2006-09-08
V.052 - மழவிடையன் - நடுவெழுத்து அலங்காரம்
---------------------------------
(வெண்பா)
மன்மதன் செய்பாடல் மாபொருள் பைத்தியம்
ஒன்றுமிலை உள்ளிளவேற் றூர்தியான் - பின்புளதைப்
பாதுகாப் பாயுண் படிவணங்(கு) ஈர்வாரிக்
கோதுகண் ணைச்சிமிட்டு கொல்.
பதம் பிரித்து:
மன்மதன் செய் பாடல் மாபொருள் பைத்தியம்
ஒன்றுமிலை உள் இள-ஏற்று-ஊர்தியான்; - பின்பு உளதைப்
பாதுகாப்பாய் உண் படி வணங்கு ஈர்வாரிக்
கோது கண்ணைச் சிமிட்டு கொல்.
முற்குறிப்பு: நடுவெழுத்தலங்காரம் - இஃது ஒரு வார்த்தை விளையாட்டு. இக்காலத்தில் வரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் (crossword puzzles) போன்றது. பாடலின் முற்பகுதியில் வரும் சொற்களுக்கு அதே பொருள் தரும் மூன்றெழுத்துச் சொற்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் நடுவே உள்ள எழுத்துகளைச் சேர்த்தால் பாடலில் சுட்டப்பெறும் தலைவன் பெயர் (அல்லது சொற்றொடர்) வரும். பாடலின் பிற்பாதியில், அந்த மூன்றெழுத்துச் சொற்களில் எஞ்சியுள்ள (= முதல் & மூன்றாம் எழுத்துகளான) ஈரெழுத்துச் சொற்களுக்குப் பொருந்துமாறு சொற்கள் அமையும். பாடலின் பிற்பாதிக்கும் பாடலில் சுட்டப்பெறும் தலைவன் பெயருக்கும் தொடர்பு (பெரும்பாலும்) இராது.
இந்தப் பாடலில்:
ம = காமன் = மன்மதன்.
ழ = கழனி = செய் (வயல், நிலம்).
வி = கவிதை = பாடல்.
டை = உடைமை = செல்வம்.
ய = பேயன் = பைத்தியக்காரன்.
ன் = இன்மை = ஒன்றும் இல்லை.
பின்பு உளதை - எஞ்சியதை;
கான் (காடு) - பாதுகாப்பாய்.
கனி = உண்.
கதை = படி.
உமை = வணங்கு.
பேன் = ஈர்வாரிக் கோது.
இமை = கண்ணைச் சிமிட்டு.
கொல் = அசைச்சொல்.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment