2006-07-18
V.036 - தேர்தன்னில் (பிறிதுபடுபாட்டு - மிறைக்கவி)
-----------
(அறுசீர் & வெண்பா - ஒரே பாடல்)
முற்குறிப்பு: பிறிதுபடுபாட்டு என்பது ஒரே பாடலை வெவ்வேறு சீர், அடி அமைப்புகளாகப் பிரித்து நோக்கினால் இருவகைப்-பாடல் அமைப்புகளாகக் கருதுமாறு அமைவது.
இங்கே, இந்த ஒரே பாடலை வெண்பா என்றும் அறுசீர் விருத்தம் என்றும் நோக்குமாறு அமைந்தது.
1) ---- (வெண்பா) ----
தேர்தன்னில் சென்றம்பால் தீயாரூர் மூன்றெய்தார்
பேர்சொல்லும் பத்தர்க்குப் பித்தர்சே - ஊர்செல்வர்
கார்மிடற்றர் மூன்றுகண்கள் காட்(டு)அயன்மால் பார்க்கவொண்ணார்
ஓர்வார்பா வம்தீர்ப்பார் ஓது.
2) ---- (அறுசீர் விருத்தம் - 6 மா - வாய்பாடு) ----
தேர்தன் னில்சென்(று) அம்பால் தீயார் ஊர்மூன்(று) எய்தார்;
பேர்சொல் லும்பத் தர்க்குப் பித்தர்; சேஊர் செல்வர்;
கார்மி டற்றர்; மூன்று கண்கள் காட்(டு)அ யன்மால்
பார்க்க ஒண்ணார்; ஓர்வார் பாவம் தீர்ப்பார் ஓது.
தேர்தன்னில் சென்று அம்பால் தீயார் ஊர்மூன்று எய்தார் - தேரில் சென்று (ஒரு) கணையால் தீயவர்களான அசுரர்களது முப்புரங்களை எய்து அழித்தவர்;
பேர் சொல்லும் பத்தர்க்குப் பித்தர் - திருநாமத்தைச் சொல்லும் பக்தர்களுக்குப் பேரருள் உடையவர்;
சே ஊர் செல்வர் - இடபவாகனம் ஏறிய திருவாளர்; (சே - எருது); (ஊர்தல் - ஏறுதல்);
கார்-மிடற்றர் - நீலகண்டர்; (மிடறு - கண்டம்);
மூன்று கண்கள் காட்டு, அயன் மால் பார்க்க ஒண்ணார் - முக்கண் உடைய, பிரமன் திருமால் இவர்களால் காண ஒண்ணாதவர்;
ஓர்வார் பாவம் தீர்ப்பார்; ஓது - தியானிப்பவர்களது பாவத்தைத் தீர்ப்பவர்; (என்று / அவரைப்) பாடு; (ஓர்தல் - எண்ணுதல்);
வி. சுப்பிரமணியன்
--------- ---------
No comments:
Post a Comment