2012-07-05
V.024 - திருமால் - கண்ணப்பன் - சிலேடை
-------------
கரிய திருமேனி கையில்வில் ஏந்தி
திரிதரு பன்றியு மானான் - அரிநாடி
வான்மதி சூடிமகிழ் வண்ணம்தன் கண்ணிடந்தான்
கான்வதிகண் ணப்பன்மால் காண்.
சொற்பொருள்:
அரி - 1. சிங்கம்; / 2. சக்கரம் (Wheel, discus); ஆயுதம் (Weapon);
ஏந்தி - ஏந்துபவன்;
தருதல் - ஒரு துணைவினை;;
பன்றியுமானான் - 1. பன்றியும் மான் ஆன்; / 2. பன்றியும் ஆனான்;
நாடி - 1. நாடுபவன்; / 2. "விரும்பி" என்ற வினையெச்சம்;
வான்மதிசூடி - வானில் விளங்கும் அழகிய வெண்பிறையைச் சூடியவன்;
இடத்தல் - தோண்டுதல்;
கான் - காடு;
வதிதல் - உறைதல்; தங்குதல்;
காண் - முன்னிலை அசை;
திருமால்:
கரிய திருமேனி - கரிய நிறம் திகழும் திருமேனி உடையவன்;
கையில் வில் ஏந்தி, திரிதரு பன்றியும் ஆனான் - கையில் வில்லை ஏந்தியவனான இராமனும், திரியும் பன்றியும் ஆனவன்; (பன்றி - வராஹ அவதாரம்; அடிமுடி தேடியபொழுது பன்றிவடிவம் கொண்டவன்);
அரி நாடி வான்மதிசூடி மகிழ்வண்ணம் தன் கண் இடந்தான் - சக்கராயுதத்தைப் பெற விரும்பிச், சந்திரனைச் சூடிய சிவன் மகிழுமாறு தாமரைமலர் போலத் தன் கண்ணைப் பெயர்த்து இட்டு அர்ச்சித்தவன்; (* திருவீழிமிழலைத் தலவரலாற்று நிகழ்ச்சி);
மால் - விஷ்ணு;
கண்ணப்பன்:
கரிய திருமேனி - கரிய மேனியன்;
கையில் வில் ஏந்தி - கையில் வில் ஏந்தியவன் (வேடன்);
திரிதரு பன்றியும் மான் ஆன் அரி நாடி - திரிகின்ற பன்றியையும், மானையும், ஆனினத்தையும், சிங்கத்தையும் (வேட்டைக்கு) நாடியவன்;
வான்மதிசூடி மகிழ்வண்ணம் தன் கண் இடந்தான் - வான்பிறை சூடிய ஈசன் மகிழுமாறு தன் கண்ணை இடந்து அப்பியவன்;
கான் வதி கண்ணப்பன் - காட்டில் வாழ்ந்த கண்ணப்பன்;
பிற்குறிப்பு:
கண்ணப்பரின் நிறத்தையும் அவர் வில்லேந்தி யானை சிங்கம் முதலியவற்றை வேட்டையாடியதையும் வர்ணிக்கும் பெரியபுராணப் பாடல்:
பெரியபுராணம் - கண்ணப்பநாயனார் புராணம் - பாடல் 82
கருவரையொரு தனுவொடுவிசை கடுகியதென முனைநேர்
குரிசில்முன்விடும் அடுசரமெதிர் கொலைபயில்பொழு தவையே
பொருகரியொடு சினவரியிடை புரையறவுடல் புகலால்
வருமிரவொடு பகலணைவன எனமிடையுமவ் வனமே.
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment