2018-05-22
P.435 - பொது - தலமாலை
---------------------------------
(குறள்வெண்பா)
முற்குறிப்பு: ஒவ்வொரு பாடலிலும் ஒரு தலம். அடிதோறும் முதற்சீரில் மடக்கு அமைந்த பாடல்கள்.
1) -- திருவாடானை --
ஆடானை ஆடவைக்கும் பாடானைப் பாடவைக்கும்
ஆடானை ஐயன் அருள்.
திருவாடானைப் பெருமானது அருளானது ஆடாதவரையும் ஆடச்செய்யும், பாடாதவரையும் பாடச் செய்யும்; (* திருநாவுக்கரசர் தேவாரம் - 6.95.3 - "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே ... பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே");
2) -- திருவாலங்காடு --
ஆலங்காட் டீசன் அழகிய கண்டத்தில்
ஆலங்காட் டன்பார் அரன்.
ஆலங்காட்டு ஈசன் அழகிய கண்டத்தில் ஆலம் காட்டு அன்பு ஆர் அரன் - திருவாலங்காட்டில் உறைகின்ற ஈசன் தன் அழகிய மிடற்றில் ஆலகாலத்தைக் (கரிய மணியாகக்) காட்டுகின்ற அன்பு மிக்க ஹரன்;
3) -- திருநல்லம் (கோனேரிராஜபுரம்) --
நல்ல நிலைபெறலா(ம்) நானிலத்தில் நெஞ்சமே
நல்ல நகரானை நாடு.
நல்ல நிலை பெறல் ஆம் நானிலத்தில், நெஞ்சமே, நல்லம் நகரானை நாடு - நெஞ்சே, திருநல்லத்தில் உறைகின்ற இறைவனை விரும்பி அடை; மண்ணுலகில் இன்புற்று வாழும் நிலை கிட்டும்; ("நல்லம் + நகர் = நல்லநகர்" என்று மகர-ஒற்றுக் கெட்டுப் புணரும்); (சம்பந்தர் தேவாரம் - 1.85.1 - "நல்லான் நமையாள்வான் நல்ல நகரானே");
4) -- திருவலிதாயம் (பாடி) --
வலிதாய பண்டைவினை மாய மனமே
வலிதாய மேயானை வாழ்த்து.
வலிதாய பண்டைவினை மாய, மனமே, வலிதாயம் மேயானை வாழ்த்து - மனமே, வலிமை மிக்கதான பழவினை அழியத், திருவலிதாயத்தில் உறைகின்ற பெருமானைப் போற்றி வழிபடு; (வலிது - வலிமையுள்ளது); (பண்டை - பழமை); (வலிதாயம் + மேயானை = "வலிதாய மேயானை" என்று மகர-ஒற்றுக் கெட்டுப் புணரும்);
5) -- திருக்கானூர் --
கானூர் பெரும்பாம்பு கங்கை மதிபுனைந்த
கானூர் அரனைக் கருது.
கான் ஊர் பெரும்பாம்பு, கங்கை, மதி புனைந்த கானூர் அரனைக் கருது - காட்டில் ஊர்கின்ற பெரிய பாம்பு, கங்கைநதி, சந்திரன் இவற்றை அணிந்த, திருக்கானூரில் உறைகின்ற ஹரனை விரும்பி எண்ணு;
6) -- சிக்கல் (திருச்சிக்கல்) --
சிக்கலில் மேன்மைபெறச் சிந்தி தினம்நெஞ்சே
சிக்கலில் மேயசிவன் சீர்.
சிக்கல் இல் மேன்மை பெறச், சிந்தி தினம் நெஞ்சே, சிக்கலில் மேய சிவன் சீர் - மனமே, கஷ்டங்கள் இல்லாத உயர்நிலை பெறுவதற்குத், திருச்சிக்கலில் உறைகின்ற சிவபெருமான் புகழைத் தினமும் எண்ணுவாயாக.
7) -- திங்களூர் --
திங்களூர் பாம்பு திகழ்முடிமேற் சேர்த்தவன்
திங்களூர் ஈசனெனச் செப்பு.
திங்கள், ஊர் பாம்பு திகழ்முடிமேல் சேர்த்தவன் திங்களூர் ஈசன் எனச் செப்பு - சந்திரனையும் ஊர்கின்ற பாம்பையும் திருமுடிமேல் ஒன்றாகச் சேர்த்தவன் திங்களூரில் உறைகின்ற ஈசன் என்று சொல்.
8) -- அண்ணாமலை --
அண்ணா கமியென் றழுதசமு கற்குமுண்டே
அண்ணா மலையான் அருள்.
"அண்ணா! கமி!" என்று அழு தசமுகற்கும் உண்டே அண்ணாமலையான் அருள் - "அண்ணலே! பொறுத்தருளாய்" என்று அழுத இராவணனுக்கும் திருவண்ணாமலை இறைவன் அருள் உண்டு. (கமித்தல் - க்ஷமித்தல் - மன்னித்தல்; பொறுத்தல்); (தசமுகற்கும் - தசமுகனுக்கும்);
9) -- ஆனைக்கா (திருவானைக்காவல்) --
ஆனைக்கா ஓர்முதலை செற்றான் அயனறியார்
ஆனைக்கா அண்ணல் அடி.
ஆனைக்கா ஓர் முதலை செற்றான் அயன் அறியார் ஆனைக்கா அண்ணல் அடி - கஜேந்திரனுக்காக ஒரு முதலையை அழித்த திருமாலாலும் பிரமனாலும் அறியப்படாதது திருவானைக்கா ஈசனது திருவடி; (ஆனைக்கா - 1. யானைக்காக; 2. திருவானைக்கா என்ற தலம்); (செறுதல் - அழித்தல்);
10) -- அன்பில் ஆலந்துறை --
அன்பிலா வம்பர்க் கருளிலான் ஆற்றனிடம்
அன்பிலா லந்துறை ஆம்.
அன்பு இலா வம்பர்க்கு அருள் இலான், ஆற்றன் இடம் அன்பில் ஆலந்துறை ஆம் - அன்பற்ற துஷ்டர்களுக்கு அருள் இல்லாதவனும், கங்கையை அணிந்தவனுமான ஈசன் உறையும் இடம் அன்பில் ஆலந்துறை ஆகும்; (வம்பர் - பயனற்றவர்; துஷ்டர்); (ஆறு - 1. நதி; 2. நெறி); (ஆற்றன் - கங்காதரன்; நீதிநெறியே வடிவாக உடையன் எனலும் ஆம்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");
11) -- பேரூர் --
பேரூர் உரைத்தல் பெறவேண்டில் நாவேநீ
பேரூர் அரன்புகழே பேசு.
பேர் ஊர் உரைத்தல் பெறவேண்டில், நாவே நீ பேரூர் அரன் புகழே பேசு - நம் பெயரையும் புகழையும் ஊர்மக்கள் எல்லாரும் சொல்லும் உயர்ந்த நிலையைப் பெறவேண்டும் என்றால், நாக்கே நீ பேரூரில் உறையும் சிவபெருமான் புகழையே பேசு. (பேர் - பெயர்; புகழ்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment