Wednesday, August 10, 2022

06.02.159 – பராய்த்துறை - படைதிரண்டெனை - (வண்ணம்)

06.02.159 – பராய்த்துறை - படைதிரண்டெனை - (வண்ணம்)

2011-11-20

6.2.159) படைதிரண்டெனை - பராய்த்துறை (திருப்பராய்த்துறை)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தந்தன தாத்தன தந்தன

தனன தந்தன தாத்தன தந்தன

தனன தந்தன தாத்தன தந்தன .. தனதான)

(முனைய ழிந்தது மேட்டிகு லைந்தது - திருப்புகழ் - பொது)


படைதி ரண்டெனை வாட்டிடும் ஐம்பொறி

.. பலசு கங்களை வேட்புறு நெஞ்சொடு

.. பழைய பந்தமும் ஆட்டிட வந்தடை .. வதனாலே

இடர்மி குந்துழல் வாழ்க்கையில் நொந்திடும்

.. எனது துன்பினை நீக்கிய ருந்தமிழ்

.. இசையொ டுன்கழல் வாழ்த்திடும் அன்பினை.. அருளாயே

கடலின் நஞ்சது போய்ச்சுட உம்பர்கள்

.. கதறி வந்தடி போற்றவும் உண்டொரு

.. கறைபு னைந்தலை ஆற்றினை யுஞ்சடை .. அணிவோனே

புடையில் நங்கையை ஏற்றனை அஞ்சிறை

.. பொலிசு ரும்பினம் ஆர்த்தடை யுஞ்செறி

.. பொழிலி லங்குப ராய்த்துறை அங்குறை .. பெருமானே.


பதம் பிரித்து:

படை திரண்டு எனை வாட்டிடும் ஐம்பொறி,

.. பல சுகங்களை வேட்புறு நெஞ்சொடு,

.. பழைய பந்தமும் ஆட்டிட வந்து அடைவதனாலே,

இடர் மிகுந்து உழல் வாழ்க்கையில் நொந்திடும்

.. எனது துன்பினை நீக்கி, அரும் தமிழ்

.. இசையொடு உன் கழல் வாழ்த்திடும் அன்பினை அருளாயே;

கடலின் நஞ்சு அது போய்ச் சுட, உம்பர்கள்

.. கதறி வந்து அடி போற்றவும், உண்டு ஒரு

.. கறை புனைந்து, அலை ஆற்றினையும் சடை அணிவோனே;

புடையில் நங்கையை ஏற்றனை; அஞ்சிறை

.. பொலி சுரும்பு இனம் ஆர்த்து அடையும் செறி

.. பொழில் இலங்கு பராய்த்துறை அங்கு உறை பெருமானே.


படை திரண்டு எனை வாட்டிடும் ஐம்பொறி, பல சுகங்களை வேட்புறு நெஞ்சொடு, பழைய பந்தமும் ஆட்டிட வந்து அடைவதனாலே - படையாகத் திரண்டு என்னைத் துன்புறுத்தும் (மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய) ஐம்பொறிகளோடு, பல சுகங்களை விரும்புகின்ற மனத்தோடு, பழைய வினைக்கட்டும் என்னை ஹிம்சிக்க வந்து சேர்வதால்; ; (ஐம்பொறி - பஞ்சேந்திரியங்கள் - ஐம்புலன்கள்); (பந்தம் - வினைக்கட்டு); (ஆட்டுதல் - அலைத்தல்);

இடர் மிகுந்து உழல் வாழ்க்கையில் நொந்திடும் எனது துன்பினை நீக்கி, அரும் தமிழ் இசையொடு உன் கழல் வாழ்த்திடும் அன்பினை அருளாயே - பல கஷ்டங்கள் மிகுந்து இவ்வுலக வாழ்க்கையில் உழலும் என் துன்பத்தைத் தீர்த்து, நான் அரிய தமிழ்ப் பாமாலைகளால் உன் திருவடியை வாழ்த்தும் பக்தியை அருள்வாயாக; (தமிழ் - தேவாரம் திருவாசகம் முதலியன); (இசை - புகழ்; இசைப்பாட்டு);

கடலின் நஞ்சு அது போய்ச் சுட, உம்பர்கள் கதறி வந்து அடி போற்றவும், உண்டு ஒரு கறை புனைந்து - பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த ஆலகால விஷம் எங்கும் பரவித் தகிக்கவும், தேவர்கள் அலறிக்கொண்டு வந்து உன் திருவடியை வணங்கியபோது, அவர்களுக்கு இரங்கி அவ்விஷத்தை உண்டு கண்டத்தில் ஒரு கறையைப் அணிந்து;

அலை ஆற்றினையும் சடை அணிவோனே - (பிறைச்சந்திரன், பாம்பு இவற்றோடு) கங்கை நதியையும் சடையில் அணிபவனே;

புடையில் நங்கையை ஏற்றனை - இடப்பக்கத்தில் பார்வதியை ஏற்றவனே; (புடை - பக்கம்; பகுதி);

அம் சிறை பொலி சுரும்பு இனம் ஆர்த்து அடையும் செறி பொழில் இலங்கு பராய்த்துறை அங்கு உறை பெருமானே - அழகிய சிறகுகள் திகழ்கின்ற வண்டினங்கள் ரீங்காரம் செய்து அடையும் அடர்ந்த சோலைகள் திகழும் திருப்பராய்த்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே; (அம் - அழகு); (சிறை - சிறகு); (சுரும்பு = வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (செறிதல் - அடர்தல்); (அங்கு - அசைச்சொல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment