Saturday, May 4, 2024

08.02.189 - மருகல் - பிழைகள் புரிகுண(ம்) - (வண்ணம்)

08.02.189 - மருகல் - பிழைகள் புரிகுண(ம்) - (வண்ணம்)

2016-03-31

8.2.189 - பிழைகள் புரிகுண(ம்) - (மருகல்)

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தனதன தனன தனதன

தனன தனதன .. தனதான)

(குமர குருபர முருக சரவண - திருப்புகழ் - சுவாமிமலை)

(திரிபுர மதனை யொருநொடி யதனில் - திருப்புகழ் - பொது)

பிழைகள் புரிகுண(ம்) மலியு(ம்) மனமிது

.. .. பெருமை மிகுமுனை .. நினையாதே

.. பழைய வினைமலை பெருக உழல்வது

.. .. பரம உனதருள் .. நிலையாமோ

குழலின் இனிமையை மொழியில் உடையுமை

.. .. குலவி இடமுறை .. வதனாலே

.. குழையை ஒருசெவி அணியும் உனதடி

.. .. குறுகு நெறிதனை .. அருளாயே

உழுவை அதளினை அரையில் அசையர

.. .. ஒருவ எனவடி .. யிணைதேவர்

.. குழுமி வழிபட எயில்கள் அவையெரி

.. .. கொளுவ ஒருகணை .. தொடுவீரா

கழலை முடிதனை அடைய முயலரி

.. .. கமலன் இவர்தொழ .. உயர்சோதீ

.. மழையின் வளமடை வயல்கள் புடையணி

.. .. மருகல் நகருறை .. பெருமானே.


பதம் பிரித்து:

பிழைகள் புரி-குண(ம்) மலியு(ம்) மனமிது

.. .. பெருமை மிகும் உனை .. நினையாதே

.. பழைய வினைமலை பெருக உழல்வது,

.. .. பரம, உனது அருள் .. நிலை ஆமோ?

குழலின் இனிமையை மொழியில் உடையுமை

.. .. குலவி இடம் உறைவதனாலே,

.. குழையை ஒருசெவி அணியும் உனது அடி

.. .. குறுகு நெறிதனை .. அருளாயே;

"உழுவை அதளினை அரையில் அசை-அர;

.. .. ஒருவ" என அடியிணை தேவர்

.. குழுமி வழிபட, எயில்கள் அவை எரி

.. .. கொளுவ ஒருகணை .. தொடு-வீரா;

கழலை முடிதனை அடைய முயல்-அரி

.. .. கமலன் இவர் தொழ .. உயர்-சோதீ;

.. மழையின் வளம் அடை- வயல்கள் புடை-அணி

.. .. மருகல் நகர் உறை .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

பிழைகள் புரி குணம் மலியும் மனம் இது பெருமை மிகும் உனை நினையாதே - குற்றங்கள் புரியும் குணமே மிகுந்த இந்த மனம், பெருமை மிகும் உன்னை நினையாமல்;

பழைய வினைமலை பெருக உழல்வது, பரம உனது அருள் நிலைமோ - பழைய மலை போன்ற வினைகள் இன்னும் பெருகும்படி உழல்வதுதான், பரமனே, உன்னுடைய திருவருள் நிலை ஆகுமா?

குழலின் இனிமையை மொழியில் உடைமை குலவி இடம் உறைவதனாலே - குழல் போன்ற இனிய மொழியை உடைய உமாதேவி இடப்பக்கத்தில் உறைந்துள்ளதனால்;

குழையை ஒரு செவி அணியும் து அடி குறுகும் நெறிதனை அருளாயே - ஒரு காதில் குழையை அணிந்துள்ள உன் திருவடியை அடையும் நன்னெறியை எனக்கு அருள்புரிவாயாக; (குறுகுதல் - அணுகுதல்);

"உழுவை அதளினை அரையில் அசை; ஒருவ" எனடியிணை தேவர் குழுமி வழிபட - "புலித்தோலை அரையில் கட்டிய அரனே; ஒப்பற்றவனே" என்று இரு-திருவடிகளைத் தேவர்கள் எல்லாம் கூடி வணங்கவும்; (உழுவை - புலி); (அதள் - தோல்); (அசைத்தல் - கட்டுதல்); (அர - அரனே என்ற அண்மை விளி); (ஒருவ - ஒருவனே - ஒப்பற்றவனே); (குழுமுதல் - கூடுதல்; திரள்தல்);

எயில்கள் அவைரி கொளுவ ஒரு கணை தொடு வீரா - முப்புரங்களும் தீப்பற்றி அழிய ஓர் அம்பை எய்த வீரனே; (கொளுவுதல் - தீமூட்டுதல்); (அப்பர் தேவாரம் - 6.44.4 - "எண்ணார் புரங்கள் மூன்றும் இமையாமுன் எரிகொளுவ நோக்கி நக்க");

கழலை முடிதனை அடைய முயல் அரி கமலன் இவர் தொழ உயர் சோதீ - கழல் அணிந்த திருவடியையும் திருமுடியையும் அடைய முயன்ற திருமாலும் பிரமனும் தொழும்படி எல்லையின்றி உயர்ந்த சோதியே; (சோதீ - சோதியே);

மழையின் வளம் அடை வயல்கள் புடைணிருகல் நகர் உறை பெருமானே - நீர்வளம் மிக்க வயல்கள் நாற்புறமும் சூழ்ந்த திருமருகலில் உறையும் பெருமானே;


பிற்குறிப்பு: யாப்புக்குறிப்பு - இப்பாடலில் 1, 3, 4-ஆம் அடிகளில் அரையடியில் மோனை வருமிடத்தில் எதுகை அமைந்துள்ளது.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment