடையிடை நிறுத்த வல்லவன் - கங்கையை அழகிய சடையில் அடைக்க வல்லவன்;

பாரையும் விண்ணையும் படைத்த ஈசனே - மண்ணுலகையும் விண்ணுலகையும் படைத்த ஈசன்;


8)

உறவினர் அழுதிட உயிர்செ லாமுனம்

இறையவன் அடியிணை எண்ணு நெஞ்சமே

கறைநிறத் தரக்கனைக் கயிலைக் கீழழ

இறைவிரல் வைத்தடர்த் தீந்த வள்ளலே.


* "அன்பர்க்கு ஓர் அரண்" - (பக்தர்களுக்கு ஒப்பற்ற காவல் ஈசன்) - என்ற சொற்றொடரை இப்பதிகத்தின் மற்ற பாடல்களில் உள்ளது போல் இப்பாடலிலும் வருவித்துப் பொருள்கொள்க.


உறவினர் அழுதிட உயிர் செலா முனம் - குடும்பத்தார்கள் எல்லாம் அழும்படி, இந்த உயிரானது நீங்குவதன் முன்னமே;

இறையவன் அடியிணை எண்ணு நெஞ்சமே - மனமே, சிவபெருமான் திருவடிகளை எண்ணுவாயாக; (சற்று அவன் திருவடியை எண்ணு மனமே); (சம்பந்தர் தேவாரம் - 3.56.1 - "இறையவன் ஈசனெந்தை"); (இறை - 1. இறைவன்; 2. சிறிது); (இறையவன் - 1. இறைவன்; 2. இறை அவன் - சற்று அவன்);

கறைநிறத்து அரக்கனைக் கயிலைக்கீழ் அழ, இறை விரல் வைத்து அடர்த்து ஈந்த வள்ளலே - அவன் கரிய அரக்கனான இராவணன் கயிலைமலைக்கீழ் அழும்படி, ஒரு விரலைச் சிறிதே ஊன்றி அவனை நசுக்கிப், பின் அவனுக்கு (நாமம், நாள், வாள் முதலிய) வரங்கள் கொடுத்த வள்ளல் ஆவான்; (கறை நிறம் - கருமை); (இறை - சிறிது); (- ஈற்றசை ஏகாரம்);


9)

கொலைபுரி நமன்றமர் குறுகி டாமுனம்

மலரடி இணைதனை வாழ்த்து நெஞ்சமே

சலமலை சடையினன் சார்ந்த வர்க்கரண்

நிலமகழ் மாலயன் நேடு சோதியே.


கொலைபுரி நமன் தமர் குறுகிடா முனம் - உயிரைக் கொல்லும் எமனுடைய தூதுவர்கள் நம்மை நெருங்குவதன் முன்னமே; (குறுகுதல் - அணுகுதல்);

மலரடி இணைதனை வாழ்த்து நெஞ்சமே - மனமே, இறைவனுடைய மலர்ப்பாதம் இரண்டை வாழ்த்துவாயாக;

சலம் அலை சடையினன் - கங்கை அலைகின்ற சடையை உடையவன்;

சார்ந்தவர்க்கு அரண் - தன்னைச் சரண் அடைந்தவர்களுக்குப் பாதுகாவல் ஆனவன்;

நிலம் அகழ் மால், அயன் நேடு சோதியே - (பன்றி உருவில்) தரையை அகழ்ந்த திருமாலும், பிரமனும் தேடிய சோதியாக உயர்ந்த பெருமான்;


10)

மெய்யிது காட்டினில் வேவ தன்முனம்

செய்யன தடியிணை சிந்தி நெஞ்சமே

வெய்யசொல் வீணர்கள் மேவி டாவிறை

கையினில் மான்மழுக் காட்டும் ஈசனே.


* "அன்பர்க்கு ஓர் அரண்" - (பக்தர்களுக்கு ஒப்பற்ற காவல் ஈசன்) - என்ற சொற்றொடரை இப்பதிகத்தின் மற்ற பாடல்களில் உள்ளது போல் இப்பாடலிலும் வருவித்துப் பொருள்கொள்க.


மெய்இது காட்டினில் வேவதன் முனம் - இந்த உடம்பு சுடுகாட்டில் வெந்து சாம்பலாகும் முன்னமே;

செய்யனது அடியிணை சிந்தி நெஞ்சமே - மனமே, செம்மேனி உடைய சிவபெருமானது இரு திருவடிகளை எண்ணுவாயாக; (செய் - சிவப்பு);

வெய்யசொல் வீணர்கள் மேவிடா இறை - கடுஞ்சொற்கள் பேசும் பயனற்றவர்கள் அடையாத இறைவன்; (வெய்ய - கொடிய); (வீணன் - பயனிலி); (மேவுதல் - அடைதல்; விரும்புதல்);

கையினில் மான் மழுக் காட்டும் ஈசனே - கையில் மானையும் மழுவையும் ஏந்திய ஈசன்; (இலக்கணக் குறிப்பு: முற்றியலுகரத்தின்பின் வலி மிகும்); (அப்பர் தேவாரம் - 4.30.5 - "கொடுமழுக் கையில் வைத்தார்");


11)

சென்றுவிட் டாரெனச் செப்பி டாமுனம்

மன்றினில் ஆடியை வாழ்த்து நெஞ்சமே

பன்றியை எய்தொரு படையைப் பார்த்தனுக்

கன்றருள் செய்தவன் அன்பர்க் கன்பனே.


* "அன்பர்க்கு ஓர் அரண்" - (பக்தர்களுக்கு ஒப்பற்ற காவல் ஈசன்) - என்ற சொற்றொடரை இப்பதிகத்தின் மற்ற பாடல்களில் உள்ளது போல் இப்பாடலிலும் வருவித்துப் பொருள்கொள்க.


சென்றுவிட்டார் எனச் செப்பிடா முனம் - "இவர் போய்விட்டார் (இறந்தார்)" என்று பிறர் சொல்வதன் முன்னமே;

மன்றினில் ஆடியை வாழ்த்து நெஞ்சமே - மனமே, அம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனை வாழ்த்துவாயாக;

பன்றியை எய்து ஒரு படையைப் பார்த்தனுக்கு அன்று அருள் செய்தவன் - முன்னர் வேடன் உருவில் சென்று ஒரு பன்றியை எய்து, பாசுபாதாஸ்திரத்தை அருச்சுனனுக்கு அருள்புரிந்தவன்;

அன்பர்க்கு அன்பனே - அடியவர்களுக்கு அன்புடைய சிவபெருமான்;


பிற்குறிப்பு :

யாப்புக் குறிப்பு:

  • கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - "தானன தானன தான தானன" என்ற சந்தம்;

  • முதல் இரு சீர்களில் தானன என்பது தனதன என்றும் வரலாம்;

  • மூன்றாம் சீரில் தான என்பது தனன என்றும் வரலாம்.

  • மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வாரா;

  • (சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்")

  • (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்")


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment