06.03 – மடக்கு
2011-09-03
06.03.057 - ஏழை - அமர்வானை - மடக்கு
-------------------------
ஏழை எனவெண்ணி என்றும் பொருள்நாடும்
ஏழை மனமே இடப்பக்கம் - ஏழை
அமர்வானை வெண்திங்கள் ஆறணிந்தேற் றின்மேல்
அமர்வானை ஏத்தி அடை.
பதம் பிரித்து:
ஏழை என எண்ணி என்றும் பொருள் நாடும்
ஏழை மனமே; இடப்பக்கம் ஏழை
அமர்வானை, வெண்-திங்கள் ஆறு அணிந்து ஏற்றின்மேல்
அமர்வானை ஏத்தி அடை.
ஏழை - 1) வறியவன்; 2) அறிவில்லாத; 3) பெண்;
நாடுதல் - தேடுதல்; விரும்புதல்;
அமர்தல் - 1) விரும்புதல்; 2) இருத்தல் (be seated);
அடைதல் - பெறுதல்; சரண்புகுதல்;
வேண்டுமளவு பொருள் இல்லை என்று எண்ணி எப்பொழுதும் செல்வத்தையே விரும்பித் தேடுகின்ற மடநெஞ்சே; திருமேனியில் இடப்பக்கம் உமையைப் பாகமாக விரும்பியவனை, வெண்பிறையையும் கங்கையையும் அணிந்து இடபவாகனத்தின்மேல் வீற்றிருப்பவனைத் துதித்துச் சரண்புகுந்து இன்புறுவாயாக;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment