06.05 – பலவகை
2012-03-04
06.05.022 - கண் சிவந்த கண்ணுதலான்
----------------------------------------
முற்குறிப்புகள்:
1) "கொடுக்கப்பட்ட படத்திற்குப் பாடல்" என்ற அடிப்படையில் நிகழ்ந்த ஒரு கவியரங்கத்தில் கீழே உள்ள படத்தை ஒட்டி நான் எழுதிய பாடல்:
(My interpretation of the scene depicted in the picture: "A snail is on a railway track and a train is coming out of a tunnel on that track towards it".
The following songs are in that context - in that snail's words. However, all songs are also meaningful in a general standalone manner as well - without any reference to this picture.)
2) நத்தையின் உயிரைக் காக்க ஈசன் அங்கே விளக்கில் சிவப்பு நிறத்தைக்காட்டி இரயிலைத் தடுத்து நிறுத்தி அருள்புரிந்ததை ஒட்டி அந்த நத்தையின் பாடல்கள் இவை! பல பாடல்களில் ஈசனின் செந்நிறம் போற்றப்படுகின்றது!
கொடுக்கப்பட்ட படத்தில் கைகாட்டியோ சிவப்பு விளக்கோ இல்லை. படத்தின் கோணத்திற்கு வெளியே அஃது இருந்ததாகக் கொள்ளப்பட்டது. "தோன்றாத் துணை"!
நாம் நத்தை வேகத்தில் அவனை நோக்கிச் சென்றாலும் அவன் ஒளி வேகத்தில் வந்து நம்மைக் காப்பான்!
கண் சிவந்த கண்ணுதலான்
-----------------------------------
0-1) -- காப்பு -- (கலித்துறை - மா மா மா மா விளங்காய் - என்ற வாய்பாடு)
பத்தி யின்றிப் பாழ்க்கு ழன்று பாரிதிலே
நித்தல் துன்பம் நேர்ந்தும் நினையேன் நெஞ்சிலுனை;
சத்தி கூறு தாங்கும் உன்றன் தாளிணையே
புத்தி ஒன்றிப் போற்ற அருள்செய் புண்ணியனே.
பத்தி - பக்தி;
சத்தி - சக்தி;
1) -- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) --
பயிர்காட்டும் மழையானே; பாலோடு நெய்யோடு
தயிர்ஆட்டல் மகிழ்வோனே; தயையின்றிக் கையிலொரு
கயிறாட்டி வருநமனைக் கழலடியால் உதைத்தவனார்
உயிர்வீட்டி உன்னடியார் உயிர்காத்தாய் சரண்நீயே.
பயிர் காட்டும் மழையானே - எல்லா ஜீவராசிகளும் தழைக்க, அனைத்திற்கும் ஆதாரமான பயிர்கள் தழைக்க, மழை வடிவில் வருபவனே; (சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - கண்காட்டு நுதலானும் ..... பயிர்காட்டும் புயலானும்....);
ஆட்டல் - ஆட்டுதல் - அபிஷேகம் செய்தல்;
கயிறு - எமன் கையில் உள்ள பாசம்;
கழலடி - கழல் அணிந்த திருவடி;
அவன் ஆர் உயிர் வீட்டி - எமனுடைய அரிய உயிரை அழித்து - எமனைக் கொன்று;
உன் அடியார் - இங்கே மார்க்கண்டேயர்;
உயிர் காத்தாய் - உயிரைக் காத்தவனே;
சரண்நீயே - நீயே அடைக்கலம்; நீயே எனக்குப் புகலிடம்;
(சம்பந்தர் தேவாரம் - 2.9.9 - ஆலம் உண்டமு தம்மம ரர்க்கருள் அண்ணலார் காலன் ஆருயிர் வீட்டிய மாமணி கண்டனார்)
2)
பொய்கூட்டிப் பழிக்கின்ற புல்லறிவார்க் கரியானே;
பைகாட்டும் அரவத்தைப் படர்சடைமேல் அணிவோனே;
மெய்காட்டும் தத்துவனே; விடையவனே; செவ்வண்ணக்
கைகாட்டி இங்கென்னைக் காத்தருளும் கண்ணுதலே.
புல்லறிவார் - அறிவீனர்;
பை - பாம்பின் படம்;
கைகாட்டி - போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் சாதனம்; (signal);
செவ்வண்ணக் கைகாட்டி - செந்நிறம் திகழும் அபயஹஸ்தத்தைக் காட்டி;
(செவ்வண்ணக் கைகாட்டி - சிவப்பு நிறத்தைக் காட்டி, "நில்" என்று காட்டும் கைகாட்டி - red signal - என்றும் கொள்ளலாம்);
3)
பாடிவந்தார் பசிதீர்க்கப் படிக்காசு பரிந்தளித்தாய்;
ஓடிவந்த கங்கைதனை உன்சடையுள் நிறுத்திவைத்தாய்;
தேடியந்த மாலயனும் திகைத்துநிற்கச் செந்தழலாய்
நீடியன்று வந்தவனே; நின்கழலே தொழுவேனே.
* திருவீழிமிழலையில் அப்பர்க்கும் சம்பந்தர்க்கும் படிக்காசு அருளியதைச் சுட்டியது;
படிக்காசு - daily allowance;
பரிந்தளித்தாய், நிறுத்திவைத்தாய் - பரிந்து அளித்தவனே, நிறுத்திவைத்தவனே என்ற விளிகள்;
நீடுதல் - நீளுதல்;
(கங்கையைத் தடுத்து நிறுத்தினாய், திருமாலையும் பிரமனையும் திகைத்துநிற்கவைத்தாய்; இன்று செஞ்சுடராக வந்து இந்த இரயிலையும் நிறுத்தினாய் என்ற குறிப்பும் பெறலாம்);
4)
அம்புவிடும் காமனுடல் அன்றெரித்தாய்; பொற்சடைமேல்
அம்புலியாய்; அரக்கனையன் றருவரைக்கீழ் அடர்த்தவனே;
அம்புயமாய்க் கண்ணிட்ட அரிக்காழி அளித்தவனே;
செம்பவள வண்ணத்தாய்; சேவடியே தொழுவேனே.
* திருவீழிமிழலையில் ஈசனை வழிபடும்போது ஒருநாள் ஆயிரம் பூவில் ஒரு பூக்குறையத் தன் கண்ணையே பூவாக இடந்து இட்டு வழிபட்ட திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருளியதைச் சுட்டியது.
அம்புலியாய் - நிலாவைச் சூடியவனே;
அரக்கன் - இங்கே, இராவணன்;
அருவரை - கயிலைமலை;
அடர்த்தல் - நசுக்குதல்;
அம்புயம் - அம்புஜம் - தாமரை;
அரிக்கு ஆழி அளித்தவனே - திருமாலுக்குச் சக்கரம் தந்தவனே;
செம்பவள வண்ணத்தாய் - பவளம் போல் செந்நிறம் உடையவனே;
5) -- வேறு -- (அறுசீர் விருத்தம் - மா மா மா மா மா காய் - என்ற வாய்பாடு)
கானில் தம்கண் இடக்கும் வேடர் கையைப் பிடித்தவனே;
தேனிற் சுவையாய்ப் பூவில் மணமாய்த் திகழும் பெருமானே;
வானில் ஓடும் இரதம் ஓடா மலைமேல் உறைவோனே;
நானின் நலஞ்செய் கழலை நயந்து நாளும் தொழுவேனே.
* இராவணனின் தேர் கயிலைமலைமேல் செல்லாது நின்றதைச் சுட்டியது.
இடத்தல் - தோண்டுதல்;
வேடர் - இங்கே, கண்ணப்பர்;
நானின் - நான் நின் - நான் உனது;
நயத்தல் - விரும்புதல்;
6) -- வேறு -- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
தவம்பெருகு வாகீசர் தாள்பணிஅப் பூதிமகன்
சவந்தனிலே தமிழ்க்கிரங்கி உயிரூட்டும் சங்கரனே;
பவந்தவிர்க்கும் பழம்பொருளே; பறக்குமெயில் செற்றவனே;
சிவந்ததிரு மேனியனே; சேவடியே தொழுவேனே.
* அரவம் தீண்டியதால் இறந்த அப்பூதி அடிகளார் மகனைத் திருநாவுக்கரசர் "ஒன்றுகொலாம்" என்று தொடங்கும் பதிகம் பாடி ஈசன் அருளால் உயிர்ப்பித்ததைச் சுட்டியது.
வாகீசர் - திருநாவுக்கரசர்;
பவம் - பிறப்பு;
எயில் - கோட்டை;
செறுதல் - அடக்குதல்; தடுத்தல்; அழித்தல்;
பறக்குமெயில் செற்றவனே - பறக்கும் எயில் செற்றவனே - பறக்கும் முப்புரங்களை அழித்தவனே; (பறக்கும் மெயில் செற்றவனே - "விரைந்து செல்லும் எக்ஸ்பிரெஸ் / மெயில் இரயில்வண்டியைத் தடுத்தவனே" என்றும் பொருள்கொள்ளக்கூடும்);
7)
அஞ்செழுத்தை அனுதினமும் அன்போடு சொல்லன்பர்க்கு
அஞ்சலளித் தருள்கின்ற அங்கணனே; அன்றெழுந்த
நஞ்சையொளித் திருள்கண்ட; நடுக்கத்தைத் தீர்க்கின்ற
செஞ்சுடரே; சீராரும் சேவடியே தொழுவேனே.
அங்கணன் - அருட்கண் உடையவன்;
இருள் கண்ட – நீலகண்டனே;
நடுக்கம் - அச்சம்;
செஞ்சுடர் - சிவந்த சோதி; (செஞ்சுடர் - செவ்விளக்கு என்றும் கொள்ளலாம்);
சீர் ஆரும் சேவடி - நன்மை பொருந்திய, அழகிய சிவந்த திருவடி;
8)
எவ்வணமாய் நின்னடியார் இணையடியை ஏத்திடினும்
அவ்வணமே அங்கவர்கட் கருள்கின்ற பெருமானே;
வவ்வவரும் வலியவினைத் தொடர்அடையா வணம்நிற்கும்
செவ்வணனே; சீராரும் சேவடியே தொழுவேனே.
* அப்பர் தேவாரம் - 5.28.7 - "விரும்பும் வண்ணமும் .... ஆவர் ஐயாறரே" - விரும்பும் வண்ணம் - மெய்யன்பர் விரும்பும் வடிவங்கள்;
வணம் - வண்ணம் (இடைக்குறையாக வந்தது) - விதம்; நிறம்; வடிவம்;
வவ்வுதல் - கவர்தல் (To snatch, take hold of);
செவ்வணன் - செவ்வண்ணன் - செந்நிறத்தன்;
(இரயில்வண்டித்தொடர் உருவத்தில் வந்தடைந்த வினைத்தொடர் என்றும் கொள்ளலாம்);
9)
அழுஞ்சுரர்க்கா ஆலமுண்ட அருட்கடலே; அயனொடுமால்
தொழுஞ்சுடரே; நல்லவழித் துணையாகிக் காப்பவனே;
எழுஞ்சுடர்போல் மேனியனே; ஏத்தடியார் இடர்தீர்க்கும்
செழுஞ்சுடரே; சீராரும் சேவடியே தொழுவேனே.
சுரர்க்கா- தேவர்களுக்காக;
அயன் - பிரமன்;
மால் - திருமால்;
சுடர் - ஒளி/சோதி; நெருப்பு; விளக்கு;
எழும் சுடர் - எழுகின்ற சூரியன்;
ஏத்து அடியார் - துதிக்கும் பக்தர்கள்;
(நல்ல வழி - கரிய நிறத்தில் உள்ள இருப்புப்பாதையைச் சுட்டியது என்றும் கொள்ளலாம்.
நல்லம் - கறுப்பு; (நல்லம் - கருமையை உணர்த்தப் பழந்தமிழில் வழங்கியதோர் சொல் (சூடாமணி). அஃது இப்போது தமிழில் வழக்காறொழிந்தது. தெலுங்கு மொழியில் இப்பொருளில் வழக்கில் உள்ளது.)
10) -- வேறு -- (கலிவிருத்தம் - தேமா புளிமா தேமா புளிமா - என்ற வாய்பாடு)
எண்ணில் வினைகள் நண்ணி இடர்கள்
பண்ணும் நிலைதீர் அண்ணல் பவள
வண்ணன் நுதலிற் கண்ணன் அடியை
எண்ணில் எழிலார் விண்ணும் எளிதே.
எண்ணில் - எண் இல் (எண்ணற்ற); / எண்ணினால் (நினைந்தால்);
நண்ணுதல் - அடைதல்; நெருங்குதல்;
நிலை தீர் அண்ணல் - நிலையைத் தீர்க்கும் கடவுள்;
பவள வண்ணன் - பவளம் போன்ற செம்மேனியன்;
நுதலிற் கண்ணன் - நெற்றிக்கண்ணன்;
பிற்குறிப்பு:
அப்பர் தேவாரம் - 6.95.2
வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
.. வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவும் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
.. எங்கெழிலென் ஞாயி றெளியோம் அல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
.. அனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
.. செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.
அழகிய பவளம் போன்ற செஞ்சடைமேல் ஆறு சூடியவரும், அனல் ஆடியவரும், ஆன் அஞ்சிலும் ஆடுதலை உகந்தவரும், செம்பவள நிறத்தினரும், செங்குன்ற வடிவினரும், செவ்வான வண்ணரும் ஆகிய சிவபெருமான் எம் சிந்தையராயினார்; அதனால் கூற்றம் நம்மேல் நாம் வருந்தும்படி வரவல்லதன்று. கொடிய வினையாகிய பகையும் மெல்ல வருத்துகின்ற எம் துன்பமும் யாம் தீர்ந்தோம்; யாதோரிடையூறும் இல்லோம்; ஞாயிறு எங்கெழுந்தாலும் அதனால் எமக்கு வரக்கடவது என்னை? யாவர்க்கும் எளியோம் அல்லோம்.)
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
நத்தாகத் திரியும் நாமும் இந்த நத்தையும் ஒன்றே... தந்தையாம் சிவனைப் போற்றி, நலமிகப் பெறுவோமே.
ReplyDelete