Tuesday, August 5, 2025

P.431 - முண்டீச்சரம் (கிராமம்) - அக்கைப் புனைவானை

2018-04-14

P.431 - முண்டீச்சரம் (கிராமம்)

---------------------------------

(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பி")


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

அக்கைப் புனைவானை அமரர் இடர்தீர

நக்குப் புர(ம்)மூன்றை நாசம் செயவல்ல

முக்கட் பெருமானை முண்டீச் சர(ம்)மேய

செக்கர்ச் சடையானைச் சிந்தித் தெழுநெஞ்சே.


அக்கைப் புனைவானை - எலும்பை அணிந்தவனை; (அக்கு - எலும்பு);

அமரர் இடர் தீர நக்குப் புரம் மூன்றை நாசம் செய வல்ல முக்கட் பெருமானை - தேவர்களது துன்பம் தீருமாறு சிரித்து முப்புரங்களை அழிக்கவல்ல முக்கண்ணனை; (நகுதல் - சிரித்தல்);

முண்டீச்சரம் மேய செக்கர்ச்-சடையானைச் சிந்தித்து எழு நெஞ்சே - திருமுண்டீச்சரத்தில் உறைகின்ற செஞ்சடையானை எண்ணி எழு மனமே; (செக்கர் - சிவப்பு);


2)

வளையல் அணிமாதை வாம(ம்) மகிழ்வானை

அளவில் புகழானை ஆற்றுச் சடைமீது

முளைவெண் பிறையானை முண்டீச் சர(ம்)மேய

இளவெள் விடையானை ஏத்தி எழுநெஞ்சே.


வளையல் அணி மாதை வாமம் மகிழ்வானை - வளையல் அணிந்த உமையை இடப்பக்கம் ஒரு கூறாக விரும்பியவனை;

அளவு இல் புகழானை - எல்லையற்ற புகழ் உடையவனை;

ஆற்றுச்-சடைமீது முளை-வெண்-பிறையானை - கங்கை உலவும் சடையின்மேல் வெண்பிறையை அணிந்தவனை;

முண்டீச்சரம் மேய இளவெள் விடையானை ஏத்தி எழு நெஞ்சே - திருமுண்டீச்சரத்தில் உறைகின்றவனும் இளைய வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவனுமான சிவபெருமானைப் போற்றி எழு மனமே;


3)

ஐயம் புடையான்றன் ஆகம் பொடிசெய்த

ஐயன் உமைபங்கன் ஆர்த்துச் சிறைவண்டு

மொய்யம் பொழில்சூழ்ந்த முண்டீச் சர(ம்)மேய

செய்யன் திருநாமம் சிந்தித் தெழுநெஞ்சே.


-அம்பு உடையான்தன் ஆகம் பொடிசெய்த ஐயன் - ஐந்து அம்புகளை உடைய மன்மதனது உடலைச் சாம்பலாக்கிய தலைவன்;

உமைபங்கன் - உமாதேவியை ஒரு பங்கில் உடையவன்;

ஆர்த்துச் சிறைவண்டு மொய் அம்-பொழில் சூழ்ந்த முண்டீச்சரம் மேய - சிறகுகளை உடைய வண்டுகள் ஒலித்து மொய்க்கின்ற அழகிய சோலை சூழ்ந்த திருமுண்டீச்சரத்தில் உறைகின்ற; (ஆர்த்தல் - ஒலித்தல்); (சிறை - சிறகு); (அம் - அழகு);

செய்யன் திருநாமம் சிந்தித்து எழு நெஞ்சே - செம்மேனியனான சிவபெருமானது திருப்பெயரை எண்ணி எழு மனமே; (செய் - சிவப்பு);


4)

தக்கன் புரிவேள்வி தகர்த்த தழல்வண்ணன்

மைக்கண் ணுமைகேள்வன் வண்டு மதுவுண்டு

மொய்க்கும் பொழில்சூழ்ந்த முண்டீச் சர(ம்)மேய

நக்கன் கழல்வாழ்த்தி நாளு(ம்) மகிழ்நெஞ்சே.


தக்கன் புரி வேள்வி தகர்த்த தழல்வண்ணன் - தக்கன் செய்த அவவேள்வியை அழித்தவன், தீப்போன்ற செம்மேனியன்;

மைக்-கண் உமைகேள்வன் - மை அணிந்த (/ கரிய) கண்களை உடைய உமைக்குக் கணவன்; (மை - 1. கண்ணுக்கிடும் மை; 2. கருநிறம்);

வண்டு மது உண்டு மொய்க்கும் பொழில் சூழ்ந்த முண்டீச்சரம் மேய - வண்டுகள் தேன் உண்டு மொய்க்கின்ற சோலை சூழ்ந்த திருமுண்டீச்சரத்தில் உறைகின்ற;

நக்கன் கழல் வாழ்த்தி நாளும் மகிழ் நெஞ்சே - திகம்பரனான சிவபெருமானது திருவடியை வழிபட்டு, மனமே, என்றும் இன்புறுவாயாக;


5)

துன்னும் சடையானைத் தூய மறைபாடி

உன்னும் ஒருமாணி உய்ய நமனாரை

முன்னம் உதைசெய்த முண்டீச் சர(ம்)மேய

மன்னன் கழல்தன்னை வாழ்த்தி மகிழ்நெஞ்சே.


துன்னும் சடையானைத் - அடர்ந்த சடை உடையவனை; (துன்னுதல் - செறிதல்);

தூய-மறை பாடி உன்னும் ஒரு மாணி உய்ய நமனாரை முன்னம் உதைசெய்த - தூய வேதத்தைப் பாடித் தியானித்த ஒப்பற்ற மார்க்கண்டேயர் உய்யுமாறு காலனை முன்பு உதைத்தவனும்;

முண்டீச்சரம் மேய மன்னன் கழல்தன்னை வாழ்த்தி மகிழ் நெஞ்சே - திருமுண்டீச்சரத்தில் உறைகின்ற தலைவனுமான சிவபெருமானது திருவடியை வழிபட்டு, மனமே, இன்புறுவாயாக;


6)

அந்தன் அகலத்தில் அயில்மூ விலைவேலால்

கொந்தும் பெருவீரன் குழகன் அனைவர்க்கும்

முந்தும் உளதேவன் முண்டீச் சர(ம்)மேய

எந்தம் பெருமான்-தாள் ஏத்தி எழுநெஞ்சே.


அந்தன் அகலத்தில் அயில்-மூவிலை-வேலால் கொந்தும் பெருவீரன் - அந்தகாசுரன் மார்பில் கூரிய திரிசூலத்தால் குத்திய பெரிய வீரன்; (அந்தன் - அந்தகாசுரன்); (அயில் - கூர்மை); (கொந்துதல் - குத்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.12.5 - "அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை அழகார் கறையார்நெடு வேலின்மிசை ஏற்றான்");

குழகன் - இளமை உடையவன்; அழகன்;

அனைவர்க்கும் முந்தும் உள தேவன் - எல்லார்க்கும் காலத்தால் முற்பட்டவன்; (முந்து - முன்பு);

முண்டீச்சரம் மேய எந்தம் பெருமான்-தாள் ஏத்தி எழு நெஞ்சே - திருமுண்டீச்சரத்தில் உறைகின்ற நம் பெருமானது திருவடியை வழிபட்டு எழு மனமே;


7)

பிரமன் தலையேந்திப் பிச்சைக் குழல்பெம்மான்

அரவ அரைநாணன் அளிகள் சுரமேழு(ம்)

முரலும் பொழில்சூழ்ந்த முண்டீச் சர(ம்)மேய

அரையன் அடிவாழ்த்தி அல்லல் அறுநெஞ்சே.


பிரமன்-தலை ஏந்திப் பிச்சைக்கு உழல் பெம்மான் - பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்குத் திரியும் பெருமான்;

அரவ-அரைநாணன் - அரைநாணாகப் பாம்பைக் கட்டியவன்;

அளிகள் சுரம் ஏழும் முரலும் பொழில் சூழ்ந்த முண்டீச்சரம் மேய - வண்டுகள் ஏழு சுரங்களையும் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருமுண்டீச்சரத்தில் உறைகின்ற; (அளி - வண்டு); (முரல்தல் - ஒலித்தல்);

அரையன் அடி வாழ்த்தி அல்லல் அறு நெஞ்சே - அரசனது திருவடியை வாழ்த்தித் துன்பங்கள் தீர் நெஞ்சமே;


8)

மதியா தெறிமூடன் மலைக்கீழ் அழவூன்றித்

துதியோ டிசைகேட்டுச் சுடர்வாள் தருவானை

முதுகா டுறைவானை முண்டீச் சர(ம்)மேய

மதிசேர் சடையானை வாழ்த்தி மகிழ்நெஞ்சே.


மதியாது எறி-மூடன் மலைக்கீழ் அழன்றித் - கயிலைமலையை இகழ்ந்து பேர்த்து எறிந்த அறிவிலியான இராவணன் அந்த மலையின்கீழ் அழும்படி திருப்பாதவிரலை ஊன்றி அவனை நசுக்கி;

துதியோடு இசை கேட்டுச் சுடர்-வாள் தருவானை - (பிறகு) அவன் இசையோடு துதிகள் பாடக் கேட்டு, இரங்கி அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளைக் கொடுத்தவனை;

முதுகாடு உறைவானை - சுடுகாட்டில் இருப்பவனை; (முதுகாடு - சுடுகாடு);

முண்டீச்சரம் மேய மதி சேர் சடையானை வாழ்த்தி மகிழ் நெஞ்சே - திருமுண்டீச்சரத்தில் உறைகின்றவனும் சடையின்மேல் சந்திரனை அணிந்தவனுமான பெருமானை வாழ்த்தி, மனமே, மகிழ்வாயாக;


9)

வன்கைம் மதமாவை உரிசெய்ம் மணிகண்டன்

செங்கண் அரிவேதன் தேட உயர்சோதி

முன்கை வளையாள்கோன் முண்டீச் சர(ம்)மேய

அங்கை மழுவாளன் அடியை அடைநெஞ்சே.


வன்-கைம்- மதமாவை உரிசெய்ம் மணிகண்டன் - வலிய துதிக்கையை உடைய மதயானையின் தோலை உரித்த நீலகண்டன்; (மதமா - யானை);

செங்கண் அரி வேதன் தேட உயர்-சோதி - சிவந்த கண்களையுடைய திருமாலும் பிரமனும் தேடும்படி உயர்ந்த ஜோதி-உருவினன்;

முன்கை வளையாள் கோன் - முன்கையில் வளையல் அணிந்த உமைக்குத் தலைவன்;

முண்டீச்சரம் மேய அங்கை மழுவாளன் அடியை அடை நெஞ்சே - திருமுண்டீச்சரத்தில் உறைகின்றவனும் கையில் மழுவை ஏந்தியவனுமான பெருமானது திருவடியை, மனமே, சரண் அடைவாயாக;


10)

புனையார் திருநீற்றைப் புகல்பொய் கருதேன்மின்

கனைமா கடல்வண்ணன் கருதித் தொழவாழி

முனைநாள் அருளண்ணல் முண்டீச் சர(ம்)மேய

சினமா விடையான்சீர் செப்ப நலமாமே.


புனையார் திருநீற்றைப் புகல் பொய் கருதேன்மின் - திருநீற்றைப் பூசாதவர்கள் சொல்கின்ற பொய்களை நீங்கள் மதிக்கவேண்டா; (மின் - ஏவற்பன்மை விகுதி);

கனை-மா-கடல்வண்ணன் கருதித் தொழ ஆழி முனைநாள் அருள் அண்ணல் - ஒலிக்கின்ற பெரிய கடலின் நிறத்தை உடைய திருமால் விரும்பித் தொழுது ஏத்தவும் மகிழ்ந்து சக்கரத்தை முன்பு அருள்செய்த பெருமான்; (கனைதல் / கனைத்தல் - ஒலித்தல்); (ஆழி - சக்கரம்);

முண்டீச்சரம் மேய சின-மா-விடையான் சீர் செப்ப நலம் ஆமே - திருமுண்டீச்சரத்தில் உறைகின்றவனும் சினக்கின்ற பெரிய இடபத்தை வாகனமாக உடையவனுமான பெருமானது புகழைப் பாடினால் நன்மை உண்டாகும்;


11)

தோன்றி அழிகின்ற துன்பம் அதுதீர

ஏன்று கொளவேண்டி இறைஞ்சும் அடியார்க்கு

மூன்று நயனத்தன் முண்டீச் சர(ம்)மேய

தோன்றல் சிவலோகன் துணையாய் அருள்வானே.


தோன்றி அழிகின்ற துன்பம் அது தீர ஏன்றுகொள வேண்டி இறைஞ்சும் அடியார்க்கு - "பிறந்து இறக்கின்ற துன்பம் தீரும்படி என்னை ஏன்றுகொள்" என்று பிரார்த்தித்து வணங்கும் அடியார்களுக்கு; (தோன்றுதல் - பிறத்தல்); (ஏன்றுகொள்தல் - ஏற்றுக்கொள்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.24.2 - "தலைவா எனை ஏன்றுகொள்நீ");

மூன்று நயனத்தன் - முக்கண்ணன்;

முண்டீச்சரம் மேய தோன்றல் - திருமுண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமான்;

சிவலோகன் - சிவலோகத்தில் இருப்பவனும், சிவலோகநாதன் என்ற திருநாமம் உடையவனுமான அப்பெருமான்; (* சிவலோகநாதன் - இத்தலத்து ஈசன் திருநாமம்);

துணையாய் அருள்வானே - துணையாகிக் காத்தருள்வான்; (அப்பர் தேவாரம் - 4.66.3 - "தொழுதெழுவார்கட்கெல்லாம் நற்றுணை ஆவர்");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment