2018-06-18
P.439 - வெண்ணெய்நல்லூர்
-------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனதானா)
(தனதானன தானன தானன தானா - என்றும் நோக்கலாம்)
(சம்பந்தர் தேவாரம் - 1.32.1 - "ஓடேகல னுண்பது மூரிடு பிச்சை")
(சம்பந்தர் தேவாரம் - 2.37.1 - "சதுரம் மறைதான் துதிசெய் துவணங்கும்")
1)
திரியும் புர(ம்)மூன் றவைசெந் தழல்மூழ்க
எரியும் கணையொன் றினையே வியவீசா
விரியும் பொழில்சூழ்ந் தழகார் வெணெய்நல்லூர்க்
கரியின் னுரியாய் துயரம் களையாயே.
( --- தனதானன தானன தானன தானா ---
திரியும்புர(ம்) மூன்றவை செந்தழல் மூழ்க
எரியும்கணை ஒன்றினை ஏவிய ஈசா
விரியும்பொழில் சூழ்ந்தழ(கு) ஆர்வெணெய் நல்லூர்க்
கரியின்னுரி யாய்துய ரம்களை யாயே.)
திரியும் புரம் மூன்று அவை செந்தழல் மூழ்க எரியும் கணை ஒன்றினை ஏவிய ஈசா - திரிந்த முப்புரங்கள் செந்தீயில் முழ்கும்படி எரிகின்ற (அக்கினியை நுனியில் உடைய) ஓர் அம்பை எய்த ஈசனே;
விரியும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் வெணெய்நல்லூர்க் - விரிந்த சோலை சூழ்ந்த அழகிய திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற; (வெணெய்நல்லூர் - வெண்ணெய்நல்லூர்; இடைக்குறை விகாரம்);
கரியின் உரியாய் - யானைத்தோலைப் போர்த்தவனே; (கரியின்னுரி - னகர ஒற்று விரித்தல் விகாரம்);
துயரம் களையாயே - என் துயரங்களைத் தீர்த்து அருள்க;
2)
உடையாய் பிரமன் தலையோர் கலனாக
மடவார் இடுமுண் பலிதேர்ந் துழல்மன்னே
விடையே றியவித் தகனே வெணெய்நல்லூர்ச்
சடையாய் தமியேன் வினைசாய்த் தருளாயே.
உடையாய் பிரமன் தலை ஓர் கலனாக - பிரமனது மண்டையோட்டை ஒரு பிச்சைப் பாத்திரமாக உடையவனே; (உடையாய் - "சுவாமியே" என்று தனியாகவே பொருள்கொள்ளலும் ஆம்);
மடவார் இடும் உண்பலி தேர்ந்து உழல் மன்னே - பெண்கள் இடும் பிச்சையை ஏற்றுத் திரிகின்ற அரசனே; (உண்பலி - பிச்சை); (மன் - அரசன்);
விடை ஏறிய வித்தகனே - இடபவாகனனே;
வெணெய்நல்லூர்ச் சடையாய் - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற ஜடாதாரியே;
தமியேன் வினை சாய்த்தருளாயே - என் வினைகளை அழித்து அருள்வாயாக; (தமி - தனிமை; கதியின்மை);
3)
மடமான் அனநோக் குடையாள் மணவாளா
கடமா உரிசெய் தவனே கமழ்தார்போல்
விடமார் அரவம் புனைவாய் வெணெய்நல்லூர்
இடமா மகிழ்வாய் இடர்தீர்த் தருளாயே.
மடமான் அன நோக்கு உடையாள் மணவாளா - இளமான் போன்ற பார்வையுடைய உமைமங்கை மணவாளனே;
கடமா உரி செய்தவனே - மதநீர் பொழியும் யானையின் தோலை உரித்தவனே; (கடம் - யானையின் மதநீர்); (அப்பர் தேவாரம் - 4.8.8 - "கடமா உரித்த உடைதோல்")
கமழ் தார் போல் விடம் ஆர் அரவம் புனைவாய் - மணம் கமழும் மாலை போல விஷப்பாம்பை அணிந்தவனே;
வெணெய்நல்லூர் இடமா மகிழ்வாய் - திருவெண்ணெய்நல்லூரில் விரும்பி உறைகின்றவனே;
இடர் தீர்த்தருளாயே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;
4)
பண்ணார் தமிழ்சுந் தரர்பா டிடமுன்னம்
மண்ணோர் அவையிற் பழவா வணம்நீட்டும்
விண்ணோர் தலைவா பொழில்சூழ் வெணெய்நல்லூர்க்
கண்ணார் நுதலாய் கலிதீர்த் தருளாயே.
பண் ஆர் தமிழ் சுந்தரர் பாடிட, முன்னம் மண்ணோர் அவையில் பழ-ஆவணம் நீட்டும் விண்ணோர் தலைவா - பண் நிறைந்த பாமாலைகளைச் சுந்தரர் பாடும் பொருட்டு, முன்பு ஆன்றோர்கள் கூடிய சபையில் ஒரு பழைய ஓலையை நீட்டிய தேவர் தலைவனே; (அவை - சபை); (ஆவணம் - பத்திரம்; ஓலை);
பொழில் சூழ் வெணெய்நல்லூர்க் கண் ஆர் நுதலாய் - சோலை சூழ்ந்த திருவெண்ணெய்நல்லூரில் உறையும் நெற்றிக்கண்ணனே; (நுதல் - நெற்றி);
கலி தீர்த்து அருளாயே - துன்பத்தைத் தீர்த்து அருள்க; (கலி - துன்பம்);
5)
பொல்லா விடமோர் மணிபோற் புனைகண்டா
சொல்லார் தமிழ்சுந் தரர்பா டமகிழ்ந்தாய்
வில்லாற் புரமெய் தவனே வெணெய்நல்லூர்
இல்லா உடையாய் இடர்தீர்த் தருளாயே.
பொல்லா-விடம் ஓர் மணிபோல் புனை கண்டா - கொடிய நஞ்சை ஒரு நீலமணி போலக் கண்டத்தில் அணிந்தவனே;
சொல் ஆர் தமிழ் சுந்தரர் பாட மகிழ்ந்தாய் - செஞ்சொல் நிறைந்த தமிழ்ப்பாமாலைகளைச் சுந்தரர் பாடக் கேட்டு மகிழ்ந்தவனே;
வில்லால் புரம் எய்தவனே - மேருமலை-வில்லால் ஒரு கணை எய்து முப்புரங்களை அழித்தவனே;
வெணெய்நல்லூர் இல்லா உடையாய் - திருவெண்ணெய்நல்லூரில் நீங்காது உறைகின்றவனே;
இடர் தீர்த்து அருளாயே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;
6)
சுறவார் கொடியான் உடலம் சுடவல்லாய்
நெறியார் குழலிக் கிறையே நிரைகொன்றை
வெறியார் குரவம் புனைவாய் வெணெய்நல்லூர்ப்
பொறியார் அரவா அடியேன் புகல்நீயே.
சுறவு ஆர் கொடியான் உடலம் சுட வல்லாய் - மகரக்கொடியை உடைய மன்மதனது உடலை எரித்தவனே; ( சுற/சுறவு - சுறா - மகரமீன்);
நெறி ஆர் குழலிக்கு இறையே - சுருண்ட கூந்தலை உடைய உமைக்குக் கணவனே; (நெறி - சுருள்);
நிரை-கொன்றை வெறி ஆர் குரவம் புனைவாய் - கொன்றைமலரையும் மணம் மிக்க குராமலரையும் அணிந்தவனே; (நிரைத்தல் - கோத்தல்; தொடுத்தல்); (வெறி - வாசனை);
வெணெய்நல்லூர்ப் பொறி ஆர் அரவா - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்றவனே, புள்ளிகள் திகழும் பாம்பை அணிந்தவனே; (பொறி - புள்ளி);
அடியேன் புகல் நீயே - நீயே என் புகலிடம்; (சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - "சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்");
7)
வாவா எனநா வலர்கோன் தனையாண்டாய்
மூவா முதல்வா அயில்மூ விலைவேலா
மேவார் எயிலெய் தவனே வெணெய்நல்லூர்த்
தேவா சிவனே தெருள்தந் தருளாயே.
"வா வா" என நாவலர்கோன்தனை ஆண்டாய் - நாவலர்கோனை (சுந்தரரை) "வா, வந்து அடிமைசெய்" என்று சொல்லி ஆட்கொண்டவனே;
மூவா முதல்வா - மூப்பு இல்லாத முதல்வனே;
அயில் மூவிலை வேலா - கூர்மையான திரிசூலத்தை ஏந்தியவனே;
மேவார் எயில் எய்தவனே - பகைவர்களது கோட்டைகள் மூன்றையும் அம்பு எய்து அழித்தவனே; (மேவார் - பகைவர்);
வெணெய்நல்லூர்த் தேவா சிவனே - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற தேவனே, சிவபெருமானே;
தெருள் தந்து அருளாயே - எனக்குத் தெளிந்த அறிவைத் தந்து அருள்வாயாக; (தெருள் - அறிவின் தெளிவு; ஞானம்);
8)
வரைபேர்த் தவன்வாய் ஒருபத் தழவூன்றிக்
கரவா ளொடுநாள் அருளும் கயிலாயா
விரையார் பொடிமே னியினாய் வெணெய்நல்லூர்
அரையா அமலா அடியேற் கருளாயே.
வரை பேர்த்தவன் வாய் ஒரு பத்து அழ ஊன்றிக் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்து-வாய்களும் அழும்படி (ஒரு விரலை) ஊன்றி அவனை நசுக்கி; (வரை - மலை);
கர-வாளொடு நாள் அருளும் கயிலாயா - பின் (அவன் பன்னாள் பாடித் தொழக்கண்டு இரங்கி) அவனுக்கு ஒரு வாளையும் நீண்ட ஆயுளையும் அருளிய கயிலைமலையானே;
விரை ஆர் பொடி மேனியினாய் - மணம் மிக்க திருநீற்றை உடல்மேல் பூசியவனே;
வெணெய்நல்லூர் அரையா அமலா - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற தலைவனே; மலமற்றவனே;
அடியேற்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக;
9)
ஓதத் திரைமேல் துயில்மால் அயனோடிப்
பாதம் முடிகாண் பரியாய் பரமேட்டீ
வேதப் பொருளே வயல்சூழ் வெணெய்நல்லூர்ப்
போதத் துருவே அடியேன் புகல்நீயே.
ஓதத் திரைமேல் துயில் மால் அயன் ஓடிப் பாதம் முடி காண்பு அரியாய் - கடலின் அலைமேல் துயில்கொள்ளும் விஷ்ணுவும் பிரமனும் வானில் பறந்து சென்றும் நிலத்தை அகழ்ந்தும் அடிமுடி காண ஒண்ணாதவனே; (ஓதம் - கடல்); (திரை - அலை);
பரமேட்டீ - பரம்பொருளே;
வேதப்-பொருளே - வேதத்தின் பொருளாக விளங்குவனே;
வயல் சூழ் வெணெய்நல்லூர்ப் போதத்து-உருவே - வயல்கள் சூழ்ந்த திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற ஞானவடிவினனே; (போதம் - ஞானம்);
அடியேன் புகல் நீயே - நீயே என் புகலிடம்;
10)
குற்றம் பயில்நெஞ் சினர்கூற் றினைநீங்கும்
சுற்றும் திகிரிப் படைமாற் கருள்தூயன்
வெற்றிக் கொடிமேல் விடையான் வெணெய்நல்லூர்க்
கற்றைச் சடையான் கழல்நற் புணையாமே.
குற்றம் பயில் நெஞ்சினர் கூற்றினை நீங்கும் - (வேதநெறியைப் பழிக்கின்ற) வஞ்சநெஞ்சர்களது பேச்சை ஒழியுங்கள்;
சுற்றும் திகிரிப்-படை மாற்கு அருள் தூயன் - சக்கராயுதத்தைத் திருமாலுக்கு அருள்செய்த தூயவன்; (திகிரி - சக்கரம்); (படை - ஆயுதம்);
வெற்றிக்-கொடிமேல் விடையான் - இடபச்சின்னம் பொறித்த வெற்றிக்கொடியை உடையவன்;
வெணெய்நல்லூர்க் கற்றைச்-சடையான் கழல் நல்-புணை ஆமே - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற, கற்றைச் சடையை உடைய பெருமானது திருவடி (நமக்குப் பிறவிக்கடலைக் கடப்பதற்கு) நல்ல தெப்பம் ஆகும்; (புணை - தெப்பம்);
11)
எண்ணா தடியார்க் கிடர்செய் இயமன்றன்
திண்ணார் அகலத் துதைசெய் திரிசூலா
வெண்ணீ றணிவாய் விகிர்தா வெணெய்நல்லூர்
அண்ணா அருளென் றடைவார் கவலாரே.
"எண்ணாது அடியார்க்கு இடர்செய் இயமன்தன் திண் ஆர் அகலத்து உதைசெய் திரிசூலா - "யோசித்துப் பாராமல் மார்க்கண்டேயரைக் கொல்ல முயன்ற காலனது வலிமைமிக்க மார்பில் உதைத்தவனே, திரிசூலத்தை ஏந்தியவனே; (திண் - வலிமை); (அகலம் - மார்பு);
வெண்ணீறு அணிவாய், விகிர்தா - திருநீற்றைப் பூசியவனே, மாறுபட்ட செயலினனே; (விகிர்தன் - மாறுபட்ட செயலினன் - சிவன் திருநாமம்);
வெணெய்நல்லூர் அண்ணா அருள்" என்று அடைவார் கவலாரே - திருவெண்ணய்நல்லூரில் உறைகின்ற அண்ணலே அருள்வாயாக" என்று சரண்புகுந்த பக்தர்களுக்கு கவலை இல்லை; (அண்ணா - அண்ணால் என்பது, அண்ணா என மருவிற்று); (கவல்தல் - கவலைப்படுதல்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment