2018-04-07
P.429 - ஆமூர் (திருவாமூர்)
---------------------------------
(வஞ்சித்துறை - தானா தனதானா; மா மாங்காய் - வாய்பாடு; திருவிருக்குக்குறள் அமைப்பு);
(சம்பந்தர் தேவாரம் - 1.93.1 - "நின்று மலர்தூவி")
முற்குறிப்பு - இப்பாடல்களில் 4 சிறிய அடிகள். அடியின் சிறுமை கருதி, இங்கே, ஒவ்வொரு வரியிலும் 2 அடிகள் இடப்பபட்டுள்ளன.
1)
நீரார் சடையானைச் சீரார் திருவாமூர்
பேராப் பெரியானை ஓராய் மடநெஞ்சே.
கங்கைச் சடையானைத், திரு மிக்க திருவாமூரை நீங்காத பெரியவனைப், பேதை மனமே, நீ எண்ணுவாயாக. (பேர்தல் - நீங்குதல்); (ஓர்தல் - எண்ணுதல்);
2)
சிறைவண் டறையோவா நறையார் பொழிலாமூர்
இறைவன் கழலேத்தப் பறையும் வினைதானே.
சிறகுகளையுடைய வண்டுகளின் ரீங்காரம் ஓயாத வாசப்பொழில் சூழ்ந்த திருவாமூரில் உறையும் இறைவனது திருவடியைப் போற்றினால் வினைகள் அழியும்.
3)
கானை இடமாக்கொள் மானை மணியாமூர்த்
தேனை வழிபட்டு வானைப் பெறலாமே.
சுடுகாட்டை இடமாகக் கொள்ளும் தலைவனை, அழகிய திருவாமூரில் உறையும் தேன் போன்ற சிவபெருமானை வழிபாடு செய்து சிவலோகம் பெறலாம். (கான் - சுடுகாடு); (மான் - தலைவன்); (மணி - அழகு);
4)
துணிவெண் பிறைசூடி அணிகொள் திருவாமூர்த்
துணைவன் கழலேத்தப் பிணிவல் வினைவீடே.
துணி-வெண்-பிறை சூடி - வெண்மையான நிலாத்துண்டத்தைச் சூடியவன்; (துணி - துண்டம்);
அணிகொள் திருவாமூர்த் துணைவன் - அழகிய திருவாமூரில் உறையும் துணைவன்;
கழல் ஏத்தப் பிணி வல்வினை வீடே - அவனது திருவடியை வணங்கினால் நம்மைப் பிணித்துள்ள வலிய வினைகள் நீங்கும்;
5)
சடையன் தனிவெள்ளை விடையன் திருவாமூர்
அடையும் அடியாரை அடையா வினைதானே.
தனி வெள்ளை விடையன் - ஒப்பற்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;
6)
மையம் பொழிலாமூர் ஐயன் அரவாரும்
மெய்யன் அடிபோற்ற வெய்ய வினைவீடே.
மை-அம்-பொழில் ஆமூர் ஐயன் - கரிய அழகிய சோலை சூழ்ந்த திருவாமூரில் உறைகின்ற தலைவன்; (மை - கருமை); ( அம் - அழகு);
அரவு ஆரும் மெய்யன் - திருமேனிமேல் பாம்பை அணிந்தவன்;
அடி போற்ற வெய்ய வினை வீடே - அப்பெருமானது திருவடியை வழிபட்டால் கொடிய வினையெல்லாம் நீங்கும்;
7)
நீல மணிகண்டன் ஆலன் அணியாமூர்ச்
சூலன் துதிபாட மேலை வினைவீடே
நீலமணி கண்டன் - ஆலகாலம் நீலமணிபோலக் கண்டத்தில் திகழ்பவன்;
ஆலன் - கல்லால-மரத்தின்கீழ் இருப்பவன் - தட்சிணாமூர்த்தி;
அணி ஆமூர்ச் சூலன் துதிபாட மேலைவினை வீடே - அழகிய திருவாமூரில் உறையும் சூலபாணியைத் துதித்தால் நம் பழவினை (/ஆகாமியம்) நீங்கும்; (மேலை - முந்தின; அடுத்த; மேல்வினை - ஆகாமியம்);(அப்பர் தேவாரம் - 5.5.4 - "அண்ணாமலை கைதொழ ஓடிப் போகும்நம் மேலை வினைகளே");
8)
பொருப்பைப் பெயர்மூடன் செருக்கை அழியண்ணல்
தருக்கள் மலியாமூர்க் கருத்தன் கழல்காப்பே.
பொருப்பைப் பெயர் மூடன் செருக்கை அழி அண்ணல் - கயிலைமலையைப் பெயர்த்த மூடனான இராவணனது ஆணவத்தை அழித்த பெருமான்; (பொருப்பு - மலை);
தருக்கள் மலி ஆமூர்க் கருத்தன் கழல் காப்பே - மரங்கள் நிறைந்த திருவாமூரில் உறையும் கடவுளின் திருவடிகள் நம் துணை; (தரு - மரம்); (கருத்தன் - கர்த்தன் - கர்த்தா - கடவுள்; தலைவன்);
9)
அரியும் அயன்நேடும் எரியன் எழிலாமூர்ப்
பெரியன் புகழ்பாடப் பிரியும் வினைதானே.
அரியும் அயன் நேடும் எரியன் - திருமாலும் பிரமனும் தேடிய ஜோதிவடிவினன்; (அயன் - அயனும்; உம்மைத்தொகை); (குறிப்பு - அப்பர் தேவாரம் - 4.37.2 - "தூமமுந் தீபங் காட்டி"; திருவாசகம் - அருட்பத்து - 8.29.1 - "பங்கயத்து அயனுமால் அறியா நீதியே"; - இந்த இடங்களில் இரண்டே பொருள்களைச் சொன்னாலும் ஒன்றில் உம் வந்து இன்னொன்றில் உம் இன்றி வந்துள்ளன);
10)
பொய்யர்க் கருளாத ஐயன் அணியாமூர்ச்
செய்யன் கழல்போற்றி செய்ய நலமாமே
பொய்யர்க்கு அருளாத ஐயன் - பொய் பேசித் திரிகின்றவர்களுக்கு அருள் இல்லாத தலைவன்;
அணி ஆமூர்ச் செய்யன் - அழகிய திருவாமூரில் உறையும் செம்மேனியன்;
கழல் போற்றிசெய்ய நலம் ஆமே - அப்பெருமானது திருவடிகளை வழிபட்டால் நன்மை ஆகும்;
11)
அலைவன் புரமெய்த சிலையன் திருவாமூர்
நிலையன் அடியாரை விலகும் வினைதானே.
அலை-வன்-புரம் எய்த சிலையன் - எங்கும் திரிந்து அலைந்த வலிய கொடிய முப்புரங்களை மேருமலை-வில்லால் எய்தவன்; (வன்மை - வலிமை; கொடுமை); (சிலை - வில்; மலை);
திருவாமூர் நிலையன் - திருவாமூரில் உறைகின்றவன்;
அடியாரை விலகும் வினைதானே - (அப்பெருமானது அருளால்) அப்பெருமானது பக்தர்களை அவர்களது வினைகள் நீங்கும்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment