Saturday, May 18, 2024

M.069 - உடையானை - வேதனை - மடக்கு

2016-05-20

M.069 - உடையானை - வேதனை - மடக்கு

-------------

உடையானை ஓதுமன்பர் உள்ளத்தை என்றும்

உடையானை வேங்கை உரிவை - உடையானை

வேதனை முக்கண் விமலனைப் போற்றிடில்

வேதனை தீர்ந்து விடும்.


சொற்பொருள்:

உடையான் - 1. சுவாமி; 2. உடைக்கமாட்டான்; வருத்தமாட்டான்; 3. உடை அணிந்தவன்;

வேதனை - 1. வேதப்பொருள் ஆனவனை; 2. வருத்தம்; துன்பம்;


உடையானை - சுவாமியை;

ஓதும் அன்பர் உள்ளத்தை என்றும் உடையானை - துதிக்கும் பக்தர்கள் மனத்திற்கு இதம் அளிப்பவனை; (உடைத்தல் - தகர்த்தல்; வருத்துதல்);

வேங்கை உரிவை உடையானை - புலித்தோலை உடையாகக் கட்டியவனை; (வேங்கை - புலி); (உரிவை - தோல்);

வேதனை - வேதன் என்ற நாமம் உடையவனை; (வேதன் - வேதப்பொருள் ஆனவன்; வேதம் ஓதியவன்); (சம்பந்தர் தேவாரம் - 3.20.1 - "பொழிலணி பூவணத்துறை வேதனை");

முக்கண் விமலனைப் போற்றிடில் வேதனை தீர்ந்துவிடும் - முக்கண்ணனும் தூயனும் ஆன சிவபெருமானை வழிபட்டால் துன்பம் நீங்கிவிடும்;


வி. சுப்பிரமணியன்

-------------

No comments:

Post a Comment