Wednesday, August 10, 2022

06.02.158 – கருப்பறியலூர் (திருக்கருப்பறியலூர்) - வழுவுறு சிந்தை - (வண்ணம்)

06.02.158 – கருப்பறியலூர் (திருக்கருப்பறியலூர்) - வழுவுறு சிந்தை - (வண்ணம்)

2011-10-30

06.02.158 - வழுவுறு சிந்தை - (கருப்பறியலூர் (திருக்கருப்பறியலூர்))

(இக்கால வழக்கில் "தலைஞாயிறு" - வைத்தீஸ்வரன் கோயில் அருகே உள்ள தலம்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தந்த தத்த .. தனதான )

(இதனை ஓரளவு ஒத்த சந்தம் - "மொழியநி றங்கறுத்து" - திருப்புகழ் - அண்ணாமலை)


வழுவுறு சிந்தை மிக்கு .. நினையாமல்

.. .. வலிதரு கின்ற கெட்ட .. வழிநாடி

.. மலையினை வென்றி ருக்கும் .. வினைகூடி

.. .. மறுபடி யும்பி றப்பி .. லுழல்வேனோ

பழுதற உன்றி ருப்பு .. கழையோதிப்

.. .. பரமசு கந்த ழைக்க .. அருளாயே

.. பணிசுரர் தங்க ளச்ச .. மறவேமுன்

.. .. பரவிய நஞ்சொ ளித்த .. மிடறானே

தொழுதெழு தொண்டர் துய்க்கு .. மமுதானாய்

.. .. தொடர்நம னன்றி றக்க .. உதைகாலா

.. துணிமதி யஞ்ச டைக்கண் .. அணிவோனே

.. .. துணையிலி என்றி ருக்கு .. முமைகோனே

செழுமலர் தந்த மட்டை .. மகிழ்தேனீ

.. .. தினமுர லுங்க ருப்ப .. றியலூரே

.. திரமென நின்று முத்தி .. தருவோனே.

.. .. சிறுமறி அங்கை வைத்த .. பெருமானே.


பதம் பிரித்து:

வழு உறு சிந்தை மிக்கு, நினையாமல்,

.. வலி தருகின்ற கெட்ட வழி நாடி,

.. மலையினை வென்று இருக்கும் வினை கூடி,

.. மறுபடியும் பிறப்பில் உழல்வேனோ;


பழுது அற உன் திருப்புகழை ஓதிப்,

.. பரமசுகம் தழைக்க அருளாயே;

.. பணி-சுரர் தங்கள் அச்சம் அறவே, முன்

.. பரவிய நஞ்சு ஒளித்த மிடறானே;


தொழுதெழு தொண்டர் துய்க்கும் அமுது ஆனாய்;

.. தொடர்-நமன் அன்று இறக்க உதை-காலா;

.. துணி-மதியம் சடைக்கண் அணிவோனே;

.. துணையிலி என்று இருக்கும் உமைகோனே;


செழுமலர் தந்த மட்டை மகிழ்-தேனீ

.. தினம் முரலும் கருப்பறியலூரே

.. திரம் என நின்று முத்தி தருவோனே;

.. சிறு-மறி அங்கை வைத்த பெருமானே.


வழு உறு சிந்தை மிக்கு, நினையாமல், - குற்றங்கள் மிகும் எண்ணங்களால், உன்னை மறந்து; (வழு - குற்றம்);

வலி தருகின்ற கெட்ட வழி நாடி - துன்பம் தரும் தீய நெறியில் சென்று; (வலி - நோவு);

மலையினை வென்று இருக்கும் வினை கூடி - மலையினும் பெரிய வினைகள் இன்னும் மிகுந்து; (வெல்தல் - ஒத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.102.1 - "காம்பினை வென்ற மென்தோளி");

மறுபடியும் பிறப்பில் உழல்வேனோ - மீண்டும் பிறப்புச் சுழலில் சிக்கி வருந்துவேனோ?


பழுது அற உன் திருப்புகழை ஓதிப், பரமசுகம் தழைக்க அருளாயே - என் குற்றமெல்லாம் தீர, உன் திருப்புகழை நல்லபடி பாடி, மேலான இன்பம் அடைய அருள்வாயாக; (பழுது - குற்றம்); (அறுதல் - இல்லாமற் போதல்);

பணி-சுரர் தங்கள் அச்சம் அறவே, முன் பரவிய நஞ்சு ஒளித்த மிடறானே - வணங்கிய தேவர்களின் பயம் நீங்க, அன்று ஆலகால விடத்தைக் கண்டத்தில் ஒளித்துக் காத்தவனே; (சுரர் - தேவர்);


தொழுதெழு தொண்டர் துய்க்கும் அமுது ஆனாய் - போற்றி வணங்கும் மார்க்கண்டேயர் உண்ணும் அமுதமே;

தொடர்-நமன் அன்று இறக்க உதை-காலா - மார்க்கண்டேயரைக் கொல்லத் தொடர்ந்து அடைந்த காலனை, அன்று இறக்கும்படி உதைத்த திருவடியினனே, காலகாலனே;

துணி-மதியம் சடைக்கண் அணிவோனே - பிறைச்சந்திரனைச் சடையில் அணிபவனே; (துணி மதியம் - நிலாத்துண்டம்); (கண் - ஏழாம் வேற்றுமை உருபு);

துணையிலி என்று இருக்கும் உமைகோனே - தனியன், ஒப்பற்றவன் என்று இருக்கும் பார்வதி மணவாளா; (துணையிலி - தனியன்; ஒப்பற்றவன்);


செழுமலர் தந்த மட்டை மகிழ்-தேனீ தினம் முரலும் கருப்பறியலூரே திரம் என நின்று முத்தி தருவோனே - செழுத்த மலர்கள் வழங்கும் தேனை விரும்பி உண்ட தேனீக்கள் தினமும் ரீங்காரம் செய்யும் சோலை சூழ்ந்த திருக்கருப்பறியலூரையே இடமாகக் கருதி உறைந்து, அடியவர்களுக்கு முக்தி அருள்பவனே; (மட்டு - தேன்); (திரம் - ஸ்திரம் என்பதன் திரிபு - நிலையான இடம்); (சம்பந்தர் தேவாரம் - 1.105.10 - "ஆரூர்த் தம் திரமா உடையான்");

சிறு-மறி அங்கை வைத்த பெருமானே - கையில் சிறிய மான்கன்றை ஏந்திய பெருமானே;


பிற்குறிப்புகள்:

1. (சம்பந்தர் தேவாரம் - 2.31.1 -

சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக்

குற்றமில் குணங்களொடு கூடுமடி யார்கள்

மற்றவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக்

கற்றவன் இருப்பது கருப்பறிய லூரே.


அடியவர்களைச் சிவலோகம் ஏற்றலைச் செய்யும் சிவபெருமான் இருக்குமிடம் கருப்பறியலூர்)


2. இப்பாடலில் சந்த அமைப்பு அடிதோறும் 4 முறை வந்துள்ளது.

அருணகிரிநாதர் அருளிய - "சினத்துச் சீறிய வழிகாண (பொது)" என்ற பாடலிலும் அவ்வாறே அமைந்துள்ளது! "முருகவேள் பன்னிரு திருமுறை" என்ற நூலில் அப்பாடலுக்கு ஒரு குறிப்புக் கொடுத்துள்ளனர் - https://ta.wikisource.org/s/5p6o - "இப்பாடல் எட்டு எதுகையுடன் இரட்டைத் திருப்புகழ் ஒன்றாக அமைக்கப் பெற்றது. முதல் பாதி ஒரு பாடலாகவும், பின் பாதி பிறிதொரு பாடலாகவும் அமைக்கலாம்."


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment