2018-06-21
V.056 - கங்கைத்தண்ணீர் - பிந்துமதி
---------------------------------
(வெண்பா)
கங்கைத்தண் ணீர்தாங்கிக் கண்ணெற்றிக் காட்டப்பன்
மங்கைக்குப் பங்கீந்தான் வன்னஞ்சுண் ணங்கண்டன்
பூங்கொன்றைத் தார்மார்பன் புள்ளூர்மால் காண்பொண்ணான்
பாங்கைச்சொன் னால்வாழ்வோம் பார்.
பதம் பிரித்து:
கங்கைத்தண்ணீர் தாங்கிக், கண் நெற்றிக் காட்டு அப்பன்;
மங்கைக்குப் பங்கு ஈந்தான்; வன்-நஞ்சு உண் அம்-கண்டன்;
பூங்கொன்றைத்-தார் மார்பன்; புள் ஊர் மால் காண்பு ஒண்ணான்
பாங்கைச் சொன்னால் வாழ்வோம் பார்.
கங்கைத்தண்ணீர் தாங்கிக், கண் நெற்றிக் காட்டு அப்பன் - கங்கையின் குளிர்ந்த நீரை முடிமேல் தாங்கி, ஒரு கண்ணை நெற்றியில் காட்டுகின்ற தந்தை;
மங்கைக்குப் பங்கு ஈந்தான் - உமைக்கு ஒரு பாகம் ஈந்தவன்;
வன்-நஞ்சு உண் அம்-கண்டன் - கொடிய விடத்தை உண்ட அழகிய கண்டத்தை உடையவன்; (அம் - அழகு); (பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 12.21.172 - "காவியங் கண்டர் மன்னும் திருக்கழிப்பாலை");
பூங்கொன்றைத்-தார் மார்பன் - கொன்றைமாலையை மார்பில் அணிந்தவன்;
புள் ஊர் மால் காண்பு ஒண்ணான் - கருடவாகனத்தை உடைய திருமாலால் அறிய இயலாதவன்; (புள் - பறவை); (ஊர்தல் - ஏறுதல்); (காண்பு - காண்தல்);
பாங்கைச் சொன்னால் வாழ்வோம் பார் - அப்பெருமானது குணங்களைப் பாடினால் நாம் உய்வோம்; (பாங்கு - இயல்பு; அழகு); (அப்பர் தேவாரம் - 4.21.4 - "குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்");
பிற்குறிப்பு :
* நவீன இலக்கணப்படி "பிந்துமதி" - பாட்டில் எழுத்தெழுத்தாகப் பார்க்கும்பொழுது, ஒற்றைப்படை இடங்கள் எங்கும் ஒற்றில்லாத எழுத்தும் இரட்டைப்படை இடங்கள் எங்கும் ஒற்று இருக்கும் எழுத்தும் அமைந்த பாடல். இது தமிழின் நவீனகால எழுதுமுறைக்கு ஏற்ப ஏற்படுத்திக்கொண்ட புது வடிவம்.
* பழைய இலக்கணப்படி "பிந்துமதி": யாப்பருங்கலவிருத்தி என்ற நூலிற் காண்பது:
"பிந்துமதி என்பது எல்லா எழுத்தும் புள்ளியுடையனவே வருவது". அந்நூலிற் காணும் உதாரணம்:
"நெய்கொண்டெ னெற்கொண்டெ னெட்கொண்டென் கொட்கொண்டென்
செய்கொண்டென் செம்பொன்கொண் டென்?"
பழங்காலத்தில் எகர ஒகர உயிரெழுத்துகளும் அவ்வுயிர் ஏறிய உயிர்மெய்யெழுத்துகளும் புள்ளி பெற்று வருவன. ஆதலால், இப்பாடலில் எல்லா எழுத்துகளுக்கும் புள்ளி இருந்தது.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment