06.02.157 – கோயில் (தில்லை - சிதம்பரம்) - சிக்கல் மன்னி வெய்ய - (வண்ணம்)
2011-10-27
06.02.157 - சிக்கல் மன்னி வெய்ய - (கோயில் (சிதம்பரம்))
-------------------------
(வண்ணவிருத்தம்;
தத்த தன்ன தய்ய
தத்த தன்ன தய்ய
தத்த தன்ன தய்ய .. தனதான )
(அத்தன் அன்னை இல்லம் - திருப்புகழ் - தில்லை)
சிக்கல் மன்னி வெய்ய .. துக்க மன்னி வைது
.. .. திட்ட மண்ணில் வைகி .. உழலாமல்
.. செப்ப மன்னு நல்ல .. சொற்கள் பின்னு செய்யுள்
.. .. செப்பி உன்னி உய்ய .. அருளாயே
அக்கு மின்னு மெய்ய .. நட்ட மன்ன கைய
.. .. அத்தி தன்னை வெல்லும் .. விறலானே
.. அப்பு வன்னி வெள்ளெ .. ருக்கு சென்னி மல்கும்
.. .. அத்த பின்னும் உள்ள .. ஒருநாதா
செக்கர் வண்ண வல்வி டத்தை உண்ணு மைய
.. .. சிட்டர் உன்னும் வெள்ளை .. விடையானே
.. தெற்கின் அண்ண லையு .. தைத்த திண்ண சைவ
.. .. தெப்பம் என்னு நல்ல .. கழலானே
பக்க மென்மை வல்லி .. வைத்த எம்மு தல்வ
.. .. பத்தர் பன்னு தில்லை .. உறைவோனே
.. பற்றும் அன்னை கையை .. விட்டு வெண்ணெய் அள்ளு
.. .. பச்சை வண்ணன் உள்கு .. பெருமானே.
பதம் பிரித்து:
சிக்கல் மன்னி, வெய்ய துக்கம் மன்னி, வைது
திட்ட மண்ணில் வைகி உழலாமல்,
செப்பம் மன்னு நல்ல சொற்கள் பின்னு செய்யுள்
செப்பி உன்னி உய்ய அருளாயே;
அக்கு மின்னு மெய்ய; நட்ட மன்ன; கைய
அத்தி தன்னை வெல்லும் விறலானே;
அப்பு வன்னி வெள்ளெருக்கு சென்னி மல்கும்
அத்த; பின்னும் உள்ள ஒரு நாதா;
செக்கர் வண்ண; வல்-விடத்தை உண்ணும் ஐய;
சிட்டர் உன்னும் வெள்ளை விடையானே;
தெற்கின் அண்ணலை உதைத்த திண்ண; சைவ;
தெப்பம் என்னும் நல்ல கழலானே;
பக்கம் மென்மை வல்லி வைத்த எம் முதல்வ;
பத்தர் பன்னு தில்லை உறைவோனே;
பற்றும் அன்னை கையை விட்டு வெண்ணெய் அள்ளு
பச்சை வண்ணன் உள்கு பெருமானே.
சிக்கல் மன்னி, வெய்ய துக்கம் மன்னி, வைது திட்ட மண்ணில் வைகி உழலாமல் - கஷ்டங்கள் மிகுந்து, எப்பொழுதும் கொடிய துக்கம் நிலைத்துப், பிறர் இகழுமாறு இவ்வுலகில் வாழ்ந்து வருந்தாமல்; (மன்னுதல் - மிகுதல்; நிலைத்தல்); (வெய்ய - கொடிய); (வைது திட்ட - ஒருபொருட்பன்மொழி);
செப்பம் மன்னு நல்ல சொற்கள் பின்னு செய்யுள் செப்பி உன்னி உய்ய அருளாயே - செவ்வை மிக்க நல்ல சொற்கள் பின்னியுள்ள பாமலைகளைப் பாடி உன்னைத் தியானித்து உய்யுமாறு அருள்வாயாக; (செப்பம் - செவ்வை); (உன்னுதல் - எண்ணுதல்; தியானித்தல்);
அக்கு மின்னு மெய்ய - எலும்பை மாலையாக அணிந்த மேனியனே; (அக்கு - எலும்பு);
நட்ட மன்ன - நடராஜனே; ( நட்டம் - கூத்து); (மன்ன - மன்னனே - அரசனே);
கைய அத்தி தன்னை வெல்லும் விறலானே - துதிக்கையுடைய யானையை வென்ற வீரனே; (கைய - கையுடைய); (அத்தி - யானை); (விறல் - வலிமை; வெற்றி; வீரம்);
அப்பு வன்னி வெள்ளெருக்கு சென்னி மல்கும் அத்த - கங்கை, வன்னியிலை, வெள்ளெருக்கமலர், இவற்றையெல்லாம் திருமுடியில் அணிந்த தந்தையே; (அப்பு - நீர்); (மல்குதல் - நிறைதல்);
பின்னும் உள்ள ஒரு நாதா - இப்பிரபஞ்சம் ஒடுங்கியபின்னும் இருக்கும் ஒப்பற்ற நாதனே;
செக்கர் வண்ண - செம்மேனியனே; (செக்கர் - சிவப்பு);
வல்-விடத்தை உண்ணும் ஐய - வலிய நஞ்சை உண்ணும் ஐயனே;
சிட்டர் உன்னும் வெள்ளை விடையானே - பெரியோர்கள் தியானிக்கின்ற, வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனே; (சிட்டர் - சிஷ்டர் - பெரியோர்);
தெற்கின் அண்ணலை உதைத்த திண்ண - இயமனை உதைத்த வலியவனே; (தெற்கின் அண்ணல் - தென்திசைக்கோன் - இயமன்);
சைவ - சைவனே;
தெப்பம் என்னும் நல்ல கழலானே - பக்தர்களைப் பிறவிக்கடலில் காக்கின்ற தெப்பம் போன்ற திருவடி உடையவனே; (திருவாசகம் - அடைக்கலப்பத்து - 8.24.10 - "பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்தில் நின் கழற்புணைகொண் டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்")
பக்கம் மென்மை வல்லி வைத்த எம் முதல்வ - இடப்பக்கம் மென்மையுடைய கொடி போன்ற உமையை வைத்த எம் தலைவனே; (வல்லி - கொடி);
பத்தர் பன்னு தில்லை உறைவோனே - பக்தர்கள் புகழ்ந்து பாடும் தில்லையில் எழுந்தருளியவனே; (பன்னுதல் - புகழ்தல்; பாடுதல்);
பற்றும் அன்னை கையை விட்டு வெண்ணெய் அள்ளு பச்சை வண்ணன் உள்கு பெருமானே - (கிருஷ்ணாவதாரத்தில்) பற்றிய அன்னையின் பிடியிலிருந்து நழுவிச்சென்று வெண்ணெய் அள்ளி உண்ட திருமால் எண்ணி வணங்குகின்ற பெருமானே; (பச்சைவண்ணன் - திருமால் - "பச்சைமா மலைபோல் மேனி");
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment