Friday, September 9, 2022

V.023 - மேருவன சீர்வருவ - மாலைமாற்று

2012-05-25

V.023 - மேருவன சீர்வருவ - (மாலைமாற்று)

-------------

(குறள்வெண்செந்துறை) (மாலைமாற்று - Palindrome)


மேருவன சீர்வருவ கற்க தேந்தமிழ் வால்விடைய ரேதே

தேரே யடைவில்வாழ் மிதந்தே கற்க வருவர்சீ னவருமே.


பதம் பிரித்து:

மேரு அன சீர் வருவ; கற்க, தேம் தமிழ்; வால் விடையரே தே,

தேரே; அடைவில் வாழ் மிதந்தே; கற்க வருவர் சீனவருமே.


மேரு அன சீர் வருவ - மேருமலையைப் போலப் பொன்னும் புகழும் நன்மையும் வருவன; (சீர் வருவ - நன்மை, செல்வம், புகழ்,,,, எனப் பலவகைச் சீர்களைச் சுட்டியது. எனவே, "வருவ" என்ற பன்மை வினைமுற்றுப் பெற்றது. ஒருமைபன்மை மயக்கம் என்றும் கொள்ளலாம்);

கற்க, தேம் தமிழ் - (அத்தகைய திருவைத் தரும்) இனிய தமிழைக் கற்க; (தேம் - இனிமை; தேம் தமிழ் - தேவாரம் திருவாசகம் முதலிய இனிய பாமாலைகள்);

வால் விடையரே தே, தேரே - வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவரே தெய்வம்; அறி; (வால் - வெண்மை); (விடை - இடபம்); (தே - தெய்வம்); (தேர்தல் - அறிதல்; ஆராய்தல்; சிந்தித்தல்); (- அசை);

அடைவில் வாழ் மிதந்தே - அவரைப் புகலடைந்து அவர் துணையால் (வினைக்கடலுள் ஆழாமல் / இன்பத்தில்) மிதந்து வாழ்; (அடைவு - துணை; புகலிடம்);

கற்க வருவர் சீனவருமே - அத்தகைய திருத்தமிழைக் கற்கச் சீனர் முதலிய வெளிநாட்டவரும் வருவர்; (சீனவர் - சீனம் முதலிய நாட்டினர்; உம் - எச்சவும்மை; பிறமொழி பேசும் இந்தியநாட்டினர் மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் என்ற பொருளில்);


பொழிப்புரை:

மேருமலையைப் போலப் பொன்னும் புகழும் நன்மையும் வருவன! (அத்தகைய திருவைத் தரும்) இனிய தமிழைக் கற்க! வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவரே தெய்வம்; அறி; அவரைப் புகலடைந்து அவர் துணையால் (வினைக்கடலுள் ஆழாமல் / இன்பத்தில்) மிதந்து வாழ்! அத்தகைய திருத்தமிழைக் கற்கச் சீனர் முதலிய வெளிநாட்டவரும் வருவர்!


இலக்கணக் குறிப்பு: அஃறிணைப் பன்மைப் படர்க்கை வினைமுற்று:

, - இவ்விரு விகுதியினையும் இறுதியாக உடைய மொழிகள் அஃறிணைப் பன்மைப்படர்க்கை வினைமுற்றும் குறிப்புமுற்றும் ஆம். இவற்றுள் ஆகாரம் எதிர்மறை வினைக் கண்ணது ஆமன்றி உடன்பாட்டு வினைக்கண் வாராது.


உதாரணம்: நடந்தன, நடந்த; நடவாநின்றன, நடவாநின்ற; நடப்பன, நடப்ப; கரியன, கரிய: அவை எனவும் நடந்தில, நடவாநின்றில, நடவா: அவை எனவும் வரும்.


பிற்குறிப்பு:

மாலைமாற்று - ஆங்கிலத்தில் Palindrome. ஒரு பாடலை எழுத்தெழுத்தாக முதலிலிருந்து இறுதிவரை படித்தாலும், கடையிலிருந்து முதல்வரை படித்தாலும் ஒரே செய்யுளாக அமைவது.


வி. சுப்பிரமணியன்

--------- ---------

2 comments:

  1. நல்ல முயற்சி. முயலுவதே வெற்ரி. முயற்சியில் வெற்றிபெற்றால் பெருஞ்சிறப்பு. பெருஞ்சிறப்பைப் பெற்றிருக்கிறார் சிவசிவா

    ReplyDelete