Saturday, May 4, 2024

07.36 - பாம்புரம் - அம்புயம் போல

07.36 - பாம்புரம் - அம்புயம் போல

2016-03-03

பாம்புரம்

---------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.46.2 - "மனமெனும் தோணி பற்றி")


1)

அம்புயம் போலக் கண்ணை .. அரியிட ஆழி ஈந்தார்

சம்புவே காவாய் என்று .. தாள்பணி சுரர்க்கி ரங்கி

அம்புவில் ஏந்தி மேவார் .. அரண்களை அட்ட ஐயர்

பைம்பொழில் புடைய ணிந்த .. பாம்புரப் பரம னாரே.


அம்புயம் போலக் கண்ணை அரி இட ஆழி ஈந்தார் - (ஆயிரம் தாமரையில் ஒன்று குறையக் கண்டு) தாமரைமலர் போலத் தன் கண்ணை இண்டது இட்டு அர்ச்சனை செய்து வழிபட்ட திருமாலுக்குச் சக்கராயுதம் தந்தவர்; (அம்புயம் - அம்புஜம் - தாமரை); (ஆழி - சக்கரம்);

"சம்புவே காவாய்" என்று தாள் பணி சுரர்க்கு இரங்கி, அம்பு வில் ஏந்தி மேவார் அரண்களை அட்ட ஐயர் - "சம்புவே! காப்பாயாக" என்று திருவடியைப் பணிந்த தேவர்களுக்கு இரங்கி, அம்பும் வில்லும் ஏந்திப், பகைவர்களது முப்புரங்களையும் அழித்த தலைவர்; (அடுதல் - அழித்தல்); (ஐயர் - தலைவர்);

பைம்பொழில் புடை அணிந்த பாம்புரப் பரமனாரே - அழகிய சோலை சூழ்ந்த திருப்பாம்புரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமனார்;


2)

தனிவிடை ஊர்தி யார்தம் .. தாள்தொழு பத்தர்க் கென்றும்

இனியவர் இளங்கொம் பன்ன .. ஏந்திழை பங்கர் ஆல்கீழ்

முனிவர்கள் நால்வ ருக்கு .. முன்மறை விரித்த நாதர்

பனிவயல் புடைய ணிந்த .. பாம்புரப் பரம னாரே.


தனி விடை ஊர்தியார் - இப்பற்ற இடப வாகனம் உடையவர்; (ஒரு - ஒப்பற்ற);

தம் தாள் தொழு பத்தர்க்கு என்றும் இனியவர் - தம் திருவடிகளை வணங்கும் பக்தர்களுக்கு என்றும் இனிமை பயப்பவர்;

இளம்-கொம்பு அன்ன ஏந்திழை பங்கர் - இளங்கொம்பு போன்ற உமாதேவியை ஒரு பங்கில் உடையவர்;

ஆல்கீழ் முனிவர்கள் நால்வருக்கு முன் மறை விரித்த நாதர் - முன்பு கல்லால மரத்தின்கீழ் சனகாதியர் நால்வருக்கு மறைப்பொருளை விளக்கிய தலைவர்;

பனி வயல் புடை அணிந்த பாம்புரப் பரமனாரே - குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பாம்புரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமனார்;


3)

இணையடி ஏத்தும் அன்பர் .. இருவினை தீர்த்து நல்ல

துணையென நிற்கும் நம்பர் .. சுண்ணவெண் ணீற்றர் ஒற்றைக்

கணைகொடு முப்பு ரங்கள் .. கனற்பட எய்ய வல்லார்

பணைமுலை மங்கை பங்கர் .. பாம்புரப் பரம னாரே.


இணையடி ஏத்தும் அன்பர் இருவினை தீர்த்து, நல்ல துணை என நிற்கும் நம்பர் - இரு திருவடிகளை வழிபடும் பக்தர்களது வல்வினையைத் தீர்த்து, அவர்களுக்கு நல்ல துணை ஆகி நிற்பவர், நம்பர் என்ற திருநாமம் உடையவர்; (நம்பன் - விரும்பத்தக்கவன்);

சுண்ண வெண்-நீற்றர் - சுண்ணமாகத் வெள்ளிய திருநீற்றைப் பூசியவர்;

ஒற்றைக் கணைகொடு முப்புரங்கள் கனற்பட எய்ய வல்லார் - ஓர் அம்பால் முப்புரங்களும் தீயிற் புகுமாறு எய்தவர்; (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமை உருபு);

பணைமுலை மங்கை பங்கர் - பருத்த முலைகளையுடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவர்; (சம்பந்தர் தேவாரம் - 1.110.4 - "பணைமுலை யுமையொரு பங்கன்");

பாம்புரப் பரமனாரே - திருப்பாம்புரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமனார்;


4)

சேய்தரு நெற்றிக் கண்ணர் .. சிற்றிடை மங்கை பாகர்

வாய்மனம் உடலால் போற்று .. மாணியைக் காத்துக் கூற்று

மாய்தர உதைத்த பாதர் .. வன்னியை ஏந்து கையர்

பாய்புலித் தோல ணிந்த .. பாம்புரப் பரம னாரே.


சேய் தரு நெற்றிக் கண்ணர் - முருகனைத் தந்த நெற்றிக்கண் உடையவர்; (சேய் - முருகன்);

சிற்றிடை மங்கை பாகர் - சிறிய இடையை உடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவர்;

வாய் மனம் உடலால் போற்று மாணியைக் காத்துக் - மனம் வாக்கு காயம் இவற்றால் வணங்கிய மார்க்கண்டேயரைக் காத்து;

கூற்று மாய்தர உதைத்த பாதர் - காலனை மாளும்படி உதைத்த திருப்பாதம் உடையவர்; (மாய்தர - மாயும்படி); (தருதல் - ஒரு துணைவினை);

வன்னியை ஏந்து கையர் - கையில் தீயை ஏந்தியவர்; (வன்னி - நெருப்பு);

பாய்புலித் தோல் அணிந்த பாம்புரப் பரமனாரே - பாயும் இயல்பு உடைய புலியின் தோலை அணிந்தவர், திருப்பாம்புரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமனார்;


5)

படமுடைப் பாம்பை ஆர்த்துப் .. பாரிடம் பறைகள் ஆர்க்க

நடமிடு நாதர் பாதம் .. நாள்தொறும் ஏத்து வார்தம்

தொடர்வினை யாவும் நீக்கித் .. தூயவிண் அருளும் ஈசர்

படர்சடைப் புனல்க ரந்த .. பாம்புரப் பரம னாரே.


படம்-உடைப் பாம்பை ஆர்த்துப் - படம் உடைய பாம்பை அரைநாணாகக் கட்டி; (ஆர்த்தல் - கட்டுதல்)

பாரிடம் பறைகள் ஆர்க்க நடம் இடு நாதர் - பூதங்கள் பறைகளை ஒலிக்கத் திருநடம் செய்யும் தலைவர்; (பாரிடம் - பூதம்); (ஆர்த்தல் - ஒலித்தல்);

பாதம் நாள்தொறும் ஏத்துவார்தம் தொடர்வினை யாவும் நீக்கித் தூய விண் அருளும் ஈசர் - திருவடியைத் தினந்தோறும் போற்றும் அன்பர்களின் வினைத்தொடர் எல்லாம் தீர்த்து அவர்களுக்குத் தூய சிவலோகத்தை அருளும் ஈசர்;

படர்சடைப் புனல் கரந்த பாம்புரப் பரமனாரே - படர்ந்த சடையில் கங்கையை ஒளித்தவர், திருப்பாம்புரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமனார்;


6)

பாலனைக் கொல்வ தற்குப் .. பாசம தேந்தி வந்த

காலனைக் காய்ந்த காலர் .. கடுவிடம் உண்ட கண்டர்

சேலன கண்ணி பங்கர் .. திகழ்மழு வாளர் தோளில்

பாலன நீற ணிந்த .. பாம்புரப் பரம னாரே.


பாலனைக் கொல்வதற்குப் பாசம்அது ஏந்தி வந்த காலனைக் காய்ந்த காலர் - சிறுவனான மார்க்கண்டேயரைக் கொல்வதற்காகப் பாசத்தை ஏந்தி அவரை அடைந்த காலனைக் கோபித்த காலகாலர்;

கடுவிடம் உண்ட கண்டர் - கொடிய நஞ்சை உண்ட மிடற்றை உடையவர்;

சேல் அன கண்ணி பங்கர் - சேல்மீன் போன்ற கண்களை உடைய உமையை ஒரு பங்கில் உடையவர்;

திகழ் மழுவாளர் - ஒளிவீசும் மழுவாள் ஏந்தியவர்;

தோளில் பால் அன நீறு அணிந்த பாம்புரப் பரமனாரே - புஜங்களில் பால் போன்ற வெண்மையான திருநீற்றை அணிந்தவர், திருப்பாம்புரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமனார்;


7)

ஆரிடர் நீங்கித் தேவர் .. அமுதுண ஆலம் உண்டு

காரிடம் கொண்ட கண்டர் .. கையிலோர் கபாலம் ஏந்தி

ஊரிடும் பிச்சைக் காக .. உழல்பவர் உடுக்கொ லிக்கப்

பாரிடம் சூழ ஆடும் .. பாம்புரப் பரம னாரே.


ஆரிடர் நீங்கித் தேவர் அமுது உண - பெரும் துன்பம் நீங்கித் தேவர்கள் அமுதம் உண்ண / உண்ணுமாறு;

ஆலம் உண்டு கார் இடம் கொண்ட கண்டர் - தாம் ஆலகாலத்தை உண்டு கருமை திகழ்கின்ற கண்டத்தை உடையவர்;

கையில் ஓர் கபாலம் ஏந்தி, ஊர் இடும் பிச்சைக்காக உழல்பவர் - கையில் பிரமனது மண்டையோட்டை ஏந்தி ஊரார் இடும் பிச்சைக்குத் திரிபவர்;

உடுக்கு ஒலிக்கப் பாரிடம் சூழ ஆடும் பாம்புரப் பரமனாரே - உடுக்குகள் ஒலி எழுப்பப் பூதங்கள் சூழ்ந்து இருக்கக் கூத்து இயற்றுபவர், திருப்பாம்புரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமனார்; (பாரிடம் - பூதம்);


==== line-1x) பாரினில் ஆழி கீறிப் .. படுசலந் தரனைச் செற்றார்


8)

பொருப்பசை இலங்கைக் கோனைப் .. புண்பட ஊன்றிக் கீதம்

விருப்பொடு கேட்ட பண்பர் .. வேணியில் ஆற்றர் ஏன

மருப்பணி மார்பில் நாக .. மாலையர் புரமெ ரிக்கப்

பருப்பத வில்லை ஏந்து .. பாம்புரப் பரம னாரே.


பொருப்பு அசை இலங்கைக் கோனைப் புண்பட ஊன்றிக் கீதம் விருப்பொடு கேட்ட பண்பர் - கயிலைமலையை அசைத்த இராவணனைப் புண்ணாகுமாறு ஒரு விரலை ஊன்றிப், பின் அவன் பாடிய பாட்டை விரும்பிக் கேட்டவர்;

வேணியில் ஆற்றர் - சடையில் கங்கையை உடையவர்; (வேணி - சடை);

ஏன மருப்பு அணி மார்பில் நாக மாலையர் - பன்றிக்கொம்பை அணிந்த மார்பில் பாம்பையும் மாலையாக அணிந்தவர்; (ஏனம் - பன்றி); (மருப்பு - கொம்பு);

புரம் எரிக்கப் பருப்பத வில்லை ஏந்து பாம்புரப் பரமனாரே - முப்புரங்களை எரிக்க மேருமலையை வில்லாக ஏந்தியவர், திருப்பாம்புரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமனார்; (பருப்பதம் - மலை);


9)

பூத்திகழ் அயனும் மாலும் .. பொன்னடி முடியை நேடத்

தீத்திரள் ஆகி நின்றார் .. தில்லையம் பலத்தில் ஆடும்

கூத்தினர் கானில் அம்பைக் .. கோத்தொரு பன்றி எய்து

பார்த்தனுக் கருள்பு ரிந்த .. பாம்புரப் பரம னாரே.


பூத் திகழ் அயனும் மாலும் பொன்னடி முடியை நேடத் தீத்திரள் ஆகி நின்றார் - தாமரைப்பூவில் விளங்கும் பிரமனும் திருமாலும் பொன் போன்ற திருவடியையும் திருமுடியையும் தேடும்படி தீப்பிழம்பாகி நின்றவர்;

தில்லை அம்பலத்தில் ஆடும் கூத்தினர் - தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடும் கூத்தர்;

கானில் அம்பைக் கோத்து ஒரு பன்றி எய்து பார்த்தனுக்கு அருள்புரிந்த பாம்புரப் பரமனாரே - காட்டில் வேடராகிப் பன்றிமேல் ஓர் அம்பை எய்து அருச்சுனனுக்கு அருள்புரிந்தவர், திருப்பாம்புரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமனார்;


10)

ஒன்றறி யாத ஊமர் .. உரைநெறி நீங்கி வம்மின்

மன்றினில் ஆடும் மன்னர் .. வழிபடும் அன்பர்க் கென்றும்

நன்றையே நல்கும் நம்பர் .. நதியணி சடையர் மார்பில்

பன்றியின் கொம்ப ணிந்த .. பாம்புரப் பரம னாரே.


ஒன்று அறியாத ஊமர் உரை நெறி நீங்கி வம்மின் - ஒரு தத்துவமும் அறியாத ஊமைகள் சொல்கின்ற மார்க்கங்களை நீங்கி வாருங்கள்; (ஒன்று - ஒன்றும் - உம்மைத்தொகை); (ஊமர் - ஊமைகள்); (வம்மின் - வாருங்கள்);

மன்றினில் ஆடும் மன்னர் - அம்பலத்தில் ஆடும் நடராஜர்;

வழிபடும் அன்பர்க்கு என்றும் நன்றையே நல்கும் நம்பர் - வணங்கும் பக்தர்களுக்கு எப்போதும் நன்மையே செய்யும் சிவபெருமானார்; (நன்று - நல்லது); (நல்குதல் - கொடுத்தல்);

நதி அணி சடையர் - சடையில் கங்கையை உடையவர்;

மார்பில் பன்றியின் கொம்பு அணிந்த பாம்புரப் பரமனாரே - மார்பில் பன்றிக்கொம்பை அணிந்தவர், திருப்பாம்புரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமனார்;


11)

தொண்டர்கள் துதிக்கும் வண்ணம் .. தோன்றிடு தூய வேடர்

தெண்டிரைக் கங்கை தன்னைச் .. செஞ்சடைக் கரந்த சீலர்

அண்டர்கள் செய்த தேரின் .. அச்சிற ஏறி நக்குப்

பண்டெயில் மூன்றெ ரித்த .. பாம்புரப் பரம னாரே.


தொண்டர்கள் துதிக்கும் வண்ணம் தோன்றிடு தூய வேடர் - அன்பர்கள் எவ்வடிவத்தை எண்ணிப் போற்றுகின்றார்களோ அவர்களுக்கு அவ்வடிவத்தில் தோன்றி அருளும் தூய கோலம் உடையவர்;

தெண் திரைக் கங்கை தன்னைச் செஞ்சடைக் கரந்த சீலர் - தெளிந்த அலைகள் உடைய கங்கையைச் செஞ்சடையில் ஒளித்த சீலர்; (தெண் திரை - தெளிந்த அலை); (கரத்தல் - ஒளித்தல்);

அண்டர்கள் செய்த தேரின் அச்சு இற ஏறி நக்குப் - தேவர்கள் செய்த தேரின்மேல் ஏறி அதன் அச்சு முரியக் கண்டு சிரித்து; (நக்கு - சிரித்து);

பண்டு எயில் மூன்று எரித்த பாம்புரப் பரமனாரே - முன்னர் முப்புரங்களை எரித்தவர், திருப்பாம்புரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமனார்; (பண்டு - முன்பு); (எயில் - கோட்டை);


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment