Wednesday, August 20, 2025

V.055 - மனமே நம்மை - மெல்லினப் பாட்டு

2018-06-21

V.055 - மனமே நம்மை - மெல்லினப் பாட்டு

---------------------------------

(வஞ்சிவிருத்தம் - மா மா மாங்காய் - வாய்பாடு)

முற்குறிப்பு: மெல்லின-எழுத்து ஆறும் வரப் பாடுவது மெல்லினப்பாட்டு ஆம்.


மனமே நம்மை நமனண்ணா

முனமே மஞ்ஞை மானன்ன

மனைமன் னெம்மான் நன்னாமம்

நினைநீ நன்மை நண்ணுமே.


பதம் பிரித்து:

மனமே, நம்மை நமன் நண்ணா

முனமே, மஞ்ஞை மான் அன்ன

மனை-மன் எம்மான் நன்னாமம்

நினை நீ; நன்மை நண்ணுமே.


மனமே, நம்மை நமன் நண்ணா முனமே - மனமே, நம்மை எமன் நெருங்குவதன் முன்பே; (நண்ணுதல் - நெருங்குதல்; அடைதல்);

மஞ்ஞை மான் அன்ன மனை-மன் எம்மான் நன்னாமம் நினை நீ - மயிலையும் மானையும் ஒத்த மனைவிக்குக் கணவனும், எம்பெருமானும் ஆன ஈசனது நல்ல நாமத்தை நீ நினை; (மஞ்ஞை - மயில்); (மனை - மனைவி); (மன் - கணவன்);

நன்மை நண்ணுமே - நன்மையே வந்தடையும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.439 - வெண்ணெய்நல்லூர் - திரியும் புரமூன்று

2018-06-18

P.439 - வெண்ணெய்நல்லூர்

-------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனதானா)

(தனதானன தானன தானன தானா - என்றும் நோக்கலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.32.1 - "ஓடேகல னுண்பது மூரிடு பிச்சை")

(சம்பந்தர் தேவாரம் - 2.37.1 - "சதுரம் மறைதான் துதிசெய் துவணங்கும்")


1)

திரியும் புர(ம்)மூன் றவைசெந் தழல்மூழ்க

எரியும் கணையொன் றினையே வியவீசா

விரியும் பொழில்சூழ்ந் தழகார் வெணெய்நல்லூர்க்

கரியின் னுரியாய் துயரம் களையாயே.


( --- தனதானன தானன தானன தானா ---

திரியும்புர(ம்) மூன்றவை செந்தழல் மூழ்க

எரியும்கணை ஒன்றினை ஏவிய ஈசா

விரியும்பொழில் சூழ்ந்தழ(கு) ஆர்வெணெய் நல்லூர்க்

கரியின்னுரி யாய்துய ரம்களை யாயே.)


திரியும் புரம் மூன்று அவை செந்தழல் மூழ்க எரியும் கணை ஒன்றினை ஏவிய ஈசா - திரிந்த முப்புரங்கள் செந்தீயில் முழ்கும்படி எரிகின்ற (அக்கினியை நுனியில் உடைய) ஓர் அம்பை எய்த ஈசனே;

விரியும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் வெணெய்நல்லூர்க் - விரிந்த சோலை சூழ்ந்த அழகிய திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற; (வெணெய்நல்லூர் - வெண்ணெய்நல்லூர்; இடைக்குறை விகாரம்);

கரியின் உரியாய் - யானைத்தோலைப் போர்த்தவனே; (கரியின்னுரி - னகர ஒற்று விரித்தல் விகாரம்);

துயரம் களையாயே - என் துயரங்களைத் தீர்த்து அருள்க;


2)

உடையாய் பிரமன் தலையோர் கலனாக

மடவார் இடுமுண் பலிதேர்ந் துழல்மன்னே

விடையே றியவித் தகனே வெணெய்நல்லூர்ச்

சடையாய் தமியேன் வினைசாய்த் தருளாயே.


உடையாய் பிரமன் தலை ஓர் கலனாக - பிரமனது மண்டையோட்டை ஒரு பிச்சைப் பாத்திரமாக உடையவனே; (உடையாய் - "சுவாமியே" என்று தனியாகவே பொருள்கொள்ளலும் ஆம்);

மடவார் இடும் உண்பலி தேர்ந்து உழல் மன்னே - பெண்கள் இடும் பிச்சையை ஏற்றுத் திரிகின்ற அரசனே; (உண்பலி - பிச்சை); (மன் - அரசன்);

விடை ஏறிய வித்தகனே - இடபவாகனனே;

வெணெய்நல்லூர்ச் சடையாய் - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற ஜடாதாரியே;

தமியேன் வினை சாய்த்தருளாயே - என் வினைகளை அழித்து அருள்வாயாக; (தமி - தனிமை; கதியின்மை);


3)

மடமான் அனநோக் குடையாள் மணவாளா

கடமா உரிசெய் தவனே கமழ்தார்போல்

விடமார் அரவம் புனைவாய் வெணெய்நல்லூர்

இடமா மகிழ்வாய் இடர்தீர்த் தருளாயே.


மடமான் அன நோக்கு உடையாள் மணவாளா - இளமான் போன்ற பார்வையுடைய உமைமங்கை மணவாளனே;

கடமா உரி செய்தவனே - மதநீர் பொழியும் யானையின் தோலை உரித்தவனே; (கடம் - யானையின் மதநீர்); (அப்பர் தேவாரம் - 4.8.8 - "கடமா உரித்த உடைதோல்")

கமழ் தார் போல் விடம் ஆர் அரவம் புனைவாய் - மணம் கமழும் மாலை போல விஷப்பாம்பை அணிந்தவனே;

வெணெய்நல்லூர் இடமா மகிழ்வாய் - திருவெண்ணெய்நல்லூரில் விரும்பி உறைகின்றவனே;

இடர் தீர்த்தருளாயே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


4)

பண்ணார் தமிழ்சுந் தரர்பா டிடமுன்னம்

மண்ணோர் அவையிற் பழவா வணம்நீட்டும்

விண்ணோர் தலைவா பொழில்சூழ் வெணெய்நல்லூர்க்

கண்ணார் நுதலாய் கலிதீர்த் தருளாயே.


பண் ஆர் தமிழ் சுந்தரர் பாடிட, முன்னம் மண்ணோர் அவையில் பழ-ஆவணம் நீட்டும் விண்ணோர் தலைவா - பண் நிறைந்த பாமாலைகளைச் சுந்தரர் பாடும் பொருட்டு, முன்பு ஆன்றோர்கள் கூடிய சபையில் ஒரு பழைய ஓலையை நீட்டிய தேவர் தலைவனே; (அவை - சபை); (ஆவணம் - பத்திரம்; ஓலை);

பொழில் சூழ் வெணெய்நல்லூர்க் கண் ஆர் நுதலாய் - சோலை சூழ்ந்த திருவெண்ணெய்நல்லூரில் உறையும் நெற்றிக்கண்ணனே; (நுதல் - நெற்றி);

கலி தீர்த்து அருளாயே - துன்பத்தைத் தீர்த்து அருள்க; (கலி - துன்பம்);


5)

பொல்லா விடமோர் மணிபோற் புனைகண்டா

சொல்லார் தமிழ்சுந் தரர்பா டமகிழ்ந்தாய்

வில்லாற் புரமெய் தவனே வெணெய்நல்லூர்

இல்லா உடையாய் இடர்தீர்த் தருளாயே.


பொல்லா-விடம் ஓர் மணிபோல் புனை கண்டா - கொடிய நஞ்சை ஒரு நீலமணி போலக் கண்டத்தில் அணிந்தவனே;

சொல் ஆர் தமிழ் சுந்தரர் பாட மகிழ்ந்தாய் - செஞ்சொல் நிறைந்த தமிழ்ப்பாமாலைகளைச் சுந்தரர் பாடக் கேட்டு மகிழ்ந்தவனே;

வில்லால் புரம் எய்தவனே - மேருமலை-வில்லால் ஒரு கணை எய்து முப்புரங்களை அழித்தவனே;

வெணெய்நல்லூர் இல்லா உடையாய் - திருவெண்ணெய்நல்லூரில் நீங்காது உறைகின்றவனே;

இடர் தீர்த்து அருளாயே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


6)

சுறவார் கொடியான் உடலம் சுடவல்லாய்

நெறியார் குழலிக் கிறையே நிரைகொன்றை

வெறியார் குரவம் புனைவாய் வெணெய்நல்லூர்ப்

பொறியார் அரவா அடியேன் புகல்நீயே.


சுறவு ஆர் கொடியான் உடலம் சுட வல்லாய் - மகரக்கொடியை உடைய மன்மதனது உடலை எரித்தவனே; ( சுற/சுறவு - சுறா - மகரமீன்);

நெறி ஆர் குழலிக்கு இறையே - சுருண்ட கூந்தலை உடைய உமைக்குக் கணவனே; (நெறி - சுருள்);

நிரை-கொன்றை வெறி ஆர் குரவம் புனைவாய் - கொன்றைமலரையும் மணம் மிக்க குராமலரையும் அணிந்தவனே; (நிரைத்தல் - கோத்தல்; தொடுத்தல்); (வெறி - வாசனை);

வெணெய்நல்லூர்ப் பொறி ஆர் அரவா - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்றவனே, புள்ளிகள் திகழும் பாம்பை அணிந்தவனே; (பொறி - புள்ளி);

அடியேன் புகல் நீயே - நீயே என் புகலிடம்; (சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - "சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்");


7)

வாவா எனநா வலர்கோன் தனையாண்டாய்

மூவா முதல்வா அயில்மூ விலைவேலா

மேவார் எயிலெய் தவனே வெணெய்நல்லூர்த்

தேவா சிவனே தெருள்தந் தருளாயே.


"வா வா" என நாவலர்கோன்தனை ஆண்டாய் - நாவலர்கோனை (சுந்தரரை) "வா, வந்து அடிமைசெய்" என்று சொல்லி ஆட்கொண்டவனே;

மூவா முதல்வா - மூப்பு இல்லாத முதல்வனே;

அயில் மூவிலை வேலா - கூர்மையான திரிசூலத்தை ஏந்தியவனே;

மேவார் எயில் எய்தவனே - பகைவர்களது கோட்டைகள் மூன்றையும் அம்பு எய்து அழித்தவனே; (மேவார் - பகைவர்);

வெணெய்நல்லூர்த் தேவா சிவனே - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற தேவனே, சிவபெருமானே;

தெருள் தந்து அருளாயே - எனக்குத் தெளிந்த அறிவைத் தந்து அருள்வாயாக; (தெருள் - அறிவின் தெளிவு; ஞானம்);


8)

வரைபேர்த் தவன்வாய் ஒருபத் தழவூன்றிக்

கரவா ளொடுநாள் அருளும் கயிலாயா

விரையார் பொடிமே னியினாய் வெணெய்நல்லூர்

அரையா அமலா அடியேற் கருளாயே.


வரை பேர்த்தவன் வாய் ஒரு பத்து அழ ஊன்றிக் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்து-வாய்களும் அழும்படி (ஒரு விரலை) ஊன்றி அவனை நசுக்கி; (வரை - மலை);

கர-வாளொடு நாள் அருளும் கயிலாயா - பின் (அவன் பன்னாள் பாடித் தொழக்கண்டு இரங்கி) அவனுக்கு ஒரு வாளையும் நீண்ட ஆயுளையும் அருளிய கயிலைமலையானே;

விரை ஆர் பொடி மேனியினாய் - மணம் மிக்க திருநீற்றை உடல்மேல் பூசியவனே;

வெணெய்நல்லூர் அரையா அமலா - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற தலைவனே; மலமற்றவனே;

அடியேற்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக;


9)

ஓதத் திரைமேல் துயில்மால் அயனோடிப்

பாதம் முடிகாண் பரியாய் பரமேட்டீ

வேதப் பொருளே வயல்சூழ் வெணெய்நல்லூர்ப்

போதத் துருவே அடியேன் புகல்நீயே.


ஓதத் திரைமேல் துயில் மால் அயன் ஓடிப் பாதம் முடி காண்பு அரியாய் - கடலின் அலைமேல் துயில்கொள்ளும் விஷ்ணுவும் பிரமனும் வானில் பறந்து சென்றும் நிலத்தை அகழ்ந்தும் அடிமுடி காண ஒண்ணாதவனே; (ஓதம் - கடல்); (திரை - அலை);

பரமேட்டீ - பரம்பொருளே;

வேதப்-பொருளே - வேதத்தின் பொருளாக விளங்குவனே;

வயல் சூழ் வெணெய்நல்லூர்ப் போதத்து-உருவே - வயல்கள் சூழ்ந்த திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற ஞானவடிவினனே; (போதம் - ஞானம்);

அடியேன் புகல் நீயே - நீயே என் புகலிடம்;


10)

குற்றம் பயில்நெஞ் சினர்கூற் றினைநீங்கும்

சுற்றும் திகிரிப் படைமாற் கருள்தூயன்

வெற்றிக் கொடிமேல் விடையான் வெணெய்நல்லூர்க்

கற்றைச் சடையான் கழல்நற் புணையாமே.


குற்றம் பயில் நெஞ்சினர் கூற்றினை நீங்கும் - (வேதநெறியைப் பழிக்கின்ற) வஞ்சநெஞ்சர்களது பேச்சை ஒழியுங்கள்;

சுற்றும் திகிரிப்-படை மாற்கு அருள் தூயன் - சக்கராயுதத்தைத் திருமாலுக்கு அருள்செய்த தூயவன்; (திகிரி - சக்கரம்); (படை - ஆயுதம்);

வெற்றிக்-கொடிமேல் விடையான் - இடபச்சின்னம் பொறித்த வெற்றிக்கொடியை உடையவன்;

வெணெய்நல்லூர்க் கற்றைச்-சடையான் கழல் நல்-புணை ஆமே - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற, கற்றைச் சடையை உடைய பெருமானது திருவடி (நமக்குப் பிறவிக்கடலைக் கடப்பதற்கு) நல்ல தெப்பம் ஆகும்; (புணை - தெப்பம்);


11)

எண்ணா தடியார்க் கிடர்செய் இயமன்றன்

திண்ணார் அகலத் துதைசெய் திரிசூலா

வெண்ணீ றணிவாய் விகிர்தா வெணெய்நல்லூர்

அண்ணா அருளென் றடைவார் கவலாரே.


"எண்ணாது அடியார்க்கு இடர்செய் இயமன்தன் திண் ஆர் அகலத்து உதைசெய் திரிசூலா - "யோசித்துப் பாராமல் மார்க்கண்டேயரைக் கொல்ல முயன்ற காலனது வலிமைமிக்க மார்பில் உதைத்தவனே, திரிசூலத்தை ஏந்தியவனே; (திண் - வலிமை); (அகலம் - மார்பு);

வெண்ணீறு அணிவாய், விகிர்தா - திருநீற்றைப் பூசியவனே, மாறுபட்ட செயலினனே; (விகிர்தன் - மாறுபட்ட செயலினன் - சிவன் திருநாமம்);

வெணெய்நல்லூர் அண்ணா அருள்" என்று அடைவார் கவலாரே - திருவெண்ணய்நல்லூரில் உறைகின்ற அண்ணலே அருள்வாயாக" என்று சரண்புகுந்த பக்தர்களுக்கு கவலை இல்லை; (அண்ணா - அண்ணால் என்பது, அண்ணா என மருவிற்று); (கவல்தல் - கவலைப்படுதல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Tuesday, August 19, 2025

P.438 - பொது - எழுகூற்றிருக்கை - ஒன்றாய் நின்ற

2018-06-06

P.438 - பொது - எழுகூற்றிருக்கை

-------------------------------

(நிலைமண்டில ஆசிரியப்பா - 34 அடிகள்)

(சம்பந்தர் தேவாரம் - திருவெழுகூற்றிருக்கை - 1.128 - "ஓருரு வாயினை")

(அருணகிரிநாதர் - திருவெழுகூற்றிருக்கை - "ஓருரு வாகிய")

(எழுகூற்றிருக்கை - பெயர் விளக்கத்தைக் கீழே பிற்குறிப்பில் காண்க)


1

ஒன்றாய் நின்ற ஊழி முதல்வன்

121

ஒருபுறம் பாவையை உகந்தத னாலே

இருகூ றுடைய எழில்திகழ் ஒருவன்

12321

ஒன்று மனத்தால் இருதாள் தொழுத

முப்புரி நூல்மறை முனிவர் வாழ .. 5

இருநமன் மார்பில் ஓருதை செய்தான்

1234321

ஒருபொருள் அறியா இருடிகள் ஏவு

மும்மத நால்வாய் உரித்த முக்கணன்

இருநிலத் துறைவோர்க் கொருநெறி ஆனான்

123454321

ஒருபெரு மலைதனை நட்டுத் தேவரும் .. 10

அசுரரும் இருபுறம் நின்று முந்நீர்

கடைய வருவிடம் நாற்றிசை எரிக்க

அஞ்சு சுரரெலாம் நால்வேத நாவா

மும்மலம் இல்லாய் அருளென் றிருங்கழல்

ஏத்த அவர்களைக் காத்து விடத்தை .. 15

ஒருமணி போலணி திருமிடற் றெந்தை

12345654321

ஒற்றைக் கொம்பும் இருபெருஞ் செவியும்

உடையவன் தாதை மூவரின் மேலன்

நான்முகன் அஞ்சச் சிறையில் அடைத்த

அறுமுகன் அப்பன் அமரரை அஞ்சல் .. 20

என்று நான்மறைப் புரவித் தேர்மிசை

நின்று முப்புரம் எரிய இருவரை

வில்லால் ஒருகணை தொட்ட வீரன்

1234567654321

ஒருமலை பெயர்த்த இருந்திறல் அரக்கன்

மூன்றொடு நான்கு சுரங்கொடு பாடி .. 25

அஞ்செழுத் தோத விரலூன் றிறைவன்

ஆறு சூடி ஏழிசை கூட்டி

அறுபதம் அஞ்சுரும் பார்மலர்க் கொன்றையன்

நான்முகன் மூவடி இரந்தவன் இருவரும்

நேடிய ஒருதழற் பிழம்பாய் நின்றவன் .. 30


பொய்யருக் கில்லாப் புரிசடை அண்ணல்

செய்ய மேனியன் செந்தமிழ் பாடிக்

கைதொழு வாரைக் காத்தருள் வரதன்

மைதிகழ் கண்டன் மலரடி சரணே.


பதம் பிரித்து:

ஒன்றாய் நின்ற ஊழி முதல்வன்;

ஒரு-புறம் பாவையை உகந்ததனாலே

இருகூறு உடைய எழில் திகழ் ஒருவன்;

ஒன்று-மனத்தால் இருதாள் தொழுத

முப்புரிநூல் மறை-முனிவர் வாழ .. 5

இருநமன் மார்பில் ஓர் உதை செய்தான்;

ஒரு-பொருள் அறியா இருடிகள் ஏவு

மும்மத நால்வாய் உரித்த முக்கணன்;

இருநிலத்து உறைவோர்க்கு ஒருநெறி ஆனான்;

ஒரு பெருமலைதனை நட்டுத், தேவரும் .. 10

அசுரரும் இருபுறம் நின்று, முந்நீர்

கடைய, வரு-விடம் நாற்றிசை எரிக்க,

அஞ்சு சுரரெலாம் "நால்வேத நாவா;

மும்மலம் இல்லாய்; அருள்" என்று இருங்கழல்

ஏத்த, அவர்களைக் காத்து, விடத்தை .. 15

ஒரு மணி போல் அணி திருமிடற்று-எந்தை;

ஒற்றைக் கொம்பும் இரு-பெருஞ்-செவியும்

உடையவன் தாதை; மூவரின் மேலன்;

நான்முகன் அஞ்சச் சிறையில் அடைத்த

அறுமுகன் அப்பன்; அமரரை அஞ்சல் .. 20

என்று, நான்மறைப் புரவித் தேர்மிசை

நின்று, முப்புரம் எரிய இரு-வரை-

வில்லால் ஒரு கணை தொட்ட வீரன்;

ஒரு மலை பெயர்த்த இருந்-திறல் அரக்கன்

மூன்றொடு நான்கு சுரங்கொடு பாடி .. 25

அஞ்செழுத்து ஓத விரல் ஊன்று-இறைவன்;

ஆறு சூடி; ஏழிசை கூட்டி

அறுபதம் அஞ்-சுரும்பு ஆர்-மலர்க்-கொன்றையன்;

நான்முகன் மூவடி இரந்தவன் இருவரும்

நேடிய ஒரு தழற்-பிழம்பாய் நின்றவன்; .. 30

பொய்யருக்கு இல்லாப் புரி-சடை அண்ணல்;

செய்ய மேனியன்; செந்தமிழ் பாடிக்

கைதொழுவாரைக் காத்தருள் வரதன்;

மை திகழ் கண்டன் மலரடி சரணே.


ஒன்றாய் நின்ற ஊழி முதல்வன் - ஏகன் ஆகி ஊழிகளைப் படைத்த முதல்வன்;


ஒருபுறம் பாவையை உகந்ததனாலே இருகூறு உடைய எழில் திகழ் ஒருவன் - ஒரு பக்கத்தில் உமையை விரும்பியதால், திருமேனியில் இரண்டு கூறுகளை உடைய அழகு திகழ்கின்ற ஒப்பற்றவன்; (உகத்தல் - விரும்புதல்; மகிழ்தல்); ஒருவன் - ஒப்பற்றவன்);


ஒன்று-மனத்தால் இருதாள் தொழுத முப்புரிநூல் மறை-முனிவர் வாழ இருநமன் மார்பில் ஓர் உதை செய்தான் - மனம் ஒன்றி இருதிருவடிகளை வழிபட்ட அந்தணச் சிறுவரான மார்க்கண்டேயர் சிரஞ்சீவியாக வாழும்படி, கரிய நிறத்துக் காலனது மார்பில் ஓர் உதைகொடுத்தவன்; (ஒன்றுதல் - மனம் ஒருமைப்படுதல்); (இருமை - பெருமை; கருமை);


ஒருபொருள் அறியா இருடிகள் ஏவு மும்மத நால்வாய் உரித்த முக்கணன் - மெய்ப்பொருளை அறியாத தாருகவனத்து ரிஷிகள் ஏவிய மும்மத யானையைக் கொன்று அதன் தோலை உரித்தவன், மூன்று கண்களை உடையவன்; (நால்வாய் - தொங்கும் வாய் - யானை; நால்தல் - தொங்குதல்);

இருநிலத்து உறைவோர்க்கு ஒரு நெறி ஆனான் - பூமியில் வாழும் மாந்தர்க்கு ஒப்பற்ற நெறியாகி விளங்குபவன்; (இருநிலம் - பூமி);


ஒரு பெரு-மலைதனை நட்டுத் தேவரும் அசுரரும் இருபுறம் நின்று முந்நீர் கடைய வரு-விடம் நாற்றிசை எரிக்க - ஒரு பெரிய மலையை மத்தாக ஊன்றித் தேவரும் அசுரரும் இரண்டு பக்கங்களில் நின்று கடலைக் கடைந்தபொழுது பொங்கி வந்த ஆலகாலம் நான்கு திசைகளையும் சுட்டெரிக்க; (முந்நீர் - கடல்; இங்கே, பாற்கடல்); (சம்பந்தர் தேவாரம் - 3.54.10 - "முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த ஆலாலம் உண்டு");

அஞ்சு சுரரெலாம் "நால்வேத நாவா; மும்மலம் இல்லாய்; அருள்" என்று இருங்கழல் ஏத்த - அது கண்டு அஞ்சிய தேவர்களெல்லாம், "நான்மறை ஓதிய நாவினனே; தூயனே; அருளாய்" என்று பெருமையுடைய கழல் அணிந்த திருவடியைத் துதிக்க;

அவர்களைக் காத்து விடத்தை ஒரு மணி போல் அணி திருமிடற்று எந்தை - அவர்களைக் காத்து, அந்த விஷத்தை உண்டு ஒப்பற்ற மணி போலக் கண்டத்தில் அணியும் எம் தந்தை; (மிடறு - கண்டம்);


ஒற்றைக் கொம்பும் இரு-பெருஞ்-செவியும் உடையவன் தாதை - ஒற்றைத் தந்தமும் இரண்டு பெரிய காதுகளையும் உடைய விநாயகனுக்குத் தந்தை; (தாதை - தந்தை);

மூவரின் மேலன் - மும்மூர்த்திகளினும் மேலானவன்;

நான்முகன் அஞ்சச் சிறையில் அடைத்த அறுமுகன் அப்பன் - பிரமன் அஞ்சும்படி அவனைச் சிறையிட்ட ஆறுமுகனுக்குத் தந்தை;

அமரரை அஞ்சல் என்று நான்மறைப் புரவித் தேர்மிசை நின்று முப்புரம் எரிய இரு-வரை-வில்லால் ஒரு கணை தொட்ட வீரன் - தேவர்களுக்கு அபயம் அளித்து, வேதங்களே குதிரைகளாகப் பூட்டப்பெற்ற தேரின்மேல் நின்று, முப்புரங்களையும் எரிக்க மேருமலை-வில்லால் ஓர் அம்பை எய்த வீரன்; (புரவி - குதிரை); (இருமை - பெருமை; வரை - மலை; இருமை + வரை = இருவரை = பெரிய மலை);


ஒரு மலை பெயர்த்த இருந்-திறல் அரக்கன் மூன்றொடு நான்கு சுரங்கொடு பாடி அஞ்செழுத்து ஓத விரல் ஊன்று இறைவன் - ஒப்பற்ற கயிலைமலையைப் பெயர்த்த மிகுந்த வலிமையுடைய இராவணன் ஏழுசுரம் பொருந்திய இசையோடு பாடித் திருவைந்தெழுத்தை ஓதி வணங்கும்படி அவனை ஒரு திருவடி-விரலை ஊன்றி நசுக்கிய இறைவன்;

ஆறு சூடி - கங்காதரன்;

ஏழிசை கூட்டி அறுபதம் அஞ்-சுரும்பு ஆர் மலர்க் கொன்றையன் - ஏழிசை பொருந்த வண்டுகளும் அழகிய சுரும்புகளும் ஒலிக்கின்ற கொன்றைமலரை அணிந்தவன்; (அம் - அழகு); (அறுபதம் - வண்டு); (சுரும்பு - வண்டு); (அறுபதம் அஞ்-சுரும்பு - ஒருபொருட்பன்மொழி என்றும் கொள்ளல் ஆம்); (சுந்தரர் தேவாரம் - 7.16.1 - "குரும்பைமுலை மலர்க்குழலி ... அரும்பருகே சுரும்பருவ அறுபதம் பண் பாட);

நான்முகன் மூவடி இரந்தவன் இருவரும் நேடிய ஒரு தழற்-பிழம்பாய் நின்றவன் - பிரமனும் (முன்பு) வாமன வடிவில் மூன்றடி மண் யாசித்த திருமாலும் தேடும்படி ஜோதியாகி ஓங்கி நின்றவன்;


பொய்யருக்கு இல்லாப் புரி-சடை அண்ணல் - பொய்யர்களுக்கு அருள் இல்லாதவன், முறுக்கிய சடையை உடைய தலைவன்; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);

செய்ய மேனியன் - செம்மேனியன்; (செய்ய - சிவந்த);

செந்தமிழ் பாடிக் கைதொழுவாரைக் காத்தருள் வரதன் - தேவாரம் திருவாசகம் முதலிய பாமாலைகளைப் பாடி வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களை அளித்துக் காக்கின்றவன்;

மை திகழ் கண்டன் மலரடி சரணே - நீலகண்டனது மலர்ப்பாதங்களே நம் காப்பு; நம் புகலிடம்; (சரண் - புகலிடம்; அடைக்கலம்); (சம்பந்தர் தேவாரம் - 1.10.9 - "தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே");


* குறிப்பு : இப்பாடலில் நான்முகன் என்ற ஒரே சொல் ஒரே பொருளில் இரண்டு இடங்களில் வருகின்றது. சில பாடல்களில் சில சமயம் அப்படி வருவதும் உண்டு.

உதாரணமாக: திருவாசகம் - போற்றித்திருவகவல் - 8.4:

சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி 95

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி 154

தென்னா டுடைய சிவனே போற்றி 164


பிற்குறிப்பு - எழுகூற்றிருக்கை - யாப்புக்குறிப்பு:

எழுகூற்றிருக்கை என்பது மிறைக்கவி (சித்திரகவி) வகைகளில் ஒன்று. இப்பாடலில் 1 முதல் 7 வரை உள்ள எண்கள் படிப்படியாக ஏறி இறங்கும் அமைப்பில் எண்ணலங்காரம் திகழ்கின்றது.

1, 121, 12321, ...., 1234567654321

என்று எண்களைக் குறிக்கும் சொல்லோ ஓசையோ (ஒன்று, ஒரு, ஓர், இரண்டு, இரு, ஈர், ... ஐந்து, அஞ்சு, , ... இத்யாதி) பாடலில் அதே வரிசையில் அமையுமாறு பாடப்பெறுவது. இப்படி எண்ணலங்காரம் திகழும் அடிகள் நிறைவுற்றபின் இன்னும் சில அடிகள் அமைந்து பாடல் நிறைவுறும்.

முன்னோர் அருளிய எழுகூற்றிருக்கைப் பாடல்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


V.054 - கங்காதரன் - நடுவெழுத்து அலங்காரம்

2018-06-05

V.054 - கங்காதரன் - நடுவெழுத்து அலங்காரம்

---------------------------------

(வெண்பா)


கைக்கும்காய் பண்பு கறையில்லான் கண்ணிலிதேர்

உய்க்குமொரு வன்வாகை உள்ளுளன் கைக்குழவி

ஊணிளகு வெல்லமிறை பெற்றமினம் ஒண்மலரிற்

காணறைசூழ் கங்கா தரன்.


பதம் பிரித்து:

கைக்கும் காய், பண்பு, கறை-இல்லான், கண்ணிலி, தேர்

உய்க்கும் ஒருவன், வாகை, உள் உளன்; கைக்குழவி

ஊண், இளகு வெல்லம், இறை, பெற்றம், இனம், ஒண்மலரில்

காண் நறை, சூழ் கங்காதரன்.


முற்குறிப்பு: நடுவெழுத்தலங்காரம் - இஃது ஒரு வார்த்தை விளையாட்டு. இக்காலத்தில் வரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் (crossword puzzles) போன்றது. பாடலின் முற்பகுதியில் வரும் சொற்களுக்கு அதே பொருள் தரும் மூன்றெழுத்துச் சொற்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் நடுவே உள்ள எழுத்துகளைச் சேர்த்தால் பாடலில் சுட்டப்பெறும் தலைவன் பெயர் (அல்லது சொற்றொடர்) வரும். பாடலின் பிற்பாதியில், அந்த மூன்றெழுத்துச் சொற்களில் எஞ்சியுள்ள (= முதல் & மூன்றாம் எழுத்துகளான) ஈரெழுத்துச் சொற்களுக்குப் பொருந்துமாறு சொற்கள் அமையும். பாடலின் பிற்பாதிக்கும் பாடலில் சுட்டப்பெறும் தலைவன் பெயருக்கும் தொடர்பு (பெரும்பாலும்) இராது.


கைக்கும் காய், பண்பு, கறை-இல்லான், கண்ணிலி, தேர் உய்க்கும் ஒருவன், வாகை, உள் உளன் - கசக்கின்ற காய், குணம், குற்றமற்றவன், குருடன், தேரை ஓட்டும் ஒருவன், வெற்றி, என்ற பொருள்கள் தரும் சொற்களின் உள்ளே இருக்கின்றான்;

கைக்குழவி ஊண், இளகு வெல்லம், இறை, பெற்றம், இனம், ஒண்மலரில் காண் நறை, சூழ் - கைக்குழந்தையின் உணவு, இளகிய வெல்லம், அரசன், பசு, இனம், ஒளியுடைய பூவில் இருக்கும் மணம், என்ற பொருள்கள் தரும் சொற்கள் சூழ்ந்திருக்க;

கங்காதரன் - கங்கையைச் சடையில் தரித்த சிவபெருமான்;


இந்தப் பாடலில் மறைவாக இடம்பெற்றுள்ள சொற்கள்:

கைக்கும் (கசக்கும்) காய் = பாகல் / பால் = கைக்குழந்தையின் உணவு (ஊண்);

பண்பு = பாங்கு / பாகு = இளகிய வெல்லம்;

கறை இல்லான் (குற்றமற்றவன்) = மகான் / மன் = இறை (அரசன்);

கண்ணிலி (குருடன்) = ஆதன் / ஆன் = பெற்றம் (பசு);

தேர் உய்க்கும் (ஓட்டும்) ஒருவன் = சாரதி / சாதி = இனம்;

வாகை (வெற்றி) = வென்றி / வெறி = வாசம்;


பா()ல், பா(ங்)கு, (கா)ன், ()ன், சா()தி, வெ(ன்)றி ===> கங்காதரன்.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Wednesday, August 6, 2025

N.049 - திருஞான சம்பந்தர் துதி - திருமறைக்காட்டில்

2018-05-29

N.049 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2018

----------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)


திருமறைக் காட்டில் அப்பர் .. செந்தமிழ் காப்பு நீக்கும்

அருமணிக் கதவு மீண்டும் .. அடைத்திடப் பதிகம் பாடி

அருளிய காழி மன்னர் .. ஆலவாய் அரன்வெண் ணீற்றால்

அருகரை வாதில் வென்றார் .. அணிமலர்ப் பாதம் போற்றி.


திருமறைக்காட்டில் அப்பர் செந்தமிழ் காப்பு நீக்கும் அருமணிக் கதவு மீண்டும் அடைத்திடப் பதிகம் பாடி அருளிய காழி மன்னர் - வேதாரண்யத்தில் திருநாவுக்கரசரது தேவாரம் தாழ் நீக்கிய அரிய அழகிய திருக்கதவு மீண்டும் சாத்தும்படி பதிகம் பாடியருளிய சீகாழித் தலைவர்; (காப்பு - கதவின் தாழ்); (காழி மன்னர் - சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தர்); (* திருநாவுக்கரசர் தேவாரம் - 5.10.1 - "பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ"); (* சம்பந்தர் தேவாரம் - 2.37.1 - "சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்");

ஆலவாய் அரன் வெண்ணீற்றால் அருகரை வாதில் வென்றார் - ஆலவாய் ஈசனது வெண்-திருநீற்றால் சமணரை வாதில் வென்றவர்; (அருகர் - சமணர்); (* சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - மந்திர மாவது நீறு");

அணி-மலர்ப்பாதம் போற்றி - அத்-திருஞானசம்பந்தரது அழகிய தாமரைமலர் போன்ற திருவடியை வணங்குகின்றேன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------