2020-11-05
P.530 -
பிரம்மதேசம்
-----------
(அறுசீர்
விருத்தம் - மா
மா காய் - அரையடி
வாய்பாடு)
(அப்பர்
தேவாரம் - 4.15.1 - "பற்றற்
றார்சேர் பழம்பதியை")
(சுந்தரர்
தேவாரம் - 7.53.1 - "மருவார்
கொன்றை மதிசூடி")
(சுந்தரர்
தேவாரம் - 7.77.1 - "பரவும்
பரிசொன் றறியேன்நான்")
* பிரம்மதேசம்
கைலாசநாதர் கோயில் -
தாமிரபரணிநதியின்
வடக்கே அம்பாசமுத்திரம்
அருகுள்ள தலம்;
1)
கடலில்
எழுந்த வன்னஞ்சைக் ..
கரிய
மணிசெய் மிடறுடையான்
உடலில்
பாதி பெண்ணான .. ஒருவன்
உரிவை உடையுடையான்
கடனை
யாற்றின் தென்கரையில் ..
கவினார்
பிரம தேசத்தில்
அடையும்
அன்பர் இடர்தீர்க்கும் ..
அருளார்
கயிலைப் பெருமானே.
கடலில்
எழுந்த வன்னஞ்சைக் கரிய
மணிசெய் மிடறு உடையான் -
பாற்கடலில்
தோன்றிய கொடிய விடத்தை நீலமணி
செய்த கண்டத்தை உடையவன்;
(மிடறு
- கண்டம்);
உடலில்
பாதி பெண் ஆன ஒருவன் -
திருமேனியில்
உமையை ஒரு பாதியாக உடைய
ஒப்பற்றவன்;
உரிவை-உடை
உடையான் - தோலை
உடையாக அணிந்தவன்;
(உரிவை
- தோல்);
கடனை-ஆற்றின்
தென்கரையில் கவின் ஆர்
பிரமதேசத்தில் -
கடனை
(கடனா)
என்ற
நதியின் தெற்கே உள்ள அழகிய
பிரம்மதேசத்தில்;
அடையும்
அன்பர் இடர் தீர்க்கும்
அருளார் கயிலைப் பெருமானே
- வந்து
வழிபடும் பக்தர்களது துன்பத்தைத்
தீர்க்கின்ற அருள் மிக்க
கயிலைநாதன்; (* கைலாசநாதர்
- இத்தலத்து
இறைவன் திருநாமம்);
2)
கலந்த
அன்பர் கலிதீர்க்கும் ..
கடவுள்
இடபக் கொடியுடையான்
சலந்த
ரன்றன் உடல்கீண்ட ..
சக்க
ரத்தை மாற்கீந்தான்
சலந்த
னைத்தன் சடைக்கரந்த ..
சதுரன்
பிரம தேசத்தில்
இலந்தை
அதன்கீழ் இனிதுறையும் ..
எங்கள்
கயிலைப் பெருமானே.
கலந்த
அன்பர் கலி தீர்க்கும்
கடவுள் - மனம்
ஒன்றி வழிபடும் பக்தர்களது
துன்பத்தைத் தீர்க்கும்
கடவுள்; (கலி
- துன்பம்);
இடபக்கொடி
உடையான் - இடபச்சின்னம்
பொறித்த கொடியை உடையவன்;
சலந்தரன்தன்
உடல் கீண்ட சக்கரத்தை மாற்கு
ஈந்தான் - ஜலந்தராசுரனது
உடலைப் பிளந்த சக்கராயுதத்தைத்
திருமாலுக்கு அருளியவன்;
(கீள்தல்
- பிளத்தல்;
கிழித்தல்);
(அப்பர்
தேவாரம் - 6.76.1. - "உரம்மதித்த
சலந்தரன்தன் ஆகம் கீண்ட ஓராழி
படைத்தவன்காண்");
சலந்தனைத்
தன் சடைக் கரந்த சதுரன் -
கங்கையைத்
தன் சடையில் மறைத்த ஆற்றலுடையவன்;
(சலம்
- ஜலம்
- கங்கை);
(கரத்தல்
- ஒளித்தல்);
பிரமதேசத்தில்
இலந்தை அதன்கீழ் இனிது உறையும்
எங்கள் கயிலைப் பெருமானே
- பிரம்மதேசத்தில்
இலந்தைமரத்தின்கீழ் எழுந்தருளிய
எம் கயிலைநாதன்; (*
இலந்தை
- பிரமதேசத்தில்
தலமரம்);
3)
உருகு
மனத்து மார்க்கண்டர் ..
உயிரைக்
கொல்வேன் என்றெண்ணி
அருகு
வந்த கூற்றுவனை ..
அழித்த
அருளார் திருப்பாதன்
பெருகு
பொருநை அதன்வடபால் ..
பிரம
தேசந் தனில்மேய
கருகு
மிடறன் அடியாரைக் ..
காக்கும்
கயிலைப் பெருமானே.
உருகு
மனத்து மார்க்கண்டர் உயிரைக்
கொல்வேன் என்று எண்ணி -
உருகும்
மனத்தராய் வழிபாடு செய்த
மார்க்கண்டேயரது உயிரைக்
கொல்வேன் என்று எண்ணி;
அருகு
வந்த கூற்றுவனை அழித்த அருள்
ஆர் திருப்பாதன் -
அவரை
நெருங்கிய காலனை உதைத்து
அழித்த அருள் நிறைந்த
திருவடியினன்;
பெருகு
பொருநை-அதன்
வடபால் பிரமதேசந்தனில்
மேய - நீர்
பெருகுகின்ற தாமிரபரணி-நதியின்
வடக்கே பிரம்மதேசத்தில்
உறைகின்ற; (பொருநை
- தாமிரபரணி)
கருகு
மிடறன் - கரிய
கண்டன் - நீலகண்டன்;
அடியாரைக்
காக்கும் கயிலைப் பெருமானே
- பக்தர்களைக்
காக்கின்ற கயிலைநாதன்;
4)
புரிபுன்
சடையிற் புனல்வைத்த ..
புனிதன்
புரிநூல் திகழ்மார்பில்
கரியின்
உரிவை போர்த்துகந்தான் ..
காமன்
உடலைப் பொடிசெய்தான்
பெரிய
இஞ்சி புடைசூழும் ..
பிரம
தேசந் தனில்மேய
கரிய
கண்டன் அடியாரைக் ..
காக்கும்
கயிலைப் பெருமானே.
புரி-புன்சடையில்
புனல் வைத்த புனிதன் -
சுருண்ட
செஞ்சடையில் கங்கையைத்
தாங்கும் தூயன்;
(புரிதல்
- முறுக்குக்கொள்ளுதல்);
புரிநூல்
திகழ் மார்பில் கரியின் உரிவை
போர்த்து உகந்தான் -
முப்புரிநூல்
திகழும் மார்பில் யானைத்தோலைப்
போர்த்தவன்; (கரி
- யானை);
(உரிவை
- தோல்);
காமன்
உடலைப் பொடிசெய்தான் -
மன்மதனது
உடலைச் சாம்பலாக்கியவன்;
பெரிய
இஞ்சி புடைசூழும் பிரமதேசந்தனில்
மேய - பெரிய
மதிலால் சூழப்பெற்ற பிரம்மதேசத்தில்
உறைகின்ற; (இஞ்சி
- கோட்டைமதில்);
(கருவூர்த்
தேவர் - திருவிசைப்பா
- 9.16.1 - "இஞ்சிசூழ்
தஞ்சை இராசராசேச்சரத்
திவர்க்கே");
கரிய
கண்டன் - நீலகண்டன்;
அடியாரைக்
காக்கும் கயிலைப் பெருமானே
- பக்தர்களைக்
காக்கின்ற கயிலைநாதன்;
5)
மறையை
ஓதும் திருநாவன் ..
மழுமான்
சூலம் இவையேந்தி
பறைகள்
ஆர்த்துக் கணஞ்சூழப் ..
படுகா
னிடையே கூத்தாடி
பிறையன்
பெரிய நாயகிகோன் ..
பிரம
தேசந் தனில்மேய
இறைவன்
அன்பர் இடர்தீர்க்கும் ..
எங்கள்
கயிலைப் பெருமானே.
மறையை
ஓதும் திருநாவன் -
வேதங்களைப்
பாடியருளியவன்;
மழு
மான் சூலம் இவை ஏந்தி -
கையில்
மழு, மான்,
திரிசூலம்
இவற்றையெல்லாம் ஏந்தியவன்;
(ஏந்தி
- ஏந்தியவன்);
பறைகள்
ஆர்த்துக் கணம் சூழப் படுகானிடையே
கூத்தாடி - பூதகணங்கள்
பறைகளை ஒலித்துச் சூழச்,
சுடுகாட்டில்
கூத்து ஆடுபவன்;
(ஆர்த்தல்
- ஒலித்தல்);
(படுகான்
- படுகாடு
- சுடுகாடு);
(ஆடி
- ஆடுபவன்);
பிறையன்
- சந்திரனைச்
சூடியவன்;
பெரியநாயகி-கோன்
- பெரியநாயகி
என்ற திருநாமத்தை உடைய உமைக்குக்
கணவன்; (* பெரியநாயகி
- இத்தலத்து
இறைவி திருநாமம்);
பிரமதேசந்தனில்
மேய இறைவன் -
பிரம்மதேசத்தில்
உறைகின்ற கடவுள்;
அன்பர்
இடர் தீர்க்கும் எங்கள்
கயிலைப் பெருமானே -
பக்தர்களது
துன்பத்தைத் தீர்க்கும் எம்
கயிலைநாதன்;
6)
அறங்கள்
ஓத ஆலமர்ந்தான் ..
அரண்மூன்
றெய்த மலைவில்லி
திறங்கள்
போற்றும் அடியார்தம் ..
சிந்தை
உள்ளான் பவளம்போல்
நிறங்கொள்
மேனி மிசைவெள்ளை ..
நீறு
பூசி நிரைகொன்றை
பிறங்கு
சடையன் பெருமதில்சூழ் ..
பிரம
தேசப் பெருமானே.
அறங்கள்
ஓத ஆல் அமர்ந்தான் -
சனகாதியருக்கு
வேதப்பொருளை உபதேசிக்கக்
கல்லாலமரத்தின்கீழ்
வீற்றிருந்தவன்; (ஆல்
- ஆலமரம்);
அரண்
மூன்று எய்த மலைவில்லி -
மேருமலையை
வில்லாக ஏந்தி முப்புரங்களை
எய்தவன்;
திறங்கள்
போற்றும் அடியார்தம் சிந்தை
உள்ளான் - அவனது
பெருமைகளைப் புகழ்ந்து
வழிபடும் பக்தர்களது நெஞ்சில்
உறைபவன்; (திறம்
- தன்மை;
பெருமை);
(சுந்தரர்
தேவாரம் - 7.66.3 - "தேவதேவ
நின் திறம்பல பிதற்றி,
அகழும்
வல்வினைக்கு அஞ்சி வந்தடைந்தேன்");
பவளம்போல்
நிறங்கொள் மேனிமிசை வெள்ளை
நீறு பூசி - செம்பவளம்போல்
திகழும் செம்மேனியின்மேல்
வெண்ணீற்றைப் பூசியவன்;
நிரைகொன்றை
பிறங்கு சடையன் -
வரிசையாக
அமைந்த கொன்றைமலர்கள் திகழும்
சடையை உடையவன்;
பெருமதில்
சூழ் பிரமதேசப் பெருமானே
- பெரிய
மதிலால் சூழப்பெற்ற பிரம்மதேசத்தில்
உறைகின்ற பெருமான்;
7)
ஓத
லாகாப் பெருமையினான் ..
உம்பர்
உய்ய நஞ்சுண்டான்
காத
லாகிக் கசிந்துருகிக் ..
கழலை
வாழ்த்தும் அடியார்தம்
வாதை
தீர்த்து வானிடையே ..
வாழ்வு
நல்கும் மாதேவன்
பேதை
பங்கன் பெருமதில்சூழ் ..
பிரம
தேசப் பெருமானே.
ஓதல்
ஆகாப் பெருமையினான் -
சொல்ல
அரிய பெருமையுடையவன்;
உம்பர்
உய்ய நஞ்சு உண்டான் -
தேவர்கள்
உய்யும்பொருட்டு ஆலகாலத்தை
உண்டு அருளியவன்;
காதலாகிக்
கசிந்து உருகிக் கழலை வாழ்த்தும்
அடியார்தம் வாதை தீர்த்து
வானிடையே வாழ்வு நல்கும்
மாதேவன் - பக்தியால்
உள்ளம் உருகித் திருவடியை
வழிபடும் அன்பர்களது
பிறவிப்பிணியைத் தீர்த்துச்
சிவலோக-வாழ்வை
அளிக்கும் மகாதேவன்;
(வாதை
- துன்பம்;
வேதனை
செய்யும் நோய்);
பேதைபங்கன்
- உமைபங்கன்;
(பேதை
- பெண்);
பெருமதில்
சூழ் பிரமதேசப் பெருமானே
- பெரிய
மதிலால் சூழப்பெற்ற பிரம்மதேசத்தில்
உறைகின்ற பெருமான்;
8)
கொச்சை
மொழிகள் பலசொல்லிக் ..
குன்றைப்
பெயர்த்தான் அழவூன்றி
மெச்சிப்
பாடும் இசைக்கிரங்கி ..
வென்றி
வாள்நாள் கொடுத்தபிரான்
நச்சித்
தொழுவார் வேண்டுவதே ..
நல்கும்
நம்பன் தலையேந்திப்
பிச்சைக்
குழல்வான் பெருமதில்சூழ்
.. பிரம
தேசப் பெருமானே.
கொச்சை
மொழிகள் பல சொல்லிக் குன்றைப்
பெயர்த்தான் அழ ஊன்றி -
இழிந்த
வார்த்தைகள் பல சொல்லிக்
கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை
அவன் அழும்படி திருப்பாதவிரலை
ஊன்றி அவனை நசுக்கி;
மெச்சிப்
பாடும் இசைக்கு இரங்கி வென்றி
வாள் நாள் கொடுத்த பிரான்
- பிறகு,
அவன்
புகழ்ந்து இசை பாடி வழிபடக்
கேட்டு இரங்கி அவனுக்கு
வெற்றியுடைய சந்திரஹாஸம்
என்ற வாளையும் நீண்ட ஆயுளையும்
அளித்த தலைவன்;
(சம்பந்தர்
தேவாரம் - 3.56.8 - "கொற்ற
வாளொடு நாள் கொடுத்திட்டு
உமையொ டிருந்த பிரான்");
நச்சித்
தொழுவார் வேண்டுவதே நல்கும்
நம்பன் - விரும்பி
வழிபடுபவர்கள் வேண்டிய
வரமெல்லாம் அளிப்பவன்;
(நச்சுதல்
- விரும்புதல்);
(நம்பன்
- விரும்பத்தக்கவன்
- சிவன்
திருநாமம்); (அப்பர்
தேவாரம் - 6.23.1 - "வேண்டுவார்
வேண்டுவதே ஈவான் கண்டாய்");
தலை
ஏந்திப் பிச்சைக்கு உழல்வான்
- ஒரு
மண்டையோட்டைக் கையில் ஏந்திப்
பிச்சைக்கு உழல்பவன்;
(தலை
- மண்டையோடு);
பெருமதில்
சூழ் பிரமதேசப் பெருமானே
- பெரிய
மதிலால் சூழப்பெற்ற பிரம்மதேசத்தில்
உறைகின்ற பெருமான்;
9)
நாரா
யணனும் நான்முகனும் ..
நாணிப்
போற்றும் பரஞ்சோதி
வாரார்
முலையாள் ஒருபங்கன் ..
மணமார்
கொன்றை மாலையினான்
வாரா
வழியை நாடியடி ..
வணங்கும்
அன்பர்க் கருள்செய்யும்
பேரா
யிரத்தன் பெருமதில்சூழ் ..
பிரம
தேசப் பெருமானே.
நாராயணனும்
நான்முகனும் நாணிப் போற்றும்
பரஞ்சோதி - திருமாலும்
பிரமனும் (அடிமுடி
தேடிக் காணாராய்)
நாணிப்
போற்றி வணங்கிய மேலான ஜோதி;
வார்
ஆர் முலையாள் ஒரு பங்கன் -
கச்சு
அணிந்த முலையை உடைய உமையை
ஒரு பாகமாக உடையவன்;
(வார்
- முலைக்கச்சு);
மணம்
ஆர் கொன்றைமாலையினான் -
வாசம்
மிக்க கொன்றைமாலையை அணிந்தவன்;
வாரா
வழியை நாடி அடி வணங்கும்
அன்பர்க்கு அருள்செய்யும்
பேர்-ஆயிரத்தன்
- மீண்டும்
பிறப்பு எய்தாத வழியை விரும்பித்
திருவடியை வணங்கும் பக்தர்களுக்கு
அருள்கின்ற, ஆயிரம்
திருநாமங்களை உடையவன்;
பெருமதில்
சூழ் பிரமதேசப் பெருமானே
- பெரிய
மதிலால் சூழப்பெற்ற பிரம்மதேசத்தில்
உறைகின்ற பெருமான்;
10)
குற்றம்
மிக்க நெஞ்சினர்கள் ..
கூறும்
பொய்யை மதியேன்மின்
நெற்றி
நீற்ற ராய்த்தினமும் ..
நினைந்தால்
வற்றா வினைக்கடலும்
வற்றும்
படியின் னருள்புரிவான் ..
மலையான்
மடந்தை மணவாளன்
பெற்றம்
ஏறி பெருமதில்சூழ் ..
பிரம
தேசப் பெருமானே.
குற்றம்
மிக்க நெஞ்சினர்கள் கூறும்
பொய்யை மதியேன்மின்
- குற்றம்
மிக்க நெஞ்சர்கள் வஞ்சத்தால்
சொல்லும் பொய்களை நீங்கள்
மதிக்கவேண்டா; (ஏல்
- எதிர்மறை
ஏவல் விகுதி); (மின்
- ஏவற்பன்மை
விகுதி);
நெற்றி
நீற்றராய்த் தினமும்
நினைந்தால் வற்றா வினைக்கடலும்
வற்றும்படி இன்னருள் புரிவான்
- நெற்றியில்
திருநீற்றைப் பூசித் தினமும்
திருநாமத்தையும் திருவடியையும்
எண்ணி வணங்கினால்,
தீராத
கடல் போன்ற வினைகளும் தீரும்படி
இனிது அருள்செய்பவன்;
மலையான்-மடந்தை
மணவாளன் - மலைமகளுக்குக்
கணவன்;
பெற்றம்-ஏறி
- இடபவாகனன்;
(பெற்றம்
- எருது);
பெருமதில்
சூழ் பிரமதேசப் பெருமானே
- பெரிய
மதிலால் சூழப்பெற்ற பிரம்மதேசத்தில்
உறைகின்ற பெருமான்;
11)
பண்ணார்
தமிழால் பதிகங்கள் ..
பலவும்
பாடிப் படர்சடையாய்
விண்ணோர்
தலைவா அருளென்று ..
வேண்டும்
அன்பர் வினைதீர்ப்பான்
கண்ணார்
நுதலன் கறையாரும் ..
கண்டன்
கதிர்வெண் பிறைசூடி
பெண்ணோர்
பாகன் பெருமதில்சூழ் ..
பிரம
தேசப் பெருமானே.
பண்
ஆர் தமிழால் பதிகங்கள் பலவும்
பாடிப் - பண்
பொருந்திய தமிழால் பல பதிகங்களைப்
பாடி;
"படர்சடையாய்,
விண்ணோர்
தலைவா, அருள்"
என்று
வேண்டும் அன்பர் வினை தீர்ப்பான்
- "படரும்
சடையை உடையவனே; தேவர்கள்
தலைவனே; அருள்க"
என்று
இறைஞ்சும் பக்தர்களது வினையைத்
தீர்ப்பவன்;
கண்
ஆர் நுதலன் -
நெற்றிக்கண்ணன்;
கறை
ஆரும் கண்டன் -
நீலகண்டன்;
கதிர்-வெண்பிறை
சூடி - கதிர்களையுடைய
வெண்திங்களைச் சூடியவன்;
பெண்
ஓர் பாகன் - உமையை
ஒரு பாகமாக உடையவன்;
பெருமதில்
சூழ் பிரமதேசப் பெருமானே
- பெரிய
மதிலால் சூழப்பெற்ற பிரம்மதேசத்தில்
உறைகின்ற பெருமான்;
வி.
சுப்பிரமணியன்
-----------