Tuesday, November 15, 2022

06.04.024 – சுந்தரர் துதி - திசைமாற்றிய திருப்பங்கள்

06.04.024 – சுந்தரர் துதி - திசைமாற்றிய திருப்பங்கள்

2013-05-31

06.04.024) சுந்தரர் துதி - திசைமாற்றிய திருப்பங்கள்

-------------------------

1) ---- (கலிவிருத்தம் - 'மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு) ----

இசைவாத்தியம் மறைமந்திரம் ஒலிபந்தரின் இடையே

அசையாவரன் முதியோனென அங்குற்றது தடுத்து

வசைவாக்குரை ஆரூரரை இசைபாடிடு மாறு

திசைமாற்றிய வரலாற்றினை நசையால்மொழி வேனே.


மறைமந்திரம் - வேதமந்திரங்கள்;

பந்தர் - பந்தல்; (ஒலிபந்தர் - வினைத்தொகை - ஒலித்த பந்தல்);

அசையா அரன் - அசலன் ஆகிய சிவபெருமான்;

அங்கு உற்று அது தடுத்து - அங்கு அடைந்து அத்திருமணத்தைத் தடுத்து;

வசை வாக்கு உரை ஆரூரரை - இழித்துப் பேசிய சுந்தரரை;

இசை - புகழ்;

நசை - அன்பு; ஆசை;


2) ---- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ----

இருநிலனை ஆள்மன்னன் செல்லும்போ தெதிரேயத்

தெருவினிலே தேருருட்டும் சிறுவன்மேல் மனம்செல்ல

அருமறையோன் மகனவனை அரசகுமா ரனுமாக்கி

இருவழக்கும் கற்பித்தான் இதுவுமரன் விளையாட்டே.


இரு வழக்கு - அரச, அந்தணப் பழக்கவொழுக்கங்கள்; (வழக்கு - பழக்கவொழுக்கம்);


3)

மணவயது வந்தெய்தச் சடங்கவியார் மகளென்ற

குணவதியைக் குலப்பெரியோர் நிச்சயித்தார் மணநாளில்

பணைமுலையாள் பங்கனொரு பல்லில்லா வடிவிற்கோல்

துணையெனக்கொண் டணைந்ததனை நிறுத்துமென வழக்கிட்டான்.


பல் இல்லா வடிவில் கோல் துணை எனக் கொண்டு அணைந்து - பற்களை இழந்த முதியவன் கோலத்தில் ஒரு கைக்கோலைத் தாங்கி அங்கு வந்தடைந்து;


4) ---- (அறுசீர் விருத்தம் - 'காய் காய் காய் காய் மா தேமா' என்ற வாய்பாடு) ----

பித்தரிவர் என்றிகழப் பெருங்குழப்பம் விளைந்ததன்றால் பேசா மல்வா

பத்திரமாய் உளதடிமை ஓலையெனக் கேட்டவர்மேல் பாயக் கண்டு

கத்தியவர் காவணத்தி னிடையோடிக் கடைசியிற்கால் களைக்க அந்தப்

பத்திரத்தை ஆரூரர் பற்றிக் கிழித்தெறிந்தார் பத்து நூறா.


பதம் பிரித்து:

"பித்தர் இவர்" என்று இகழப் பெரும் குழப்பம் விளைந்தது அன்றால்; "பேசாமல் வா;

பத்திரமாய் உளது அடிமை ஓலை" எனக் கேட்டு, அவர்மேல் பாயக் கண்டு,

கத்தி அவர் காவணத்தினிடை ஓடிக் கடைசியில் கால் களைக்க, அந்தப்

பத்திரத்தை ஆரூரர் பற்றிக் கிழித்து எறிந்தார் பத்து நூறா.


பத்திரம் - 1. பாதுகாப்பு; 2. சாசனம்/ஓலை;

காவணம் - பந்தல்;

பத்து நூறு - ஆயிரம்; (நூறா - நூறாக);


5) ---- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ----

பிச்சனென இவனென்னைப் பேசிடினும் பெரியோரே

இச்செயலே இவனடிமை எனக்கென்று காட்டியது

நிச்சயமா என்றுரைத்தார் நிலவியது குழப்பமொன்றே

அச்சமயம் ஆரூரர் அதுகண்டோர் முடிவெடுத்தார்.


பிச்சன் - பித்தன்;


6) ---- (நேரிசை வெண்பா) ----

மறையவரே உங்கள் வழக்கை முடித்தே

பிறைநுதற் பெண்ணை மணப்பேன் - பறையுநும்மூர்

என்றார்க் கியம்பினார் எம்மூர்வெண் ணெய்நல்லூர்

மன்றார்முன் சொல்வோம் வழக்கு.


பிறை நுதல் பெண் - பிறை போலத் திகழும் நெற்றியை உடைய பெண்;

பறையுநும்மூர் - பறையும் நும் ஊர் - உங்கள் ஊரைச் சொல்லுங்கள்;

மன்றார் - சபையோர்;


7) ----வெண்ணெய்நல்லூரில் -- (அறுசீர் விருத்தம் - 'விளம் விளம் காய்' என்ற அரையடி வாய்பாடு) ----

முன்னிவன் அழித்தது படியோலை

.. மூலமிங் குள்ளது சபையோரே

என்னவும் அதிலுள எழுத்தெல்லாம்

.. ஏற்புடைத் தாவென மிகவாய்ந்து

பின்னவர் அடிமையே இவனென்றார்

.. பித்தரைத் தொடர்ந்துநா வலர்கோனும்

சென்னிமேற் கரங்குவித் துடன்சென்றார்

.. சிவனுறை கோயிலை அணைந்தாரே.


"முன் இவன் அழித்தது படி-ஓலை; மூலம் இங்கு உள்ளது சபையோரே" என்னவும், அதில் உள எழுத்தெல்லாம் ஏற்புடைத்தா என மிக ஆய்ந்து, பின், "அவர் அடிமையே இவன்" என்றார்; பித்தரைத் தொடர்ந்து நாவலர்கோனும் சென்னிமேல் கரம் குவித்து உடன் சென்றார்; சிவன் உறை கோயிலை அணைந்தாரே.


படி ஓலை - பிரதி/நகல் (copy);

மிக ஆய்ந்து - மிகவும் ஆராய்ச்சி செய்து;


8) ---- (அறுசீர் விருத்தம் - 'மா கூவிளம் மா விளம் விளம் மா' என்ற வாய்பாடு) ----

வென்ற வேதியர் மறைந்தார் விண்ணிடை விடைமிசைத் தெரிந்தார்

அன்று சொன்னவா றுன்னை ஆண்டுகொண் டருளினோம் என்றார்

இன்ற மிழ்த்தொடை அஃதே எனக்கருச் சனையெனக் கேட்டு

மன்றில் ஆடியைப் பித்தா என்றெடுத் தோதினார் தொண்டர்.


இன் தமிழ்த்தொடை அஃதே எனக்கு அருச்சனை - இனிய தமிழ்ப்பாமாலை அதுவே எனக்கு அர்ச்சனை;


(பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 216:

மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம்

பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க

அற்சனை பாட்டே யாகும் ஆதலான் மண்மேல் நம்மைச்

சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்.)


9) ---- (அறுசீர் விருத்தம் - 'விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு) ----

சடையனார் மகனாய்த் தோன்றிச்

.. சடையனுக் கடிமை ஆகி

விடையினன் தோழ னாகி

.. வேட்டவர் இருவர் தம்மை

அடையவும் அவனை நாடி

.. அரும்பொருள் பெறவும் பாடிக்

கடையினில் ஆனை ஏறிக்

.. கயிலைசென் றவர்தாள் போற்றி.


10) ---- (அறுசீர் விருத்தம் - "மா மா மா மா மா மா" என்ற வாய்பாடு) ----

சின்ன வயதில் தெருவில் ஆடும் போதோர் திருப்பம்

பின்னர்த் திரும ணத்தைப் பெரியோன் நிறுத்தும் திருப்பம்

மின்னல் இடையாள் பரவை தன்னை வேட்டல் திருப்பம்

கன்னல் மொழியாள் சங்கி லியார்பால் காதல் திருப்பம்

சொன்ன சூளை மீறிக் குருடாம் துக்கம் திருப்பம்

முன்னும் பின்னும் முதல்வன் தூது சென்ற திருப்பம்

பொன்னை இழந்து பெற்ற முருகன் பூண்டித் திருப்பம்

இன்னும் உன்னில் ஊரர் வாழ்விங் கீயும் திருப்பம்.


வேட்டல் - விரும்புதல்;

கன்னல் - கரும்பு;

சூள் - சபதம்;

உன்னில் - சிந்தித்தால்; எண்ணினால்;

ஊரர் - நம்பியாரூரர்; (சுந்தரமூர்த்திநாயனார்);

இன்னும் உன்னில் ஊரர் வாழ்வு இங்கு ஈயும் திருப்பம் - சுந்தரர் திருவரலாற்றைச் சிந்தித்தால், அது அவர்களை நல்வழியில் திருப்பும்;


11) ---- (கலிவிருத்தம் - 'மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு) ----

கருப்பம்பல புகுதீவினை கழலும்திருக் கயிலைப்

பொருப்பன்புரி சடையான்அருள் புரிவான்அவன் தோழர்

திருப்பம்பல நிகழ்வாகிய திருவாழ்வது தன்னை

விருப்பங்கொடு சிந்தித்திடும் நெஞ்சத்தவர் கட்கே.


கருப்பம் - கர்ப்பம் - பிறவி;

புகுதீவினை - புகுத்தும் தீய வினை;

கழலும் - நீங்கும்;

பொருப்பு - மலை;

புரிதல் - முறுக்குறுதல்;


தம்பிரான் தோழரான நம்பியாரூரரின் பல திருப்பங்கள் நிறைந்த சரிதத்தை விரும்பிச் சிந்திக்கும் மனம் உடைய அன்பர்களுக்குக், கயிலைமலையான், முறுக்கிய சடையை உடைய சிவபெருமான் அருள்புரிவான்; பல பிறவிகளைக் கொடுக்கும் தீயவினைகள் எல்லாம் விலகும்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.04.023 – திருஞான சம்பந்தர் துதி - முந்தும் பினுமானான்

06.04.023 – திருஞான சம்பந்தர் துதி - முந்தும் பினுமானான்

2013-05-25

06.04.023 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2013

----------------------------------

1) --- (வண்ணவிருத்தம்) ---

தந்தந் .. தனதான


முந்தும் பினுமானான்

.. முண்டம் பலிதேர்வான்

கந்தங் கமழ்தாளன்

.. கண்டந் தனில்நீலன்

வந்தங் கமுதீயும்

.. மந்தந் திகழ்காழிப்

பந்தன் தமிழ்பாடப்

.. பந்தம் பொடியாமே.


முந்தும் பினும் ஆனான் - முன்னும் பின்னும் உள்ளவன்; (முந்து - முன்பு; ஆதி); (பினும் - பின்னும்); (அப்பர் தேவாரம் - 6.48.8: "முன்னவன்காண் பின்னவன்காண் ....");

முண்டம் பலி தேர்வான் - பிரமன் தலையில் பிச்சை ஏற்பவன்; (முண்டம் - தலை; கபாலம்);

கந்தம் கமழ் தாளன் - வாசம் கமழும் மலர்ப்பாதன்;

கண்டந்தனில் நீலன் - கண்டத்தில் கருமையை உடையவன் - நீலகண்டன்; (5.72.4 - "ஆலநஞ்சுண்ட கண்டத்தமர் நீலன்");

வந்து அங்கு அமுது ஈயும் - அப்பெருமான் தானே வந்து அங்கு (குளக்கரையில்) அமுதம் அளித்த;

மந்தம் திகழ் காழிப் பந்தன் தமிழ்பாடப் பந்தம் பொடி ஆமே - தென்றல் திகழும் சீகாழிப் பதியில் அவதரித்த திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத்தைப் பாடினால், நம் வினைப்பந்தம் அற்றுப்போகும். (மந்தம் - தென்றல்); (பந்தன் - ஞானசம்பந்தன்; இலக்கணக்குறிப்பு: ஒருபுடைப் பெயர்; நாம ஏகதேசம்);


2) --- (வண்ணவிருத்தம்) ---

தந்தந்த தனத்தன தந்தந்த தனத்தன

தந்தந்த தனத்தன .. தனதான

(ஓரளவு இதனை ஒத்த சந்தம் உள்ள திருப்புகழ் - "என்பந்த வினைத்தொடர் போக்கிவி சையமாகி")


அம்பொன்று தொடுக்கவொர் குன்றன்று வளைத்தவன்

.. அங்கொன்றை எருக்கிள .. மதிசூடி

பம்பம்ப மெனப்பறை சங்கங்க ளொலிப்பொடு

.. பண்டங்க நடிப்பவ .. னுமைகேள்வன்

கம்பங்கொள் சுரர்க்கருள் நஞ்சுண்ட மிடற்றினன்

.. நம்பன்ற னடித்தல .. மதுநாடிச்

சம்பந்த னுரைத்தருள் சந்தங்கொள் தமிழ்த்தொடை

.. தஞ்சிந்தை நினைப்பவர் .. வினைபோமே.


பதம் பிரித்து:

அம்பு ஒன்று தொடுக்க ஒர் குன்று அன்று வளைத்தவன்;

.. அம் கொன்றை, எருக்கு, இள மதி சூடி;

"பம் பம் பம்" எனப் பறை சங்கங்கள் ஒலிப்பொடு

.. பண்டங்கம் நடிப்பவன்; உமைகேள்வன்;

கம்பம்கொள் சுரர்க்கு அருள் நஞ்சு உண்ட மிடற்றினன்;

.. நம்பன்றன் அடித்தலம் அது நாடிச்

சம்பந்தன் உரைத்து அருள் சந்தம்கொள் தமிழ்த்தொடை

.. தம் சிந்தை நினைப்பவர் வினை போமே.


அம்பு ஒன்று தொடுக்க ஒர் குன்று அன்று வளைத்தவன் - முப்புரங்களை எரித்த நாளில் தீக்கணையை எய்ய மேருமலையை வில்லாக வளைத்தவன்; (ஒர் - ஓர் - குறுக்கல் விகாரம்);

அம் கொன்றை, எருக்கு, இள மதி சூடி - அழகிய கொன்றைமலரையும், எருக்கமலரையும், இளம்பிறையையும் அணிந்தவன்; (அம் - அழகு);

"பம் பம் பம்" எனப் பறை சங்கங்கள் ஒலிப்பொடு பண்டங்கம் நடிப்பவன், உமைகேள்வன் - 'பம் பம் பம்' என்று பல பறைவாத்தியங்களும், சங்குகளும் ஒலிக்கப் பண்டரங்கம் என்ற திருக்கூத்து இயற்றுகின்ற உமாபதி; (பண்டங்கம் - பண்டரங்கம் - சிவன் கூத்து); (சம்பந்தர் தேவாரம் - 2.6.12: "பலிதிரிந்துழல் பண்டங்கன்" - பண்டங்கன் - பாண்டரங்கம் என்னுந்திருக்கூத்தை ஆடுபவன்); (நடித்தல் - கூத்தாடுதல்);

கம்பம்கொள் சுரர்க்கு அருள் நஞ்சு உண்ட மிடற்றினன் - அஞ்சி நடுங்கிய தேவர்களுக்கு அருள்புரிந்து ஆலகால விடத்தை உண்ட நீலகண்டன்; (கம்பம் - நடுக்கம் - இங்கே அச்சத்தைச் சுட்டியது); (சுரர் - தேவர்);

நம்பன்-தன் அடித்தலம்-அது நாடிச் சம்பந்தன் உரைத்து அருள் சந்தம்கொள் தமிழ்த்தொடை தம் சிந்தை நினைப்பவர் வினை போமே - சிவபெருமான் மலர்ப்பாதத்தை நாடித் திருஞான சம்பந்தர் பாடியருளிய சந்தம் மிக்க தமிழ்ப்பாமாலைகளைத் தம் மனத்தில் எண்ணும் அடியவர்களின் பழவினைகள் எல்லாம் தீரும். (நம்பன் - சிவன் திருநாமம்); (அடித்தலம் - பாதம்); (அடித்தலமது - அடித்தலம் அது / அடித்தல மது; (மது - தேன்)); (சம்பந்தர் தேவாரம் - 3.68.11 - "எந்தையடி வந்தணுகு சந்தமொடு செந்தமிழி சைந்தபுகலிப் பந்தனுரை சிந்தைசெய வந்தவினை நைந்துபர லோகமெளிதே");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Monday, November 14, 2022

06.02.172 – விசயமங்கை - தரையடைந்து வாடுகின்ற - (வண்ணம்)

06.02.172 – விசயமங்கை - தரையடைந்து வாடுகின்ற - (வண்ணம்)

2013-04-15

06.02.172 - தரையடைந்து வாடுகின்ற - விசயமங்கை

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தந்த தான தந்த

தனன தந்த தான தந்த

தனன தந்த தான தந்த .. தனதான )


தரைய டைந்து வாடு கின்ற

...... தமியன் என்றன் நாள்மு டிந்து

...... தனுவி ழுந்து பேரி ழந்து .. தமர்காவு

.. சடலம் என்ற பேர டைந்து

...... சடச டென்று மூளு கின்ற

...... தழல டைந்த கோலம் இங்கு .. நணுகாமுன்


கரைக டந்து பாயும் அன்பு

...... கருது நெஞ்சி லேப ரந்து

...... கழலி ரண்டில் ஏர்ம லிந்த .. மலர்தூவிக்

.. கரமி ரண்டு சேர நின்று

...... கரிய நஞ்சம் ஏறு கண்ட

...... களைக ணென்று பாடு பண்பை .. அருளாயே


விரைய தென்று நீற ணிந்து

...... விழியி ரண்டில் நீர்நி னைந்து

...... மிகவும் நைந்த தூய நெஞ்சம் .. உடையாராய்

.. விரவும் அன்பர் தீமை யின்றி

...... மிடியும் இன்றி வாழு கின்ற

...... விதம்வ ரங்கள் ஈயும் அங்கை .. உடையானே


விரைவு கொண்ட மேதி அந்தன்

...... விறல ழிந்து மாள இன்பம்

...... மிகவ டைந்து மாணி தங்க .. அளிபாதா

.. விடைய மர்ந்த தேவ வண்டு

...... விரவு கின்ற சோலை துன்று

...... விசய மங்கை மேவு கின்ற .. பெருமானே.


பதம் பிரித்து:

தரை அடைந்து வாடுகின்ற

...... தமியன் என்றன் நாள் முடிந்து,

...... தனு விழுந்து, பேர் இழந்து, .. தமர் காவு

.. சடலம் என்ற பேர் அடைந்து,

...... சடசடென்று மூளுகின்ற

...... தழல் அடைந்த கோலம் இங்கு .. நணுகாமுன்,


கரை கடந்து பாயும் அன்பு

...... கருது நெஞ்சிலே பரந்து,

...... கழல் இரண்டில் ஏர் மலிந்த .. மலர் தூவிக்,

.. கரம் இரண்டு சேர நின்று,

...... "கரிய நஞ்சம் ஏறு கண்ட;

...... களைகண்" என்று பாடு பண்பை .. அருளாயே;


விரையது என்று நீறு அணிந்து,

...... விழி இரண்டில் நீர், நினைந்து

...... மிகவும் நைந்த தூய நெஞ்சம் .. உடையாராய்,

.. விரவும் அன்பர் தீமை இன்றி,

...... மிடியும் இன்றி வாழுகின்ற

...... விதம் வரங்கள் ஈயும் அங்கை .. உடையானே;


விரைவு கொண்ட மேதி அந்தன்

...... விறல் அழிந்து மாள, இன்பம்

...... மிக அடைந்து மாணி தங்க .. அளி பாதா;

.. விடை அமர்ந்த தேவ; வண்டு

...... விரவுகின்ற சோலை துன்று

...... விசயமங்கை மேவுகின்ற .. பெருமானே.


தரை அடைந்து வாடுகின்ற தமியன் என்றன் நாள் முடிந்து - பூமியில் பிறந்து கதியின்றி வருந்துகின்ற என் ஆயுள் முடிந்து; (தரை - பூமி); (தமியன் - கதியற்றவன்); (நாள் - ஆயுள்);

தனு விழுந்து, பேர் இழந்து, தமர் காவு சடலம் என்ற பேர் அடைந்து - உடல் விழுந்து, பெயரை இழந்து, சுற்றத்தினரால் சுமக்கப்படுகின்ற சடலம் என்ற பெயரை அடைந்து; (தனு - உடல்); (தமர் - சுற்றத்தார்); (காவுதல் - சுமத்தல்);

சடசடென்று மூளுகின்ற தழல் அடைந்த கோலம் இங்கு நணுகாமுன் - சடசடவென்று மூண்டு எரியும் நெருப்பை அடைந்த நிலை இங்கே என்னை அடைவதன்முன்னமே; (சடசடெனல் - ஓர் ஒலிக்குறிப்பு);


கரை கடந்து பாயும் அன்பு கருது நெஞ்சிலே பரந்து - கரையைக் கடந்து பாயும் அன்புவெள்ளம் உன்னைக் கருதும் நெஞ்சில் பரவி; (கரை - எல்லை; நீர்க்கரை); (கடத்தல் - மேற்படுதல்); (பரத்தல் - பரவுதல்);

கழல் இரண்டில் ஏர் மலிந்த மலர் தூவிக், கரம் இரண்டு சேர நின்று - இரு திருவடிகளில் அழகு மிக்க பூக்களைத் தூவி, இரு கரங்களையும் குவித்து நின்று வணங்கி; (ஏர் - அழகு); (இரண்டு - இரண்டும் - உம்மைத்தொகை);

"கரிய நஞ்சம் ஏறு கண்ட; களைகண்" என்று பாடு பண்பை அருளாயே - "கரிய விடம் ஏறிய கண்டம் உடையவனே; என் பற்றுக்கோடே" என்று உன்னைப் போற்றிப் பாடும் பக்தியை எனக்கு அருள்வாயாக; (களைகண் - பற்றுக்கோடு; களைகண் என்பது அண்மைவிளியாக வந்தது);


விரையது என்று நீறு அணிந்து - வாசனையுடைய கலவைச்சாந்து போலத் திருநீற்றைப் பூசி; (விரை - கலவைச்சாந்து; வாசனை); (சம்பந்தர் தேவாரம் - 3.54.3 - "வெந்த சாம்பல் விரையெனப் பூசியே");

விழி இரண்டில் நீர், நினைந்து மிகவும் நைந்த தூய நெஞ்சம் உடையாராய் விரவும் அன்பர் - இருகண்களில் நீர் கசிய, உன்னை நினைந்து உருகுகின்ற தூய நெஞ்சத்தை உடையவர்களாகிச் சரணடைந்த பக்தர்கள்; (விரவுதல் - அடைதல்);

தீமை இன்றி, மிடியும் இன்றி வாழுகின்ற விதம் வரங்கள் ஈயும் அங்கை உடையானே - கேடு, துன்பம், வறுமை எவையும் இன்றி இன்புற்று வாழுமாறு வரங்கள் தரும் அழகிய கையை உடையவனே; (மிடி - வறுமை; துன்பம்); (அங்கை - அழகிய கை);


விரைவு கொண்ட மேதி அந்தன் விறல் அழிந்து மாள, இன்பம் மிக அடைந்து மாணி தங்க அளி பாதா - வேகம் உடைய எருமையை வாகனமாக உடைய காலன் வலிமை அழிந்து இறக்குமாறு அவனை உதைத்து, குறைவற்ற இன்பம் அடைந்து மார்க்கண்டேயர் என்றும் வாழ அருளிய திருவ்டியினனே; (மேதி - எருமை); (அந்தன் - காலன்); (விறல் - வலிமை; வெற்றி); (மாணி - அந்தணச்சிறுவன் - மார்க்கண்டேயர்); (தங்குதல் - உளதாதல்);

விடை அமர்ந்த தேவ - எருதை வாகனமாக விரும்பிய தேவனே; (அமர்தல் - விரும்புதல்);

வண்டு விரவுகின்ற சோலை துன்று விசயமங்கை மேவுகின்ற பெருமானே - வண்டுகள் பொருந்துகின்ற சோலை சூழ்ந்த விசயமங்கை என்ற தலத்தில் எழுந்தருளிய பெருமானே; (துன்றுதல் - செறிதல்; பொருந்துதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.05.027 - சிவன் - விருந்து - மடக்கு

06.05 – பலவகை

2013-04-09

06.05.027 - சிவன் - விருந்து - மடக்கு

-------------------------------------------------------

(இன்னிசை வெண்பா)


குழம்பாய் மனமேதான் தோன்றியார் கூட்டால்

எழும்பழ வாசனையால் இங்காவி சென்று

விழும்போ துதவி இலையேஎன் னாதே

செழும்புனல் வேணியன்பேர் செப்பு.


பதம் பிரித்து:

குழம்பாய் மனமே தான்தோன்றியார் கூட்டால்,

எழும் பழ வாசனையால், இங்கு ஆவி சென்று

விழும்போது உதவி இலையே என்னாதே,

செழும்-புனல் வேணியன் பேர் செப்பு.


சொற்பொருள்:

குழம்புதல் - 1. மனம் கலங்குதல்; / 2. குழம்பு - மோர்க்குழம்பு, மிளகுக்குழம்பு, முதலிய உணவுவகை;

குழம்பாய் - 1. குழம்பமாட்டாய்; / 2. குழம்பு ஆகி;

தான் - குழம்பில் இருக்கும் வெந்த காய்கறித் துண்டம்;

தான்தோன்றி - அகம்பாவம் உடையவன்;

ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்;

கூட்டு - 1. நட்பு; / 2. காய்களால் செய்யப்படும் கூட்டு என்ற உணவுப் பதார்த்தம்;

பழ வாசனை - 1. முற்பிறவியால் இப்பிறவியில் தொடரும் பற்றுகள்; / 2. பழங்களின் மணம்;

ஆவி - 1. உயிர்; / 2. மனம்; 3. சுடசுடச் செய்த உணவிலிருந்து எழும் ஆவி, நறுமணம்;

விழுதல் - 1. சாதல்; / 2. (தட்டு முதலிய பரிகலத்தில்) வீழ்தல்;

இலை - 1. இல்லை; / 2. (உணவு இடும்) வாழையிலை முதலியன;

என்னாதே - 1. என்று சொல்லாமல்; / 2. என்று சொல்லாதே;

வேணி - சடை;


குறிப்பு: பாடலின் முதல் 3 அடிகளை இருமுறை இயைத்துப் பொருள்கொள்க;


மனமே! குழம்பு ஆகி, அதில் தான்களும் தோன்றிப், பொருந்துகின்ற கூட்டு, பழங்கள் இவற்றின் வாசனைகளால், அவற்றிலேயே நாட்டம் கொண்டு, உண்ண அவற்றை இடும்போது இலைதான் உதவும் என்று சொல்லாதே! (அப்படி எண்ணி உழலாதே)!

மனமே! நீ குழம்பமாட்டாய்! ஆணவம் மிக்கவர்கள் சகவாசத்தாலும், இப்பிறவியில் எழுகின்ற பழைய பிறவிகளின் வாசனையாலும், உழன்று, உயிர் போய் உடல் விழும்போது ஒரு துணை இல்லையே என்று சொல்லி வருந்தாமல், (இப்பொழுதே) கங்கையைச் சடையில் வைத்த சிவபெருமான் நாமத்தைச் சொல்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Monday, November 7, 2022

06.01.139 - சிவன் - முருகன் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2013-03-26 (பங்குனி உத்தரம்)

06.01.139 - சிவன் - முருகன் - சிலேடை

-------------------------------------------------------

நெற்றிக்கண் தோன்றிடும் நீர்தாங்கும் இவ்வுலகு

சுற்றிவரு மான்மலரான் தோத்திரிக்கும் - பெற்றியினன்

காவடி வேலன்பன் மாமலையாள் மைந்தனவன்

சேவற் கொடியன் சிவன்.


சொற்பொருள்:

மான்மலரான் - 1. மான் மலரான்; / 2. மால் மலரான்;

மான் - பெரியோன்; தலைவன்; (எம்மான் முதலிய பிரயோகங்களைக் காண்க);

தோத்திரித்தல் - துதித்தல்;

காவடிவேலன்பன்மா - 1. கா வடிவேலன், பல் மா; / 2. கா வடிவு ஏல் அன்பன், மா;

கா - காத்தல்;

வடி - கூர்மை;

ஏல் - ஏற்றல்;

மலையாள் - 1. மலை ஆள் (மலையை ஆளும்); / 2. மலையாள் (பார்வதி);

மைந்தன் - 1. மகன்; இளைஞன்; / 2. கணவன்;


முருகன்:

நெற்றிக்கண் தோன்றிடும், நீர் தாங்கும்; இவ்வுலகு

சுற்றிவரு மான்; மலரான் தோத்திரிக்கும் பெற்றியினன்;

கா வடிவேலன்; பல் மா மலை ஆள் மைந்தன்; அவன்

சேவற் கொடியன் சிவன்.


(ஈசனின்) நெற்றிக்கண்ணில் பொறியாகத் தோன்றியவன், கங்கையால் தாங்கப்பெற்றவன்; (கனி வேண்டி மயில்மேல் ஏறி) உலகைச் சுற்றிவந்த பெருமான்; (பிரணவப் பொருளை அறியாத பிரமனைச் சிறையில் அடைத்துப்பின்) பிரமனால் துதிக்கப்படும் பெருமையை உடையவன்;

காக்கும் கூரிய வேலை உடையவன்; பல மலைகளில் வீற்றிருக்கும் குமரன் (குன்றுதோறாடும் குமரன்); சேவற்கொடி உடைய முருகன்.


(இவ்வுலகு சுற்றிவருமான்மலரான் = "இவ்வுலகு சுற்றிவருமால்; மலரான்" என்றும் கொள்ளலாம். 'சுற்றிவருமால்' என்பதில் 'ஆல்' என்பதை அசையாகக் கொள்ளலாம்);


சிவன்:

நெற்றிக்கண் தோன்றிடும்; நீர் தாங்கும்; இவ்வுலகு

சுற்றிவரும்; மால், மலரான் தோத்திரிக்கும் பெற்றியினன்;

கா வடிவு ஏல் அன்பன்; மாமலையாள் மைந்தன்; அவன்

சேவற் கொடியன் சிவன்.


நெற்றியிற் கண் தோன்ற, முடிமேல் கங்கையைத் தாங்குவான்; உலக மக்கள் வலம்செய்து வணங்குவர்; (அடிமுடி தேடிய) திருமாலாலும் பிரமனாலும் துதிக்கப்படும் பெருமையினான்; (அன்பர் விரும்பிய வண்ணம் அவர்களைக்) காக்கும் உருவம் ஏற்கும் அன்புடையவன்; அழகிய மலைமகள் கணவன்; சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.03.059 - கையானை - ஊரான் - மடக்கு

06.03 – மடக்கு

2013-03-15

06.03.059 - கையானை - ஊரான் - மடக்கு

-------------------------

கையானை ஈருரிபோர் மெய்யானை மான்மறிக்

கையானை அன்பர்க்கெக் காலத்தும் - கையானை

ஊரான் மகிழ்ந்தானை ஒப்பிலியைப் பூந்துருத்தி

ஊரான் தனைநெஞ்சே உன்னு.


பதம் பிரித்து:

கை-யானை ஈருரி போர் மெய்யானை, மான்மறிக்

கையானை, அன்பர்க்கு எக்காலத்தும் கையானை,

ஊர்-ஆன் மகிழ்ந்தானை, ஒப்பிலியைப், பூந்துருத்தி

ஊரான் தனை, நெஞ்சே உன்னு.


கையானை - 1) துதிக்கையை உடைய ஆனை; 2) கையை உடையவனை; 2) கசத்தல் இல்லாதவனை;

ஊரான் - 1) ஊர் ஆன் - இடப வாகனம்; 2) ஊரில் உறைபவன்;

ஊர்தல் - நகர்தல்; ஏறிச் செலுத்துதல்;

ஆன் - இடபம்;

ஈர் உரி - உரித்த தோல்;

கைத்தல் - கசத்தல்;

உன்னுதல் - நினைதல்;


துதிக்கையை உடைய ஆனையின் உரித்த தோலைப் போர்க்கின்ற திருமேனியனை, மான்கன்றைக் கையில் தரிப்பவனைப், பக்தர்களுக்கு எக்காலத்திலும் கசத்தல் இல்லாதவனை ('என்றும் இனிப்பவனை'), இடபத்தை ஊர்தியாக விரும்பியவனை, ஒப்பு இல்லாதவனைத், திருப்பூந்துருத்தி என்ற ஊரில் உறைபவனை, நெஞ்சே நீ நினை!


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------