2018-07-07
V.058 - தேயமே மின் - அனுலோம-விலோமம்
---------------------------------
(குறள்வெண்செந்துறை)
* முற்குறிப்பு: அனுலோம-விலோமம் (a.k.a அனுலோம-பிரதிலோமம் - अनुलोम-प्रतिलोमम्):
பாடலை முதலெழுத்திலிருந்து தொடங்கி வரிசையாகப் படித்தால் ஒரு பாடலும், கடைசியெழுத்திலிருந்து தொடங்கி எதிர்வரிசையில் மாலைமாற்றைப் போலப் படித்தால் (i.e. when read in reverse order from end to beginning) இன்னொரு பாடலும் அமையும். (வடமொழியில் இத்தகைய அமைப்பில் 30 பாடல்களால் ஆன ராகவயாதவீயம் என்ற நூல் உள்ளது).
(இடம்வலம் & வலம்இடம் என்று இருவழியிலும் ஒன்றாகவே படிக்கின்ற சம்யுக்தாக்ஷர எழுத்துமுறை உள்ள சம்ஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளைவிடத் தமிழில் இப்படிப்பட்ட பாடல்கள் எழுவது இன்னும் அரிது).
தேய மேமின் வார்நீர் வேணியா
னேய னேகா வரதா காலமே.
(மேலுள்ள பாடலை முடிவிலிருந்து தொடங்கி வலமிடமாகப் படித்தால் கிட்டும் பாடல்):
மேல காதா ரவகா னேயனே
யாணி வேர்நீர் வான்மி மேயதே.
1. இடவலம் (normal reading sequence) பொருள்:
a) தேயமே மின் வார் நீர் வேணி ஆன் நேயனே கா வரதா காலமே =
மின் வார் நீர் வேணி ஆன் நேயனே, வரதா, தேயமே கா காலமே = மின்னல் போன்ற, நீண்ட, கங்கை தங்கிய சடையை உடையவனும் இடபத்தை வாகனமாக விரும்பியவனும், வரம் அருள்பவனுமான சிவபெருமானே. நாட்டை விரைவில் காப்பாயாக; (மின் - மின்னல்; ஒளி); (வார்தல் - நீள்தல்); (வேணி - சடை); (ஆன் - இங்கே, எருது); (தேயம் - தேசம்; நாடு); (காலம் - தக்க சமயம்);
b) இப்பாடலைத் - "தேயமே மின் வார் நீர் வேணியானே அனேகா வரதா காலமே" என்றும் பிரிக்கலாம். அப்படிப் பிரித்தால், 'கா' என்ற சொல்லை வருவித்துப் பொருள்கொள்ளவேண்டும்;
= மின்னல் போன்ற, நீண்ட, கங்கை தங்கிய சடையானே; அனேகனே; வரம் அருள்பவனே; நாட்டை விரைவில் காப்பாயாக; (அனேகன் - பல ஆகியவன்); திருவாசகம் - சிவபுராணம் - 8.1 - அடி-5 - "ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க");
2. வலமிடம் (reverse reading sequence) பொருள்:
மேலகா, தாரவ, கான் நேயனே, ஆணி வேர், நீர் வான்மி மேய தே.
மேலகா - சிவலோகத்தில் இருப்பவனே; (மேலகம் - மேல் வீடு);
தாரவ - மாலை அணிந்தவனே;
கான் நேயனே - சுடுகாட்டை விரும்பியவனே;
ஆணி-வேர் - அனைத்திற்கும் ஆதியாக இருப்பவனே; சிறந்த பொன் போன்றவனே; எல்லாவற்றிற்கும் வேர் போல உள்ளவனே; (ஆணி, வேர் என்று தனித்தனியேயும் பொருள்கொள்ளக்கூடும்); (ஆணிவேர் - மூலவேர்); (ஆணி - பொன் உரையாணி); (அப்பர் தேவாரம் - 5.2.4 - "ஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற தாணுவை");
நீர் வான்மி மேய தே - கடல் அருகுள்ள திருவான்மியூரில் உறைகின்ற தேவனே;
("போற்றி" என்ற சொல்லை வருவித்துப் பொருள்கொள்க);
"நீர்" என்பதை நீ என்பதன் ஒருமை பன்மை மயக்கம் என்றுகொண்டும் பொருள்கொள்ளல் ஆம். அப்படிப் பொருள்கொண்டால்:
சிவலோகனே, மாலை அணிந்தவனே, சுடுகாட்டை விரும்பியவனே, அனைத்திற்கும் ஆதியாக இருக்கின்ற நீ திருவான்மியூரில் உறைகின்ற தேவன்.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment