Tuesday, August 5, 2025

P.434 - வக்கரை (திருவக்கரை) - எழுமாலம் மிக

2018-04-21

P.434 - வக்கரை (திருவக்கரை)

---------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனனா)

(சம்பந்தர் தேவாரம் - 2.18 - "சடையாய் எனுமால்")

* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்.


1)

எழுமா ல(ம்)மிகச் சுடவே இமையோர்

தொழுதேத் திடவுண் டருளும் துணைவன்

மழுவாள் இறைவன் மகிழும் பதியாம்

செழுமா வயலார் திருவக் கரையே.


எழும் ஆலம் மிகச் சுடவே இமையோர் தொழுது ஏத்திட உண்டு அருளும் துணைவன் - (பாற்கடலில்) எழுந்த ஆலகாலம் சுட்டெரிக்கக் கண்டு, அஞ்சிய தேவர்கள் தொழுது வணங்கவும், அவர்களுக்கு இரங்கி அதனை உண்டு அருளிய துணைவன்;

மழுவாள் இறைவன் மகிழும் பதி ஆம் - மழுவை ஏந்திய இறைவன் விரும்பி உறையும் தலம் ஆவது;

செழு மா வயல் ஆர் திருவக்கரையே - வளம் மிக்க அழகிய வயல்கள் பொருந்திய திருவக்கரை;


2)

பொறியார் அரவும் புனலும் பிறையும்

வெறியார் மலரும் விரவும் சடையன்

மறியேந் திறைவன் மகிழும் பதியாம்

செறிவான் பொழில்சூழ் திருவக் கரையே.


பொறி ஆர் அரவும் புனலும் பிறையும் வெறி ஆர் மலரும் விரவும் சடையன் - புள்ளிகள் பொருந்திய பாம்பும் கங்கையும் திங்களும் வாசமலர்களும் திகழும் சடையை உடையவன்;

மறி ஏந்து இறைவன் மகிழும் பதி ஆம் - மான்கன்றை ஏந்திய இறைவன் விரும்பி உறையும் தலம் ஆவது;

செறி வான் பொழில் சூழ் திருவக்கரையே - அடர்ந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருவக்கரை;


3)

இகழ்தக் கனவன் புரிவேள் விதகர்

பகவன் படர்செஞ் சடையன் பழியில்

புகழன் சுடுவெண் பொடியன் பதியாம்

திகழும் பொழில்சூழ் திருவக் கரையே.


இகழ் தக்கன்அவன் புரி வேள்வி தகர் பகவன் - இகழ்ந்த தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்த பகவான்;

படர் செஞ்சடையன் - படரும் செஞ்சடையை உடையவன்;

பழி இல் புகழன் - குற்றமற்ற புகழை உடையவன்;

சுடு வெண் பொடியன் பதி ஆம் - சுட்ட வெண்ணீற்றைப் பூசியவன் உறையும் தலம் ஆவது;

திகழும் பொழில் சூழ் திருவக்கரையே - அழகிய சோலைகள் சூழ்ந்த திருவக்கரை;


4)

அறையார் கடல்நஞ் சமுதுண் டதனால்

கறையார் மிடறன் கயிலைக் கிறைவன்

மறையின் பொருளான் மகிழும் பதியாம்

சிறைவண் டறையும் திருவக் கரையே.


அறை ஆர் கடல் நஞ்சு அமுது உண்டதனால் கறை ஆர் மிடறன் - ஒலிக்கின்ற கடலில் தோன்றிய விடத்தை உண்டதனால் கறை பொருந்திய கண்டத்தை உடையவன்;

கயிலைக்கு இறைவன் - கயிலைநாதன்;

மறையின் பொருளான் மகிழும் பதி ஆம் - வேதப்பொருளாக விளங்குபவன் விரும்பி உறையும் தலம் ஆவது;

சிறைவண்டு அறையும் திருவக்கரையே - சிறகுகளை உடைய வண்டுகள் ரீங்காரம் செய்யும் (சோலை சூழ்ந்த) திருவக்கரை;


5)

வானோர் தொழமும் மதிலைச் சுடவே

மேனாள் ஒருவெங் கணைதொட் டபிரான்

ஆனே றுடையான் அமரும் பதியாம்

தேனார் பொழில்சூழ் திருவக் கரையே.


வானோர் தொழ மும்மதிலைச் சுடவே மேனாள் ஒரு வெங்கணை தொட்ட பிரான் - தேவர்கள் வணங்க, அவர்களுக்கு இரங்கி முப்புரங்களை அழிக்க முன்பு ஒரு தீச்சரத்தை ஏவிய தலைவன்;

ஆன்-ஏறு உடையான் அமரும் பதி ஆம் - இடபவாகனன் விரும்பி உறையும் தலம் ஆவது;

தேன் ஆர் பொழில் சூழ் திருவக்கரையே - வண்டுகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த திருவக்கரை;


6)

எண்ணா தலரம் பெறிமன் மதனைக்

கண்ணார் நுதலால் பொடிசெய் கடவுள்

பெண்ணாண் அலியாம் பெருமான் பதியாம்

திண்ணார் மதில்சூழ் திருவக் கரையே.


எண்ணாது அலர்-அம்பு எறி மன்மதனைக் கண் ஆர் நுதலால் பொடிசெய் கடவுள் - அறிவின்றி மலர்க்கணையை ஏவிய மன்மதனை நெற்றிக்கண்ணால் சாம்பலாக்கிய கடவுள்;

பெண் ஆண் அலி ஆம் பெருமான் பதி ஆம் - பெண், ஆண், அலி என்று திகழும் பெருமான் உறையும் தலம் ஆவது;

திண் ஆர் மதில் சூழ் திருவக்கரையே - வலிய மதில் சூழ்ந்த திருவக்கரை;


7)

சேவற் கொடியோன் தனையீன் றசிவன்

மாவன் னமனைச் செறுவார் கழலான்

ஆவின் பொருளைந் தினிலா டிமகிழ்

தேவன் பதியாம் திருவக் கரையே.


சேவற்கொடியோன்தனை ஈன்ற சிவன் - சேவற்கொடியை உடைய முருகனைப் பெற்ற சிவன்;

மா வன் நமனைச் செறு வார் கழலான் - பெரிய கொடிய கூற்றுவனை உதைத்து அழித்த நீள்கழல் அணிந்த திருவடியினன்;

ஆவின் பொருள் ஐந்தினில் ஆடி மகிழ் - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்துபொருள்களில் அபிஷேகம் விரும்புகின்ற;

தேவன் பதி ஆம் திருவக்கரையே - தேவன் உறையும் தலம் ஆவது திருவக்கரை;


8)

வரைதூக் கியவன் வலியைச் செறவோர்

விரலூன் றிநெரித் திசைகேள் விமலன்

இரவைப் புரிவான் இடமாம் அடியார்

திரளாய் அடையும் திருவக் கரையே.


வரை தூக்கியவன் வலியைச் செற ஓர் விரல் ஊன்றி நெரித்து இசைகேள் விமலன் - கயிலையை தூக்கிய இராவணனது வலிமையை அழிக்க ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கி, அவன் பாடிய இசையைக் கேட்ட தூயவன்; (நெரித்தல் - நசுக்குதல்);

இரவைப் புரிவான் இடம் ஆம் - பிச்சையை விரும்பியவன் உறையும் தலம் ஆவது; (இரவு - இரத்தல் - யாசித்தல்); (புரிதல் - விரும்புதல்; செய்தல்);

அடியார் திரளாய் அடையும் திருவக்கரையே - அடியார்கள் கூட்டமாக அடையும் திருவக்கரை;


9)

அலைமேல் துயில்மால் அயனார் அறியார்

தலைமேல் பிறையான் தழலாய் நிமிர்வான்

அலைமூ வரணார் அழிவெங் கணைசேர்

சிலையான் பதியாம் திருவக் கரையே.


அலைமேல் துயில் மால் அயனார் அறியார் - கடல்மேல் துயிலும் திருமாலும் பிரமனும் அறியமாட்டார்கள்;

தலைமேல் பிறையான் தழலாய் நிமிர்வான் - திங்களைச் சூடிய பெருமான் எல்லையற்ற ஜோதியாகி உயர்பவன்;

அலை மூ-அரணார் அழி வெங்கணை சேர் சிலையான் பதி ஆம் திருவக்கரையே - எங்கும் திரிந்த முப்புரத்து அசுரர்களை அழித்த சுடும் அம்பினைக் கோத்த வில்லை ஏந்தியவன் உறையும் தலம் ஆவது திருவக்கரை;


10)

தெய்வம் தெளியார் தினமும் பகரும்

பொய்யைத் தவிர்மின் புகழ்வார்க் கருள்செய்

ஐயன் சடைமேல் அரவன் தழல்போல்

செய்யன் பதியாம் திருவக் கரையே.


தெய்வம் தெளியார் தினமும் பகரும் பொய்யைத் தவிர்மின் - தெய்வத்தை அறியாதவர்கள் நாள்தோறும் சொல்லும் பொய்களை ஒழியுங்கள்;

புகழ்வார்க்கு அருள்செய் ஐயன் - துதிப்பவர்களுக்கு அருள்செய்யும் தலைவன்;

சடைமேல் அரவன் - சடையின்மேல் பாம்பை அணிந்தவன்;

தழல்போல் செய்யன் பதி ஆம் திருவக்கரையே - தீப்போன்ற செம்மேனியனான சிவபெருமான் உறையும் தலம் ஆவது திருவக்கரை;


11)

வெல்லும் விடையான் விரிசெஞ் சடையான்

பல்லில் பலிதேர் பரமன் புகழைச்

சொல்லிப் பணிவார் துயர்தீர்த் தருளும்

செல்வன் பதியாம் திருவக் கரையே.


வெல்லும் விடையான் - வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடையவன்;

விரி செஞ்சடையான் - விரிந்த செஞ்சடையை உடையவன்;

பல் இல் பலிதேர் பரமன் - பல இல்லங்களில் பிச்சைக்கு உழலும் பரமன்;

புகழைச் சொல்லிப் பணிவார் துயர் தீர்த்து அருளும் செல்வன் பதி ஆம் திருவக்கரையே - அப்பெருமானது திருப்புகழைச் சொல்லி வழிபடும் பக்தர்களது துன்பத்தைத் தீர்த்து அருள் செல்வன் உறையும் தலம் ஆவது திருவக்கரை;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment