Tuesday, August 5, 2025

P.430 - முருகன்பூண்டி - மத்தனை வானவர்

2018-04-12

P.430 - முருகன்பூண்டி (திருமுருகன்பூண்டி)

---------------------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)

(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

மத்தனை வானவர் வாழ நஞ்சையுண்

பித்தனைப் பிடிநடைப் பேதை பங்கமர்

முத்தனை அழகிய முருகன் பூண்டியில்

அத்தனை அடிதொழ அல்லல் இல்லையே.


மத்தனை - ஊமத்தமலரை அணிந்தவனை;

வானவர் வாழ நஞ்சை உண் பித்தனைப் - தேவர்கள் வாழுமாறு ஆலகாலத்தை உண்ட பேரருளாளனை;

பிடிநடைப் பேதை பங்கு அமர் முத்தனை - பெண்யானை போன்ற நடையை உடைய உமையை ஒரு பங்கில் விரும்பியவனை, முக்தியளிப்பவனை; (பிடி - பெண்யானை); (பேதை - பெண்);

அழகிய முருகன்பூண்டியில் அத்தனை - அழகிய திருமுருகன்பூண்டியில் உறைகின்ற தந்தையை;

அடிதொழ அல்லல் இல்லையே - வழிபட்டால் துன்பம் தீரும்;


2)

ஆர்த்தடை கூற்றுதைத் தன்று மாணியைக்

காத்தபி ரான்றனைக் கயிலை வெற்புறை

மூர்த்தியை அழகிய முருகன் பூண்டியில்

பூத்திரள் கொடுதொழப் புன்மை தீருமே.


ஆர்த்து அடை கூற்று உதைத்து அன்று மாணியைக் காத்த பிரான்தனைக் - ஆரவாரித்து அடைந்த காலனை உதைத்து மார்க்கண்டேயரைக் காத்த தலைவனை; (ஆர்த்தல் - ஒலித்தல்);

கயிலை-வெற்பு உறை மூர்த்தியை - கயிலைமலையில் உறைகின்ற கடவுளை;

அழகிய முருகன்பூண்டியில் - அழகிய திருமுருகன்பூண்டியில்;

பூத்திரள்கொடு தொழப் புன்மை தீருமே - பூக்களால் வழிபட்டால் தீவினை தீரும்;


3)

ஆவினில் அஞ்சுகந் தாடும் அண்ணலை

நாவினில் வேதனை நாக நாணனை

மூவிலை வேலனை முருகன் பூண்டியில்

தேவினை வாழ்த்திடத் தீரும் பாவமே.


ஆவினில் அஞ்சு உகந்து ஆடும் அண்ணலை - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்துபொருள்களால் அபிஷேகம் செய்யப்பெறும் தலைவனை;

நாவினில் வேதனை - திருநாவினால் வேதங்களைப் பாடி அருளியவனை;

நாக-நாணனை - அரையில் பாம்பை அரைநாணாக அணிந்தவனை;

மூவிலை-வேலனை - திரிசூலத்தை ஏந்தியவனை;

முருகன்பூண்டியில் தேவினை - திருமுருகன்பூண்டியில் உறைகின்ற தெய்வத்தை; (தே - தெய்வம்);

வாழ்த்திடத் தீரும் பாவமே - துதித்தால் பாவம் தீரும்;


4)

பொடியணி மார்பினில் புரிவெண் ணூலனை

வடியுடை மழுவனை மழவெள் ளேற்றனை

முடிமிசைப் பிறையனை முருகன் பூண்டியில்

அடிகளை அடிதொழ அல்லல் இல்லையே.


பொடி அணி மார்பினில் புரி-வெண்ணூலனை - திருநீற்றைப் பூசிய மார்பில் வெண்மையான முப்புரிநூல் அணிந்தவனை;

வடியுடை மழுவனை - கூர்மையான மழுவை உடையவனை; (வடி - கூர்மை); (சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடியுடை மழுவேந்தி");

மழ-வெள்ளேற்றனை - இளைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனை;

முடிமிசைப் பிறையனை - தலைமேல் பிறையை அணிந்தவனை;

முருகன்பூண்டியில் அடிகளை - திருமுருகன்பூண்டியில் உறைகின்ற சுவாமியை;

அடிதொழ அல்லல் இல்லையே - வழிபட்டால் துன்பம் தீரும்;


5)

கூடிய கணம்பறை கொட்டக் கானிடை

ஆடியைப் போர்புரி ஆனைத் தோலது

மூடிய மார்பனை முருகன் பூண்டியில்

நாடிய அன்பரை நன்மை நண்ணுமே.


கூடிய கணம் பறை கொட்டக் கானிடை ஆடியைப் - பூதகணங்கள் கூடிப் பறைகளை வாசிக்கச் சுடுகாட்டில் ஆடுகின்றவனை; (கான் - காடு - சுடுகாடு);

போர் புரி ஆனைத்-தோல்அது மூடிய மார்பனை - வந்து போர்செய்த யானையின் தோலை உரித்துப் போர்வையாக அணிந்த மார்பினனை;

முருகன்பூண்டியில் நாடிய அன்பரை நன்மை நண்ணுமே - திருமுருகன்பூண்டியில் விரும்பி வழிபடும் பக்தர்களை நன்மை அடையும்;


6)

ஐம்மலர்க் கணையினன் அழியச் சீறியை

அம்மையும் அப்பனும் ஆன ஈசனை

மும்மலம் இல்லியை முருகன் பூண்டியில்

செம்மலை அடிதொழச் செல்வ(ம்) மல்குமே.


ஐம்மலர்க்-கணையினன் அழியச் சீறியை - ஐந்து மலரம்புகளை உடைய மன்மதனைச் சினந்து எரித்தவனை; (சீறி - சீறியவன் - கோபித்தவன்);

அம்மையும் அப்பனும் ஆன ஈசனை - உமையொரு பங்கன் ஆன இறைவனை; எல்லார்க்கும் தாயும் தந்தையும் ஆனவனை;

மும்மலம் இல்லியை - நின்மலனை;

முருகன்பூண்டியில் செம்மலை - திருமுருகன்பூண்டியில் உறைகின்ற பெருமைமிக்கவனை;

அடிதொழச் செல்வம் மல்குமே - வழிபட்டால் செல்வம் மிகும்;


7)

அன்பனை இன்பனை அங்கி வாயுமால்

அம்பெனக் கொண்டெயில் அன்றெ ரித்தருள்

மொய்ம்பனை அழகிய முருகன் பூண்டியில்

நம்பனை அடிதொழ நடலை இல்லையே.


அன்பனை இன்பனை - அன்புடையவனை, இன்ப வடிவினனை;

அங்கி வாயு மால் அம்பு எனக் கொண்டு எயில் அன்று எரித்தருள் மொய்ம்பனை - அக்கினி வாயு திருமால் மூவரையும் ஓர் அம்பாகக் கொண்டு முன்பு முப்புரங்களை எரித்த வீரனை; (மொய்ம்பன் - வீரன்);

அழகிய முருகன்பூண்டியில் நம்பனை - அழகிய திருமுருகன்பூண்டியில் உறைகின்றவனும் நம்பன் (விரும்பத்தக்கவன்) என்ற திருநாமம் உடையவனுமான சிவபெருமானை;

அடிதொழ நடலை இல்லையே - வழிபட்டால் துன்பம் இல்லை; (நடலை - துன்பம்);


8)

மலையெறி அரக்கனை வாட ஊன்றிய

தலைவனைச் சங்கரன் தன்னை வாரணி

முலையினள் பங்கனை முருகன் பூண்டியில்

நிலையனைத் தொழுதெழ நீங்கும் பாவமே.


மலை எறி அரக்கனை வாட ஊன்றிய தலைவனைச் - கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற இராவணனைப் பாதவிரல் ஒன்றை ஊன்றி நசுக்கிய தலைவனை;

சங்கரன்-தன்னை - நன்மைசெய்பவனை;

வார் அணி முலையினள் பங்கனை - கச்சு அணிந்த முலையினளான உமையை ஒரு பங்காக உடையவனை;

முருகன்பூண்டியில் நிலையனைத் - திருமுருகன்பூண்டியில் உறைகின்றவனை;

தொழுதெழ நீங்கும் பாவமே - தொழுதால் பாவங்கள் நீங்கும்;


9)

முளரியின் மேலுறை முனிவன் கன்றினால்

விளவெறி மால்தொழ வீங்கு சோதியை

முளைமதிச் சடையனை முருகன் பூண்டியில்

இளவெரு தேறியை ஏத்தல் இன்பமே.


முளரியின்மேல் உறை முனிவன் - தாமரைமேல் உறையும் பிரமனும்; (முளரி - தாமரை); (முனிவன் - இங்கே, பிரமன்); (சம்பந்தர் தேவாரம் - 2.8.9 - "மாலினோடரு மாமறை வல்ல முனிவனும்");

கன்றினால் விள எறி மால் தொழ - கன்றின் உருவத்தில் வந்த வத்ஸாசுரனை வீசியெறிந்து விளாங்கனிகள் விழுமாறு செய்த திருமாலும் தொழுமாறு ; (திருவாசகம் - திருத்தோணோக்கம் - 8.15.2 - "கன்றால் விளவெறிந்தான் பிரமன் காண்பரிய" - கன்றால் விளாங்கனியை எறிந்த வரலாறு கிருஷ்ணாவதார நிகழ்ச்சி); (திருப்பாவை - 24 - "கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி");

வீங்கு சோதியை - உயர்ந்த ஜோதியை; (வீங்குதல் - வளர்தல்)

முளைமதிச் சடையனை - பிறையைச் சடையில் அணிந்தவனை;

முருகன்பூண்டியில் இள-எருது ஏறியை ஏத்தல் இன்பமே - திருமுருகன்பூண்டியில் உறைகின்றவனும் இளைய இடபத்தை வாகனமாக உடையவனுமான பெருமானை வணங்குதல் இன்பம்;


10)

நிந்தனை செய்துழல் நீசர் சொல்விடும்

கந்தனைத் தந்தருள் நெற்றிக் கண்ணனை

முந்திய முதல்வனை முருகன் பூண்டியில்

எந்தையை ஏத்திட எய்தும் இன்பமே.


நிந்தனை செய்து உழல் நீசர் சொல் விடும் - வைதிகநெறியை பழித்துப் பேசித் திரிகின்ற கீழோர்களது பேச்சை மதியாது நீங்குங்கள்; (விடுதல் - நீங்குதல்); (உம் - ஏவற்பன்மைவிகுதி);

கந்தனைத் தந்தருள் நெற்றிக்கண்ணனை - முருகனைப் பெற்ற முக்கண்ணனை;

முந்திய முதல்வனை - யாவர்க்கும் முற்பட்டவனும் முதன்மை உடையவனுமான சிவபெருமானை; (அப்பர் தேவாரம் - 6.41.9 - "முந்திய முக்கணாய் நீயே என்றும்");

முருகன்பூண்டியில் எந்தையை - திருமுருகன்பூண்டியில் உறைகின்ற எம் தந்தையை;

ஏத்திட எய்தும் இன்பமே - வணங்கினால் இன்பம் வந்தடையும்;


11)

அப்பெரு முனிவர்கட் காலின் கீழறம்

செப்பிய ஐயனைத் தேவ தேவனை

முப்புரி நூலனை முருகன் பூண்டியில்

அப்பனை அடிதொழும் அன்பர்க் கின்பமே.


அப்-பெரு-முனிவர்கட்கு ஆலின்கீழ் அறம் செப்பிய ஐயனைத் - கல்லால-மரத்தின்கீழ்ச் சனகாதியர்களுக்கு நான்மறைப்-பொருளை உபதேசித்த தட்சிணாமூர்த்தியை;

தேவதேவனை - தேவர்க்கெல்லாம் தேவனை;

முப்புரி-நூலனை - மார்பில் பூணூல் அணிந்தவனை;

முருகன்பூண்டியில் அப்பனை - திருமுருகன்பூண்டியில் உறைகின்ற தந்தையை;

அடிதொழும் அன்பர்க்கு இன்பமே - வணங்கும் பக்தர்களுக்கு இன்பமே வந்தடையும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment