2018-05-20
V.053 - கறைக்கண்டன் - நடுவெழுத்து அலங்காரம்
---------------------------------
(வெண்பா)
நாளாட்சி பேசுறுப்பு நற்காப்பு வீரர்தம்
வாளாட்சி கூத்துமட மாதிடையே - வாளெயிறு
கண்ணரண் ஆவதனூண் கற்றைமயிர் நஞ்சுபழம்
உண்ணம் கறைக்கண்டன் உண்டு.
பதம் பிரித்து:
நாள், ஆட்சி, பேசு-உறுப்பு, நற்காப்பு, வீரர்தம்
வாள்-ஆட்சி, கூத்து, மடமாது, இடையே - வாள்-எயிறு,
கண்-அரண், ஆ, அதன் ஊண், கற்றை-மயிர், நஞ்சு, பழம்,
உள் நம் கறைக்கண்டன் உண்டு.
முற்குறிப்பு: நடுவெழுத்தலங்காரம் - இஃது ஒரு வார்த்தை விளையாட்டு. இக்காலத்தில் வரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் (crossword puzzles) போன்றது. பாடலின் முற்பகுதியில் வரும் சொற்களுக்கு அதே பொருள் தரும் மூன்றெழுத்துச் சொற்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் நடுவே உள்ள எழுத்துகளைச் சேர்த்தால் பாடலில் சுட்டப்பெறும் தலைவன் பெயர் (அல்லது சொற்றொடர்) வரும். பாடலின் பிற்பாதியில், அந்த மூன்றெழுத்துச் சொற்களில் எஞ்சியுள்ள (= முதல் & மூன்றாம் எழுத்துகளான) ஈரெழுத்துச் சொற்களுக்குப் பொருந்துமாறு சொற்கள் அமையும். பாடலின் பிற்பாதிக்கும் பாடலில் சுட்டப்பெறும் தலைவன் பெயருக்கும் தொடர்பு (பெரும்பாலும்) இராது.
நாள், ஆட்சி, பேசு-உறுப்பு, நற்காப்பு, வீரர்தம் வாள்-ஆட்சி, கூத்து, மடமாது, இடையே - இவற்றின் பரியாயச் சொற்களில்;
வாள்-எயிறு, கண்-அரண், ஆ, அதன் ஊண், கற்றை-மயிர், நஞ்சு, பழம், உள் - இப்பொருள்கள் தரும் சொற்களின் உள்ளே;
நம் கறைக்கண்டன் உண்டு - நம் ஈசன் திருநாமமான "கறைக்கண்டன்" உண்டு.
இந்தப் பாடலில் மறைவாக இடம்பெற்றுள்ள சொற்கள்:
க = பகல் = பல்
றை = இறைமை = இமை
க் = நாக்கு = நாகு
க = புகல் = புல்
ண் = சண்டை = சடை
ட = ஆடல் = ஆல்
ன் = கன்னி = கனி
நாள் - பகல்;
ஆட்சி - இறைமை;
பேசு-உறுப்பு - பேசுகின்ற உறுப்பு - நாக்கு;
நற்காப்பு - புகல்;
வீரர்தம் வாள்-ஆட்சி = சண்டை;
கூத்து - ஆடல்;
மடமாது - இளம்பெண் - கன்னி;
இடை - 1. ஏழாம்வேற்றுமை உருபு; 2. நடு;
ஏ - அசை;
வாள்-எயிறு = ஒளியுடைய பல்;
கண்-அரண் = கண்ணுக்குக் கவசம் = இமை;
ஆ - பசு - நாகு; (நாகு = எருமை, மரை, பெற்றம் என்பவற்றின் பெண்); (அப்பர் தேவாரம் - 4.3.11 - "இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்");
அதன் ஊண் - பசுவின் உணவு = புல்;
கற்றைமயிர் = சடை;
நஞ்சு - ஆல்;
பழம் - கனி;
உண்ணம் - உள் நம் - உள்ளே நம்;
உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்துக்கும் உரிய ஒரு குறிப்புவினைமுற்றுச் சொல்.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment