2012-06-24
N.021 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2012
--------------
1) ---- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா ----
கள்ளாரும் கடிமலர்மேல் உறைவானும் கரியானும்
புள்ளேன மாய்ப்பறந்தும் புவியிடந்தும் காண்பரிய
வெள்ளேற்றன் மென்மலர்த்தாள் மிகநினைந்து மனமுருகித்
தெள்ளேணம் பாடுமணி வாசகர்சே வடிபோற்றி.
கள் ஆரும் கடி-மலர்மேல் உறைவானும் கரியானும் - தேன் நிறைந்த வாசம் மிகுந்த தாமரைமலர்மேல் உறையும் பிரமனும் திருமாலும்; (கரியான் - திருமால்);
புள் ஏனம் ஆய்ப் பறந்தும் புவி இடந்தும் காண்பரிய - பறவையும் பன்றியும் ஆகிப் பறந்து சென்றும் நிலத்தை அகழ்ந்தும் அவர்களால் காண ஒண்ணாத;
வெள்-ஏற்றன் மென்-மலர்த்தாள் மிக நினைந்து மனம் உருகித் - வெள்ளை இடபவாகனம் உடைய பெருமானது மென்மையான மலர்ப்பாதத்தை மிகவும் எண்ணி மனம் உருகி;
தெள்ளேணம் பாடு மணிவாசகர் சேவடி போற்றி - திருவாசகத்தில் ஒரு பகுதியான திருத்தெள்ளேணத்தைப் பாடியருளிய மாணிக்கவாசகரது சிவந்த திருவடிகளுக்கு வணக்கம்;
2) ---- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா ----
ஆத்தங்கொள் மனத்தாலே அரிவையொரு பாகத்தன்
பூத்துன்று சடையான்றன் பொன்னடிக்கே சென்றூதாய்
கோத்தும்பீ என்றென்று கோதில்லாத் தமிழ்மாலை
கோத்தீந்த வாதவூர்க் கோமான்றன் தாள்போற்றி.
அன்பு மிகுந்த மனத்தால் உமையொருபங்கனும், பூக்கள் செறிந்திருக்கும் சடையினனுமான ஈசன் பொற்பாதத்துக்கே சென்று ரீஙாரம் செய் அரசவண்டே என்று பல குற்றமற்ற தமிழ்ப்பாமாலைகளைப் பாடியருளிய மாணிக்கவாசரது திருவடிகளுக்கு வணக்கம்;
(ஆத்தம் - ஆப்தம் - அன்பு); (துன்றுதல் - பூக்கள் செறிதல்); (கோத்தும்பீ - அரசவண்டே; திருக்கோத்தும்பி - திருவாசகத்தில் ஒரு பகுதி); (கோத்தல் - தொடுத்தல்); (கோமான் - பெருமையிற் சிறந்தோன்; குரு);
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment