Tuesday, August 5, 2025

P.432 - ஆமாத்தூர் - ஓர்மழ விடையதேறி

2018-04-19

P.432 - ஆமாத்தூர் (திருவாமாத்தூர்)

---------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு; விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீர் வரலாம்)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - வேதியா வேத கீதா)


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

ஓர்மழ விடைய தேறி ஊர்ப்பலிக் குழலும் செல்வர்

ஆர்கழல் போற்றி நின்ற அடியவன் பகீர தற்கா

நீரழற் சடையி லேற்ற நின்மலர் நீற ணிந்த

ஆரழல் மேனி ஐயர் ஆமாத்தூர் அழக னாரே.


ஓர் மழ-விடையது ஏறி ஊர்ப்பலிக்கு உழலும் செல்வர் - ஓர் இளைய எருதின்மீது ஏறி ஊரார் இடும் பிச்சைக்குத் திரியும் செல்வர்;

ஆர்-கழல் போற்றி நின்ற அடியவன் பகீரதற்கா நீர் அழற்-சடையில் ஏற்ற நின்மலர் - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை வழிபட்ட பக்தன் பகீரதனுக்காகக் கங்கையைத் தீப் போன்ற செஞ்சடையில் ஏற்றவர்;

நீறு அணிந்த ஆரழல் மேனி ஐயர் - நீறு பூத்த நெருப்புப் போலத் திருநீற்றைப் பூசிய செம்மேனியை உடைய தலைவர்;

ஆமாத்தூர் அழகனாரே - திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்; (* அழகியநாதர் / அபிராமேஸ்வரர் - இத்தலத்து ஈசன் திருநாமம்);


2)

மெல்லியல் மாது தன்னை மேனியில் வாம பாகம்

புல்லிய நாதர் சாம்பற் பூச்சினர் தவம்பு ரிந்த

வில்வல விசய னுக்கு விரும்பிய படைய ளித்த

அல்லன மேனி வேடர் ஆமாத்தூர் அழக னாரே.


மெல்-இயல் மாது-தன்னை மேனியில் வாம-பாகம் புல்லிய நாதர் - மென்மையான உமையைத் திருமேனியில் இடப்பக்கம் வைத்த தலைவர்; (புல்லுதல் - தழுவுதல்);

சாம்பல் பூச்சினர் - திருநீற்றைப் பூசியவர்;

தவம் புரிந்த வில்-வல விசயனுக்கு விரும்பிய படை அளித்த அல் அன மேனி வேடர் - காட்டில் தவம் செய்தவனும் வில்வித்தையில் வல்லவனுமான அர்ஜுனனுக்கு அவன் விரும்பிய பாசுபதாஸ்திரத்தை அளித்த, இருள் போன்ற கரிய மேனியை உடைய வேடர்; (அல் - இரவு; இருள்);

ஆமாத்தூர் அழகனாரே - திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்;


3)

இருவரை மத்த தாக எறிகடல் கடைந்த போது

கருவிடம் தோன்றக் கண்டு கலங்கிய உம்பர் ஏத்தத்

திருமிடற் றிட்ட வள்ளல் செஞ்சுடர் வண்ணர் அங்கம்

அருமறை ஓது நாவர் ஆமாத்தூர் அழக னாரே.


இரு-வரை மத்து-அது ஆக எறி-கடல் கடைந்த போது - பெரிய மலையை மத்தாகக்கொண்டு அலைவீசும் கடலைக் கடைந்தபோது; (இருமை - பெருமை); (வரை - மலை);

கரு-விடம் தோன்றக் கண்டு கலங்கிய உம்பர் ஏத்தத் - அங்கே கரிய நஞ்சு எழவும் அதனைக் கண்டு மனம்வருந்திய தேவர்கள் ஈசனைத் துதிக்க;

திருமிடற்று இட்ட வள்ளல் - அவர்களுக்கு இரங்கி அந்த விஷத்தைக் கண்டத்தில் வைத்த வள்ளல்;

செஞ்சுடர் வண்ணர் - செந்தீப் போன்ற செம்மேனியர்;

அங்கம் அருமறை ஓது நாவர் - அரிய வேதங்களையும் ஆறு-அங்கங்களையும் ஓதியவர்;

ஆமாத்தூர் அழகனாரே - திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்;


4)

எண்ணிரு குருடர் நாளும் இன்-தமிழ்ப் பதிக மாலை

பண்ணொடு பாடிப் பாதம் பரவிட நின்ற ஈசர்

விண்ணவர் போற்று முக்கண் விகிர்தனார் விடைய தேறும்

அண்ணலார் மதிலி லங்கும் ஆமாத்தூர் அழக னாரே.


எண்ணிரு-குருடர் நாளும் இன்-தமிழ்ப் பதிக-மாலை பண்ணொடு பாடிப் பாதம் பரவிட நின்ற ஈசர் - பதினாறு குருடர்கள் தினமும் தேவாரத் திருப்பதிகங்கள் பாடி வழிபாடு செய்த ஈசர்; (* இத்திருக்கோயிலில் திருப்பதிகம் பாடிவருவதற்குக் குருடர்கள் பதினாறு பேர்களும், அவர்களுக்குக் கண்காட்டுவார் இருவரும் ஆகப் பதினெண்மர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். - இது இத்தலத்தில் உள்ள கல்வெட்டுச் செய்தி - தருமை ஆதீன உரைநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது);

விண்ணவர் போற்று முக்கண் விகிர்தனார் - தேவர்கள் எல்லாம் போற்றும் முக்கண்ணர், "விகிர்தன்" என்ற திருநாமம் உடையவர்;

விடைஅது ஏறும் அண்ணலார் - இடப-வாகனம் உடைய தலைவர்;

மதில் இலங்கும் ஆமாத்தூர் அழகனாரே - மதில் சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்;


5)

நித்தியர் சுடலை நீற்றர் நீள்மதி யோடு பாம்பை

வைத்தவர் மலரம் பெய்த மாரனைச் சுட்ட கண்ணர்

முத்தன நகையாள் பாகர் மூவிலை வேலர் போர்செய்

அத்தியின் உரிவை போர்த்த ஆமாத்தூர் அழக னாரே.


நித்தியர் சுடலை-நீற்றர் - அழிவற்றவர்; அதன் அடையாளமாகச் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியவர்;

நீள்-மதியோடு பாம்பை வைத்தவர் - திருமுடிமேல் பிறையோடு பாம்பையும் சேர்த்து வைத்தவர்;

மலரம்பு எய்த மாரனைச் சுட்ட கண்ணர் - மலர்க்கணை தொடுத்த மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணர்; (மாரன் - மன்மதன்);

முத்து அன நகையாள் பாகர் - முத்துப் போன்ற பற்களையுடைய உமையை ஒரு பாகமாக உடையவர்; (* முத்தாம்பிகை - இத்தலத்து இறைவி திருநாமம்);

மூவிலை-வேலர் - திரிசூலம் ஏந்தியவர்;

போர்செய் அத்தியின் உரிவை போர்த்த - போர் செய்த யானையின் தோலை உரித்துப் போர்த்த; (அத்தி - ஹஸ்தி - யானை); (உரிவை - தோல்);

ஆமாத்தூர் அழகனாரே - திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்;


6)

சக்கரம் தரைமேற் கீறிச் சலந்தரன் தனைய ழித்தார்

அக்கடல் வண்ணன் வேண்ட ஆழியை அவனுக் கீந்தார்

கொக்கிற கேறு கோலக் குஞ்சியர் ஆர மாக

அக்கினைப் பூணு கின்ற ஆமாத்தூர் அழக னாரே.


சக்கரம் தரைமேல் கீறிச் சலந்தரன்-தனை அழித்தார் - நிலத்தின்மேல் ஒரு சக்கரத்தை வரைந்து அதுகொண்டு சலந்தராசுரனை அழித்தவர்;

அக்-கடல்வண்ணன் வேண்ட ஆழியை அவனுக்கு ஈந்தார் - நீலவண்ணத் திருமால் வேண்டவும், அந்தச் சக்கராயுதத்தை அவனுக்கு அருள்செய்தவர்;

கொக்கிறகு ஏறு கோலக் குஞ்சியர் - கொக்கிறகு என்ற பூவைச் சூடியவர்; கொக்கு வடிவாய குரண்டாசுரனை அழித்த அடையாளமாகக் கொக்கின் இறகைச் சென்னியில் சூடியவர்;

ஆரமாக அக்கினைப் பூணுகின்ற - மாலையாக எலும்பை அணிந்த; (ஆரம் - மாலை); (அக்கு - எலும்பு);

ஆமாத்தூர் அழகனாரே - திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்;


7)

துணிமதி குரவம் கொன்றை சூடிய சடையின் மீது

பணியையும் வாழ வைத்தார் பாய்புலித் தோலர் நீல

மணிதிகழ் கண்டர் அன்பர் வல்வினை தீர்க்கும் நல்லர்

அணிவயல் புடைய ணிந்த ஆமாத்தூர் அழக னாரே.


துணி-மதி, குரவம், கொன்றை சூடிய சடையின் மீது பணியையும் வாழ வைத்தார் - நிலாத்துண்டம், குரவமலர், கொன்றைமலர் இவற்றைச் சூடிய சடையின்மேல் பாம்பையும் தங்க வைத்தவர்; (துணி - துண்டம்); (பணி - பாம்பு);

பாய்-புலித் தோலர் - பாய்கின்ற புலியின் தோலை ஆடையாக அணிந்தவர்;

நீலமணி திகழ் கண்டர் - ஆலகாலத்தைக் கரிய மணிபோலக் கண்டத்தில் இட்டவர்;

அன்பர் வல்வினை தீர்க்கும் நல்லர் - அடியவர்களது வலிய வினைகளையெல்லாம் தீர்க்கின்ற நல்லவர்;

அணி வயல் புடை அணிந்த ஆமாத்தூர் அழகனாரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்;


8)

வெற்பெறி இலங்கை வேந்தை விரல்நுதி இட்ட டர்த்துப்

பற்பல கீதம் கேட்டுப் பரிந்தொரு வாளும் ஈந்த

பொற்பினர் பூத நாதர் போனக மாக நஞ்சுண்

அற்புதர் கழனி சூழ்ந்த ஆமாத்தூர் அழக னாரே.


வெற்பு எறி- இலங்கை வேந்தை விரல்-நுதி இட்டு அடர்த்துப் - கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற இலங்கை மன்னன் இராவணனைத் திருப்-பாதவிரலின் நுனியை ஊன்றி நசுக்கி; (வேந்து - அரசன்); (நுதி - நுனி); (அடர்த்தல் - நசுக்குதல்);

பற்பல கீதம் கேட்டுப் பரிந்து ஒரு வாளும் ஈந்த பொற்பினர் - (பின் அவன் அழுது பாடிய) பல கீதங்களைக் கேட்டு இரங்கி, அவனுக்கு ஒரு வாளையும் அருளிய பண்பு உடையவர்; (பொற்பு - தன்மை);

பூதநாதர் - பூதப்படையை உடையவர்;

போனகமாக நஞ்சு உண் அற்புதர் - உணவாக விடத்தை உண்ட அதிசயர்; (போனகம் - உணவு);

கழனி சூழ்ந்த ஆமாத்தூர் அழகனாரே - வயல்களால் சூழப்பெற்ற திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்; (கழனி - வயல்);


9)

துடியிடை மங்கை பங்கர் தோற்றமும் முடிவும் இல்லார்

முடியடி நேடிச் சென்ற முராரியும் அயனும் காணா

நெடியதோர் சோதி ஆனார் நித்தலு(ம்) மறவா தேத்தும்

அடியவர்க் கினியர் தேனார் ஆமாத்தூர் அழக னாரே.


துடி-இடை மங்கை பங்கர் - உடுக்குப் போன்ற சிற்றிடை உடைய உமையை ஒரு பங்கில் உடையவர்;

தோற்றமும் முடிவும் இல்லார் - பிறப்பும் இறப்பும் இல்லாதவர்;

முடி அடி நேடிச் சென்ற முராரியும் அயனும் காணா நெடியது ஓர் சோதி ஆனார் - அடியையும் முடியையும் தேடிய திருமால் பிரமன் இவர்களால் காண ஒண்ணாத எல்லையற்றதான ஜோதி ஆனவர்; (நேடுதல் - தேடுதல்); (முராரி - திருமால்);

நித்தலும் மறவாது ஏத்தும் அடியவர்க்கு இனியர் - தினமும் மறத்தல் இன்றி வணங்கும் பக்தர்களுக்கு இன்பம் அளிப்பவர்; (* அடியவர்க்கு இனியர் - அபிராமேஸ்வரர் என்ற திருநாமத்தையும் சுட்டியது);

தேன் ஆர் ஆமாத்தூர் அழகனாரே - வண்டுகள் ஒலிக்கின்ற திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்; (ஆர்த்தல் -ஒலித்தல்);


10)

வம்பர்கள் விரிக்கு(ம்) மாய வலையினிற் சிக்கி டாதீர்

உம்பர்கள் தமக்கு நாதர் உள்கசி அன்பர்க் கெல்லாம்

இம்பரில் நல்கி ஈறில் இன்பமும் புரக்கும் ஈசர்

அம்பொழில் புடைய ணிந்த ஆமாத்தூர் அழக னாரே.


வம்பர்கள் விரிக்கும் மாய-வலையினில் சிக்கிடாதீர் - துஷ்டர்கள் விரிக்கின்ற வஞ்சவலையில் நீங்கள் விழவேண்டா;

உம்பர்கள்-தமக்கு நாதர் - தேவர்களுக்குத் தலைவர்;

உள் கசி அன்பர்க்கு எல்லாம் இம்பரில் நல்கி, ஈறு இல் இன்பமும் புரக்கும் ஈசர் - உள்ளம் உருகி வழிபடும் பக்தர்களுக்கு இவ்வுலகில் வேண்டுவன எல்லாம் அளித்து, அந்தம் இல்லாத பேரின்பமும் அருளும் ஈசர்;

அம்-பொழில் புடை அணிந்த ஆமாத்தூர் அழகனாரே - அழகிய சோலை சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்;


11)

வேகமார் கங்கை தன்னை விரிசடைத் தரிக்க வல்லார்

மேகமார் நீல கண்டர் வெண்மழு சூலம் ஏந்தி

நாகநாண் ஆர்த்த ஐயர் நம்பினார்க் கின்பம் ஈவார்

ஆகமம் அருளிச் செய்த ஆமாத்தூர் அழக னாரே.


வேகம் ஆர் கங்கை-தன்னை விரிசடைத் தரிக்க வல்லார் - விரைவு மிக்க கங்கையாற்றை விரித்த சடையில் தரித்தவர்; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);

மேகம் ஆர் நீலகண்டர் - மேகம் போல் கருமை திகழும் கண்டத்தை உடையவர்; (ஆர்தல் - ஒத்தல்);

வெண்மழு சூலம் ஏந்தி - ஒளி வீசும் மழுவையும் சூலத்தையும் ஏந்தியவர்;

நாகநாண் ஆர்த்த ஐயர் - பாம்பை அரைநாணாகக் கட்டிய தலைவர்;

நம்பினார்க்கு இன்பம் ஈவார் - விரும்பி வழிபடும் பக்தர்களுக்கு இன்பம் அளிப்பவர்; (நம்புதல் - விரும்புதல்);

ஆகமம் அருளிச் செய்த ஆமாத்தூர் அழகனாரே - ஆகமங்களை அருளியவரான, திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment