2018-06-27
P.440 - உத்தரகோசமங்கை
-------------------------------
(தரவு கொச்சகக் கலிப்பா - தானதானா தானதானா தானன தானதனா)
(சம்பந்தர் தேவாரம் - 1.52.1 - "மறையுடையாய் தோலுடையாய்")
1)
மெலிமதியம் புரிசடைமேல் மிளிர அணிந்தவனே
பலிமகிழும் பாங்குடையாய் பாரொடு விண்பரவும்
ஒலிகழலாய் உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கைப்
புலியதளாய் போற்றிநின்றேன் பொருவினை தீர்த்தருளே.
மெலி-மதியம் புரி-சடைமேல் மிளிர அணிந்தவனே - தேய்ந்து மெலிந்த திங்களை முறுக்குடைய சடையின்மேல் திகழுமாறு அணிந்தவனே; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);
பலி மகிழும் பாங்கு உடையாய் - பிச்சையை விரும்புகின்ற பெருமை உடையவனே; (பலி - பிச்சை);
பாரொடு விண் பரவும் ஒலி-கழலாய் - மண்ணுலகும் தேவருலகும் வழிபடும், ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியினனே;
உயர் மதில்சூழ் உத்தரகோசமங்கைப் புலி-அதளாய் - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்றவனே, புலித்தோலை ஆடையாக அணிந்தவனே; (அதள் - தோல்);
போற்றிநின்றேன் பொரு-வினை தீர்த்து அருளே - உன்னையே என்றும் துதிக்கும் என்னைத் தாக்கும் வினைகளைத் தீர்த்து அருள்வாயாக; (பொருதல் - தாக்குதல்);
2)
நன்றறியார் எயில்கள்வேவ நக்கவ னேகயிலைக்
குன்றுடையாய் குளிர்மதியாய் கொடியதன் மேலிடபம்
ஒன்றுடையாய் உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை
நின்றவனே வினைகள்நீக்கி நின்னடி யேற்கருளே.
நன்று-அறியார் எயில்கள் வேவ நக்கவனே - தீயவர் முப்புரம் எரியச் சிரித்தவனே; (எயில் - கோட்டை);
கயிலைக்-குன்று உடையாய் - கயிலைமலையானே;
குளிர்-மதியாய் - குளிர்ச்சி பொருந்திய திங்களை அணிந்தவனே;
கொடி அதன்மேல் இடபம் ஒன்று உடையாய் - இடபக்கொடியை உடையவனே;
உயர்மதில்சூழ் உத்தரகோசமங்கை நின்றவனே - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் நிலைத்து உறைகின்றவனே,
வினைகள் நீக்கி நின் அடியேற்கு அருளே - உன் அடியேனான எனது வினைகளைத் தீர்த்து எனக்கு அருள்வாயாக;
3)
வம்புநாறும் வாளியெய்த மதனை எரித்தவனே
கொம்பனாளோர் கூறுகந்தாய் குவலயம் அன்புசெயும்
உம்பரானே உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை
எம்பிரானே ஏத்துமென்றன் இருவினை தீர்த்தருளே.
வம்பு நாறும் வாளி எய்த மதனை எரித்தவனே - மணம் வீசும் மலர்அம்புகளை எய்த மன்மதனை எரித்தவனே; (வம்பு - வாசனை); (வாளி - அம்பு);
கொம்பு அனாள் ஓர் கூறு உகந்தாய் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக விரும்பியவனே; (அனாள் - அன்னாள் - போன்றவள்);
குவலயம் அன்புசெயும் உம்பரானே - உலகோர் போற்றும் தேவனே;
உயர் மதில்சூழ் உத்தரகோசமங்கை எம்பிரானே - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்ற எம்பெருமானே,
ஏத்தும் என்றன் இருவினை தீர்த்து அருளே - உன்னைத் துதிக்கும் எனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;
4)
சத்தியனே சத்திதன்னைத் தாங்கிய மெய்யினனே
வித்தகனே விரிசடையில் வெள்ளம் அடைத்தவனே
உத்தமனே உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை
நித்தியனே இன்பம்நல்கி நின்னடி யேற்கருளே.
சத்தியனே - மெய்ப்பொருளே;
சத்திதன்னைத் தாங்கிய மெய்யினனே - உமையைத் திருமேனியில் ஒரு பங்காகத் தாங்கியவனே;
வித்தகனே, விரி-சடையில் வெள்ளம் அடைத்தவனே - ஆற்றலுடையவனே, விரித்த சடையில் கங்கையை அடைத்தவனே;
உத்தமனே - சிரேஷ்டனே;
உயர் மதில்சூழ் உத்தரகோசமங்கை நித்தியனே - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்ற அழிவற்றவனே,
இன்பம் நல்கி நின் அடியேற்கு அருளே - உன் அடியேனான எனக்கு இன்பம் தந்து அருள்வாயாக;
5)
கச்சதாக நச்சராவைக் கட்டிய கண்ணுதலாய்
அச்சமிக்குச் சரணடைந்த அம்மதி உய்ந்திடவுன்
உச்சிவைத்தாய் உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை
நச்சிநின்றாய் தொழுமெனக்கும் நன்மை புரிந்தருளே.
கச்சதாக நச்சராவைக் கட்டிய கண்ணுதலாய் - அரையில் கச்சாக விஷப்பாம்பைக் கட்டிய நெற்றிக்கண்ணனே; (கச்சது - கச்சு; அது - பகுதிப்பொருள்விகுதி); (நச்சுஅரா - விஷப்பாம்பு);
அச்சம் மிக்குச் சரணடைந்த அம்-மதி உய்ந்திட உன் உச்சி வைத்தாய் - மிகவும் அஞ்சிவந்து உன்னைச் சரண்புகுந்த அந்தத் திங்கள் உய்யும்படி உன் திருமுடிமேல் வைத்தவனே;
உயர்மதில்சூழ் உத்தரகோசமங்கை நச்சி நின்றாய் - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் விரும்பி உறைகின்றவனே, (நச்சுதல் - விரும்புதல்);
தொழும் எனக்கும் நன்மை புரிந்து அருளே - உன்னை வழிபடும் எனக்கும் நன்மையை விரும்பியருள்வாயாக;
6)
நலந்திகழ்ந்த கண்ணிடந்து நாரணன் போற்றிசெய்யச்
சலந்தரன்றன் உடல்தடிந்த சக்கரம் ஈந்தவனே
உலந்தவோட்டில் ஐயமேற்பாய் உத்தர கோசமங்கைத்
தலந்தயங்கு சோதியேவென் மலவிருள் மாய்த்தருளே.
நலம் திகழ்ந்த கண் இடந்து நாரணன் போற்றிசெய்யச் - அழகிய மலர்க்கண்ணைத் தோண்டிப் பூவாக இட்டு அர்ச்சனை செய்த திருமாலுக்கு;
சலந்தரன்தன் உடல் தடிந்த சக்கரம் ஈந்தவனே - ஜலந்தராசுரனது உடலை வெட்டிய சக்கராயுதத்தைத் தந்தவனே; (* திருமாலுக்குச் சக்கரம் அளித்தது திருவீழிமிழலை வரலாறு);
உலந்த ஓட்டில் ஐயம் ஏற்பாய் - வற்றிய மண்டையோட்டில் பிச்சை ஏற்பவனே;
உத்தரகோசமங்கைத் தலம் தயங்கு சோதியே - உத்தரகோசமங்கை என்ற தலத்தில் ஒளிவீசும் ஜோதியே; (தயங்குதல் - ஒளிவிடுதல்);
என் மலவிருள் மாய்த்து அருளே - என் அறியாமையை அழித்து அருள்வாயாக;
7)
மரகதம்போல் மேனியாளை வாமம் மகிழ்ந்தவனே
அரியநஞ்சை அமுதமாக ஆர்ந்த மிடற்றினனே
உரகநாணா உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கைப்
பெரியதேவா உன்னையென்றும் பேணும் நினைப்பருளே.
மரகதம்போல் மேனியாளை வாமம் மகிழ்ந்தவனே - மரகதம் போன்ற நிறம் உடைய உமையை இடப்பாகமாக விரும்பியவனே: (வாமம் - இடப்பக்கம்);
அரிய நஞ்சை அமுதமாக ஆர்ந்த மிடற்றினனே - உண்ணலாகா ஆலகாலத்தை அமுதம் போல உண்ட நீலகண்டனே; (ஆர்தல் - உண்தல்);
உரக-நாணா - பாம்பை அரைநாணாகக் கட்டியவனே; (உரகம் - பாம்பு);
உயர் மதில்சூழ் உத்தரகோசமங்கைப் பெரிய தேவா - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்ற மகாதேவனே;
உன்னை என்றும் பேணும் நினைப்பு அருளே - என்றும் உன்னை வழிபடும் எண்ணத்தைத் தந்து அருள்வாயாக;
8)
ஆதனாகி மலையெடுத்தான் அழவிரல் ஊன்றுமலர்ப்
பாதநாதா படையு(ம்)நல்கும் பரிவின னேமறைகள்
ஓதுநாவா உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை
மாதுபாகா வாழ்த்திநின்றேன் வல்வினை மாய்த்தருளே.
ஆதனாகி மலை எடுத்தான் அழ விரல் ஊன்று மலர்ப்பாத நாதா - அறிவிலான் ஆகிக் கயிலையைப் பெயர்த்த இராவணன் அழும்படி ஒரு விரலை ஊன்றிய மலர்ப்பாதத்தை உடைய தலைவனே;
படையு(ம்) நல்கும் பரிவினனே - பின் (அவன் துதிகள் பாடக் கேட்டு மகிழ்ந்து) அவனுக்கு ஒரு வாளையும் கொடுத்த தயாபரனே;
மறைகள் ஓது நாவா - வேதங்களைத் திருநாவால் பாடியருளியவனே;
உயர் மதில்சூழ் உத்தரகோசமங்கை மாது-பாகா - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்ற உமைபங்கனே,
வாழ்த்தி-நின்றேன் வல்வினை மாய்த்து அருளே - உன்னையே என்றும் வாழ்த்தும் எனது வலிய வினைகளை அழித்து அருள்வாயாக;
9)
போதினானும் மாலு(ம்)நேடிப் போற்றிய எல்லையிலாச்
சோதியானே நீறுபூசும் சுந்தர னேசுருளார்
ஓதிமாது பாதியானாய் உத்தர கோசமங்கை
ஆதிமூர்த்தீ அடிபணிந்தேன் அல்லல் அறுத்தருளே.
போதினானும் மாலு(ம்) நேடிப் போற்றிய எல்லை இலாச் சோதியானே - பூமேல் உறையும் பிரமனும் திருமாலும் (அடிமுடி) தேடி வணங்கிய அளவில்லாத தீப்பிழம்பாகி நின்றவனே; (போது - பூ);
நீறு பூசும் சுந்தரனே - திருநீற்றைப் பூசும் அழகனே;
சுருள் ஆர் ஓதி மாது பாதி ஆனாய் - சுருண்ட கூந்தலை உடைய உமை திருமேனியில் ஒரு பாதி ஆனவனே; (ஓதி - பெண்களின் தலைமயிர்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை பேணின");
உத்தரகோசமங்கை ஆதிமூர்த்தீ - உத்தரகோசமங்கையில் உறைகின்ற ஆதியே, (ஆதிமூர்த்தி - ஆதி மூர்த்தி - யாவர்க்கும் மூலகாரணமாய் நிற்கும் மூர்த்தி. வாழ்முதலாகிய சிவபெருமான்);
அடிபணிந்தேன் அல்லல் அறுத்து அருளே - உன் திருவடியை வழிபடும் என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;
10)
குற்றநெஞ்சர் கொள்கையென்று கூறிடு பொய்யொழிந்து
நெற்றிநீற்றர் ஆனநேயர் நினைவரம் நல்கிடுவாய்
ஒற்றையேற்றாய் உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை
நற்றவத்தாய் அடியனேற்கும் நன்மை புரிந்தருளே.
குற்றநெஞ்சர் கொள்கை என்று கூறிடு பொய் ஒழிந்து - நெஞ்சில் வஞ்சம் மிக்கவர்கள் தங்களது கொள்கை என்று சொல்கின்ற பொய்களை நீங்கி;
நெற்றிநீற்றர் ஆன நேயர் நினை-வரம் நல்கிடுவாய் - நெற்றியில் திருநீற்றைப் பூசி வழிபடும் பக்தர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் தருபவனே;
ஒற்றை ஏற்றாய் - ஒப்பற்ற இடபவாகனத்தை உடையவனே; (அப்பர் தேவாரம் - 5.92.10 - "ஒற்றை யேறுடையான் அடியேயலால்");
உயர் மதில்சூழ் உத்தரகோசமங்கை நற்றவத்தாய் - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்ற நல்ல தவவடிவினனே;
அடியனேற்கும் நன்மை புரிந்து அருளே - உன் அடியேனுக்கும் இன்னருள் புரிவாயாக;
11)
மலைவளைத்து மதில்களெய்தாய் வாளிகள் ஐந்தெறியச்
சிலைவளைத்த மதனையட்டாய் திரைமலி கங்கைநதி
உலவுகின்ற சடையினானே உத்தர கோசமங்கைத்
தலமுறைந்தாய் தாள்பணிந்தேன் அலமரல் தீர்த்தருளே.
மலை வளைத்து மதில்கள் எய்தாய் - மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களை எய்தவனே;
வாளிகள் ஐந்து எறியச் சிலை வளைத்த மதனை அட்டாய் - ஐந்து அம்புகளை ஏவ வில்லை வளைத்த மன்மதனை எரித்தவனே; (வாளி - அம்பு); (சிலை - வில்); (மதன் - காமன்); (அடுதல் - அழித்தல்);
திரை மலி கங்கைநதி உலவுகின்ற சடையினானே - அலை மிகுந்த கங்கை உலவுகின்ற சடையை உடையவனே; (திரை - அலை);
உத்தரகோசமங்கைத் தலம் உறைந்தாய் - உத்தரகோசமங்கை என்ற தலத்தில் உறைகின்றவனே;
தாள் பணிந்தேன் அலமரல் தீர்த்து அருளே - உன் திருவடியை வழிபடும் எனது அச்சத்தைத் தீர்த்து அருள்வாயாக; (அலமரல் - கவலை; அச்சம்);
பிற்குறிப்பு - யாப்புக்குறிப்பு:
இந்தப் பாடல் அமைப்பைக் கலிவிருத்தம் என்றோ தரவு கொச்சகக் கலிப்பா என்றோ கருதலாம்.
இப்பாடலின் அடிகளின் அமைப்பைத் - "தானதானா - தானதானா - தானன தானதனா" - என்று மூன்று பகுதிகளாக நோக்கலாம்.
1, 2-ஆம் சீர்கள் - "தானதானா" - என்பது தானதனா, / தனனதானா / தனதனனா என்றெல்லாம் வரக்கூடும்.
3-ஆம் சீர் - "தானன" - என்பது தனதன / தான / தனன என்றெல்லாம் வரக்கூடும். தான / தனன என்று மாச்சீராக வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்; 3-ஆம் 4-ஆம் சீர்களிடையே வெண்டளை;
4-ஆம் சீர் - "தானதனா" - இது தானானா / தனதனனா / தனதானா என்றெல்லாம் வரக்கூடும்.
சம்பந்தர் தேவாரம் 1.47 - 1.53 பதிகங்கள் - இந்த அமைப்பை உடையன. உதாரணமாக - 1.52.3 -
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற் கூற்றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment