2016-01-27
M.067 - நீரானை - பாரானை - மடக்கு
-------------
நீரானை ஈருரி தாங்கு நிமலனை
நீரானை ஆட்டானைக் காவானை - நீரானைப்
பாரானை விண்ணெரிகால் ஆனானைச் சாராரைப்
பாரானை நாவேநீ பாடு.
பதம் பிரித்து:
நீர், ஆனை ஈர் உரி தாங்கு நிமலனை,
நீர் ஆனை ஆட்டு ஆனைக்காவானை, - நீரானைப்,
பாரானை, விண் எரி கால் ஆனானைச், சாராரைப்
பாரானை, நாவே நீ பாடு.
சொற்பொருள்:
நீர் - 1. கங்கை; 2. காவிரிப் புனல்; 3. புனல்;
ஆனை - யானை;
ஈர்த்தல் - உரித்தல்;
உரி - தோல்;
ஆட்டுதல் - அபிஷேகம் செய்தல்;
பார் - நிலம் (பிருதிவி) என்னும் பூதம்;
எரி - நெருப்பு;
கால் - காற்று;
சார்தல் - புகலடைதல்;
பார்த்தல் - அருளோடு நோக்குதல்;
நீர், ஆனை ஈர் உரி தாங்கு நிமலனை - கங்கையையும் யானையின் உரித்த தோலையும் தரித்த நின்மலனை;
நீர் ஆனை ஆட்டு ஆனைக்காவானை - யானை நீரால் அபிஷேகம் செய்த திருவானைக்கா ஈசனை;
நீரானைப், பாரானை, விண் எரி கால் ஆனானைச் - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்கள் ஆனவனை; (அப்பர் தேவாரம் - 6.50.1 - "போரானை ஈருரிவைப் போர்வை யானை ... பாரானை .. நெடுவெளியாய்ப் பரந்து நின்ற நீரானைக் காற்றானைத் தீயா னானை");
சாராரைப் பாரானை - தன்னைச் சரணடையாதவர்களை அருளோடு பாராதவனை ( = அவர்களுக்கு அருள் இல்லாதவனை); (அப்பர் தேவாரம் - 6.11.3 - "மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டாதானை"); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");
நாவே நீ பாடு - என் நாவே, நீ பாடுக;
வி. சுப்பிரமணியன்
-------------
No comments:
Post a Comment