2018-04-20
P.433 - ஆமாத்தூர் (திருவாமாத்தூர்)
---------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) (அந்தாதி)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
1)
பண்டையநாள் பார்வையற்ற பதினறுவர் தமிழ்பாடித்
தொண்டுபுரி ஆமாத்தூர்ச் சுந்தரனே தூமதியை
இண்டையென எழில்திகழ இருஞ்சடைமேற் புனைந்தவனே
வண்டறையும் கொன்றையனே வல்வினைதீர்த் தருளாயே.
பண்டையநாள் பார்வையற்ற பதினறுவர் தமிழ் பாடித் தொண்டுபுரி ஆமாத்தூர்ச் சுந்தரனே - முற்காலத்தில் பதினாறு குருடர்கள் ஓதுவார்களாகப் பணிசெய்த திருவாமாத்தூரில் உறைகின்ற அழகனே; (குறிப்பு - இஃது இத்தலத்துக் கல்வெட்டுச் செய்தி); (* அழகியநாதர் - திருவாமாத்தூர் இறைவன் திருநாமம்);
தூமதியை இண்டை என எழில் திகழ இருஞ்சடைமேல் புனைந்தவனே - தூய சந்திரனை இண்டைமாலையாக அழகுறப் பெரிய சடையின்மேல் அணிந்தவனே; (இண்டை - தலையில் அணியும் மாலைவகை); (இருமை - பெருமை);
வண்டு அறையும் கொன்றையனே - வண்டுகள் ஒலிக்கும் கொன்றைமாலையை அணிந்தவனே;
வல்வினை தீர்த்து அருளாயே - என் வலிய வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;
2)
அருளாயென் றுனையடைந்த அருமுனியைக் காத்தவனே
இருளாரு(ம்) மேதிமிசை ஏறிவரு கூற்றுதைத்தாய்
கருளாரும் கண்டத்தாய் கார்வயல்சூழ் ஆமாத்தூர்ப்
பெருமானே எனு(ம்)நாவைப் பெற்றாரின் புற்றாரே.
"அருளாய் என்று உனை அடைந்த அருமுனியைக் காத்தவனே - "அருள்வாயாக என்று உன்னைச் சரணடைந்த அரிய முனிவரான மார்க்கண்டேயரைக் காத்தவனே;
இருள் ஆரும் மேதிமிசை ஏறிவரு கூற்று உதைத்தாய் - கரிய எருமையின்மேல் ஏறிவரும் காலனை உதைத்தவனே; (இருள் - கறுப்பு); (மேதி - எருமை);
கருள் ஆரும் கண்டத்தாய் - நீலகண்டனே; (கருள் - கறுப்பு);
கார்வயல்சூழ் ஆமாத்தூர்ப் பெருமானே" எனும் நாவைப் பெற்றார் இன்புற்றாரே - நீர் நிறைந்ததும் பசுமை திகழ்வதுமான வயல்கள் சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற பெருமானே" என்று உன்னைப் போற்றும் அன்பர்கள் இன்புறுவார்கள்; (கார் - கருமை; நீர்; பசுமை);
3)
உற்றாரும் புத்திரரும் உறுதுணையென் றெண்ணாத
கற்றோர்கள் காவலெனக் கருதியடை கண்ணுதலாய்
வற்றாத அருட்கடலே வளவயல்சூழ் ஆமாத்தூர்
நற்றேவா என்றேத்து(ம்) நாவுடையார் நல்லோரே.
"உற்றாரும் புத்திரரும் உறுதுணை என்று எண்ணாத கற்றோர்கள் காவல் எனக் கருதி அடை கண்ணுதலாய் - உறவினர்களையும், புத்திரர்களையும் சிறந்த துணை என்று நினையாத கற்றவர்கள் தமக்குக் காவலாகக் கருதி அடையும் நெற்றிக்கண்ணனே;
வற்றாத அருட்கடலே - என்றும் வற்றாத தயாசாகரமே;
வளவயல் சூழ் ஆமாத்தூர் நல்-தேவா" என்று ஏத்தும் நா உடையார் நல்லோரே - வளமையான வயல்கள் சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற நல்ல தேவனே" என்று துதிக்கும் அன்பர்கள் நல்லவர்களே; (நற்றேவா - நல்+தேவா);
4)
நல்லணியா நாகத்தை நயந்தவனே நற்றமிழைச்
சொல்லடியார் துணையாகித் துயர்தீர்ப்பாய் மேருமலை
வில்லுடையாய் நெல்கரும்பு விளைவயல்சூழ் ஆமாத்தூர்
இல்லுடையாய் என்பாரை இருவினைகள் எய்தாவே.
"நல்-அணியா நாகத்தை நயந்தவனே - "நல்ல அணியாகப் பாம்பை விரும்பியவனே;
நற்றமிழைச் சொல்-அடியார் துணை ஆகித் துயர் தீர்ப்பாய் - நல்ல தமிழான தேவாரம் திருவாசகம் முதலியவற்றை ஓதி வழிபடும் அடியவர்களுக்குத் துணை ஆகி அவர்கள் துன்பத்தைத் தீர்ப்பவனே;
மேருமலை வில் உடையாய் - (முப்புரத்தைப் போர்செய்து எரித்த நாளில்) மேருமலையை வில்லாக ஏந்தியவனே;
நெல் கரும்பு விளை வயல் சூழ் ஆமாத்தூர் இல் உடையாய்" என்பாரை இருவினைகள் எய்தாவே - நெல்லும் கரும்பும் விளைகின்ற வயல்கள் சூழ்ந்த திருவாமாத்தூரில் என்றும் உறைபவனே" என்று துதிக்கும் பக்தர்களை இருவினையும் அடையா; (இல் - உறைவிடம்); (சம்பந்தர் தேவாரம் - 2.11.1 - "காழியே கோயிலாம் இல்லானை");
5)
எய்திமலர் அம்பொன்றை எய்தமதன் உடல்நீறு
செய்தநுதற் கண்ணினனே திசைமுகன்தன் சிரமொன்றைக்
கொய்தவனே கொக்கிரைதேர் குளிர்வயல்சூழ் ஆமாத்தூர்
மைதிகழ்கண் டாவென்று வாழ்த்தியவர் வாழ்வாரே.
"எய்தி மலர் அம்பு ஒன்றை எய்த மதன் உடல் நீறு செய்த நுதற் கண்ணினனே - நெருங்கி வந்து ஒரு மலர்க்கணையை ஏவிய மன்மதனது உடலைச் சாம்பல் ஆக்கிய நெற்றிக்கண்ணனே;
திசைமுகன்தன் சிரம் ஒன்றைக் கொய்தவனே - பிரமனது தலைகளில் ஒன்றைக் கிள்ளியவனே;
கொக்கு இரைதேர் குளிர்-வயல் சூழ் ஆமாத்தூர் மை திகழ் கண்டா" என்று வாழ்த்தியவர் வாழ்வாரே - கொக்குகள் இரைதேரும் குளிர்ந்த வயல் சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற நீலகண்டனே" என்று வாழ்த்தும் பக்தர்கள் சிறந்து வாழ்வார்கள்;
6)
வாணாளில் மலரடியை வாழ்த்தாத நாளெல்லாம்
வீணாளென் றுணர்ந்துதொழு விருப்பினர்தம் கருத்தினனே
பூணாகப் பாம்பணிந்தாய் பொழில்சூழ்ந்த ஆமாத்தூர்க்
கோணாத தேவவெனக் கும்பிட்டார் கவலாரே.
"வாழ்நாளில் மலரடியை வாழ்த்தாத நாளெல்லாம் வீண்-நாள் என்று உணர்ந்து தொழு விருப்பினர்தம் கருத்தினனே - "தம் வாழ்நாளில் உன் மலர்ப்பாதத்தை வாழ்த்தாமல் கழித்த நாள்கள் எல்லாம் பயனற்ற நாள்கள் என்று உணர்ந்து உன்னைத் தொழும் அன்பர்களது நெஞ்சில் திகழ்பவனே" (சுந்தரர் தேவாரம் - 7.48.2 - "இட்டனுன்னடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள் கெட்டநாள் இவை என்றலாற் கருதேன்"); (அப்பர் தேவாரம் - 6.1.1 - "பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே");
பூணாகப் பாம்பு அணிந்தாய் - பாம்பையே ஆபரணமாக அணிந்தவனே;
பொழில் சூழ்ந்த ஆமாத்தூர்க் கோணாத தேவ" எனக் கும்பிட்டார் கவலாரே - சோலை சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற, வஞ்சனை அற்ற தேவனே" என்று உன்னை வணங்கும் அடியவர்கள் கவலை தீரும்; (கோணுதல் - கோடுதல் - வளைதல்; நடுநிலைமை தவறுதல்; வெறுத்தல்); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன்");
7)
கவலைமிகு மனத்தினராய்க் கைதொழுத வானவர்கள்
உவகையுற ஒருகணையால் ஒன்னலர்முப் புரமெய்தாய்
புவனமெலாம் படைத்தவனே பொழில்சூழ்ந்த ஆமாத்தூர்ச்
சிவபெருமான் என்றுதொழத் தீவினைபோய்த் திருவாமே.
"கவலை மிகு மனத்தினராய்க் கைதொழுத வானவர்கள் உவகை உற ஒரு கணையால் ஒன்னலர் முப்புரம் எய்தாய் - மனத்தில் மிகவும் கவலையுற்று வணங்கிய தேவர்கள் மகிழும்படி ஒரு கணையால் பகைவர்களான அசுரர்களது முப்புரங்களையும் எய்தவனே; (ஒன்னலர் - பகைவர்);
புவனம் எலாம் படைத்தவனே - எல்லா அண்டங்களையும் படைத்தவனே;
பொழில் சூழ்ந்த ஆமாத்தூர்ச் சிவபெருமான்" என்று தொழத் தீவினை போய்த் திரு ஆமே - சோலை சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற சிவபெருமானே" என்று தொழுதால் பாவங்கள் தீர்ந்து நன்மை வந்தடையும்; (சிவபெருமான் - சிவபெருமானே என்ற விளி);
8)
திருவாரு(ம்) மலைதன்னைச் சினந்தெடுத்த இலங்கைக்கோன்
வெருவார மலர்ப்பாத விரலூன்றி நெரித்தவனே
அருளாளா நெல்லாரும் அணிவயல்சூழ் ஆமாத்தூர்ப்
பெருமானே என்றுதொழும் பெற்றியினோர் பெரியோரே.
"திரு ஆரும் மலைதன்னைச் சினந்து எடுத்த இலங்கைக்கோன் வெரு ஆர மலர்ப்பாத-விரல் ஊன்றி நெரித்தவனே - திரு மிக்க கயிலைமலையைப் பெருங்கோபத்தால் பெயர்க்க முயன்ற இராவணனுக்கு அச்சம் மிகும்படி மலர்ப்பாதத்தின் விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவனே; (வெரு - அச்சம்); (நெரித்தல் - நசுக்குதல்);
அருளாளா - அருளின் உறைவிடமே;
நெல் ஆரும் அணி வயல் சூழ் ஆமாத்தூர்ப் பெருமானே" என்று தொழும் பெற்றியினோர் பெரியோரே - நெல் நிறைந்த அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற பெருமானே" என்று வழிபடும் குணம் உடையவர்கள் பெரியவர்கள்; (சம்பந்தர் தேவாரம் - 2.68.4 - "பிறையுடை வார்சடையானைப் பேணவல்லார் பெரியோரே");
9)
பெரியனெவன் எனமிகவும் பிணங்கயன்மால் அறியாத
எரியெனவன் றுயர்ந்தவனே எருதேறும் இறையவனே
கரியமிட றுடையவனே கார்வயல்சூழ் ஆமாத்தூர்
விரிசடையாய் என்றேத்த வெவ்வினைகள் மேவாவே.
"பெரியன் எவன் என மிகவும் பிணங்கு அயன் மால் அறியாத எரி என அன்று உயர்ந்தவனே - "யார் பெரியவன் என்று மிகவும் வாதிட்ட பிரமன் மால் இவர்களால் அறியப்படாத ஜோதியாகி அன்று ஓங்கியவனே";
எருது ஏறும் இறையவனே - இடப-வாகனத்தை உடைய இறைவனே;
கரிய மிடறு உடையவனே - நீலகண்டனே; (மிடறு - கண்டம்);
கார் வயல் சூழ் ஆமாத்தூர் விரிசடையாய்" என்று ஏத்த வெவ்வினைகள் மேவாவே - நீர் நிறைந்ததும் பசுமை திகழ்வதுமான வயல்கள் சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற, விரிசடையை உடைய பெருமானே" என்று துதித்தால் கொடிய வினைகள் அடையா; (கார் - கருமை; நீர்; பசுமை); (விரிசடை - வினைத்தொகை); (மேவுதல் - அடைதல்; பொருந்துதல்);
10)
மேவாது வெற்றுரைசொல் மிண்டர்களுக் கருளில்லாய்
சாவாத மூவாத தன்மையனே சங்கரனே
பூவாரும் பொன்னடியாய் பொழிலாரும் ஆமாத்தூர்த்
தேவாவென் றுள்கசிவார் செல்வமெலாம் பெறுவாரே.
"மேவாது வெற்றுரை சொல் மிண்டர்களுக்கு அருள் இல்லாய் - உன்னை விரும்பாமல் பயனற்ற சொற்களைப் பேசும் கல்நெஞ்சர்களுக்கு அருள் இல்லாதவனே; (மேவுதல் - விரும்புதல்);
சாவாத மூவாத தன்மையனே - இறப்பும் மூப்பும் இல்லாதவனே;
சங்கரனே - நன்மை செய்பவனே;
பூ ஆரும் பொன்னடியாய் - பூக்கள் பொருந்திய பொற்பாதனே; பூப் போன்ற அழகிய திருவடியை உடையவனே; (ஆர்தல் - பொருந்துதல்; ஒத்தல்); (பொன் - அழகு);
பொழில் ஆரும் ஆமாத்தூர்த் தேவா" என்று உள் கசிவார் செல்வம் எலாம் பெறுவாரே - சோலை சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற தேவனே" என்று உள்ளம் உருகி வழிபடும் அன்பர்கள் எல்லாச் செல்வங்களும் பெறுவார்கள்;
11)
பெற்றமிவர் பெருமையினாய் பிறையணிந்த பிஞ்ஞகனே
முற்றுமுணர் முக்கணனே முத்தம்மை நாதாவோர்
பற்றுமிலாய் பம்பைநதிப் பாங்கரணி ஆமாத்தூர்க்
கொற்றவனே என்றரன்சீர் கூறவறும் கொடுவினையே.
"பெற்றம் இவர் பெருமையினாய் - இடபத்தின்மேல் ஏறும் பெருமையை உடையவனே; (பெற்றம் - எருது); (இவர்தல் - ஏறுதல்);
பிறை அணிந்த பிஞ்ஞகனே - சந்திரனைச் சூடியவனே; "பிஞ்ஞகன்" (தலைக்கோலமுடையவன்) என்ற திருநாமம் உடையவனே;
முற்றும் உணர் முக்கணனே - எல்லாம் அறிந்த முக்கண்ணனே;
முத்தம்மை நாதா - முத்தம்மைக்குக் கணவனே; (* முத்தம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்);
ஓர் பற்றும் இலாய் - பந்தங்கள் இல்லாதவனே;
பம்பைநதிப் பாங்கர் அணி ஆமாத்தூர்க் கொற்றவனே" என்று அரன் சீர் கூற அறும் கொடுவினையே - பம்பைநதியின் பக்கத்தில் அழகிய திருவாமாத்தூரில் உறைகின்ற மன்னனே" என்று சிவபெருமான் புகழைக் கூறி வழிபட்டால் கொடிய வினைகள் அழியும்; (பம்பை - திருவாமாத்தூரில் ஓடும் நதியின் பெயர்); (பாங்கர் - பக்கம்); (கொற்றவன் - அரசன்);
பிற்குறிப்பு:
மண்டலித்தல் இன்றி வரும் ஓர் அந்தாதியாக அமைந்த பதிகம் இது. முதற்பாடல் "பண்டைய" என்று தொடங்கிக் கடைசிப் பாடல் "கொடுவினையே" என்று முடிகின்றது.
மண்டலித்தல் இன்றி அந்தாதியாக அமைந்த பதிகத்தைத் திருவாசகத்தில் காணலாம். 8.45 - யாத்திரைப் பத்து - "பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான்"
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment