Saturday, May 4, 2024

08.05.035 – "வெள்ளம் அளித்த விடை" - வெள்ளம் ஒளித்த - (நமிநந்தி அடிகள் வரலாற்றிலிருந்து)

08.05.035 – "வெள்ளம் அளித்த விடை" - வெள்ளம் ஒளித்த - (நமிநந்தி அடிகள் வரலாற்றிலிருந்து)

2015-12-23

8.5.35 - "வெள்ளம் அளித்த விடை"

(நமிநந்தி அடிகள் வரலாற்றிலிருந்து)

------------------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)


0-1) இறைவணக்கம்

வெள்ளம் ஒளித்த விரிசடையாய்

.. விமலா என்ற சுந்தரர்க்கு

வெள்ளம் விலகி வழிநல்க

.. விரும்பி அருள்செய் ஐயாறா

வெள்ளம் தனிலோர் தமிழ்க்கோலால்

.. வேணு புரக்கோன் கடக்கவருள்

வெள்ளம் காட்டி நின்றவனே

.. விடையாய் அடியேற் கருளாயே.


வெள்ளம் ஒளித்த விரிசடையாய் - விரிசடையில் கங்கையை மறைத்தவனே;

வேணுபுரக் கோன் - காழியர்கோன் - சீகாழித் தலைவரான திருஞானசம்பந்தர்;

அருள்வெள்ளம் காட்டி நின்றவனே - பெரிய கருணைவெள்ளம் காட்டியவனே;

விடையாய் - இடபவாகனனே;


* சுந்தரர்க்குக் காவிரி-வெள்ளம் விலகி வழிவிட்டதைப் பெரியபுராணத்திற் காண்க;

(12.37 - 37 கழறிற்றறிவார் நாயனார் புராணம் - பாடல் - 136 -

விண்ணின் முட்டும் பெருக்காறு .. மேல்பாற் பளிக்கு வெற்பென்ன

நண்ணி நிற்கக் கீழ்பால்நீர் .. வடிந்த நடுவு நல்லவழி

பண்ணிக் குளிர்ந்த மணற்பரப்பக் .. கண்ட தொண்டர் பயில்மாரி

கண்ணிற் பொழிந்து மயிர்ப்புளகங் .. கலக்கக் கைஅஞ் சலிகுவித்தார் );


* திருஞானசம்பந்தர் தாம் பாடும் தேவாரமே ஓடம் செலுத்தும் கோலாகக் கொண்டு ஆற்றுவெள்ளத்தை கடந்தது - திருக்கொள்ளம்பூதூர் நிகழ்ச்சி.

(சம்பந்தர் தேவாரம் - 3.6.1 - "கொட்ட மேகம ழுங்கொள்ளம் பூதூர்")

(12.28 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் - பாடல் 898 -

தேவர்பிரான் அமர்ந்ததிருக் கொள்ளம் பூதூர்

.. எதிர்தோன்றத் திருவுள்ளம் பணியச் சென்று

மேவுதலால் ஓடங்கள் விடுவா ரின்றி

.. ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பைக்

காவலனார் ஓடத்தின் கட்ட விழ்த்துக்

.. கண்ணுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி

நாவலமே கோலாக அதன்மே னின்று

.. நம்பர்தமைக் கொட்டமென நவின்று பாட )


1)

வெள்ளம் தங்கு சடையுடையான்

.. விரையார் கழலை மறவாத

உள்ளம் உடைய நமிநந்தி

.. உறையே மப்பே றூர்நின்று

வள்ளல் மேய திருவாரூர்

.. வணங்கு கின்ற கருத்தினராய்க்

கள்ளும் மணமும் மலிமலர்கள்

.. கையில் தாங்கிச் சென்றணைந்தார்.


வெள்ளம் - நீர் - கங்கை;

விரை ஆர் கழல் - மணம் பொருந்திய திருவடி;

நமிநந்தி - நமிநந்தி அடிகள் - அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர்;

ஏமப்பேறூர் - நமிநந்தி அடிகள் வாழ்ந்த ஊரின் பெயர்;

நின்று - ஏழாம் வேற்றுமை உருபு;

வள்ளல் - வேண்டும் வரம் அருளும் சிவபெருமான்;

கருத்தினராய் - எண்ணம் உடையவர் ஆகி;

கள் - தேன்;


2)

ஆரூர் மேய அண்ணலவன்

.. ஆல யத்தை வலஞ்செய்து

காரூர் கண்டன் கழலிணையைக்

.. கைகள் கூப்பி வணங்கிப்பின்

சீரூர் தமிழும் ஆரியமும்

.. செப்பி இருந்தார் பின்னரவத்

தாரூர் மார்பன் கோயிலிலே

.. தக்க தீபம் ஏற்றவெண்ணிச்,


ஊர்தல் - பரவுதல் (To spread; to extend over a surface); நகர்தல் (to crawl, as a snake);

கார் ஊர் கண்டன் - நீலகண்டன்;

சீர் ஊர் தமிழும் ஆரியமும் செப்பி - சிறந்த தமிழ்ப் பாமாலைகளையும் வேதமந்திரங்களையும் சொல்லி;

பின்னரவத் தாரூர் மார்பன் - பின் அரவத் தார் ஊர் மார்பன் / பின்னு அரவத் தார் ஊர் மார்பன் - பிறகு, பின்னுகின்ற பாம்பை மாலையாக அணிந்த மார்பினை உடைய சிவன்;


3)

சந்தி வேளை நெருங்கியதால்

.. தம்மூர் போய்நெய் கொணர்வதன்முன்

அந்தம் சூழ்ந்து விடுமென்றே

.. அயலுள் ளார்தம் மனையிற்போய்

எந்தை தீபம் ஏற்றிடநெய்

.. ஈயீர் என்றார் அதுகேட்டு

நிந்தை செய்தார் அம்மனைவாழ்

.. நேயம் இல்லாச் சமணர்கள்.


சந்தி - சந்தியாகாலம்; இங்கே சூரியன் அஸ்தமிக்கும் வேளை;

நெய் - இக்காலத்தில் எண்ணெய் என்றே சுட்டப்பெறுவது;

அந்தம் - இருள்;

அயல் உள்ளார் - பக்கத்தில் உள்ளவர்கள்;

எந்தை - எம் தந்தை - சிவபெருமான்;

ஈயீர் - தாரீர் - கொடுப்பீராக;

நிந்தை - இகழ்ச்சி (Reproach, blasphemy, abuse);

நேயம் - அன்பு;

* (பாடல்கள் 2-உம் 3-உம் குளகமாக அமைந்தன; சேர்த்துப் பொருள்கொள்க)


4)

நெருப்பை ஏந்தும் உம்மிறைக்கு

.. நெய்த்தீ பந்தான் மிகையன்றோ?

இருப்பில் இல்லை நெய்காணும்

.. இனியும் இங்கே நில்லாதீர்

விருப்பம் இருந்தால் நீரூற்றி

.. விளக்கெ ரிப்பீர் என்றுரைத்தார்

சருப்பத் தாரன் தளிமீண்டு

.. தாளில் வீழ்ந்தார் நமிநந்தி.


மிகை - அனாவசியமானது (That which is unnecessary, superfluous);

இருப்பு - கைவசம் உள்ளது;

காணும் - முன்னிலைப்பன்மை அசைச்சொல்;

சருப்பத் தாரன் - பாம்பை மாலையாக அணிந்த சிவன்;

தளி - கோயில்;


5)

கலங்கி நின்ற நமிநந்தி

.. காதிற் கேட்ட தசரீரி

மலங்க வேண்டா திருக்கோயில்

.. வாவி கமலா லயத்துள்ள

சலங்கொண் டேற்று விளக்கென்றே

.. தலைமேற் கைகள் குவித்தேத்திக்

கலங்கள் நிறைய நீர்முகந்து

.. காத லால்பல் அகல்களிலே,


அசரீரி - ஆகாசவாணி;

மலங்குதல் - மனம் கலங்குதல்;

வாவி - குளம்;

கமலாலயம் - திருவாரூர்க் குளத்தின் பெயர்;

சலம் - ஜலம் - நீர்;

கலங்கள் - பாத்திரங்கள்;

காதலால் - அன்போடு;


6)

ஊற்றி ஏற்று விளக்கெல்லாம்

.. ஒளிவிட் டெரிய உளமகிழ்ந்தார்

ஏற்று தீபம் இரவெல்லாம்

.. எரியக் கண்டார் எல்லாரும்

தூற்று வாயர் வினாக்களுக்குச்

.. தூயோன் குளத்துப் புனலுரைத்த

மாற்றம் தன்னை உணர்ந்தோமேல்

.. வாழ்வில் இல்லை தடுமாற்றம்.


மாற்றம் - வார்த்தை (Word); விடை (Answer, reply);

உணர்ந்தோமேல் - நாம் உணர்ந்தால்;

தடுமாற்றம் - சந்தேகம்; தள்ளாடுதல்; மனக்கலக்கம்;


* (பாடல்கள் 5-உம் 6-உம் குளகமாக அமைந்தன; சேர்த்துப் பொருள்கொள்க)


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு:

இலக்கணக் குறிப்பு: ஒரு பாடலின் கருத்து ஒரு பாடலில் முற்றுப்பெறாது அடுத்த பாடலிலும் தொடர்வது "குளகம்" எனப்படும்.

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment