Monday, April 27, 2026

P.473 - உத்தரகோசமங்கை - கோங்கு குராமலர்

2019-06-24

P. 473 - உத்தரகோசமங்கை

------------------

(கட்டளைக் கலித்துறை) (திருவிருத்தம் அமைப்பு)

(அப்பர் தேவாரம் - திருவிருத்தம் - 4.96.1 - "கோவாய் முடுகி")

(சம்பந்தர் தேவாரம் - 1.116.1 - "அவ்வினைக் கிவ்வினை")


1)

கோங்கு குராமலர் கூவிளம் சூடிக் குளிர்மதியம்

தாங்கும் சடையினன் உம்பர் தலைவன் தனிவிடையன்

ஓங்கு மதில்புடை சூழ்திரு உத்தர கோசமங்கைத்

தீங்கரும் பைத்தொழத் தீவினை ஆயின தேய்ந்தறுமே.


கோங்கு குராமலர் கூவிளம் சூடிக் குளிர்மதியம் தாங்கும் சடையினன் - கோங்கு, குரவம், வில்வம் இவற்றைச் சூடிக் குளிர்ந்த திங்களையும் சடையில் தாங்கியவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.75.8 - "கோங்கொடு செருந்தி கூவிள(ம்) மத்தம் கொன்றையும் குலாவிய செஞ்சடைச்செல்வர்");

உம்பர் தலைவன் - தேவர்கள் தலைவன்;

தனி விடையன் - ஒப்பற்ற இடபவாகனம் உடையவன்; (தனி - ஒப்பற்ற);

ஓங்கு மதில் புடைசூழ் திரு-உத்தர-கோசமங்கைத் - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;

தீங்கரும்பைத் தொழத் தீவினை ஆயின தேய்ந்து-அறுமே - இனிய கரும்பு போன்ற ஈசனைத் தொழுதால் நம் தீவினைகளெல்லாம் அற நீங்கும்; (சம்பந்தர் தேவாரம் - 2.24.3 - "செல்வா என வல்வினை தேய்ந்தறுமே");


2)

கயலன கண்ணியை வாமம் மகிழ்ந்தவன் கண்ணுதலான்

பெயர்பல ஏற்ற பெயரிலி என்னும் பெருமையினான்

உயர்பொழில் சூழ்ந்தழ கார்திரு உத்தர கோசமங்கைப்

புயலன கண்டனைப் போற்றிசெய் தார்வினை போயறுமே.


கயல் அன கண்ணியை வாமம் மகிழ்ந்தவன் - கயல்மீன் போன்ற கண்களை உடைய உமையை இடப்பாகமாக விரும்பியவன்; (அன - அன்ன - ஒத்த);

கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்; (நுதல் - நெற்றி);

பெயர் பல ஏற்ற பெயரிலி என்னும் பெருமையினான் - எண்ணற்ற திருநாமங்களை உடையவனும் பெயரில்லாதவனும் ஆன பெருமையை உடையவன்; (திருவாசகம் - திருத்தெள்ளேணம் - 8.11.1 - "ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி");

உயர்-பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு-உத்தர-கோசமங்கைப் - உயர்ந்த சோலைகளால் சூழப்பெற்ற அழகிய திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;

புயல் அன கண்டனைப் போற்றிசெய்தார் வினை போய்-றுமே - மேகம் போன்ற கரிய கண்டத்தை உடையவனை வணங்குபவர்களது வினைகள் தீரும்; (புயல் - மேகம்);


3)

மண்புனல் தீவளி வானென ஆன வடிவுடையான்

திண்மதில் மூன்றினில் தீயெழு வித்த சிலையுடையான்

ஒண்மலர் ஆர்பொழில் சூழ்திரு உத்தர கோசமங்கை

வெண்மதி சூடியைப் போற்றிய அன்பர் வினையறுமே.


மண் புனல் தீ வளி வான் என ஆன வடிவுடையான் - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் ஆன திருவுரு உடையவன்; (வளி - காற்று);

திண்-மதில் மூன்றினில் தீ எழுவித்த சிலை உடையான் - வலிய முப்புரங்களில் தீயை மூட்டி அழித்த வில்லை ஏந்தியவன்; (சிலை - வில்);

ஒண்-மலர் ஆர் பொழில் சூழ் திரு-உத்தர-கோசமங்கை - பிரகாசமான மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பெற்ற அழகிய திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;

வெண்மதி சூடியைப் போற்றிய அன்பர் வினை அறுமே - வெண்திங்களை அணிந்த பெருமானை வழிபடும் பக்தர்களது வினைகள் தீரும்.


4)

சலமலை வேணியில் தண்மதி யந்தனைத் தாங்கியவன்

மலைசிலை ஆக்கி ஒருகணை யால்மும் மதிலெரித்தான்

உலகுகள் ஈன்றொடுக் கும்பரன் உத்தர கோசமங்கைத்

தலைவன் அடியிணை தன்னைத் தொழவினை தானறுமே.


சலம் அலை வேணியில் தண்-மதியம்-தனைத் தாங்கியவன் - கங்கை அலைகின்ற (/அலைக்கின்ற) சடையில் குளிர்ந்த சந்திரனைத் தாங்கியவன்;

மலை சிலை ஆக்கி, ஒரு கணையால் மும்மதில் எரித்தான் - மேருமலையை வில்லாக்கி, ஒரு கணையால் முப்புரங்களை எய்து எரித்தவன்; (சிலை - வில்);

உலகுகள் ஈன்று ஒடுக்கும் பரன் - எல்லா உலங்களையும் படைத்து முடிவில் ஒடுக்குபவன்;

உத்தர-கோசமங்கைத் தலைவன் அடியிணை-தன்னைத் தொழ வினை-தான் அறுமே - திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற பெருமானது இரு-திருவடிகளைத் தொழுதால் வினைகள் அறும்; (சம்பந்தர் தேவாரம் - 2.24.5 - "தலைவா என வல்வினை தானறுமே");


5)

மாமுலை மங்கள நாயகி தன்மண வாளனும்பர்

தாமரைத் தாள்தொழ ஓர்கறை கண்டத்தில் தாங்கியவன்

ஓமதன் உட்பொருள் ஆயவன் உத்தர கோசமங்கைக்

கோமகன் நாமங்கள் கூறும் அடியார் குறையறுமே.


மா-முலை மங்கள நாயகி தன் மணவாளன் - அழகிய பெரிய முலைகளை உடையவளும் மங்களநாயகி என்ற திருநாமம் உடையவளுமான உமைக்குக் கணவன்; (* மங்களநாயகி - திருவுத்தர-கோசமங்கை இறைவி திருநாமம்);

உம்பர் தாமரைத்தாள் தொழ ஓர் கறை கண்டத்தில் தாங்கியவன் - தேவர்கள் மலர்ப்பாதத்தை வணங்கி வேண்ட, அவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்ட நீலகண்டன்;

ஓம்-அதன் உட்பொருள் ஆயவன் - பிரணவத்தின் உட்பொருளாக விளங்குபவன்;

உத்தர-கோசமங்கைக் கோமகன் நாமங்கள் கூறும் அடியார் குறை அறுமே - திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற பெருமானது திருப்பெயர்களை ஓதும் பக்தர்களது குறைகள் தீரும்;


6)

விண்ணவர் நாதன் மிளிர்மதி சூடிய வேணிதனில்

தண்ணதி தாங்கும் சதுரினன் மேனி தனிலொருபால்

ஒண்ணுதற் பெண்ணை உகந்தவன் உத்தர கோசமங்கைக்

கண்ணுதல் பொன்னடி கைதொழ வல்வினைக் கட்டறுமே.


விண்ணவர் நாதன் - தேவர்கள் தலைவன்;

மிளிர்-மதி சூடிய வேணிதனில் தண்-நதி தாங்கும் சதுரினன் - ஒளிவீசும் சந்திரனைச் சூடிய சடையில் குளிர்ந்த கங்கையைத் தாங்கும் வல்லவன்; (சதுர் - சாமர்த்தியம்; ஆற்றல்);

மேனிதனில் ஒருபால் ஒண்-நுதல் பெண்ணை உகந்தவன் - திருமேனியில் ஒருபக்கம் ஒளியுடைய நெற்றியை உடைய உமையைப் பாகமாக விரும்பியவன்;

உத்தர-கோசமங்கைக் கண்ணுதல் பொன்னடி கைதொழ வல்வினைக்கட்டு அறுமே - திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற நெற்றிக்கண்ணனது பொற்பாதத்தை வணங்கினால் வலிய வினைப்பந்தம் தீரும்; (அப்பர் தேவாரம் - 5.39.11 - "மயிலாடுதுறை தொழும் கரத்தினார் வினைக் கட்டறுங் காண்மினே");


7)

செம்பொற் சடைமிசைத் திங்களைச் சூடும் சிவபெருமான்

அம்பொற் கழலால் அடற்கூற் றுதைத்த அருளுடையான்

உம்பர் தலைவன் உயர்பொழில் உத்தர கோசமங்கை

நம்பன் பெயருரை நாவினர் பாவம் நசிவுறுமே.


செம்பொற்-சடைமிசைத் திங்களைச் சூடும் சிவபெருமான் - செம்பொன் போன்ற சடையின்மேல் சந்திரனை அணிந்த சிவபெருமான்;

அம்-பொற்கழலால் அடற்-கூற்று உதைத்த அருள் உடையான் - மார்க்கண்டேயருக்காக அழகிய பொன்னடியால் கொடிய வலிய கூற்றுவனை உதைத்த அருள்மிக்கவன்; (அம் - அழகு); (அடல் - கொடுமை; வலிமை);

உம்பர் தலைவன் - தேவர்கள் தலைவன்;

உயர்-பொழில் உத்தர-கோசமங்கை - உயர்ந்த சோலைகளால் சூழப்பெற்ற திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;

நம்பன் பெயர் உரை நாவினர் பாவம் நசிவுறுமே - நம்பன் என்ற திருநாமத்தை உடைய பெருமானது திருப்பெயர்களை நாக்கால் சொல்லும் அன்பர்களது பாவங்கள் அழியும்; (நம்பன் - விரும்பத்தக்கவன் - சிவன் திருநாமம்); (நசிவு - அழிவு; கேடு);


8)

கற்றைச் சடையன் கயிலையைப் பேர்த்திடக் கைகளினால்

பற்றிய வன்முடி பத்திற ஊன்றிப் பரிந்தபரன்

ஒற்றை விடையன் உயர்பொழில் உத்தர கோசமங்கைக்

கொற்றவன் நாமங்கள் கூறிய அன்பர் குறையறுமே.


கற்றைச்-சடையன் கயிலையைப் பேர்த்திடக் கைகளினால் பற்றியவன் முடி பத்து இற ஊன்றிப் பரிந்த பரன் - கற்றைச்-சடையை உடைய சிவபெருமானது கயிலைமலையைத் தன் கைகளால் பற்றிப் பெயர்க்க முயன்ற இராவணனது பத்துத்-தலைகளையும் ஒரு விரலை ஊன்றி நசுக்கிப், பின் (அவன் அழுது பாடிய பாடல்களைக் கேட்டு) இரங்கிய பரமன்;

ஒற்றை விடையன் - ஒப்பற்ற இடபவாகனத்தை உடையவன்; (ஒற்றை - ஒப்பற்ற);

உயர்-பொழில் உத்தர-கோசமங்கைக் - உயர்ந்த சோலைகளால் சூழப்பெற்ற திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;

கொற்றவன் நாமங்கள் கூறிய அன்பர் குறையறுமே - தலைவனது திருப்பெயர்களைச் சொல்லும் அன்பர்களது குறைகள் தீரும்;


9)

கரியவன் வாசக் கமலத் தயனிவர் காண்பரிய

எரியென ஓங்கிய ஈசன் பிறப்பும் இறப்புமிலான்

உரியை உடையென் றுகந்தவன் உத்தர கோசமங்கைப்

புரிசடை யான்கழல் போற்றிசெய் தார்வினை போயறுமே.


கரியவன் வாசக்-கமலத்து அயன் இவர் காண்பரிய எரி என ஓங்கிய ஈசன் - கரிய திருமாலாலும் மணம் மிக்க தாமரைப்பூவில் உறையும் பிரமனாலும் அறிய ஒண்ணாத ஜோதி என நீண்ட ஈசன்;

பிறப்பும் இறப்பும் இலான் - பிறப்பும் இறப்பும் இல்லாதவன்;

உரியை உடை என்று உகந்தவன் - தோலை ஆடையாக விரும்பிக் கட்டியவன்; (உரி - தோல்); ( உகத்தல் - மகிழ்தல்; விரும்புதல்);

உத்தர-கோசமங்கைப் - திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;

புரி-சடையான் கழல் போற்றிசெய்தார் வினை போய்-றுமே - சுருண்ட சடையை உடைய பெருமானது திருவடியை வழிபட்டவர்களது வினைகள் தீரும்; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);


10)

நித்தலும் பொய்யுரை நீசர்தம் எத்தினை நீங்கிவம்மின்

மத்தமும் கொன்றையும் வன்னியும் சூடிய வார்சடையன்

உத்தமி பங்கன் உயர்பொழில் உத்தர கோசமங்கை

அத்தன் அடிதொழும் அன்பர் வினைகள் அழிவுறுமே.


நித்தலும் பொய் உரை நீசர்தம் எத்தினை நீங்கி வம்மின் - ஓயாமல் பொய்யே பேசுகின்ற கீழோர்களது வஞ்சத்தை நீங்கி வாருங்கள்; (நித்தலும் - எந்நாளும்); (நீசர் - கீழோர்); (எத்து - வஞ்சகம்);

மத்தமும் கொன்றையும் வன்னியும் சூடிய வார்-சடையன் - ஊமத்தமலர், கொன்றைமலர், வன்னியிலை இவற்றையெல்லாம் நீண்ட சடையில் சூடியவன்; (வார்தல் - நீள்தல்);

உத்தமி பங்கன் - உமையொருபாகன்;

உயர்-பொழில் உத்தர-கோசமங்கை - உயர்ந்த சோலைகளால் சூழப்பெற்ற திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;

அத்தன் அடி தொழும் அன்பர் வினைகள் அழிவுறுமே - நம் தந்தையான சிவபெருமானது திருவடியை வணங்கும் அடியார்களது வினைகள் அழியும்.


11)

கண்ணிடந் தப்பிய வேடற் கருளிய காளத்தியான்

எண்ணிடு மார்க்கண்டர் இன்னுயிர் காத்த இருங்கழலான்

உண்விடம் ஓர்மணி செய்தவன் உத்தர கோசமங்கைப்

பெண்ணிடம் வைத்தவன் பேர்கள் நமக்குப் பெருந்துணையே.


கண் இடந்து அப்பிய வேடற்கு அருளிய காளத்தியான் - கண்ணைத் தோண்டி அப்பிய வேடனுக்கு (= கண்ணப்பருக்கு) திருக்காளத்தியில் அருள்செய்தவன்; (வேடற்கு - வேடனுக்கு);

எண்ணிடு மார்க்கண்டர் இன்னுயிர் காத்த இருங்-கழலான் - தியானித்து வழிபட்ட மார்க்கண்டேயரது இனிய உயிரைக் காத்த பெருமைமிக்க திருவடியை உடையவன்; (இருமை - பெருமை);

உண்-விடம் ஓர் மணி செய்தவன் - உண்ட நஞ்சை ஒப்பற்ற நீலமணி ஆக்கியவன்;

உத்தர-கோசமங்கைப் - திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;

பெண் இடம் வைத்தவன் பேர்கள் நமக்குப் பெரும் துணையே - உமைபங்கனது திருநாமங்கள் நமக்குப் பெரிய துணை ஆவன; (அப்பர் தேவாரம் - 4.104.6 - "நற்றுணை ஆகும் கண்டீர் அவர் நாமங்களே");

(இலக்கணக் குறிப்பு - கட்டளைக் கலித்துறையில் அடியின் ஈற்றுச்சீரில் கனிச்சீர் போல் தோன்றும் சீர்கள் சில சமயம் வரலாம். உதாரணம்: நம்பியாண்டார் நம்பி - திருத்தொண்டர் திருவந்தாதி - 11.33.9 - "ஏர்மலி மாமதில் சூழ்கரு வூரில் எறிபத்தனே");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.216 - பேரூர் - ஈயாக் குணமாறி

2019-06-12

T.216 - பேரூர் - ஈயாக் குண(ம்)மாறி

-----------------

(வண்ணவிருத்தம்;

தானாத் .. தனதான)

(தீராப் பிணிதீர - திருப்புகழ் - பேரூர்)


ஈயாக் குண(ம்)மாறி .. ஏர்வீப் பலதூவி

வாயாற் புகழ்பாடி .. வானோக் கிடுவேனோ

தீயார்க் கிலனானாய் .. தீநேத் திரதேவா

பேயார்த் திடவாடும் .. பேரூர்ப் பெருமானே.


பதம் பிரித்து:

ஈயாக் குண(ம்) மாறி, .. ஏர்-வீப் பல தூவி,

வாயாற் புகழ் பாடி, .. வான் நோக்கிடுவேனோ?

தீயார்க்கு இலன்-ஆனாய்; .. தீ-நேத்திர தேவா;

பேய் ஆர்த்திட ஆடும் .. பேரூர்ப் பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

ஈயாக் குண(ம்) மாறி, ஏர்-வீப் பல தூவி - இரப்போர்களுக்கு ஒன்றும் கொடாத குணம் நீங்கி, அழகிய பூக்கள் பலவற்றைத் (திருவடியில்) தூவி; (ஏர் - அழகு); (வீ - பூ);

வாயால் புகழ் பாடி, வான் நோக்கிடுவேனோ - என் வாயால் உன் திருப்புகழைப் பாடி, உய்யும் எண்ணத்தைப் பெறுமாறு அருள்புரிவாயாக; (அப்பர் தேவாரம் - 5.49.3 - "வானோக்கும் வழியாவது நின்மினோ" - வான் நோக்கும் வழி - பேரின்பவீட்டைக் கருதும்வழி);

தீயார்க்கு இலன் ஆனாய் - தீயவர்களுக்கு அருள் இல்லாதவனே;

தீ-நேத்திர தேவா - நெருப்பை உமிழும் நெற்றிக்கண் உடையவனே, தேவனே; (நேத்திர தேவா - 1. நேத்திரனே, தேவனே; 2. நேத்திரம் உடைய தேவனே; இருசொற்களும் வடமொழிச்சொற்கள் என்றபடியால் வல்லொற்று மிகாது புணரும்);

பேய் ஆர்த்திட ஆடும் - பேய்கள் முழவு முதலியவற்றை வாசிக்க, அங்கே ஆடுகின்ற; (ஆர்த்தல் - ஒலித்தல்);

பேரூர்ப் பெருமானே - பேரூரில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.472 - இடைமருதூர் - இருபொழுது இலைமலர்

2019-06-11

P.472 - இடைமருதூர் (திருவிடைமருதூர்)

---------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தனதன தனதன தனதன தனதன - திருவிராகம் ஒத்த அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 1.123.5 - "பிடியத னுருவுமை")


முற்குறிப்பு: படிப்போர் வசதி கருதிச் சந்தம் கெடாத இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது;

1)

இருபொழு திலைமலர் இவைகொடு தொழுபவர்

அருவினை அறவினி தருளரன் எரியன

உருவினன் அரிவையை ஒருபுறம் உடையவன்

எருதமர் இறையிடம் இடைமரு ததுவே.


பதம் பிரித்து:

இருபொழுது இலை மலர் இவைகொடு தொழுபவர்

அரு-வினை அற இனிது அருள் அரன்; எரி அன

உருவினன்; அரிவையை ஒரு-புறம் உடையவன்;

எருது அமர் இறை இடம் இடைமருது அதுவே.


காலையும் மாலையும் (வில்வம் வன்னி முதலிய) இலைகளாலும் பூக்களாலும் வழிபடும் பக்தர்களது அரிய வினை தீர இன்னருள் புரியும் ஹரன்; தீப் போன்ற செம்மேனியன்; உமையை இடப்பக்கம் பாகமாக உடையவன்; இடபத்தை வாகனமாக விரும்பும் இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்;

(எரி - தீ); (அரிவை - பெண்); (அமர்தல் - விரும்புதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.74.1 - "காடு பயில் வீடு ... வேதியர் திருந்து-பதிதான் ... தேவூர் அதுவே");


2)

நீறணி அடியவர் நினைவன அருள்துணை

தேறலர் திரிபுரம் எரிதிரு நகையினன்

ஆறர விளமதி அணிசடை முடியினன்

ஏறமர் இறையிடம் இடைமரு ததுவே.


நீறு அணி அடியவர் நினைவ அருள் துணை - திருநீற்றைப் பூசிய அடியார்கள் எண்ணிய வரங்களை அருளும் துணைவன்; (துணை - துணைவன்); (அருள்+துணை = அருடுணை என்று புணரும்; சந்தம் கெடாது);

தேறலர் திரிபுரம் எரி திரு-நகையினன் - பகைவர்களது முப்புரங்களை எரித்த சிரிப்பினன்; (தேறலர் - பகைவர்);

ஆறு, அரவு, இளமதி அணி சடை முடியினன் - கங்கை, பாம்பு, இளம்பிறை இவற்றை அணிந்த சடைமுடி உடையவன்;

ஏறு அமர் இறை இடம் இடைமருது அதுவே - இடபத்தை வாகனமாக விரும்பும் இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்; (அமர்தல் - விரும்புதல்);


3)

தொடுமலர் கொடுகழல் தொழுதெழும் அடியவர்

படுதுயர் பழவினை பறைதர அருள்பவன்

அடுபுலி அதளினன் நடுவிருள் தனில்நடம்

இடுமிறை யவனிடம் இடைமரு ததுவே.


தொடு-மலர்-கொடு கழல் தொழுதெழும் அடியவர் படுதுயர் பழவினை பறைதர அருள்பவன் - தொடுத்த மலரால் திருவடியை வழிபடும் அடியார்களது கொடிய துன்பங்களும் பழைய வினைகளும் அழிய அருள்பவன்; (தொடுமலர் - தொடுத்த பூ); (பறைதல் - அழிதல்); (தருதல் - ஒரு துணைவினை);

அடு-புலி அதளினன் - கொல்லும் இயல்புடைய புலியின் தோலை ஆடையாகக் கட்டியவன்; (அடுதல் - கொல்தல்); (அதள் - தோல்);

நடுவிருள்தனில் நடம் இடும் இறை அவன் இடம் இடைமருது அதுவே - நள்ளிருளில் கூத்து ஆடும் இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்; (இறை - இறைவன்; அவன் - பகுதிபொருள்விகுதி); (சம்பந்தர் தேவாரம் - 2.84.11 - "நடுவிருள் ஆடும் எந்தை");


4)

ஓர்ந்தவர் இருவினை ஒழியரன்; மனமது

சோர்ந்தடி தொழுதெழு சுரரவர் துயர்கெட

ஆர்ந்தவன் அருவிடம்; அயிலுறு மழுவினை

ஏந்திய இறையிடம் இடைமரு ததுவே.


ஓர்ந்தவர் இருவினை ஒழி-அரன் - தியானிக்கும் அடியார்களது இருவினையைத் தீர்க்கும் ஹரன்; (ஓர்தல் - எண்ணுதல்);

மனமது சோர்ந்து அடி தொழுதெழு சுரர்-அவர் துயர் கெட ஆர்ந்தவன் அருவிடம் - மனம் தளர்ந்து திருவடியை வணங்கிய தேவர்களது துன்பம் தீர அரிய விஷத்தை உண்டவன்; (ஆர்தல் - உண்தல்);

அயில்-உறு மழுவினை ஏந்திய இறை இடம் இடைமருது அதுவே - கூர்மையான மழுவை ஏந்திய இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்; (அயில் - கூர்மை);


5)

கரியதன் உரிபுனை பெரியவன் எளியவன்

அரியவன் எனநிகழ் அதிசயன் அலைமலி

புரிசடை மிசைமதி பொலியரன் மழுமறி

எரிதரி இறையிடம் இடைமரு ததுவே.


கரி-அதன் உரி புனை பெரியவன் - யானைத்தோலைப் போர்த்த பெரியோன்; (கரி - யானை); (உரி - தோல்);

எளியவன் அரியவன் என நிகழ் அதிசயன் - (அடியார்களல்) எளிதில் அடையப்படுபவனும் (மற்றவர்களால்) அடைய இயலாதவனும் ஆன அதிசயத்தன்மை உடையவன்; (நிகழ்தல் - விளங்குதல்);

அலை மலி புரி-சடைமிசை மதி பொலி-அரன் - (கங்கையின்) அலை மிகுந்த சுருண்ட சடையில் திங்கள் திகழ்கின்ற ஹரன்; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);

மழு மறி எரி தரி இறை இடம் இடைமருது அதுவே - மழு, மான்கன்று, தீ இவற்றை ஏந்திய இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்; (மறி - மான்கன்று); (எரி - நெருப்பு);


6)

கைதொழும் அடியவர் கருதின தருபவன்

மைதிகழ் உடலுடை மறலியை விழவுதை

செய்தவன் நணுகலர் திரிபுரம் எரியெழ

எய்தருள் இறையிடம் இடைமரு ததுவே.


கைதொழும் அடியவர் கருதின தருபவன் - வணங்கும் அடியார்கள் எண்ணிய வரங்களை அருள்பவன்;

மை திகழ் உடலுடை மறலியை விழ உதை செய்தவன் - கரிய உடலுடைய இயமனை அவன் இறந்து விழும்படி உதைத்தவன்; (மை - கருநிறம்); (மறலி - இயமன்); (விழுதல் - தரையில் விழுதல்; சாதல்); (அப்பர் தேவாரம் - 4.107.1 - "இருட்டிய மேனி ... வெங் கூற்றம் பதைப்ப உதைத்து");

நணுகலர் திரிபுரம் எரி எழ எய்து-அருள் இறை இடம் இடைமருது அதுவே - பகைவர்களது முப்புரங்களில் தீயெழும்படி ஒரு கணை எய்து அருளிய இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்; (நணுகலர் - பகைவர்);


7)

கொய்ம்மலர் கொடுதொழும் அடியவர் குறைதவிர்

செம்மலை எனவெழில் திகழ்தரும் உருவினன்

மும்மலம் இலனணி இளமதி புனைபவன்

எம்மிறை அவனிடம் இடைமரு ததுவே.


கொய்ம்-மலர்-கொடு தொழும் அடியவர் குறை தவிர் - பறித்த பூக்களால் தொழும் அடியார்களது குறைகளைத் தீர்க்கும்;

செம்-மலை என எழில் திகழ்தரும் உருவினன் - செந்நிறம் திகழும் மலை போன்ற அழகு திகழும் வடிவினன்; (தருதல் - ஒரு துணைவினை);

மும்மலம் இலன் - இயல்பாகவே மும்மலங்களும் இல்லாதவன்;

அணி இளமதி புனைபவன் - அழகிய இளந்திங்களை அணிந்தவன்;

எம் இறை அவன் இடம் இடைமருது அதுவே - எம் இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்;


8)

மலைபெயர் தசமுகன் வலிகெட நிறுவிய

மலரடி விரலினன் மணிதிகழ் மிடறினன்

அலைதிகழ் சடைமிசை அளியறை நறைமலர்

இலையணி இறையிடம் இடைமரு ததுவே.


மலை பெயர் தசமுகன் வலி கெட நிறுவிய மலரடி விரலினன் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது வலிமை அழியும்படி மலர்ப்பாத-விரல் ஒன்றை ஊன்றியவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.20.8 - "தசமுகனது கரமிருபது நெரிதர விரல் நிறுவிய கழலடி யுடையவன்");

மணி திகழ் மிடறினன் - கண்டத்தில் நீலமணி உடையவன்; (மிடறு - கண்டம்);

அலை திகழ் சடைமிசை அளி அறை நறை-மலர் இலை அணி இறை இடம் இடைமருது அதுவே - கங்கை திகழும் சடையில் வண்டுகள் ஒலிக்கும் தேன்மலர்களையும், (வில்வம் வன்னி முதலிய) இலைகளையும் அணிந்த இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்; (அளி - வண்டு); (நறை - தேன்);


9)

கண்ணனும் அழகிய கடிமலர் மிசையுறை

அண்ணலும் அயர்வுற அழலென உயர்பரன்

மண்ணினர் இமையவர் மலர்கொடு வழிபடும்

எண்ணுரு வினனிடம் இடைமரு ததுவே.


கண்ணனும் அழகிய கடி-மலர்மிசை உறை அண்ணலும் அயர்வுற அழல் என உயர்-பரன் - திருமாலும் அழகிய வாசத்தாமரைமேல் இருக்கும் பிரமனும் (அடிமுடி தேடித்) தளரும்படி ஜோதியாகி ஓங்கிய பரமன்; (கடி - வாசனை); (அழல் - தீ);

மண்ணினர் இமையவர் மலர்கொடு வழிபடும் - மண்ணுலகினரும் தேவரும் பூக்களால் வழிபாடு செய்கின்ற;

எண்-உருவினன் இடம் இடைமருது அதுவே - அஷ்டமூர்த்தம் உடைய (/ எண்ணிய வடிவங்கள் உடைய) இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்;


10)

கைதவம் உடையவர் கலதிகள் உரைபல

பொய்களை விலகுமின் நலமருள் புரிபவன்

மைதிகழ் மிடறினன் வரிசிலை கொடுபுரம்

எய்தவன் உறைவிடம் இடைமரு ததுவே.


கைதவம் உடையவர் கலதிகள் உரை பல பொய்களை விலகுமின் - வஞ்சகம் உடையவர்களும் தீயோர்களும் சொல்லும் பல பொய்களை நீங்குங்கள்; (கைதவம் - வஞ்சகம்; கபடம்); (கலதி - தீயோன்);

நலம் அருள் புரிபவன் - நன்மை அருள்பவன்;

மை திகழ் மிடறினன் - நீலகண்டன்; (மை - கறுப்பு); (மிடறு - கண்டம்);

வரி-சிலை-கொடு புரம் எய்தவன் உறைவிடம் இடைமருது அதுவே - (நாணைக்) கட்டிய வில்லால் முப்புரங்களை எய்து அழித்த இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்; (வரிதல் - கட்டுதல்); (சிலை - வில்); (சம்பந்தர் தேவாரம் - 1.120.3 - "வரிந்த வெஞ்சிலை பிடித்து அவுணர்தம் வளநகர் எரிந்தற எய்தவன்");


11)

அடைபவர் அருவினை அறவருள் புரிபவன்

விடமணி மிடறினன் விரிசடை முடியினன்

அடல்விடை உடையவன் அழகிய உமைதனை

இட(ம்)மகிழ் இறையிடம் இடைமரு ததுவே.


அடைபவர் அரு-வினை அற அருள் புரிபவன் - சரண்புகுந்தவர்களது அரிய வினை தீர அருள்செய்பவன்;

விடமணி மிடறினன் - ஆலகாலத்தை அணிந்த கண்டன்; விஷத்தால் ஆன மணி இருக்கும் கண்டன்; (விடமணி - 1. விடம் அணி; 2. விட-மணி = விஷ-மணி);

விரி-சடை முடியினன் - விரித்த சடைமுடி உடையவன்;

அடல்-விடை உடையவன் - வலிய எருதை வாகனமாக உடையவன்; (அடல் - வலிமை; போர்; வெற்றி);

அழகிய உமைதனை இட(ம்) மகிழ் இறை இடம் இடைமருது அதுவே - அழகிய உமாதேவியை இடப்பாகமாக மகிழும் இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்;


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு :

  • சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன" என்ற சந்தம்.

  • முதற்சீர் "தானன" என்றும் சில பாடல்களில் வரலாம்.

  • பாடல்தோறும் பாடலின் ஈற்றுச்சீர் "தனனா".

  • முடுகு ஓசை அமைந்த பாடல்கள். தேவாரத்தில் உள்ள திருவிராகம் ஒத்த அமைப்பு.

சம்பந்தர் தேவாரம் - 1.123.1 - "பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்"

சம்பந்தர் தேவாரம் - 1.123.5 - "பிடியத னுருவுமை கொளமிகு கரியது"


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Tuesday, March 24, 2026

P.471 - பொது - தீவினை தீர்வழி

2019-05-31

P.471 - பொது

--------------------

(குறள்வெண்பா)


முற்குறிப்பு: அடியீற்றில் இயைபுத்தொடை அமைந்த பாடல்கள்.


1)

தீவினை தீர்வழி சேவமர்ந்தான் பொற்கழல்

பூவினைத் தூவித் தொழல்.


தீவினை தீரும் வழி இடபவாகனனது பொன்னடியைப் பூக்களைத் தூவி வணங்குதல்;

(சே - எருது; அமர்தல் - விரும்புதல்; இருத்தல்; தொழல் - தொழுதல்);


2)

சேமமுற எண்ணில் தினந்தோறும் ஓரணங்கு

வாம(ம்)மகிழ்ந் தானை வணங்கு.


நற்கதி பெறவேண்டில் தினமும் உமைபங்கனை வணங்கு;

(சேமம் - க்ஷேமம்; அணங்கு - பெண்; வாமம் - இடப்பக்கம்);


3)

திண்ணிய தீவினை தீர்ந்துய்யச் செஞ்சடை

அண்ணல் அடியை அடை.


திண்ணிய - வலிய;


4)

கதிபெற வேண்டில் கரந்தை அரவு

மதிபுனைந் தானைப் பரவு.


கரந்தை - சிவகரந்தை என்ற மணமுள்ள பூண்டு; கதி - நற்கதி; பரவுதல் - துதித்தல்; (சுந்தரர் தேவாரம் - 7.76.6 - "கரந்தை கூவிளமாலை கடிமலர்க் கொன்றையும் சூடி");


5)

வாயார வாழ்த்தினார் வல்வினை தீர்ப்பவன்

பாயாறு சூடும் பவன்.


பாய் ஆறு - வானிலிருந்து பாய்ந்த கங்கை; பவன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று;


6)

ஆற்றா தழுசுரர்க்கா அம்மிடற்றில் ஓர்கறை

ஏற்றான் எருதூர் இறை.


ஆற்றாது அழு-சுரர்க்கா - (ஆலகாலத்தின் துன்பத்தைத்) தாங்க முடியாமல் அழுத தேவர்களுக்காக; (சுரர்க்கா - சுரர்க்காக; கடைக்குறை விகாரம்);

அம்-மிடற்றில் ஓர் கறை ஏற்றான் எருது ஊர் இறை - அந்த அழகிய கண்டத்தில் ஒப்பற்ற கறையை அணிந்தான் இடபவாகனம் உடைய இறைவன்; (அம் - அழகு); ( - அந்த); (மிடறு - கண்டம்); (ஓர் - ஒரு; ஒப்பற்ற); (ஊர்தல் - ஏறுதல்);


7)

புகழ்பொருள் வேண்டில் புரிசடையன் தோடு

திகழ்செவியன் செவ்வியையே பாடு.


புரி-சடையன் - முறுக்கிய சடையை உடையவன்; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);

செவ்வி - அழகு; தகுதி; தன்மை; (சம்பந்தர் தேவாரம் - 3.22.9 - "கார்வணன் நான்முகன் காணுதற்கொணாச் சீர்வணச் சேவடி செவ்வி");


8)

அரக்கன் முடிபத் தடர்த்தவன் ஓர்மான்

கரத்தில் தரித்தபெம் மான்.


அரக்கன் - இராவணன்; அடர்த்தல் - நசுக்குதல்;


9)

மாலயன் நேடி வணங்கிட நின்றபரன்

காலனைக் காய்ந்த அரன்.


காய்தல் - கோபித்தல்; அழித்தல்; நேடுதல் - தேடுதல்; காய்தல் - கோபித்தல்;


10)

நீறணியார் சொல்பொய்கள் நீங்குமின் மெய்ப்பொருள்

ஆறணிந்தான் செய்வான் அருள்.


திருநீற்றைப் பூசாதவர்கள் சொல்லும் பொய்களைப் பொருட்படுத்தாமல் நீங்குங்கள்; மெய்ப்பொருள் ஆனவன், கங்காதரன் அருள்புரிவான்;


11)

வெண்டலை மாலையினான் மேருவில்லோர் வெங்கணை

கொண்டரண்சுட் டான்தாள் துணை.


வெண்-தலை-மாலையினான் - வெண்மையான மண்டையோட்டு-மாலையை அணிந்தவன்;

மேரு-வில் ஓர் வெங்கணை கொண்டு அரண் சுட்டான் தாள் துணை - மேருமலை என்ற வில், ஒரு சுட்டெரிக்கும் அம்பு, இவற்றால் முப்புரங்களை எய்து எரித்து அழித்த சிவபெருமானது திருவடி நம் துணை;


வி. சுப்பிரமணியன்

----------- --------------