06.01 – சிவன் சிலேடைகள்
2012-03-20
06.01.134 - சிவன் - நத்தை (snail) - சிலேடை
-------------------------------------------------------
நீரோடு தாங்குவதால் நித்தங்கா னாடுவதால்
பாரோரும் காணவரும் பண்பினால் - ஊரோர்
ஒழுகுவழி செய்தாண்பெண் ஒன்றுவதால் நத்தை
செழுமதி சூடும் சிவன்!
சொற்பொருள்:
தாங்குதல் - சுமத்தல்; பாதுகாத்தல்; ஆதரித்தல் (support); அணிதல்;
நீர் ஓடு தாங்குவதால் - 1. நீர் தாங்குவதால் & ஓடு தாங்குவதால்; / 2. கங்கை ஆற்றையும் மண்டையோட்டையும் தாங்குவதால்;
நித்தம் - 1. எப்பொழுதும்; / 2. நடனம்;
கானாடுவதால் - 1. கான் நாடுவதால்; / 2. கான் ஆடுவதால்;
கான் - 1. காடு; வாசனை; / 2. சுடுகாடு;
ஆடுதல் - 1. இயங்குதல்; / 2. நடம்செய்தல்;
ஊர் - 1. ஊர்தல்; / 2. ஊரில் வாழும் மக்கள்;
ஓர் - ஒரு;
ஓர்தல் - எண்ணுதல்;
ஒழுகுதல் - 1. திரவம் கசிவது; / 2. முறைப்படி நடத்தல்;
வழி - பாதை; நெறி;
ஒன்றுதல் - ஒன்றாதல்;
நத்துதல் - விரும்புதல்; (திருப்புகழ் - திருநள்ளாறு - "பச்சை யொண்கிரி ... ... நத்தி வந்துந ளாறுறை தேவர்கள் பெருமாளே");
ஐ - தலைவன்;
நத்தை - 1. நத்தை / 2. நத்து ஐ;
நத்தை:
நீர் ஓடு தாங்குவதால் - நீர் தாங்குவதால், ஓடு தாங்குவதால் - நீரிலும் வாழும்; ஓடு தாங்கும்; (அது சுரக்கும் ஒரு திரவம் அதனைத் தாங்குவதைச் சுட்டுவதாகவும் கொள்ளலாம்); (நீரில் வாழும் நத்தை தண்ணிரில் தலைகீழாக ஊர்ந்து செல்லும்! நீர் அதனைத் தாங்கும்); (நத்தை ஓர் ஓடு உடையது; அந்த ஓடு அதனைப் பாதுகாக்கும்);
நித்தம் கான் நாடுவதால் - எப்பொழுதும் வாசனையை நாடி இயங்கும்;
பாரோரும் காண வரும் பண்பினால் - உலகத்தவரும் காணும்படி வரும்;
ஊர் ஓர் ஒழுகுவழி செய்து, - ஊர்ந்து செல்லத் தன்னிடமிருந்து ஒழுகும் ஒரு திரவத்தால் வழி செய்யும்;
ஆண் பெண் ஒன்றுவதால் - ஓருடம்பில் ஆணும் பெண்ணுமாகத் திகழும்.
நத்தை;
சிவன்:
நீர் ஓடு தாங்குவதால் - தலைமேல் கங்கையையும் கையில் மண்டையோட்டையும் தாங்குபவன்;
நித்தம் கான் ஆடுவதால் - சுடுகாட்டில் திருநடம் செய்பவன்;
பாரோரும் காணவரும் பண்பினால் - உலகத்தவர்கள் தரிசிக்க வருவர்; ("பக்தர்களுக்குக் காட்சி கொடுக்கும் தன்மையால்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);
ஊர் ஓர் ஒழுகுவழி செய்து - (உலகில் உள்ள) ஊர்களில் வாழும் மக்கள் எண்ணும் பின்பற்றத்தக்க நெறி செய்து; (ஊரோர் - ஊர்மக்கள் என்றும் கொள்ளலாம். 'மக்கள் முறைப்படி வாழும் நன்னெறி செய்து');
ஆண் பெண் ஒன்றுவதால் - அர்த்தநாரீஸ்வரன் ஆவதால்;
நத்து ஐ - (நாம்) விரும்பும் தலைவன்;
செழுமதி சூடும் சிவன் - செழுமையான சந்திரனைச் சூடிய சிவபெருமான்;
Snail Facts:
Types of snails by habitat - Land snail, Freshwater snail, and Sea snail.
They have the reproductive organs of both males and females which categorizes them as hermaphrodites.
Snails don’t see very well. They aren’t able to hear at all. They use their sense of smell to help them find food.
To help them move, snails secrete a stream of slime (mucus) from a gland located at the front of their foot. This slime enables them to glide smoothly over many different types of surface and helps to form a suction that helps them cling to vegetation and even hang upside down.
Some water snails have an extraordinary way of getting around: they crawl upside down at the water's surface. A water snail can walk on water (so to speak) because it finds the perfect balance between surface tension and viscous drag.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment